அங்கு ஒரு யானை இருந்தது. அதன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அந்த மனிதனையும், யானையையும் பார்த்த போது நாங்கள் சர்குஜா-பலமு எல்லையின் வெறிச்சோடியச் சாலைப் பகுதியில் நடந்துக்கொண்டிருந்தோம். அப்போது,  குறைந்தபட்சம் நாங்கள் அதனை நெருங்கிவிட்டதாக எண்ணினோம். நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் கேட்டு அதனை உறுதியும் படுத்திக்கொண்டோம். எனினும், வேகமாக அருகில் சென்று பார்ப்பதற்கு எங்களுக்கு தோன்றவில்லை. அதுகுறித்து எந்த தவறும் இல்லை.

ஆனாலும், இதுகுறித்து தலிப்குமார் எரிச்சல்பட்டார். அவர் எங்களை சந்திப்பதற்காக சந்த்வா பகுதியிலிருந்து வந்திருந்தார். அவர் எங்களது அணுகுமுறை அபத்தமாக இருந்ததாக சுட்டிக்காட்டினார். ”ஒருவேளை இதே காட்சியை நாங்கள் பாட்னாவிலோ ராஞ்சியிலோ அல்லது வேறு நகர்ப்புறத்திலோ பார்த்திருந்தால் இதனை நாங்கள் வழக்கமான ஒன்றாக எண்ணி இருக்க மாட்டோம். ஆனால், இது காடு, யானைகளுக்கு சொந்தமானது. அதுமட்டுமல்லாது நாங்கள் முட்டாள்களாக இருந்தோம்”.

இது காடு என்பதாலோ என்னவோ நாங்கள் முட்டாள்களாக இருந்திருக்கக்கூடும். தலிப் முழுமையாக தர்க்கரீதியாக நடந்துகொண்டிருந்தார். எனினும்,தர்க்கப்பூர்வமாக பேசியதை நடைமுறைப்படுத்துவது என்று வரும்போது,  அவருக்கும் ஆர்வம் குறைவாக இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார். இதேவேளையில் உண்மையிலேயே அந்த மனிதனை யானை மீது பார்த்தோமா என்று எங்களால் உறுதியாகக் கூற இயலவில்லை.

அந்த சமயம், அந்த மனிதர் எங்களைப் பார்த்து விட்டார். உற்சாகமாக கையசைத்தபடி, அவரது பெரும் வாகனத்தை நாங்கள் இருந்த திசை நோக்கித் திருப்பினார். அவளது பெயர் பார்பதி. நீங்கள் எங்கும் அணுகக்கூடிய அளவுக்கு அவள் மென்மையானவள். அவரது பெயர் பர்பு* என்பது அவருக்கு பொருந்தக்கூடியதாக இருந்தது. அவர் அவளை இதுவரை நாங்கள் கேள்விப்படாத ஏதோவொரு கோவில் உள்ள பகுதிக்கு கூட்டிச்சென்றுக் கொண்டிருக்கிறார். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று முடித்துவிட்டதாக அதுகுறித்து அவர் விளக்கிக் கூறினார். இதன்வழியாக குறைந்தளவிலானத் தொகை ஈட்டிவந்ததாகவும், திருவிழாவென்றால் மேலும் கூடுதலாகவும் ஈட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாது,அவர்கள் செல்லக்கூடிய வழியில் இருக்கும் கிராமத்தைச் சார்ந்த நல்லவர்களும் அவர்களுக்கு கொஞ்சம் பணமும் உணவும் கொடுத்துள்ளனர்.

பர்பு மத்தியபிரதேச மாநிலம் சர்குஜா பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் அவரும் பார்பதியும் பலமுவிலிருந்து எல்லையின் இரண்டு பக்கமும் சென்று வருகின்றனர். அவர் உள்ள சர்குஜா மாவட்டம் டெல்லி,கோவா, நாகலாந்து ஆகியப்பகுதிகளின் ஒட்டுமொத்தப்பரப்பை விட பெரியதாகும். பலமு** பீகார் மாநிலத்தில் உள்ளது. பலமு மற்றும் சர்குஜா ஆகிய இரண்டும் நாட்டிலுள்ள ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக அதிகளவிலான ஏழ்மை நிலையிலுள்ள மக்களையும் கொண்டுள்ளது. எனினும், இரண்டு மாநிலங்களும் பெருமைப்படத்தக்க அளவில் வளத்தினைக் கொண்டுள்ளது.

