2015 நவம்பர் மாதம் ஷிகா மோண்டல் தனது கணவர் அசித்தை இழந்தார். “அவர் நண்டு பிடிப்பதற்காக பாகன்பாரி வனப்பகுதியில் உள்ள கரல் ஆற்றிற்கு இரண்டு பேருடன் சென்றிருந்தார். மற்ற இருவரும் திரும்பிவிட்டனர், என் கணவரை புலி இழுத்துச் சென்றுவிட்டதாக கூறினர்,” என்கிறார் அவர். அசித் மோண்டல் இறந்தபோது அவருக்கு வயது 22. பள்ளி செல்லும் இரண்டு மகன்களுக்கு தந்தை, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர்.

மேற்கு வங்கத்தின் கோசாபா வட்டாரத்தில் உள்ள ஜாஹர் காலனி கிராமத்தைச் சேர்ந்த ஷிகா இழப்பீடு கோரும் நோக்கில் உதவி கோரி வழக்கறிஞருக்கு ரூ.10,000 செலுத்தினார். “வனத்துறை மற்றும் காவல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் (NOCs), இன்சூரன்ஸ் அட்டை, கிராமத் தலைவரிடம் கடிதம், இறப்புச் சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரிக்க வேண்டியிருந்தது.”

இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு தருவதற்கு வழக்கறிஞர் முயன்றார். ஆனால் அடர் வனப்பகுதியில் அவரது கணவர் இறந்துள்ளதால் தடையில்லாச் சான்றிதழ் அளிக்க வனத்துறை மறுத்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனமும் அவரது ஆவணங்களை திருப்பி அளிக்கவில்லை.

நண்டு பிடிப்பது, இறால் பிடிப்பது, விவசாயக் கூலி வேலை என ஷிகா கிடைக்கும் வேலைகளை செய்து தனது மகன்களை பள்ளிக்கு அனுப்புகிறார். தனியாக இருந்து வீட்டை கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் அவரும், பிள்ளைகளும் மாமாவின் வீட்டில் வசிக்கின்றனர்.

சுந்தரவனக் காடுகளில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் புலிகளின் தாக்குதலில் கணவர்களை இழந்துள்ளனர். கிழக்கு இந்தியாவில் சுமார் 4,200 சதுர அடிக்கு பரவியுள்ள இந்த டெல்டா பகுதி முழுக்க சதுப்புநிலக் காடுகளால் நிறைந்துள்ளது. புலிகளின் வாழ்விடங்களாக இச்சதுப்புநில காடுகள் உள்ளன.

அனுமதி பெற்றோ, பெறாமலோ அடர் வனப்பகுதிகளில் கிராமத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் அங்கு ஆண்கள் இறக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது

காணொளி: 2015 ஆம் ஆண்டு இறந்த கணவருக்காக இழப்பீடு கோரி பட்டத் துயரங்களை விவரிக்கும் ஷிகா மொண்டல்

அன்றாடத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு காடுகளையே நம்பியுள்ளதால் ஹிங்கல்கஞ்ச், கொசாபா, குல்டலி, பதார் பிரதிமா, பசந்தி வட்டார கிராமத்தினருக்கு புலிகள் அச்சுறுத்தலாகவே உள்ளன. இந்த வட்டாரங்கள் சுந்தரவனக் காடுகளின் தேசிய பூங்கா (புலிகள் சரணாலயம்) அருகில் உள்ளன. சுமார் 1,700 சதுர கிலோமீட்டர் அடர் வனப்பகுதியாகவும், சுமார் 900 சதுர கிலோமீட்டர் பகுதி சில வாழ்வாதார செயல்பாடுகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் மீன், நண்டு பிடிப்பதற்கு, தேன் மற்றும் விறகு சேகரிக்க வனங்களுக்குச் செல்வார்கள். புலியை எதிர்கொள்ளும் போது அவர்களே அதிகளவில் இறக்கின்றனர்.

சுந்தரவனக் காடுகளில் இவ்வகையில் விதவையான பெண்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளூர் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற கணக்கீடுகளின்படி குறைந்தது 3,000 பேர் மூன்று தசாப்தங்களில் அல்லது 100 ஆண்டுகளில் இறந்திருக்கலாம்.

“லஹிரிபூர் கிராமப் பஞ்சாயத்தில் [22 கிராமங்களைக் கொண்டது] புலி தாக்குதலில் 2011ஆம் ஆண்டுவரை கிட்டதட்ட 250 பெண்கள் தங்கள் கணவர்களை இழந்துள்ளனர்,” என்கிறார் ‘புலி விதவைகள்‘ நலனுக்காக வேலை செய்து வரும் சுந்தரவன கிராம வளர்ச்சி சங்கம் எனும் என்ஜிஓவை நிர்வகிக்கும் அர்ஜூன் மொண்டல். “ஒருவருக்குக்கூட இழப்பீடு கிடைத்தது கிடையாது,” என்கிறார்.

மேற்குவங்க அரசின் வனத்துறை, மீன்வளத்துறை, மாநிலக் குழுவின் தனிநபர் விபத்து காப்பீடு திட்டம் ஆகியவற்றின் கீழ் பெண்களுக்கு மொத்த இழப்பீடாக கிட்டத்தட்ட ரூ.4-5 லட்சம் வழங்கப்பட முடியும். எனினும் அதற்குப் பல நிபந்தனைகள் உள்ளன. அர்ஜூன் சிலவற்றை பட்டியலிட்டார்: “அடர்வனப் பகுதியில் கணவன் இறந்திருக்கக் கூடாது, அவரிடம் படகு உரிமச் சான்றிதழ் (BLC), வனத்துறை அனுமதி ஆகியவை இருந்திருக்க வேண்டும். கூடுதலாக இழப்பீட்டிற்காக பல்வேறு துறைகளுக்குப் பலவகை ஆவணங்களை மனைவி சமர்ப்பிக்க வேண்டும்.”

கிராம மக்கள் அடர்வனத்திற்குள் பல்வேறு பகுதிகளில் சுற்றுகின்றனர். அர்ஜூன் சொல்கிறார், “எங்கு அனுமதிக்கப்பட்ட மண்டலம் முடிகிறது, அடர்வனப் பகுதி தொடங்குகிறது என்பதை எங்களால் அறிய முடிவதில்லை. அரசும் குறைவான BLCகளை மட்டுமே வழங்குகிறது. எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. அனுமதி பெறுவதும் வனத்துறையின் முடிவைச் சார்ந்தது.”

அனுமதி அல்லது BLCகள் இல்லாத ஆண்களின் மனைவிகளுக்கு எதிரான முரண்பாடுகள் குவிகின்றன. அனுமதியோடு அல்லது அனுமதியின்றிகூட கிராமத்தினர் நுழைய மறுக்கப்படும் அடர்வனப் பகுதிகளில் ஆண்கள் இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

கொசாபா வாட்டாரத்தில் உள்ள பதார்பாரா கிராமத்தின் 40 வயது நமிதா பிஸ்வாசிற்கு இதுதான் நடந்தது. அவரது கணவர் மனோரஞ்சன் ஒரு மீனவர். 2015 பிப்ரவரி மாதம் அடர்வனப் பகுதியில் அவர் புலியால் தாக்கப்பட்டார். உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களில் அவர் உயிரிழந்தார். “அவரது தலைக்காயத்தில் ஏற்பட்டத் தொற்று ஆறவில்லை,” என விளக்குகிறார் நமிதா. “என் கணவரிடம் BLC இருந்தது, ஆனால் எனது வாக்குமூலத்தை காவல்துறையினர் ஏற்கவில்லை. இழப்பீட்டிற்காக வனத்துறையிடம் அனைத்து ஆவணங்கள், மருத்துவக் கட்டண ரசீதுகள் என அனைத்தையும் நாங்கள் அளித்துவிட்டோம். ஆனால் பணம் இன்னும் வரவில்லை. என்னைப் போன்ற பல விதவைகள் இப்படி உள்ளனர். அரசு எங்களுக்கு குறைந்தபட்சம் மாத உதவித்தொகையையாவது அளிக்கலாம்.”

Purmila Burman’s documents have been taken away by a middleman who has disappeared
PHOTO • Urvashi Sarkar

இறந்த கணவருக்கு இழப்பீடு பெற்றுத் தருவதாக கூறி பூர்மிலா பர்மனை ‘ இடைத்தரகர்’ ஒருவர் ஏமாற்றியுள்ளார்

இழப்பீடு கிடைக்கும் என்று ஷிகாவும், நமிதாவும் இப்போது வரை காத்திருக்கின்றனர். ஆனால் பதார்பாராவின் 55 வயது பூர்மிலா புர்மனுக்கு அதுபோன்ற நம்பிக்கையில்லை. 2016 மார்ச் மாதம் அடர்வனப் பகுதியில் அவரது மீனவ கணவரான ஷூபேந்து புலியால் கொல்லப்பட்டார். “ஷூபேந்து இறந்தபோது இடைத்தரகர் ஒருவர் உதவுவதாக உறுதியளித்தார். அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் எனது அனைத்து ஆவணங்களையும் சேகரித்து கொடுத்தேன்,” என்கிறார் பூர்மிலா. அவரது ஆவணங்களைப் பெற்றவுடன் அந்த இடைத்தரகர் காணாமல் போய்விட்டார். பூர்மிலாக்கு இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை.

சுந்தரவனக் காடுகளில் இதுபோன்ற பல கதைகள் நிறைந்துள்ளன. சில குடும்பங்களில் தலைமுறைகளாக தொடர்ந்து புலி தாக்குதல்களில் தங்கள் வீட்டு ஆண்களை இழந்து வருகின்றனர். பல கிராமங்களில் இதுபோன்ற பகுதிகள் பிதோபா பரஸ் அல்லது ‘விதவைகள் வாழுமிடம்’ என்று ஆகிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களின் வாழ்க்கைத் துயரங்கள், வறுமையால் குறிக்கப்படுகிறது. மறுமணம் என்பது முகம் சுழிக்கும் செயலாக கருதப்படுவதால் அதுவும் கடினம்.

2016 ஜூலையில் மேற்குவங்கத்தின் மீன்வளத் துறை, வனத்துறை, சுந்தரவன விவகாரத்துறை ஆகியவற்றிற்கு புலி விதவைகளுக்கு இழப்பீடு தொடர்பாக விசாரணைக் கோரி இக்கட்டுரையாளர் தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மூன்று தனித்தனி மனுக்களை அளித்தார்.

மீன்வளத்துறை மட்டுமே பதிலளித்தது: ஆண்டுதோறும் புலிகளின் தாக்குதலில் 100 பெண்கள் வரை கணவர்களை இழந்தாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஐந்து பெண்கள் மட்டுமே இழப்பீடு கோரி இத்துறைக்கு மனு அளித்துள்ளனர். அவர்களில் மூன்று பேருக்கு மட்டும் தலா ரூ.1லட்சம் கிடைத்துள்ளது. மற்ற இருவரின் கணவர்களுக்கு உடற்கூராய்வு அறிக்கைகள் கிடைக்காததால் இழப்பீடு மறுக்கப்பட்டுவிட்டது.

மீன்வளத்துறை தரவுகளுக்கு முரணாக, நான் பேசியவரை பெரும்பாலான பெண்கள் இழப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். முழுமை பெறாத ஆவணங்கள் அல்லது பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல்கூட அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

“பல ஆவணங்களைச் சமர்ப்பித்து, பலமுறை அலைந்து திரிய வேண்டியுள்ளதால் ஒட்டுமொத்த செயல்பாடுமே அச்சுறுத்தலாக உள்ளது. பெண்கள் தவறாக வழிநடத்தப்படலாம் அல்லது செயல்முறைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம்,” என்கிறார் தக்ஷின்பங்கா மத்சியாஜிபி மன்றத்தின் பிரதிப் சாட்டர்ஜி. (தெற்கு வங்க மீனவர் மன்றம் ‘புலி விதவைகளுக்கு’ இழப்பீடுகளை பெற்றுத் தருவதற்கும், வேலை தேடுவதற்கு உதவ முயற்சித்து வருகிறது). “இதற்கிடையே ஆண்டுதோறும் புலிகளால் கொல்லப்படுவது நிகழ்ந்து கொண்டே இருப்பதால் விதவைப் பெண்களின் எண்ணிக்கையும் கூடுகிறது,” என்கிறார் அவர்.

சில பெண்கள் வனத்துறையின் கேள்விகளுக்கு பயந்து தங்கள் கணவரின் மரணத்தை குறிப்பாக அடர்வனத்தில் கொல்லப்பட்டதைத் தெரிவிக்காமல் ‘மூடிமறைக்கின்றனர்.’ அதிகாரிகளிடம் அவர்கள் பதிவும் செய்வதில்லை, இழப்பீடும் கோருவதில்லை.

பதார்பாரா கிராமத்தின் ரன்பிபாலா மொண்டல் இழப்பீட்டிற்கு முயற்சித்து வருகிறார். அவரது கணவர் புலியால் கொல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. “மூன்றாண்டுகள் ஆகியும் அரசு எதுவும் எனக்குத் தரவில்லை,” என்கிறார் அவர். “உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?”

தமிழில்: சவிதா

Urvashi Sarkar
urvashisarkar@gmail.com

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha