“Insaan ab na jhagde se marega na ragade se
marega tho bhook aur pyas se.”
"மனிதகுலம் இனி அழியப்போவது மோதலாலோ அல்லது அழுத்தத்தாலோ அல்ல பசி மற்றும் தாகத்தால்".
எனவே, இது பருவநிலை மாற்றம் குறித்து அறிவியல் ஒலிக்கும் எச்சரிக்கை மணி மட்டுமல்ல. இந்தியாவின் இலக்கிய காவியங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே இதை மிகச் சரியாக கூறிவிட்டு சென்று இருக்கின்றன என்று தில்லியைச் சேர்ந்த 75 வயதாகும் விவசாயியான சிவ சங்கர் வலியுறுத்துகிறார். அவர் 16 ஆம் நூற்றாண்டின் காவியமான ராமசரிதமானஸின் வரிகளை பொழிப்புரை செய்வதாக அவர் நம்புகிறார் ( காணொளியில் காண்க ). காவியத்தை வாசிப்பதற்கு சங்கருக்கு பழக்கம் விட்டுப் போய் இருக்கலாம், மேலும் இந்த வரிகளைை துளசிதாசின் உண்மையான கவிதையில் கண்டறிவதும் கடினம். ஆனால் யமுனை ஆற்றில் வெள்ள நீர் படுகையில் உள்ள இந்த விவசாயின் வார்த்தைகள் நம் சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமாகத் தான் தெரிகிறது.
சங்கர், அவரது குடும்பத்தினர் மற்றும் பல விவசாயிகள் வெப்பநிலை, வானிலை மற்றும் பருவநிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் எங்கும் இல்லாத மிகப்பெரிய நகர்ப்புற வெள்ள நீர் படுகையில் ஒன்றை எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கின்றனர். யமுனாவின் 1376 கிலோ மீட்டர் நீளத்தில் 22 கிலோ மீட்டர் மட்டுமே தேசியத் தலைநகர் பகுதி வழியாக பாய்கின்றது அதன் 97 சதுர கிலோ மீட்டர் வெள்ள நீர் படுகை தில்லியின் பரப்பளவில் 6.5 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இந்த சிறிய இருப்பு கூட பருவநிலையை சமநிலைப்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தலைநகரில் இயற்கை சமநிலைமானி போல இது செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் இப்போது அங்கு நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை தங்களது சொந்த மரபு மொழியிலேயே குறிப்பிடுகின்றனர். சிவ சங்கரின் மகனான விஜேந்தர் சிங் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குள்ள மக்கள் செப்டம்பர் மாதத்தின் போதே லேசான போர்வைகளை பயன்படுத்த துவங்கிவிடுவர். "இப்போதெல்லாம் டிசம்பர் வரை குளிர்காலம் துவங்குவது இல்லை, என்று 35 வயதாகும் அவர் கூறுகிறார். முன்பெல்லாம் மார்ச் மாதத்தில் ஹோலிப் பண்டிகை வரும் நாள் மிகவும் சூடான நாளாக கருதப்படும். இப்போது அப்பண்டிகையை குளிர்காலத்தில் கொண்டாடுவதைப் போலத் தான் இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
சங்கரின் குடும்பத்தினர் வாழ்ந்து அனுபவித்த அனுபவங்கள் இங்குள்ள மற்ற விவசாயிகளின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. பல்வேறு மதிப்பீடுகள் 5,000 முதல் 7,000 விவசாயிகள் தில்லியின் யமுனா கரையோரங்களில் வசிக்கின்றனர் என்று கூறுகின்றன - இதுவே கங்கை நதியின் மிக நீண்ட துணை நதியாகும், கொள்ளளவின் அடிப்படையில் (காகராவிற்குப் பிறகு) இது தான் இரண்டாவது பெரிய நதி. இங்குள்ள விவசாயிகள் சுமார் 24,000 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகின்றனர், இது சில தசாப்தங்களுக்கு முன்பு இங்கு இருந்ததைவிட மிகக் குறைவானது என்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் ஒரு பெரு நகரத்தின் விவசாயிகள், ஏதோ ஒரு தொலைதூர கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. எப்போதுமே அவர்கள் 'வளர்ச்சியால்' தங்களது இருப்பை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். யமுனாவின் வெள்ளநீர் படுகையில் சட்டவிரோதமாக பெருகி வரும் கட்டுமானங்களுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) மனுக்கள் குவிந்து கிடக்கின்றன. மேலும் இதனால் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் மட்டுமல்ல.
"யமுனாவின் வெள்ளநீர் படுக்கையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகள் போல தொடர்ந்து பணிகள் நடந்து கொண்டே இருந்தால், கோடை மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டிலும் வெப்பநிலை தீவிரமாகவும் தாங்க முடியாததாகவும் மாறும் என்பதால் தில்லியைச் சேர்ந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறும்படி நிர்பந்திக்கப்படுவார்கள்", என்று ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரியான மனோஜ் மிஸ்ரா கூறுகிறார். 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட யமுனா ஜியே அபியான் (நீடூழி வாழ் யமுனா) இயக்கத்திற்கு மிஸ்ரா அவர்களே தலைமை வகிக்கிறார். இந்த இயக்கம் தில்லியில் உள்ள 7 முன்னணி சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட குடிமக்களை ஒன்று சேர்த்தது, மேலும் நதியையும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் போற்றிப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. "இந்நகரம் வாழத் தகுதியற்றதாகவும் மற்றும் கடுமையான இடப்பெயர்வையும் சந்தித்து வருகிறது. இந்நகரம் அதன் காற்றின் தரத்தை சரி செய்யவில்லை என்றால் பன்னாட்டு தூதரகங்கள் (கூட) வெளியேறும்", என்று அவர் கூறுகிறார்.
*****
இங்கு யமுனா வெள்ளநீர் படுகையில், கடந்த சில தசாப்தங்களாக ஏற்பட்ட தாறுமாறான மழைப்பொழிவு விவசாயிகளையும், மீனவர்களையும் ஒருசேர துன்புறுத்தத் தான் செய்கிறது.
யமுனை நதியை சார்ந்திருக்கும் சமூகங்கள் ஒவ்வொரு ஆண்டும் இம்மழையை வரவேற்க தான் செய்கின்றன. மீனவர்களும் தான், ஏனென்றால் அதிகப்படியான நீர் ஆற்றை தூய்மைப்படுத்தி மீன்கள் பெருக வழிவகுக்கிறது, மேலும் விவசாயிகளுக்கு புதிய வளமான மண்ணைக் கொண்டு வந்து சேர்க்கிறது. "மழை காலத்தால் நிலம் புத்துயிர் பெற்று வருகிறது, மேலும் மாற்றவும்படுகிறது", என்று சங்கர் விளக்குகிறார். "இது கடந்த 2000 ஆம் ஆண்டு வரை சரி வர நடந்து வந்தது. ஆனால் இப்போது மழை குறைவாகத்தான் பெய்கிறது. முன்பெல்லாம் மழைக்காலம் ஜூன் மாதத்திலேயே துவங்கிவிடும். இப்போதெல்லாம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வறட்சி தான் நிலவுகிறது. மழை வருவது தாமதமாகி விட்டது அது எங்களது பயிர்களை பாதிக்கிறது", என்று கூறுகிறார்.
"மழை குறையும் போது மண்ணில் காரத் தன்மை அதிகமாகிறது", என்று சங்கர் தனது வயல்களை சுற்றிக் காண்பிக்கும் போது எங்களிடம் கூறினார். வெள்ள நீர் படுகையில் ஆறு விட்டுச் சென்ற மண்ணே தில்லியின் வண்டல் மண்ணுக்கான ஆதாரம். கரும்பு, அரிசி, கோதுமை மற்றும் பல பயிர்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பதற்கு இந்த மண் நீண்டகாலமாக உதவி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை மூன்று வகையான கரும்புகளான - லால்ரி, மிராட்டி, சோராதா ஆகியவை இந்நகரின் பெருமையாக இருந்து வந்தது என்று தில்லி அரசிதழ் ஒன்று கூறுகிறது.
"மழை காலத்தால் நிலம் புத்துயிர் பெற்று வருகிறது, மேலும் மாற்றவும்படுகிறது", என்று சங்கர் விளக்குகிறார்.
கரும்புகள் வெல்லம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை புதிய கரும்புச் சாற்றை விற்கும் சிறிய தற்காலிக கடைகள் தில்லியின் ஒவ்வொரு தெரு முனைகளிலும் இருந்தன. "பின்னர் கரும்புச் சாற்றை விற்பதற்கான அனுமதியை அரசாங்கம் நிறுத்திவிட்டது, அதனால் சாகுபடியும் நின்றுவிட்டது", என்று கூறுகிறார் சங்கர். 1990 களில் இருந்து கரும்புச்சாறு விற்பனையாளர்கள் மீது அதிகாரபூர்வ தடைகள் இருக்கின்றன, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகளும் இருக்கின்றன. "கரும்புச்சாறு நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், உடலை குளிர்ச்சியாக்குவதற்கும் பயன்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும்", என்று அவர் வலியுறுத்துகிறார். குளிர்பான நிறுவனங்கள் தான் எங்களுக்குத் தடை விதிப்பதற்கு தூண்டுதலாக இருந்தன. அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களிடம் இதனை வலியுறுத்தினர், நாங்கள் வியாபாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டோம்", என்று அவர் கூறுகிறார்.
மேலும் சில நேரங்களில், வானிலை உச்ச நிலைகளும், அரசியல் நிர்வாக முடிவுகளுடன் இணைந்து அழிவை ஏற்படுத்தும். ஆகஸ்டு மாதத்தில் ஹரியானாவின் ஹதினி குண்டு தடுப்பணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், தில்லியில் பெய்த கனமழையுடன் ஒன்றிணைந்து யமுனையில் இந்த வருடம் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது - இது பல பயிர்களையும் அழித்துவிட்டது. இந்தப் பருவத்தில், பேலா எஸ்டேடில் (ராஜ்காட் மற்றும் சாந்திவானின் தேசிய சின்னங்களுக்கு பின்னால் அமைந்துள்ள) உள்ள அவர்களது 5 பைகா (1 ஏக்கர்) நிலத்தில் பயிரிடப்பட்டு சுருங்கிய மிளகாய் செடிகள், சூம்பிப் போன கத்தரிக்காய்கள், மற்றும் பூக்காத முள்ளங்கி பயிர்களை விஜேந்தர் எங்களுக்கு காண்பித்தார்.
இந்தத் தலைநகரம் நீண்டகாலமாக பாதி வறண்ட வானிலையை தான் கொண்டிருக்கிறது. இது 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தலைநகராக மாறுவதற்கு முன்னர் வரை விவசாய மாநிலமான பஞ்சாபில் இருந்து வந்தது, மேற்கில் ராஜஸ்தான் பாலைவனமும், வடக்கே இமயமலை மலைத் தொடரும் மற்றும் கிழக்கே இந்தோ கங்கை சமவெளிகளாலும் சூழப்பட்டுள்ளது. (இந்த அனைத்து பகுதிகளும் இன்று பருவநிலை மாற்றத்தின் பிடியில் தான் இருக்கிறது). இது கடுமையான குளிர்காலம் மற்றும் கோடை காலத்தை குறிக்கிறது, பருவமழை மூன்று முதல் நான்கு மாத கால இடைவெளியில் தான் பெய்கிறது.
இப்போது அது மேலும் ஒழுங்கற்றதாகிவிட்டது. இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ள மழை காலத்தில் தில்லியின் மழை பற்றாக்குறை 38 சதவீதமாக இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கு ஆண்டு சராசரியான 648.9 மில்லி மீட்டருக்கு மழைக்கு பதிலாக 404.1 மில்லி மீட்டர் மழை தான் பெய்திருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், டில்லி கடந்த 5 ஆண்டுகளாக பற்றாக்குறையான பருவமழையை கண்டிருக்கிறது.
பருவமழை பெய்யும் முறையும் மாறி வருகிறது மேலும் மழையும் பரவலாக தான் பெய்கிறது, என்று தெற்காசிய அணைகள் நதிகள் மற்றும் மக்கள் இணையத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹிமான்சு தாக்கர் குறிப்பிடுகிறார். "மழை நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது இருப்பினும் மழையின் அளவு குறையவில்லை. பெய்யும் நாட்களில் அதி தீவிரமான மழை பெய்யும். தில்லி மாறி வருகிறது அது யமுனாவையும் அதன் வெள்ளநீர் படுக்கையையும் பாதிக்கும். இடப்பெயர்வு சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் காற்று மாசுபாடு ஆகிய அனைத்தும் அதிகரித்துவிட்டன மேலும் இது உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபினை சுற்றியுள்ள பகுதிகளிலும் மாற்றங்களைத் தூண்டியுள்ளது. (இந்த சிறிய பகுதியின்) நுண்ணிய தட்பவெட்பநிலை உள்ளூர் பருவநிலையை பாதிக்கிறது", என்று அவர் கூறுகிறார்.
*****
'யமுனால இருந்து வர்ற இந்த பட்டாணியை வாங்குங்க' என்பது ஒரு காலத்தில் தில்லியின் தெருக்களில் காய்கறி விற்பனையாளர்களின் கூவலாக இருந்தது, அது 1980 களுக்குப் பின்னர் நின்றுவிட்டது. தில்லியின் சுற்றுச்சூழலின் கதைகள் (கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் காண இந்திய தேசிய அறக்கட்டளை வெளியிட்ட) என்ற புத்தகத்தில் நகரத்தில் கிடைக்கும் லக்னோ தர்பூசணி போன்ற பழங்களை வயதானவர்கள் நினைவு கூர்ந்தனர். ஆற்று மணலில் வளரக்கூடிய நீர் சத்தான இந்த பழத்திற்கு காற்றும் தேவைப்படுகிறது. அந்த காலத்து தர்பூசணி பழங்கள் வெறுமனே பச்சை நிறமாகவும் மற்றும் கனமானதாகவும் (அதிக இனிப்பை குறிக்கும்) மேலும் வருடத்திற்கு ஒருமுறை தான் விளைந்தன. சாகுபடி முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தால் புதிய வகையான விதைகள் வந்திருக்கின்றன. இப்போது தர்பூசணி பழங்கள் சிறியதாகவும், கோடுகளை கொண்டதாகவும் இருக்கிறது - புதிய விதைகள் அதிக மகசூலை கொடுத்தாலும் சிறிய அளவில் தான் பழங்களைக் கொடுக்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் விற்பனையாளர்கள் வீடு வீடாக வண்டியை எடுத்துச் சென்று புதியதாக பறித்த பன்னிமோந்தான் கிழங்குகளை விற்றனர் - அவை எல்லாம் இப்போது மறைந்துவிட்டது. அவை நஜாப்ஃகர் ஜீல் (ஏரியைச்) சுற்றி வளர்க்கப்பட்டன. இன்று நஜாப்ஃகர் வடிகால் மற்றும் தில்லி வாயில் வடிகால் ஆகியவை யமுனாவின் மாசுபாட்டிற்கு 63% பங்களிக்கின்றது என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) வலைதளம் கூறுகிறது. தில்லி விவசாயிகள் கூட்டுறவு பல்நோக்கு சங்கத்தின் பொதுச் செயலாளரான, 80 வயதாகும், பல்ஜுத் சிங், "பன்னிமோந்தான் கிழங்குகள் சிறிய நீர் நிலைகளில் தான் வளர்க்கப்படுகிறது", என்று கூறுகிறார். "தில்லியில் மக்கள் இதை பயிரிடுவதை நிறுத்திவிட்டனர், ஏனென்றால் இதற்கு சரியான அளவு தண்ணீர் தேவை மற்றும் நிறைய பொறுமையும் தேவைப்படுகிறது", என்று கூறுகிறார். தலைநகரம் இன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதனால் அங்கு நீரும் குறைவு பொறுமையும் குறைவு.
விவசாயிகளும் தங்கள் நிலங்களில் இருந்து விரைவான விளைச்சலையே விரும்புகின்றனர் என்று பல்ஜீத் சிங் கூறுகிறார். எனவே அவர்கள் 2 முதல் 3 மாதங்கள் எடுக்கும் பயிர்களான வெண்டைக்காய், பீன்ஸ், கத்திரிக்காய், முள்ளங்கி, காலிபிளவர் போன்ற பயிர்களை தேர்ந்தெடுத்து வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை வளர்த்து வருகின்றனர். புதிய வகை முள்ளங்கி விதைகள் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டன என்று விஜேந்தர் கூறுகிறார். "மகசூலை அதிகரிக்க அறிவியல் உதவியது", என்கிறார் சங்கர். எங்களுக்கு (ஒரு ஏக்கருக்கு) 45 முதல் 50 குவிண்டால் முள்ளங்கிகள் கிடைத்து வந்தது; இப்போது நாங்கள் அதை விட நான்கு மடங்கு அதிகமான விளைச்சலைப் பெறுகிறோம். நாங்கள் அதை வருடத்திற்கு மூன்று முறையும் வளர்க்க முடிகிறது", என்று கூறுகிறார்.
இதற்கிடையில், கான்கிரீட் வகையான வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது, வெள்ள நீர் படுகையிலும் அது குறைந்தபாடில்லை. 2018 - 2019 ஆம் ஆண்டு தில்லியில் எடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பின்படி பயிர் பரப்பு 2000 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2% அளவிற்கு குறைந்து வந்துள்ளது. தற்போது நகரத்தின் மக்கள் தொகையில் 2.5% மற்றும் அதன் பரப்பளவில் கிட்டத்தட்ட 25% (இது 1991ஆம் ஆண்டில் 50 சதவீதமாக இருந்து குறைந்துள்ளது) கிராமப்புறமாக இருக்கிறது. தலைநகருக்கான 2021 பெருந் திட்டமிடலில் தில்லியின் மேம்பாட்டு ஆணையம் முழுமையான நகரமயமாக்கலை வேண்டுகிறது.
அதன் நகரமயமாக்கலின் வேகம் - முக்கியமாக, விரைவான கட்டுமான நடவடிக்கைகளால், சட்டபூர்வ மற்றும் சட்டவிரோதமானது - 2030 ஆம் ஆண்டிற்குள் தில்லி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருக்கக்கூடும் என்று ஐ. நா மதிப்பிட்டுக் கூறியுள்ளது. தற்போது 20 மில்லியன் மக்களைக் கொண்ட தலைநகரம் அப்போது டோக்கியோவை (இப்போது 37 மில்லியன்) முந்தி இருக்கும். அடுத்த ஆண்டிற்குள் நிலத்தடி நீர் வற்றி இருக்கும் 21 இந்திய நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நிதி ஆயோக் கூறுகிறது.
"நகரத்தின் கட்டிடமயமாக்கல், என்பது அதிகமான நிலங்களில் கட்டுமானங்களை கட்டுவது என்பது குறைந்த நீர் ஊடுருவல் குறைந்த பசுமை ஆகியவற்றையும்... கட்டுமானங்கள் வெப்பத்தை உறிஞ்சி அவற்றை வெளியிடும்", என்றும் மனோஜ் மிஸ்ரா கூறுகிறார்.
1960 ஆம் ஆண்டில் சங்கருக்கு 16 வயதாக இருந்த போது, தில்லியில் சராசரியாக 178 நாட்களுக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 32 டிகிரி செல்சியஸை எட்டியது என்று நியூயார்க் டைம்ஸின் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய ஒரு ஊடாடும் கருவி தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் இந்நகரம் 205 வெப்பமான நாட்களைக் கொண்டிருந்தது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், இந்தியாவின் தலைநகரம் ஆறு மாதங்களுக்கும் குறைவான நாட்களுக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டிருப்பதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 8 மாதங்களுக்கும் மேலாக அவ்வெப்பநிலையை கொண்டிருக்கக்கூடும். இது மனித செயல்பாடுகளுடன் அதிகம் தொடர்புடையது.
தென்மேற்கு தில்லியில் இருக்கும் பாலம் மற்றும் அதன் கிழக்கே இருக்கும் வெள்ள நீர் படுகைக்கும் இடையிலான வெப்பநிலை வித்தியாசம் இப்போது கிட்டத்தட்ட 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கிறது என்று மிஸ்ரா சுட்டிக்காட்டுகிறார். பாலத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்றால், அதுவே வெள்ளநீர் படுகையில் பகுதியில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். "இந்தப் பெருநகரில் இருக்கும் இந்த வெள்ளநீர் படுகைகள் ஒரு வரம்", என்று அவர் கூறுகிறார்.
*****
யமுனாவின் மாசுபாட்டில் கிட்டத்தட்ட 80% தலைநகரில் இருந்து வருவதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒப்புக் கொள்வதை போல, தில்லியை விட்டு இந்த ஆறு வெளியேறி விட்டால் என்ன நடக்கும் - இது ஒரு நச்சு உறவில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தர்க்க ரீதியான நடவடிக்கை. "தில்லி இருப்பது யமுனாவினால் தான், அப்படியே மாறாக அல்ல", என்று மிஸ்ரா கூறுகிறார். தில்லியின் குடிநீரில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஆற்றின் மேல் நோக்கிய ஒரு இணை கால்வாயாக மாற்றப்படுவதில் இருந்து தான் வருகிறது. பருவமழை ஆற்றை மீட்டெடுக்கிறது. முதல் அலை அல்லது முதல் வெள்ளப்பெருக்கில் ஆற்றிலிருந்து மாசு வெளியேற்றப்படுகிறது, இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளப்பெருக்கில் அது நகரத்தின் நிலத்தடி நீரை மீள் நிறைப்பு செய்கிறது. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் இவ்வாறு மீள் நிறைப்பு நதியால் செய்யப்படுகிறது, வேறு எந்த நிறுவனத்தாலும் அந்த வேலையைச் செய்ய முடியாது. 2008, 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இங்கு வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்ட போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான நீர் மீள் நிறைப்பு செய்யப்பட்டது. பெரும்பாலான தில்லிக்காரர்கள் இதை அங்கீகரிக்கவில்லை", என்று அவர் கூறுகிறார்.
வளமான வெள்ளநீர் படுகைகள் முக்கியம், அவை தண்ணீர் பரவுவதற்கான இடத்தையும், தண்ணீரின் வேகத்தையும் குறைக்கின்றன. அவை வெள்ளத்தின் போது அதிகப்படியான தண்ணீரை சேமித்து மெதுவாக நிலத்தடி நீர் நிலைகளில் சேர்த்து விடுகின்றன. இது இறுதியில் நதியை மீள் நிறைப்பு செய்ய உதவுகிறது. 1978 ஆம் ஆண்டில் யமுனா அதன் அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு மட்டத்தில் இருந்து 6 அடி உயரத்திற்கு உயர்ந்த போது ஏராளமான மக்கள் இறந்தனர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர், சிலர் வீடற்றவர்கள் ஆக்கப்பட்டனர் - பயிர்கள் மற்றும் பிற நீர்நிலைகளுக்கு ஏற்பட்ட சேதத்தையும் நாம் மறந்து விடக்கூடாது. கடைசியாக அது 2003 ஆம் ஆண்டில் அந்த ஆபத்து எல்லையை மீறியது. 'யமுனா நதி திட்டம்: புது தில்லி நகர்புற சூழலியல்' (விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் தலைமையில்) அறிக்கையின் படி வெள்ள நீர் படுகையை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. "100 ஆண்டுகால வெள்ளப் பெருக்கின் போது கட்டுமானங்கள் வீழ்ச்சியடையும், வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டமைப்புகள் உடைத்தெறியப்படும் மேலும் கிழக்கு தில்லி நீரில் மூழ்கிவிடும்", என்று அது தெரிவிக்கிறது.