பார்பதி அனேகமாக புகழ்பெற்ற பரம்பரையைச் சேர்ந்ததாகும். போர்களில் சர்குஜா பகுதியைச் சார்ந்த யானைகள் முக்கியப்பங்காற்றியதாக பெருமைமிகு வரலாறு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அரசு ஆவணங்களின் படி:” மத்தியக் காலப் போர்களில்,யானைகளே படையின் வலிமைக்கு மிகமுக்கிய ஆதாரமாக இருந்துள்ளது.அந்த காலக்கட்டத்தில்  சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா பகுதியானது யானைகளை வாங்கும் மிகமுக்கியான மையமாக திகழ்ந்துள்ளது.    மேலும்,மால்வாவைச் சேர்ந்த சுல்தான்களுக்கும்,சர்குஜா பகுதியைச் சார்ந்த ஆட்சியாளர்களுக்குமான உறவுநிலையானது,தொடர்ந்து மால்வாவிற்கு யானைகளை வழங்குவதாக சர்குஜா ஆட்சியாளர்கள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், மால்வாக்களும் கூட சர்குஜாவின் மீதான ஆட்சியைத் தக்க வைக்க இதையே முக்கியக் காரணமாகக் கருதியுள்ளனர். இதேவேளையில், பர்பு மற்றும் பார்பதியை கடுமையான போர்குணமிக்கவர்களின் சந்ததியாக காட்சிப்படுத்தி பார்ப்பதற்கு மிகவும் கடினமாகவும் சிரமமாகவும் உள்ளது. பர்புவைப் பார்க்கப் பணிவான உள்ளம் கொண்டவராகவும், பார்பதியைப் பார்ப்பதற்கு போர்குணமிக்க முயலினைப் போலவும் காட்சியளிக்கின்றனர்.(மிகமிகப்பெரிய அமைதியான முயலினைப் போன்று கற்பனை ஒருவேளை நீங்கள் கற்பனைச் செய்து கொள்ளலாம்)

அண்மையிலுள்ள நாடோடிகளின் எண்ணங்கள்

தலிப், நான் மற்றும் அம்பிகாபூர்***  பகுதியில் இருந்து நாங்கள் கூட்டி வந்த பழமையான ஜீப்பின் ஓட்டுநர் ஆகிய மூவரும் நாங்கள் கடைசிவரை கண்டடைய முடியாத கிராமத்தை தேடி அலைந்துக்கொண்டிருந்தோம். எங்கள் ஜீப்பை பிர்ஹோர் பழங்குடிகள் வாழக்கூடிய சிறிய குடியிருப்புப் பகுதியில் நிறுத்தினோம். ஆஸ்ட்ரோ-ஆசிய மொழிக்குடும்பமான ஹோ, சந்தால் அல்லது முண்டா போன்று பிர்ஹோர் பழங்குடிகளும் மிகுந்த தொன்மையானப்  பழங்குடிகளாகும். இதேபோன்று, சோட்டாநாக்பூர் பகுதியில் உள்ள நாடோடி மக்கள், பலமு, ராஞ்சி,லோகர்தாகா,ஹசாரிபாக்,சிங்பும் ஆகியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது வெறும் 2,000 பேரை மட்டுமே மக்கட்தொகையாகக்  கொண்ட விளிம்புநிலைப் பழங்குடிகளாகும். ஒருவேளை இவர்களின் எண்ணிக்கை அதைவிட குறைவாகவும் இருக்கலாம்.

பிர்ஹோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ‘அண்மையில்’ சுவாரசியமான ஒரு கிராமம்  இருப்பதாகக் கூறினார்கள். நாங்கள் அப்போது அதுகுறித்து அறிந்து கொள்ளும் வேளையில் ஈடுபட்டிருந்தோம். ஒரு நாடோடியின் சிந்தனையின் படி ‘அண்மையில்’உள்ளது என்பது ஏற்றுக்கொள்வதற்கு அபாயகரமானதாகும். பல மைல்கள் சாலையில் பயணிக்க வேண்டியிருக்கும். பிர்ஹோர்கள் மீதான அக்கறையாலும்,நாங்கள் வந்த ஜீப் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் நாங்கள் கால் நடையாகவே செல்ல முடிவெடுத்து ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு சென்றோம்.

அந்த ஓட்டுநர் எங்களுடனே செல்ல விரும்பினார். அவர் பிர்ஹோர்களின் தோற்றத்தைப் பார்த்து பயம் கொண்டதாக அவர் கூறினார். தற்போது பார்பதியின் தோற்றத்தைப் பார்த்து அச்சம் கொண்டார். ஓட்டுநர் எவ்வாறு பார்க்கிறார் என்பது குறித்து தலிப் சில கடுமையான கருத்துகளைக் கூறினார். ஆனாலும், அந்த மனிதர் அவ்வாறே எங்களுடன் வந்தார்.

எங்களுக்கு சவாரி தருவதாக பார்பு பண்பாகக் கேட்டார். நாங்கள் உடனே ஏற்றுக்கொண்டோம். கடந்த 1993 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் இருந்து தற்போதுவரை எனது பணிகளுக்காக நான் எத்தனை விதமான போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தினேன் என்று நான் எண்ணத் தொடங்கினேன். நாட்டுப் படகு,மிதவைப் படகில் தொடங்கி ரயில்களின் மேற்புறம் என வேறுபட்ட வகைகளில் பயணித்திருக்கிறேன்.ஆனாலும், யானை சவாரி  அந்த பயணப் பட்டியலில் இடம்பெறவில்லை.  சில தூரம் நடந்து சென்ற பிறகு, நாங்கள் பார்புவுடன் பேசுவதற்காக தரையில் அமர்ந்தோம்.நாங்கள் அந்தக் கிராமத்தை தேடுவதையே மறந்துவிட்டோம். உண்மையிலேயே அங்கு வேடிக்கையான ஒன்று நிகழவிருந்தது. மற்றும் ‘அண்மையில்’. அவர் எவ்வாறு பார்பதிக்கு உணவளிக்கிறார், கவனித்துக் கொல்கிறார் என்பது குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பினோம்.

எங்களது திறன்வாய்ந்த நேர்காணல் செய்யும் திறன்களை எல்லாம் பயன்படுத்தி, ஒரு மணிநேரம் செலவிட்டும் துல்லியமாக இன்றி பாதியையே அறிந்து கொண்டோம். பார்பு கனிவான அதே சமயம் புறஞ்சொல்லாத மனிதராக இருந்தார். பிறரிடம் இருந்து பெரும் உதவிகள், கோவிலிருந்து கிடைக்கும் சொற்ப தொகை ஆகியவற்றையெல்லாம் வைத்து அவர் நன்றாகவே வாழ்வதாகக் கூறினார். இந்த நாட்டின் சில பகுதிகளில் அவ்வாறு வாழ்வது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், இங்கு அப்படி இல்லை. “நீ *%*#* பொய்கூறுகிறவன்” என்று பார்புவைப் பார்த்துக் கூறிய தலிப், “அந்த யானைக்கு 200 கிலோ புற்கள் மற்றும் பிற கூடுதல் உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது. அதற்கு நீ என்ன செய்து வருகிறாய் என்று நான் கூறுகிறேன். நீ அவளின் தீவனத்திற்காக அருகில் உள்ள பயிரிடப்பட்ட நிலங்களில் அனுமதிக்கிறாய் இல்லையா?” என்றார்

இது அனேகமாக உண்மையாக இருக்கலாம். இதை பார்பு முற்றிலுமாக மறுத்தார். “நாம் அந்த பெரும் யானையிடமே நேர்காணல் செய்யலாம். அவள் இவரைவிட மிகுந்த உண்மையாக இருக்கக்கூடும். அவளுக்கு உணவளிப்பதற்காக அவர் அவளை அடர்வனத்திற்குள் எல்லாம் கூட்டிச் செல்லவில்லை. அங்கு மெய்யானக் காட்டு யானைகளும், பிற காட்டுயிர்களும் உள்ளன. எனவே, அவர் வயல்களிருந்து திருடுகிறார். அவர் வெறுமனே அவளை கூட்டிக் கொண்டு வெளியே செல்கிறார். அவள் பயிர்களை நாசம் செய்கிறாள்”. என்று தலிப் கூறினார். நாங்கள் பார்பதியின் உணவு அதற்கான கட்டணங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது பார்பதி பார்புவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதன் தும்பிகைகள் அவரது தலையைத் தடவிக் கொண்டிருந்தது. அது அவர் மீது அவள் வைத்திருந்த அன்பை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துவதாக இருந்தது.  ஒருவேளை அவர் வயல்களில் திருடி இருந்தால், அது ஒரு நல்ல வேலையாக அவருக்கு இருந்திருக்கக் கூடும்.

பெரிய மனிதர்கள் அவர்களின் நிகழ்வுகளில் அமர்த்திய காலங்களைக் குறித்து பார்பு தெரிவித்தார்.  உதாரணமாக, கல்யாண நிகழ்வுகளில் நகைகளும்,அழகான ஆடைகளும் அணிந்து பார்பதி மிகப்பிரம்மாண்டமாகக் காட்சியளித்திருக்கின்றது. எனினும், அவர்கள் கடைசியாகக் கலந்துக் கொண்ட நிகழ்வு லாபகரமனதாக முற்றிலும் சரியாக அமையவில்லை. இதுகுறித்து கூறிய அவர், “மாலிக் மொத்தத்   தொகையிலிருந்து  50 ரூபாயை கழித்துக் கொண்டார். அதனால், அன்றைய தினம் பார்பதி பட்டினியால் வாடியது. அவளுக்கு எந்த உணவும் இல்லாத நிலையில், அங்கிருந்த சில உணவை வைத்து அவளே அவளின் பசியை ஆற்றிக் கொண்டாள்” என்றார் பார்பு. அப்போது அவர் அவளின் தும்பிக்கையில் லேசாக அறைந்தார். ஒருவேளை அன்று ஏற்பட்ட 50 ருபாய் இழப்பு குறித்து அவர் நினைதிருக்கக் கூடும். அதற்கு அவள் பாசத்தோடு பிளிறினாள். ஒருவேளை அன்றைய தினம் கல்யாண வீட்டில் கிடைத்த உணவுக் குறித்து அவள் சிந்தித்திருக்கக்கூடும்.

“ஒருமுறை  ஊர்வலம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஒருவர் வந்து எங்களிடம் கேட்டுகொண்டார். அவர்களது தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அந்த ஊர்வலத்தில் நாங்கள் பங்குபெறவில்லை. பார்பதி குறித்து சிலர் தவறான விஷியங்களைக் அவள் நம்பகத்தகுந்தவள் இல்லை என்று  கூறியதாக   பின்னர் அவர் தெரிவித்தார். மக்கள் இது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பார்பதியைப் பார்த்ததுமே  முன்பு மக்கள் உற்சாகம் அடைந்த போதெல்லாம் , அவர்கள் கிராமத்திற்குள் நுழையும் போது எந்த பிரச்னையும் இல்லை என்று பார்பு தெரிவித்தார். “அங்குள்ள எல்லா நாய்களும் பார்பதியைப் பார்த்துக் குரைத்துக் கடிக்க வந்த. இதனால் பயந்து பின் வாங்கிய அவள், அங்கிருந்த வீட்டினில் புக முற்பட்டதில் அந்த வீட்டில் சிறியளவு  பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அந்த வீட்டின் உரிமையாளர் எங்கள் மீது கடும் கோபமானார்” என்று பார்பு குறிப்பிட்டார்.

நாங்கள் சில நொடிகள் அமைதியாக இருந்து அந்த சம்பவத்திற்கு பின்னர் என்ன நடத்திருக்கும் என்று  யூகிக்கத் தொடங்கினோம்.  பார்பதி நுழைய முற்பட்ட அந்த வீட்டின் உரிமையாளர் எவ்வாறு இருந்திருப்பார்? அந்த நிகழ்விற்கு பிறகு அந்த வீடு எவ்வாறு தோற்றம் அளித்திருக்கும்? அந்த வீட்டின் உரிமையாளர் மிகுந்த கோபத்தோடு அல்லது வெறும் சாவினை குறித்து பயத்தோடு மட்டுமே இருப்பாரா?   என சிந்திக்கத் தொடங்கினோம்.

மற்றொரு தடவை, “மக்கள் கற்களை வீசி பார்பதியை கிராமத்தை விட்டு வெளியே துரத்தினர்” என்றார் பார்பு.

“ஆஹ்” என வெற்றிக்களிப்போடு கூறிய தலிப், “அது வயலில் திருடத்தொடங்கியதற்கு பின்னரே நடக்கத் தொடங்கியது” என்றார்.

