கீழ்முதுகின் வலி தாளமுடியாதபோது ஹோமியோபதி மருத்துவரை சென்று தனுஜா பார்த்தார். “கால்சியம் மற்றும் இரும்புச் சத்து குறைபாடு இருப்பதாகவும் தரையிலேயே நான் உட்காரக் கூடாது என்றும் அவர் கூறினார்.”
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியான அவர், எட்டு மணி நேரம் தொடர்ந்து தரையில் அமர்ந்து பீடி சுற்றுவார். “காய்ச்சல் வருவது போலவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். முதுகிலும் கடுமையான வலி இருந்தது,” என்கிறார் 40 வயதுகளில் இருக்கும் அவர். “ஒரு மேஜையும் நாற்காலியும் வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்கிறார்.
அது நவம்பர் மாத இறுதி. இதமான வெளிச்சம் ஹரெக்நகரிலிருக்கும் அவரது வீட்டின் கடினமான சிமெண்ட் தரையில் விழுந்து கொண்டிருந்தது. ஒரு பனையோலைப் பாயில் அமர்ந்திருந்த தனுஜா ஒன்றன்பின் ஒன்றாக பீடி சுருட்டிக் கொண்டிருந்தார். அவரது விரல்கள் சாமர்த்தியமாக பீடி இலைகளை சுருட்ட, முழங்கை நிலைத்து தோள்கள் சற்று உயர்ந்து தலை ஒரு பக்கமாக சாய்வு கொண்டது. “விரல்கள் இருக்கின்றனவே என தோன்றும் அளவுக்கு அவை மரத்துப் போய்விட்டன,” என்கிறார் அவர் வேடிக்கையாக.
பீடி இலைகள், தூசு படிந்த புகையிலை மற்றும் நூற்கண்டுகள் ஆகிய பீடி சுற்றத் தேவையான பொருட்கள் அவரைச் சுற்றிக் கிடக்கின்றன. சிறு கூரான கத்தியும் ஒரு கத்திரிக்கோலும்தான் அவரின் தொழிலுக்கான உபகரணங்கள்.
வீட்டு மளிகை வாங்கவும் சமைக்கவும் நீரெடுக்கவும் வீட்டை சுத்தப்படுத்தவும் பிற வீட்டுவேலைகள் செய்யவும் சிறிது நேரம் தனுஜா விடுப்பு எடுத்துக் கொள்வார். ஆனால் எல்லா நேரமும் அவர் செய்து முடிக்க வேண்டிய இலக்கான 500-700 பீடிகளின் எண்ணிக்கை குறைந்தால், மாத வருமானமான 3,000 ரூபாய் குறையும் என்கிற எண்ணத்துடனேயே செயல்படுகிறார்.
சூரியன் உதிப்பதிலிருந்து நள்ளிரவு வரை அவர் வேலை செய்கிறார். “தொழுகைக்கான முதல் பாங்கு பாடப்படும்போது நான் விழித்து விடுவேன். நமாஸ் முடித்ததும் வேலையைத் தொடங்குவேன்,” என்கிறார் தனுஜா, சுற்றும் பீடிகளிலிருந்து பார்வையை அகற்றாமல். அவருக்கு மணி பார்க்கத் தெரியாது. அவருடைய நாளே தொழுகைக்கான அழைப்பிலிருந்துதான் கணக்கிடப்படும். மாலை நேரத்தின் நான்காவது தொழுகையிலிருந்து இரவு நேர ஐந்தாவது தொழுகை வரை, அவர் இரவுணவு சமைப்பார். பிறகு தூங்கும் வரை ஒன்றிரண்டு மணி நேரங்களுக்கு பீடி சுற்றவோ அல்லது பீடி இலை வெட்டவோ செய்வார். தூங்க நள்ளிரவாகி விடும்.
“தொழும்போது மட்டும்தான் இந்த எலும்பொடிக்கும் வேலையிலிருந்து எனக்கு விடுப்பு கிடைக்கும். சற்று நேரம் ஓய்வு எடுப்பேன். நிம்மதியாக இருக்கும்,” என்கிறார் அவர். “பீடி குடித்தால் ஆரோக்கியத்துக்குக் கேடு என சொல்கிறார்கள். பீடி சுற்றுவதால் ஏற்படும் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்கிறார் தனுஜா.
2020ம் ஆண்டில் ஒருவழியாக மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல தனுஜா முடிவெடுத்தபோதுதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கோவிட் பற்றும் பயத்தில் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர் ஹோமியோபதி மருத்துவரை சென்று பார்த்தார். பதிவு செய்யாத மருத்துவப் பணியாளர்களும் ஹோமியோபதி மருத்துவர்களும்தான் பெல்தாங்கா - 1 ஒன்றியத்தில் இருக்கும் குறைவான வருமானம் கொண்ட பீடி சுற்றும் குடும்பங்களின் முதல் தேர்வு. கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பு 2020-21 -படி மேற்கு வங்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் 578 மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. 58 சதவிகித கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களே இல்லை. எனவே அரசு மருத்துவமனை செல்வது விலை மலிவானதாக இருந்தாலும் சிகிச்சைக்கும் ஸ்கேன்களுக்கும் வரிசையில் காத்திருக்க வேண்டும். விளைவாக அன்றாட வருமானமும் கிடைக்காது. “அந்தளவுக்கு நேரம் எங்களூக்கு இல்லை,” என்கிறார் தனுஜா.
ஹோமியோபதி மருந்துகள் உதவாததால், கணவரிடமிருந்து 300 ரூபாய் வாங்கி, அவருடைய வருமானத்திலிருந்து ஒரு 300 ரூபாயைப் போட்டு, உள்ளூர் ஆங்கில மருத்துவர் ஒருவரை சென்று பார்த்தார். “சில மாத்திரைகளைக் கொடுத்தார். மார்பு எக்ஸ்ரேவும் ஸ்கேனும் எடுக்கச் சொன்னார். ஆனால் நான் செய்யவில்லை,” என்னும் அவர், அவற்றுக்கு செலவு செய்ய முடியாத நிலையை தெளிவுபடுத்துகிறார்.
மேற்கு வங்கத்தில் தனுஜா போன்ற பெண் தொழிலாளர்கள்தான், மாநிலத்தின் 20 லட்ச பீடித் தொழிலாளர்களின் 70 சதவிகிதம் பேராக இருக்கின்றனர். பணி செய்யும் நிலைகளில் உள்ள குறைபாடுகளால் சுளுக்கு, தசைப்பிடிப்பு, நரம்பு வலி மற்றும் நுரையீரல் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. காசநோயும் ஏற்படுகிறது.
முர்ஷிதாபாதிலுள்ள 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை அபாயகரமாக 77.6 சதவிகித அளவில் இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன் இருந்த 58 சதவிகிதத்தைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி ( NFHS-5 ) இம்மாவட்டத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ரத்தசோகை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இம்மாவட்டத்திலிருக்கும் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது. துயரம் என்னவெனில் நான்கு வருடங்களுக்கு முன் 2015-16-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பதே.
இப்பகுதியில் பரிச்சயமான நப்ரான அஹ்சன் அலி மத்பராவில் வசிக்கிறார். ஒரு சிறு மருந்தகம் நடத்துகிறார். மருத்துவப் பயிற்சி இல்லாதவரென்றாலும் பீடி சுற்றும் குடும்பத்தில் இருந்து வந்தவரென்பதால், மக்களின் பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருக்கிறார். 30 வயதான அவர், பீடித் தொழிலாளர்கள் வலி நிவாரணி கேட்டுதான் அதிகம் வருவதாக சொல்கிறார். “25-26 வயதை அடையும்போது சுளுக்கு, தசை பலவீனம், நரம்பு வலி, கடும் தலைவலி போன்ற பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்,” என்கிறார் அவர்.
வீடுகளிலுள்ள புகையிலை தூசாலும் தாய்களுக்கு உதவ செய்யும் பணியாலும் இளம் பெண்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 10 வயதாவதற்கு முன்பிருந்தே மஜ்பராவில் தனுஜா பணிபுரியத் தொடங்கினார். “பீடியின் இரு பக்கங்களையும் மடித்து முடிய தாய்க்கு உதவுவேன்,” என்கிறார் அவர். “எங்கள் சமூகத்தில் பீடி சுற்றத் தெரியாத பெண்களுக்கு கணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என சொல்வார்கள்.”