வெள்ளநீர் படுகையில் மேலும் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்களுக்கு எதிராக விவசாயிகள் எச்சரிக்கின்றனர். "இது நீர்மட்டத்தை பெரிதும் பாதிக்கும்", என்கிறார் சிவ சங்கர். "ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக அடித்தளங்களை உருவாக்குவார்கள். அவர்கள் மரக்கட்டைகளைப் பெற ஆடம்பரமான மரங்களை நடவு செய்வார்கள். அதற்கு அவர்கள் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, போன்ற பழ மரங்களை நட்டு வைத்தால் கூட அது குறைந்தது மக்கள் சாப்பிடுவதற்கும், சம்பாதிப்பதற்கு உதவும். மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளும் அதனை உணவாக எடுத்துக் கொள்ளும்", என்று அவர் கூறினார்.
அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 1993 ஆம் ஆண்டு முதல் யமுனாவை சுத்தம் செய்ய 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. "ஏன் அப்படியானால் இன்று யமுனா சுத்தமாக இல்லையா?", என்று பல்ஜித் சிங் கேலி செய்கிறார்.
இவை அனைத்தும் தில்லியில் ஒன்று சேர்ந்து வந்துள்ளது - தவறான வழியில்: ஒவ்வொரு அங்குலத்தையும் இடைவிடாமல் கட்டுமானம் கட்டுதல்; வெள்ளநீர் படுக்கையில் கட்டுப்பாடற்று கட்டுமானங்களை கட்டுவது மற்றும் அதை தவறாக பயன்படுத்துவது; நச்சு மாசுபாட்டால் இப்பெரிய நதி திணறி வருகிறது; நிலப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் புதிய விதைகள், பழக்கங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவை பயனர்கள் பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்தும்; இயற்கையின் சம நிலையையே அது அழித்துவிடும், ஒழுங்கற்ற பருவமழை, அசாதாரணமான காற்று மாசுபாடு. இவையெல்லாம் ஒரு கொடிய விஷம் போன்றது.
சங்கரும் மற்றும் அவரது சக விவசாயிகளும் அதன் சில உள்ளீட்டில் இருக்கும் பொருட்களை அங்கீகரிக்கின்றனர். "நீங்கள் எத்தனை சாலைகளை கட்டுவீர்கள்?" என்று அவர் கேட்கிறார். "நீங்கள் எவ்வளவு அதிகமாக கட்டுமானம் செய்கிறீர்களோ அவ்வளவு வெப்பம் தரையால் உறிஞ்சப்படும். இயற்கையின் மலைகள் - மழையின் போது பூமியை நீரை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கின்றன. மனிதர்கள் கட்டியுள்ள கான்கிரீட் மலைகள் பூமியை சுவாசிக்கவோ அல்லது மீள் நிறப்பம் செய்யவோ அல்லது பெய்யும் மழையை தக்கவைத்து பயன்படுத்தவோ அனுமதிக்காது. தண்ணீரே இல்லாவிட்டால் நீங்கள் உணவுப் பயிர்களை எப்படி வளர்ப்பீர்கள்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த செய்தி சேகரிப்பு திட்டம், சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கு CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்