“இல்லை, இல்லை. நாங்கள் வெறுமனே அவர்கள் வயல் வழியேக் கடந்து செல்கிறோம் அவ்வளவு தான். அங்கிருந்த சில ஆண்கள் குடித்திருக்கக் கூடுமென நான் நினைக்கிறேன். அவர்களே கற்களை வீசுகின்றனர். உடனே நாங்கள் வேறு வழியில் செல்வதற்கு திரும்பும் போது, கெடுவாய்ப்பாக, இருட்டத்தொடங்குகிறது. நாங்கள் மக்கள் நெருக்கமாக வாழும் வேறொரு பகுதிக்குள் நுழைந்து விடுகிறோம். பார்பதியும் வேகமாக நடக்கத் தொடங்குகிறாள். அதனால், மக்கள் அச்சம் கொள்கிறார்கள். அப்போது அவள் ஆக்ரோசமாகவே இல்லை. ஆனால்,மக்கள் தேவையற்று பயந்து, அலறத் தொடங்குகிறார்கள்”.

இருளாக உள்ள போது ஒருவேளை  பெரும் யானை எங்களைத் தாக்க வந்தால் நாங்கள் என்ன செய்வோமென்று வியப்படைந்திருந்தோம். ஒருவேளை நாங்கள் யானையை நோக்கி கற்களை எறியாமல் இருந்திருப்போம். ஆனால், அதற்கு  பதிலாக பதற்றம் அடைந்து, அலறத்தொடங்கிய சம்பவம் மிகநிச்சயமாக நிகழ்ந்திருக்கும்.

யானைக்கு எவ்வாறு உணவளிப்பது

நாம் எந்த அளவு பார்த்துக்கொண்டிருக்கிறோமோ, அதை விட மேலும் சிக்கலானது பார்புவும், பார்பதியும் சந்தித்து வருகின்ற பிரச்சனை. மேலும், சர்குஜா பகுதியில்  வசிக்கும்  மனிதர்களில் பெரும்பான்மையானவர்களே  சரியாக உணவு உண்ணாமல் இருக்கும் போது, யானைக்கு எவ்வாறு உணவளிக்க முடியும்? அல்லது பார்பதி சம்பாதிக்கும் வருமானத்தின் வழியாகத் தானே  பார்பதி பார்புவுக்கு உணவளிக்கிறாளா? பெருமை வாய்ந்த  யானைகளுக்கு அப்பாலும், சுர்குஜா பகுதி அதன் வறுமையின் காரணமாக வரலாற்று ரீதியாகவே பெருமை(அல்லது புகழற்றது) கொண்டதாக உள்ளது.

சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தாக்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் என அனைவரும் இந்த மாநிலத்தில் குறைந்த வரி அல்லது கப்பதையே விதித்துள்ளனர். சுல்தான்களும், முகலாயர்களும் யானைக்காகவே இந்த பகுதியில் தங்கியுள்ளனர். அதேபோன்று, அண்மையிலிருந்த மாநிலங்களிருந்து வரி வசூலித்து வந்த பிரிட்டிஷ் காரர்களும் ,அங்கிருந்து அற்பத்தொகையையேப் ஈட்டிய போதும்  1919 ஆண்டின் இறுதியில் இந்தப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும், அங்குள்ள சுர்குஜா, கொரியா மற்றும் சாங் பகார் ஆகிய உள்ளூர் நிலப்பிரபுத்துவ மாநிலங்களிலிருந்து வெறும்  2,500 ருபாய்,  .ரூ 500, .ரூ 387 என  முறையே பெற்றுள்ளனர்.

18 நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், மராத்தாக்கள் நிலப்பிரபுத்துவ மாநிலமான கொரியாவை கைப்பற்றியுள்ளனர். அதனைத்தொடர்ந்து சர்குஜாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.  எனினும், வலிமையான மராத்தியர்களால் கூட இப்பகுதியை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை – கட்டுப்படுத்துவதற்கு  மிகவும் கடினமான நிலப்பரப்பாக திகழ்ந்துள்ளது. இதேவேளையில், கொரியாவின் அரசரிடம் இருந்து வெறும் 2000 ரூபாயைக் கோரியுள்ளனர். அவரால் செலுத்த முடியாது எனக் கண்டறிந்த நிலையில், அந்த தொகையை குறைத்து  வருடத்திற்கு ருபாய் 200 வீதம் ஐந்து வருடத்திற்கு விதித்துள்ளனர். மேலும்,  எச்சரிக்கை விதிக்கும் விதமாக பல கால்நடைகளையும் பிடித்து வைத்துள்ளனர்.  அரசு ஆவணங்களின் படி, இதற்கு பின்னர், அந்த அரசரால் ஒரு ரூபாய் கூட செலுத்த இயலாது என்பதை இரக்கமற்ற மராத்தியர்கள் கூட புரிந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில்,  “ஐந்து சிறியக் குதிரைகள், மூன்று எருதுகள் மற்றும் ஒரு பெண் எருமை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு  இங்கேயே தங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கவர்ந்து சென்ற கால்நடைகளில் பெரும்பான்மையனவை பயனற்றது என்று தெரிந்த பின்னர், மராத்தியர்கள் அவற்றை  விடுவித்துள்ளனர்,  ஏன் திரும்பவும் கூட அவர்களிடமே ஒப்படைத்துள்ளனர். அதோடு, விரோதங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து, மராட்டியர்கள் இப்பகுதியைக் கண்டு திகைத்து திரும்பி சென்றுள்ளனர்.