12 வயதில் ரஃபிகுல் இஸ்லாமுக்கு அவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5-ன்படி, மாவட்டத்தின் 55 சதவிகித பெண்கள் 18 வயதுக்கு முன்னரே மணம் முடித்து வைக்கப்படுகின்றனர். சிறு வயது திருமணமும் குழந்தைப் பேறும் சத்துக் குறைவான ஆரோக்கியத்துடன் சேர்கையில் அடுத்த தலைமுறை அதிக பாதிப்படையும் என சுட்டிக் காட்டுகிறது யுனிசெஃப் .
”பெண்களின் இனவிருத்தியும் பாலுறவு சுகாதாரமும் பெண்களின் பொதுச் சுகாதாரத்துடன் அகரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிகப் பிணைப்பு கொண்டவை. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது,” என்கிறார் சுகாதார மேற்பார்வையாளரான ஹஷி சேட்டர்ஜி. பெல்தாங்கா - 1 ஒன்றியத்தின் மிர்சாப்பூர் பஞ்சாயத்துக்கு பொறுப்பாக இருக்கிறார். மக்களுக்கு தேவையான சுகாதார திட்டங்கள் கிடைப்பதை உறுதிபடுத்தும் பணி செய்கிறார்.
தனுஜாவின் தாய் அவரின் வாழ்க்கை முழுக்க பீடி சுற்றியிருக்கிறார். 60 வயதுகளில் தற்போது இருக்கும் அவரால் நடக்க முடியாதளவுக்கு ஆரோக்கியம் குன்றியிருப்பதாக மகள் சொல்கிறார். “அவரது முதுகு சேதமடைந்துவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கிறார்,” என்கிறார் அவர் கையறுநிலையில். “எனக்கும் இந்த நிலைதான் வாய்க்கும்.”
இத்துறையில் இருக்கும் பெரும்பான்மைக்கும் அதிகமான தொழிலாளர்கள் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். வேறு திறனற்றவர்களாகவும் இருக்கின்றனர். பெண்கள் பீடி சுற்றவில்லை என்றால் அவர்களும் அவர்தம் குடும்பங்களும் பட்டினி கிடக்க வேண்டும். தனுஜாவின் கணவரின் ஆரோக்கியம் மோசமடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் ஆனபோது, ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கு உதவியது பீடித் தொழில்தான். புதிதாய் பிறந்த நான்காம் குழந்தையான மகளை மடியில் ஒரு துணியில் சுற்றி கிடத்தி, தனுஜா பீடி சுற்றத் தொடங்கினார். குடும்பத்தின் கடுமையான நெருக்கடிகள் குழந்தையை புகையிலை தூசை சுவாசிக்க வைத்தது.
“ஒரு காலத்தில் நாளொன்றுக்கு நான் 1000-1200 பீடிகள் செய்திருக்கிறேன்,” என்கிறார் தனுஜா. ஆனால் அவர் தற்போதைய பலவீனமான ஆரோக்கியத்திலும் நாளொன்றுக்கு 500-700 பீடிகளை சுற்றி மாதத்துக்கு 3000 ரூபாய் சம்பாதிக்கிறார். அந்த இலக்கை தன் ஆரோக்கியத்தை பலி கொடுத்தும் அவர் தொடர வேண்டியிருக்கிறது.
முர்ஷிதா காதுன் தேப்குந்தா SARM பெண்கள் உயர்நிலை மதராசா பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கிறார். பெல்தாங்கா - 1 ஒன்றியத்தின் மதராசாவைச் சேர்ந்த 80 சதவிகித இளம்பெண்களும் இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் தாய்கள் இலக்கை எட்ட உதவுபவர்கள் என்றும் அவர் கூறுகிறார். பள்ளியில் பகலில் கொடுக்கப்படும் அரிசி, பருப்பு, காய்கறி கொண்ட உணவுதான் பல இளம்பெண்களுக்கு அன்றைய நாளின் முதல் வேளை உணவாக இருப்பதாக அவர் சொல்கிறார். “வீடுகளில் ஆண் உறுப்பினர்கள் இல்லையெனில், காலை உணவு எதுவும் சமைக்கப்படுவதில்லை,” என்கிறார் அவர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெரும்பகுதி கிராமங்கள்தான். 80 சதவிகித மக்கள்தொகை 2166 கிராமங்களில் வசிக்கின்றனர். இங்குள்ள படிப்பறிவு 66 சதவிகிதம்தான். மாநில சராசரியான 76 சதவிகிதத்தையும் (கணக்கெடுப்பு 2011) விடக் குறைவு. இத்துறையில் விரும்பப்படும் தொழிலாளராக பெண்களே இருக்கின்றனர். காரணம் அவர்களின் வேகமான விரல்களும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடிவதும்தான் என்கிறது பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை .
*****
ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் ஷகினூர் பீவி பேசிக் கொண்டே, கூக்னி குழம்புக்கென வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை வெட்டுகிறார். ஹரெக்நகரைச் சேர்ந்த முன்னாள் பீடித் தொழிலாளரான அவர், கடலைப்பருப்பில் செய்யப்படும் இந்த பிரபலமான உணவு வகையைச் செய்து மாலையில் வீட்டிலிருந்து விற்று வருமானம் ஈட்டும் வேலைக்கு மாறிவிட்டார்.
”ஆரோக்கிய குறைபாடு பீடி சுற்றுபவர்களுக்கான விதி,” என்கிறார் 45 வயது ஷகினூர் பீபி. சில மாதங்களுக்கு முன் சுவாசக்கோளாறு காரணமாக அவர் பெல்தாங்கா கிராம மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னதையும் பின்பற்றினார். ஒரு தனியார் மருத்துவ மையத்தில் எக்ஸ்ரே எடுத்தார். ஆனால் இப்போது கணவர் நோயுற்றிருப்பதால் அவரால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. “என்னுடைய இரண்டு மருமகள்களும் என்னை பீடி சுற்ற விடுவதில்லை. அவர்கள் முழு நேரமாக வேலை பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் வருமானத்துக்கு அது போதாது,” என்கிறார் அவர், உணவு வகை விற்பதற்கான காரணத்தை விளக்கி.
20-25 பேருக்கேனும் காசநோய் உறுதிபடுத்தப்பட்டு மாதந்தோறும் வருவதை கவனித்து வருகிறார் டாக்டர் சால்மன் மொண்டல். ஒன்றிய மருத்துவமனையில் அவர் பணிபுரிகிறார். ”விஷம் நிறைந்த தூசை அதிகம் எதிர்கொள்வதால் பீடி சுற்றுபவர்களுக்கு காச நோய் வரும் சாத்தியங்கள் அதிகம். அடிக்கடி குளிர் காய்ச்சல் வந்து நுரையீரலும் பலவீனமாகும்,” என்கிறார் பெல்தாங்கா - 1-ன் ஒன்றிய மத்துவ அதிகாரியான மொண்டல்.
தர்ஜிபரா பகுதியில் இருந்த காலத்திலிருந்து சைரா பெவா தொடர் இருமல்கள் மற்றும் ஜலதோஷத்தை எதிர்கொண்டு வருகிறார். 60 வயதுகளில் இருக்கும் அவருக்கு நீரிழிவு நோயும் ரத்த அழுத்தமும் கூட கடந்த 15 வருடங்களாக இருக்கிறது. ஐம்பது வருடங்களாக பீடி சுற்றியதில் அவரது கைகளும் நகங்களும் புகையிலைத் தூசுக் கறையைக் கொண்டிருக்கின்றன.
“அரைக்கப்பட்ட புகையிலை ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருள். அதன் துகள்கள் பீடி சுற்றப்படும்போது சுவாசிக்கப்படுகிறது,” என்கிறார் டாக்டர் சோல்மன் மொண்டல். மேற்கு வங்கத்தில் ஆஸ்துமா நோய் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கிறது. 1,00,000 பெண்களில் 4,386 பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது.
”புகையிலைக்கும் காசநோய்க்கும் உள்ள நெருக்கத்தைச்,” சுட்டிக் காட்டும்ஒன்றிய மருத்துவ அதிகாரி, “தொழில் ரீதியிலான காசநோய் பரிசோதனை நடவடிக்கை இல்லை,” என்றும் கூறுகிறார். அதிக எண்ணிக்கையில் பீடித் தொழிலாளர்கள் இருக்கும் மாவட்டத்தில் இந்தக் குறைபாடும் அதிகமாக இருக்கிறது. சாய்ரா இருமுகையில் ரத்தம் வருகிறது. காச நோய்க்கான அடையாளம் அது. “பெல்தாங்கா கிராம மருத்துவமனைக்கு சென்றேன். சில பரிசோதனைகள் செய்தனர். சில மாத்திரைகளை கொடுத்தனர்,” என்கிறார் அவர். எச்சிலை பரிசோதிக்க அறிவுறுத்தி புகையிலை தூசை தவிர்க்கவும் அவர்கள் கூறினர். எந்த தடுப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை.
பாரி அம்மாவட்டத்தில் சந்தித்த எந்த பீடித் தொழிலாளரிடமும் முகக்கவசங்களோ கையுறைகளோ இல்லை. தொழில் ரீதியிலான ஆவணங்களும் சமூக பாதுகாப்பு பலங்களும், வரையறுக்கப்பட்ட ஊதியமும், நலத்திட்டமும் பாதுகாப்பும் சுகாதார திட்டங்களும் கூட இல்லை. பீடி நிறுவனங்கள் வேலைகளை தரகர்களுக்கு கொடுத்துவிட்டு தன் பொறுப்புகளை கைகழுவி விடுகின்றன. தரகர்கள் பீடிகளை வாங்குகின்றனர். ஆனால் இப்பிரச்சினைகள் எதையும் பொருட்படுத்துவதில்லை.
முர்ஷிதாபாதின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்கள். கிட்டத்தட்ட எல்லா பீடித் தொழிலாளர்களும் இஸ்லாமியப் பெண்கள்தான். ரஃபிகுல் ஹசன் பீடித் தொழிலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறார். “பீடி உற்பத்தித் துறை எப்போதுமே பழங்குடியினர், இஸ்லாமிய இளம்பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரை மலிவாகச் சுரண்டிதான் தழைத்திருக்கிறது,” என்கிறார் சிஐடியூவின் ஒன்றியச் செயலாளர்
முறைசாரா தொழில்துறையில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருப்பவர்கள் பீடித் தொழிலாளர்கள்தான் என மேற்கு வங்கத்தின் தொழிலாளர் துறை ஒப்புக் கொண்டிருக்கிறது. அத்துறை நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான ரூ.267.44 -ஐ பீடித் தொழிலாளர்கள் பெறுவதில்லை. 1,000 பீடிகளுக்கு வெறும் 150 ரூபாய்தான் அவர்கள் பெறுகின்றனர். 2019ம் ஆண்டின் ஊதிய விதிகள் நிர்ணயித்த தேசிய குறைந்தபட்ச ஊதியம் 178 ரூபாயைக் காட்டிலும் குறைவு.
“ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்கள் அவர்களைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே பெறுகின்றனர் என்பதை பலரும் தெரிந்திருக்கின்றனர்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் சிஐடியூவின் அங்கமான முர்ஷிதாபாத் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கத்தின் சைதா பெவா. “பிடிக்கவில்லை எனில் வேலை பார்க்காதே என எங்களை தரகர்கள் மிரட்டுகின்றனர்,” என்கிறார் 55 வயதான அவர். பீடித் தொழிலாளர்களுக்கென தனித் திட்டங்களை அரசு உருவாக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.
ஊதியத்தை பொருட்படுத்தாதோடு, குறைந்த தரம் கொண்ட மூலப் பொருட்களையும் தரகர்கள் கொடுக்கின்றனர். வேலை முடிந்தபிறகு தரம் குறைவாக இருப்பதாக சொல்லி நிறைய பீடிகளை கழித்து விடுகின்றனர். “தரகர்கள் நிராகரிக்கப்பட்ட பீடிகளை வைத்துக் கொண்டு, அவற்றுக்கு காசு கொடுக்க மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
குறைந்த ஊதியமும் பாதுகாப்பின்மையும் தனுஜா போன்ற தொழிலாளர்கள் நசிந்த பொருளாதாரத்துடன் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறது. அக்குடும்பம், மூன்றாம் மகளின் திருமணத்துக்கு வாங்கிய 35,000 கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. “எங்களின் வாழ்க்கைகள் கடன் மற்றும் கடனடைப்பு என்கிற சுழலுக்குள் சிக்கியிருக்கிறது,” என்கிறார் அவர், ஒவ்வொரு திருமணத்துக்கும் வாங்கப்பட வேண்டிய கடன்களை குறித்து.
இளம் தம்பதியாக இருந்தபோது தனுஜாவும் ரஃபிகுல்லும் அவர்களின் பெற்றோருடன் வசித்து வந்தனர். குழந்தைகள் பிறந்ததும், தம்பதி கடன் பெற்று நிலம் வாங்கி, ஓரறை கொண்ட ஓலை வீட்டைக் கட்டினர். “நாங்கள் இருவரும் அப்போது இளமையாக இருந்தோம். கடின உழைப்பில் கடனை அடைத்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவே இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக கடன் வாங்கிக் கொண்டே இருந்தோம். இப்போது இன்னும் இந்த வீட்டை கட்டி முடிக்க முடியாமல் இருக்கிறோம்.” பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கிடைப்பதற்கு தகுதி அவர்கள் பெற்றிருந்தாலும் இன்னும் கிடைக்கவில்லை.
ரஃபிகுல் தற்போது சுகாதாரப் பணியாளராக டெங்கு ஒழிப்பு திட்டத்தின் ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிகிறார். அவரின் மாத வருமானமான 5,000 ரூபாய் சரியான நேரத்தில் எப்போதும் வராது. “முறையில்லாமல் ஊதியம் வருவது எனக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. ஆறு மாதமாக ஒரு பைசாவும் பெறாத நிலைகளும் இருந்திருக்கின்றன,” என்கிறார் அவர். உள்ளூர் கடையில் குடும்பம் வைத்திருக்கும் கடன் 15,000 ரூபாயை தாண்டிக் கொண்டிருக்கிறது.
பீடித் தொழிலாளர்கள் பிரசவ கால விடுமுறையோ நோய்க்கால விடுமுறையோ எடுப்பதில்லை. கர்ப்பமும் பிரசவமும் பீடி சுற்றும் வேலையுடனே அவர்கள் சமாளிக்கின்றனர். ஜனனி சுரக்ஷா யோஜனா, குழந்தை வளர்ப்பு திட்டம், மதிய உணவு போன்ற திட்டங்கள் இளம்பெண்களுக்கு உதவியிருக்கின்றன. “முதியப் பெண் தொழிலாளர்களின் ஆரோக்கிய குறைபாடு அளவிட முடியாதது,” எனச் சுட்டிக்காட்டுகிறார் சுகாதார ஊழியரான சபினா யாஸ்மின். “அவர்களின் ஆரோக்கியம் மாதவிடாய் நின்றபிறகு இன்னும் மோசமடைகிறது. பெண்களுக்கு முக்கியத் தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து குறைபாடு அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எலும்பு ஆரோக்கியம் இருப்பதில்லை. ரத்தசோகை இருக்கிறது,” என்கிறார் அவர். பெல்தாங்கா டவுனின் 14 வார்டுகளுக்கு பொறுப்பாளராக இருக்கும் யாஸ்மின், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை பேணுவது மட்டுமே தன் பணி என்பதால், உதவ முடியாமல் இருக்கும் நிலைக்காக வருந்துகிறார்.
தொழில்துறையாலும் அரசாலும் கைவிடப்பட்ட நிலையில் பெண் பீடி தொழிலாளர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கக் கூடிய விஷயமாக எதுவும் இல்லை. பணிப் பலன்களை பற்றி கேட்டபோது தனுஜா கோபமடைந்தார். “ஒரு ஒப்பந்தக்காரரும் எங்களின் நலனை விசாரிப்பது இல்லை. கொஞ்ச காலத்துக்கு முன் மருத்துவர் எங்களை பரிசோதிப்பார் என்றார் ஒன்றிய வளர்ச்சி அதிகாரி. நாங்கள் சென்று பார்த்தபோது பயனளிக்காத பெரிய மாத்திரைகளை அவர்கள் கொடுத்தனுப்பினார்கள்,” என அவர் நினைவுகூர்கிறார். பெண்களின் நிலையை ஆராய எவரும் திரும்ப வரவில்லை.
அந்த மாத்திரைகள் கூட மனிதர்களுக்கானதுதானா என்பதில் தனுஜாவுக்கு சந்தேகம் இருக்கிறது. “அவை மாடுகளுக்கான மாத்திரைகள் என நினைக்கிறேன்.”
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய
PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின்
தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான
குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின்
முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய
zahra@ruralindiaonline.org
மற்றும்
namita@ruralindiaonline.org
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்