”விவசாயத்தில் நெருக்கடி என்றெல்லாம் எதுவும் இல்லை.”

பஞ்சாபில் மிக வலிமையாக இருக்கும் அர்ஹ்தியாக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தர்ஷன் சிங் சங்கேராவைச் சந்தியுங்கள். அந்த அமைப்பின் பர்னாலா மாவட்ட தலைவரும்கூட. அர்ஹ்தியாக்கள் என்பவர்கள் தரகர்கள். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையில் பாலமாக இருப்பவர்கள். ஏலத்திற்கு ஏற்பாடு செய்வதும் வாங்குபவர்களிடம் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கொண்டு சேர்ப்பதும் அவர்களது வேலை. தவிர கடன் தருபவர்களும்கூட. இந்த வணிகத்தில் அவர்களுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சமீப வருடங்களில், விவசாய இடுபொருட்களை கையாள்பவர்களாகவும் உருவாகி வருகிறார்கள். மாநிலத்தின் விவசாயிகள் மீது அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை இவை எல்லாம் உணர்த்தக் கூடும்.

அர்ஹ்தியாக்கள் அரசியல்ரீதியாகவும் வலிமையானவர்கள். அவர்களுள் சில சட்டமன்ற உறுப்பினர்களும் உண்டு. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு Fakhr-e-Quam (சமூகத்தின் பெருமை) என்கிற பட்டத்தை தந்து இவர்கள் கௌரவித்தார்கள். இந்த நிகழ்வை மிகப்பெரிய பாராட்டு விழா என்று உள்ளூர் ஊடகங்கள் பதிவு செய்தன. அர்ஹ்தியாக்களுக்கு விவசாயிகள் தர வேண்டிய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று முதல்வர் அறிவித்தவுடன் நடந்த நிகழ்வு அது.

பஞ்சாபின் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் கடன் தொல்லை பற்றிய ஒரு ஆய்வு, கிட்டத்தட்ட 86 சதவிகித விவசாய குடும்பங்களும் 80 சதவிகித விவசாய தொழிலாளர் குடும்பங்களும் கடனில் மூழ்கியிருப்பதாகச் சொல்கிறது. அதில் ஐந்தில் ஒரு பங்கு கடன், தரகர்களுக்கும்  வட்டிக்குவிடுபவர்களுக்குமே தர வேண்டியிருக்கிறது. வேதனை என்னவென்றால் படிநிலையில் கீழ்ச் செல்ல செல்ல கடன் சுமை அதிகரித்திருக்கிறது. விளிம்பு நிலை, குறு விவசாயிகள்தான் மிக அதிக கடனில் இருக்கிறார்கள். இந்த ஆய்வு 1007 விவசாயிகள் மற்றும் 301 விவசாய தொழிலாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்டது. 2014-2015ல் இந்த ஆய்வு மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. தீவிரமாகும் கடன் தொல்லைப் பிரச்னை மற்றும் அதிகரிக்கும் துயர் பற்றி பேசும் பிற ஆய்வுகளும் இருக்கின்றன.

ஆனால் தர்ஷன் சிங் சங்கேரா விவசாய நெருக்கடி என்பதே விவசாயிகளின் மோசமான செலவுகளால்தான் உருவானது என்கிறார். “அதனால்தான் அவர்களுக்கு பிரச்னையே” என்று உறுதியாகச் சொல்கிறார் அவர். “இடுபொருட்களை வாங்க நாங்கள் அவர்களுக்கு பண உதவி செய்கிறோம். தவிர, திருமணம், மருத்துவம் மற்றும் இதர செலவுகளுக்கும் உதவுகிறோம். அறுவடை தயார் நிலையில் இருக்கும்போது விவசாயி அதை அர்ஹ்தியாவிடம் ஒப்படைக்கிறார். நாங்களே அதைச் சுத்தம் செய்து, பைகளில் அடைத்து, அரசு, வங்கி,சந்தை என்று எல்லாவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.” நெல் மற்றும் கோதுமையின் மொத்த கொள்ளளவில் 2.5 சதவிகிதத்துக்கு ஒப்பான மதிப்பை தரகர்களுக்கு தருகிறது அரசு. இதில் அரசுத் தரப்பை கையாள்வது பஞ்சாப் மாநில விவசாய சந்தை வாரியம். விவசாயிகள் தங்களுக்கான விலையை தரகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறார்கள். இதெல்லாம் வட்டி மூலம் வரும் வருவாய் போகஅர்ஹ்த்தியாக்களுக்கு கிடைக்கும் வருவாய்.

A Punjabi farmer in the field
PHOTO • P. Sainath

மானசாவில் ஒரு விவசாய தொழிலாளர். பஞ்சாபில் விவசாயிகள் , விவசாய தொழிலாளர்கள் எனஇரு தரப்பினரும் கடன் தொல்லையில் மூழ்கியிருக்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பகுதி அர்ஹ்தியாக்களுக்கு தர வேண்டிய கடன்.

ஜோத்பூர் கிராமத்துக்குச் சென்ற பிறகு அதே தொகுதியில் பர்னாலாவில் இருக்கும் சங்கேராவின்  தானிய சந்தை அலுவலகத்துக்குப் போகிறோம். அங்கு ரஞ்சித்தும் பல்விந்தர் சிங்கும் ஏப்ரல் 25, 2016 அன்று ஒரே மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட அவர்களுடைய உறவினர்கள் பல்ஜித் சிங் பற்றியும் அவரது அம்மா பல்பீர் கௌர் பற்றியும் சொன்னார்கள். “நீதிமன்ற ஆணையுடனும் கிட்டத்தட்ட நூறு காவல்துறையினருடனும் வந்த அர்ஹ்தியா நிலத்தை ஜப்தி செய்வதை தடுக்க போராடிக் கொண்டிருந்தார்கள்” என்கிறார் பல்விந்தர். “அவர்கள் தவிர, உள்ளாட்சியிலிருந்து நிறைய அதிகாரிகளும் அர்ஹ்தியாக்களின் அடியாட்களும் வந்திருந்தார்கள்.”

அந்த குடும்பத்தின் 2 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ய 150 பேர் வந்திருந்தார்கள்.

”இந்த ஜோத்பூர் கிராமத்தில் மட்டும் 450 குடும்பங்கள். அவற்றுள் 15-20 குடும்பங்கள்தான் கடன் தொல்லையின்றி இருக்கின்றன” என்கிறார் பல்விந்தர். கடன் காரணமாக அர்ஹ்தியாக்களிடம் நிலங்களை இழக்கிறார்கள் விவசாயிகள்.

“அர்ஹ்தியாக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறவு ஒன்றும் மோசமெல்லாம் இல்லை” என்கிறார் சங்கேரா. “விவசாயத்தில் நெருக்கடியும் இல்லை. என்னைப் பாருங்கள், சமீபத்தில் எனக்கு 8 ஏக்கர் நிலம் கிடைத்திருக்கிறது. என்னிடம் இப்போது  18 ஏக்கர் இருக்கிறது. சமயங்களில் இந்த ஊடகங்கள் விசயங்களை ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன. தற்கொலைகளுக்கு அரசு தரும் இழப்பீடு அவர்களை ஊக்குவிக்கிறது. ஒரு குடும்பத்துக்கு இழப்பீடு கிடைத்தால்கூட அது பிற குடும்பங்களை ஊக்குவிக்கிறது. இந்த இழப்பீடுகளை நிறுத்தினால் தற்கொலைகள் தானாகவே நிற்கும்.”

அவரைப் பொறுத்தவரை விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சங்கங்கள்தான் வில்லன்கள். அதிலும் பாரதிய விவசாய சங்கம் (பாரதிய கிஸான் யூனியன்  - தகோண்டா)  மிக மோசமான குற்றவாளி. அந்த பகுதியில் அந்த சங்கம் மிக வலிமையாக இருக்கிறது.  வெல்ல முடியாததாகவும் இருக்கிறது. நிலங்கள் ஜப்தி செய்யப்படுவதையும் பறிக்கப்படுவதையும் தடுக்க அதன் உறுப்பினர்கள் மிக அதிக எண்ணிக்கையில் கூடி விடுகிறார்கள். துப்பாக்கிகளை ஏந்தும் அடியாட்களுடன் அர்ஹ்தியாக்கள் வரும்போதும்கூட.

”பெரும்பாலான அர்ஹ்தியாக்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன” என்று சங்கேரா ஒப்புக்கொள்கிறார். “ஆனால் அதெல்லாம் தற்காப்புக்காகதான் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு பெரிய பணத்தை கையாளும்போது, பாதுகாப்பு தேவைதானே? ஆனால் 99 சதவிகிதம் விவசாயிகள் நல்லவர்கள்தான்” என்கிறார். மீதி ஒரு சதவிகிதம் எப்போதும் ஆயுதமேந்திய பாதுகாப்பு தேவைப்படும் அளவுக்கு பிரச்னைக்குரியவர்கள் போலிருக்கிறது. சங்கேராவிடமும் துப்பாக்கி இருக்கிறது.  ”பஞ்சாபில் தீவிரவாதம் மலிந்திருக்கும் இந்த நாட்களில் அது தேவைப்படுகிறது” என்று விளக்கமளிக்கிறார்.

இதற்கிடையில் கடன் தொல்லையால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. விவசாய தற்கொலைகள் பற்றிய சட்டமன்றக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் 2000லிருந்து 2015வரை மொத்தம் 8294 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாகச் சொல்லப்பட்டது. பஞ்சாபில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தற்கொலைகள் என்ற தலைப்பிலான அந்த ஆய்வு, அதே காலகட்டத்தில் 6,373 விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறது. பஞ்சாபில் உள்ள 22 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களில் மட்டுமே இந்த தற்கொலைகள் நடந்திருப்பதாக அந்த ஆய்வை மேற்கொண்ட லூதியானாவிலுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மாநில அரசின் வருவாய்த் துறை சொன்னதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 83 சதவிகித தற்கொலைகள் கடன் தொல்லையால் நிகழ்வதாக தெரிய வந்திருக்கிறது.

A man sitting on a bed in an orange turban
PHOTO • P. Sainath

தற்கொலைகளில் பாதி உண்மையானவை இல்லை என்கிறார் , அர்ஹ்தியாவும் முன்னாள் காவலருமான தேஜா சிங்

“யாரும் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்வதில்லை” என்று உறுதியாக சொல்கிறார் தேஜா சிங். “கடந்த 10 வருடங்களாக விவசாயம் செழித்திருக்கிறது. சொல்லப்போனால் அர்ஹ்தியாக்கள் வட்டியை குறைத்திருக்கிறார்கள்” என்கிறார். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் வட்டி 1.5 சதவிகிதம் (வருடத்துக்கு 18சதவிகிதம்) அல்லது அதற்கும் மேல்தான் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். ஊர் கூடி நிற்க நிலம் ஜப்தி செய்வதை தடுக்க முடியாமல் அம்மாவும் மகனும் தற்கொலை செய்து கொண்ட பிரச்னையில் தேஜா சிங்கிற்கு பங்கு இருக்கிறது. “வெறும் 50 சதவிகிதம் தற்கொலைகள்தான் உண்மை” என்று வெறுப்பை உமிழ்கிறார் அவர்.

ஆனால் அர்ஹ்தியாக்களுக்கிடையிலான அரசியல் பற்றி அவ்வளவு வெளிப்படைதன்மையுடன் பேசுகிறார். அவர்களுக்குள்ளும் கோஷ்டிகள் உண்டு. ”ஆட்சிக்கு எந்த கட்சி வந்தாலும் அவர்களுடைய ஆளே அர்ஹ்தியா அமைப்பின் தலைவராகிவிடுவார்.” இப்போதுள்ள தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். தேர்தலுக்கு முன்பிருந்தவர், அகாலி கட்சியை சேர்ந்தவர். அர்ஹ்தியாக்களுக்கு தேவையில்லாமல் கெட்ட பேர் உருவாவதாக நினைக்கிறார் தேஜா சிங்கின் மகன் ஜஸ்ப்ரீத் சிங். “எங்களுடையதும் ஒரு வேலைதான்” என்கிறார். “எங்களுக்கு தேவையில்லாமல் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எங்கள் (ஜோத்பூர் வழக்கு) வழக்குக்கு பிறகு சுமார் 50 அர்ஹ்தியாக்களாவது அந்த பணி செய்வதை விட்டிருப்பார்கள்.”

ஆனால் ஊடகங்களைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரீத் மகிழ்ச்சியாக இருக்கிறார். “உள்ளூர் ஊடகங்கள் எங்களிடம் நல்லபடியாகவே இருக்கின்றன. ஊடகங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுக்கு எங்களால் எந்த கைமாறும் செய்ய முடியாது. எங்களுக்கு சாதகமான செய்திகள் வர வேண்டும் என்றெல்லாம் நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்ததில்லை. இந்தி ஊடகங்கள்தான் எங்களை காப்பாற்ற முன்வந்தன (ஜோத்பூர் தற்கொலைகளுக்கு பிறகு குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட போது). வழக்கத்தைவிட சீக்கிரமாக எங்களால் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்க முடிந்தது.” இந்தி ஊடகங்கள் வியாபார சமூகத்தின் பின்னால் இருப்பதால் இந்த ஆதரவு கிடைத்ததாக அவர் நினைக்கிறார். பஞ்சாபி ஊடகங்கள் நிலமுள்ள விவசாயிகளின் பக்கம் நிற்பதாக புலம்புகிறார் அவர்.

அக்டோபர் 2017ல் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி  வரம்புக்குட்பட்டதும் அடுக்குகளை கொண்டதும் நிபந்தனைகளை கொண்டதுமாக இருந்தது. கூட்டுறவு வங்கிகளுக்கும் பொதுத் துறைக்கும் தனியார் வங்கிகளுக்கும் விவசாயிகள் எவ்வளவு கடன் தர வேண்டியிருந்ததோ அதைப் பொறுத்தே இருந்தது. தவிர மிக குறுகலான, வரைமுறைக்குட்பட்ட வழியில் அது செயல்படுத்தப்பட்டது. 2017ன் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியை வாக்களித்திருந்தது. பஞ்சாப் விவசாய கடன் தீர்வு சட்டம், 2016 இன்னும் முழுமையாக அதிக பலன் அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்றும் சொன்னது. ஆனால் அர்ஹ்தியாக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய கடனான 17,000 கோடி ரூபாயில் ஒரு பைசாக்கூட இது வரையில் தள்ளுபடி செய்யப்படவில்லை.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தரகர்கள் வழியாக பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது 2010ன் ஆய்வு ஒன்று. பஞ்சாப் வேளாண்மையில் தரகு முறை பற்றிய ஆய்வு என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆய்வின் ஆசிரியர்களான பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அவர்களிடம் நேரடியாகவே பணம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

விவசாயிகள் மற்றும் இந்த தரகுகளின் கதை என்பது நாடெங்கும் எதிரொலிப்பதுதான். ஆனால் இங்கு புதுமையான ஒரு விஷயம் இருக்கிறது. பிற மாநிலங்களில் இம்மாதிரி கடன் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பனியா அல்லது பிற வணிக சமூகங்களை சேர்ந்தவர்கள். ஆனால், இங்கே தர்ஷன் சிங் சங்கேரா, தேஜா சிங் போன்றவர்கள் ஜாட் சீக்கியர்கள். இந்த வணிகத்தில் புதிதாக நுழைந்திருப்பவர்கள், ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் முன்னேறிவிட்டார்கள். இன்று பஞ்சாபில் உள்ள மொத்தம் 47,000 அர்ஹ்தியாக்களில் 23,000 பேர் ஜாட் சமூகத்தினர். “நகரங்களில் நாங்கள் பெரிய குழு என்று சொல்ல முடியாது” என்கிறார் சங்கேரா. “நான் 1988ல் இந்த தொழிலில் நுழைந்தேன். பத்து வருடங்கள் கழித்து இந்த சந்தையில் மொத்தம் 5-7 ஜாட் அர்ஹ்தியாக்கள்தான் இருந்தார்கள். இன்று 150 கடைகள் இருக்கின்றன, மூன்றில் ஒரு பங்கு ஜாட் சமூகத்தினர்தான். இந்த எல்லைக்குட்பட்ட சின்ன சின்ன சந்தைகளில் நாங்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம்.”

The first two are of Guru Gobind Singh and Guru Nanak. The last two are of Guru Hargobind and Guru Tegh Bahadur. The central one in this line up of five is of Shiva and Parvati with a baby Ganesha.
PHOTO • P. Sainath

தர்ஷன் சிங் சங்கேராவின் அலுவலக சுவரில் தொங்கும் படங்கள் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் ஜாட் மக்கள், பனியா அர்ஹ்தியாக்களுக்கு உதவியாளர்களாகத்தான் வேலையைத் தொடங்கிறார்கள். பிறகு தனியாக பணி செய்கிறார்கள். ஆனால் பனியாக்கள் ஏன் ஜாட் மக்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்? பணத்தை மீட்பது, முரட்டுத்தனங்கள், பிற ஆபத்துகள் என்று வரும் போது “பனியா அர்ஹ்தியாக்கள் பயப்படுகிறார்கள்”. ஜாட் அர்ஹ்தியாக்களிடம் அப்படிபட்ட பதற்றம் எதுவும் இல்லை. “எங்களுக்கு பணம் திரும்ப கிடைத்துவிடும்” என்று அமைதியாக சொல்கிறார்.

முக்ஸ்தர் மாவட்டத்தில் நான் சந்தித்த விவசாயிகளிடத்தில் (பெரும்பாலும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள்) இதைச் சொன்ன போது அவர்கள் வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தார்கள். “அவர் உண்மையைதான் சொல்கிறார்” என்று அவர்களுள் சிலர் சொன்னார்கள். “ஜாட் மக்கள் முரட்டுத் தனமான விசயங்களிலிருந்து ஒதுங்க மாட்டார்கள். பனியாக்கள் ஒதுங்கிவிடுவார்கள்” என்கிறார்கள்.  இந்த வணிகத்தை பொறுத்த வரையில் உதவியாளர்களாகத் தொடங்கியவர்கள் பெரியண்ணன்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்போதும் பனியாக்களுடனான வணிக உறவு குறைவான வழிகளிலாவது அதன் தாக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. சங்கேராவின் அலுவலகத்தில் அவரது மகன் ஓன்கார் சிங்கிடம் சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் ஐந்து புகைப்படங்களைப் பற்றி கேட்டோம். முதலிரண்டு புகைப்படங்கள், குரு கோபிந்த் சிங் மற்றும் குரு நானக் ஆகியோருடையது. கடைசி இரண்டு புகைப்படங்கள் குரு ஹர்கோபிந்த் மற்றும் குரு தேக் பகதூர் ஆகியோருடையது. இந்த வரிசையின் மையத்தில் குழந்தை வினாயகரை மடியில் வைத்திருக்கும் சிவன் பார்வதி. அது எப்படி அங்கே?

“இந்த வணிகத்துக்குள் நுழைந்துவிட்டோம், அதன் வழிகளுக்கு எங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஓன்கார்.

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Kavitha Muralidharan

Kavitha Muralidharan is a Chennai-based independent journalist and translator. She was earlier the editor of 'India Today' (Tamil) and prior to that headed the reporting section of 'The Hindu' (Tamil). She is a PARI volunteer.

Other stories by Kavitha Muralidharan