எனவே, சர்குஜா பகுதியில் ஒருவர் யானைக்கு எவ்வாறு உணவளிக்க முடியும்? அதுவும்அந்த  யானையை அடர் வனத்திற்குள் அழைத்து செல்லாமலேயே எவ்வாறு உணவளிக்க முடியும்? நாங்கள் முன்பு இருந்ததைவிட இப்போது பதிலுக்கு வெகுதொலைவில் இருந்தோம். கடைசியாக ஒரு முறை அவநம்பிகையோடு முயற்சி செய்ய தொடங்கினோம்.

பார்புவிடமிருந்து பதிலைப் பெறுவதற்காக, அவருடன் விவாதித்தோம்,பணிவாக கேட்டோம், கெஞ்சினோம். மாறாத கணிவன்புடனும், அடக்கத்தோடும் அவர் எங்கள் கேள்விகளுக்கு மிக விரிவாக பதில் கூறினார். ஆனால், அவர் எந்த உண்மையும் வெளிபடுத்தவில்லை. பார்பதி இந்த மொத்த நிகழ்வையும் அடக்கமாகவும், ஆரவாரமான அவமதிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் அவர்களின் வழியில் புறப்படத் தொடங்கினார்கள். “அடுத்த கோவிலுக்கா” என்று நான் கேட்டேன். “இல்லை, அடுத்தவர் வயலில் திருடுவதற்கு” என்றார் தலிப்.

அவர் என்ன வேண்டுமானலும் செய்து விட்டு போகட்டும், ஆனால், பார்பதிக்கு ஒருநாளைக்கு 200 கிலோ புற்கள், கூடுதலாக இதர உணவுகள் கிடைக்க அவர் வழிசெய்கிறார். நமக்கு அது எவ்வாறு என்று தான் தெரியவில்லை.

*பர்பு அல்லது பிரபு கடவுள் சிவனின்  பெயர்களில் ஒன்றாகும். சிவனின் மனைவி பெயர் பார்வதி (அல்லது பார்பதி)

**இது பின்னர் ஜார்க்கண்டின் பகுதியாக மாற்றப்பட்டது.

***சர்குஜா மாவட்டத் தலைமையகம்,தற்போது சத்தீஸ்கரில் உள்ளது.

ஓவியங்கள்: பிரியங்கா போரர்.

பிரியங்கா போரர் ஊடகக் கலைஞரும்,ஆய்வாளருமாவார். அதன் கலாப்பூர்வத் தன்மையில் ஆர்வம் கொண்டவர். அவர் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஊடகத்தில் பணிபுரிந்திருந்தாலும், ஓவியம் தான் அவரது முதல் விருப்பம். தற்சமயம் கேலிச்சித்திரமும் வரைந்து வருகிறார்.

முதன்முதலாக இந்த கட்டுரை விதவிதமான ஓவியங்களுடன் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மாத இதழில் வெளியானது. பின்னர் பென்குயின் பதிப்பாக எல்ஸ்வேர் : அன்யூஸ்வல் டேக்ஸ் ஆன் இந்தியா, என்ற பெயரில் புத்தகமாக கை பிரைஸ் என்பவர் தொகுக்க 2௦௦௦ ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

P. Sainath
psainath@gmail.com

P. Sainath is Founder Editor, People's Archive of Rural India. He has been a rural reporter for decades and is the author of 'Everybody Loves a Good Drought'.

Other stories by P. Sainath
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan