“அன்றைய மதியவேளையில் நானோ என் குழந்தையோ உயிர் பிழைப்போமோ என எனக்கு உறுதியாக தெரியவில்லை. நீர்க்குடம் உடைந்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத்துவமனை இல்லை. சுகாதார ஊழியரும் இல்லை. ஷிம்லா மருத்துவமனைக்கு நான் செல்லும் வழியில் ஜீப்பில் வலி ஏற்பட்டது.. நிச்சயமாக என்னால் காத்திருந்திருக்க முடியாது. அங்கேயே பொலெரோவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன்.” ஆறு மாதங்களுக்கு பிறகு இக்கட்டுரையாளர் அனுராதா மஹ்தோவை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஏப்ரல் 2022-ல் சந்தித்தபோது குழந்தையுடன் அமர்ந்திருந்த அவர் மொத்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
“பிற்பகல் மூன்று மணி ஆகவிருந்தது. நீர்க்குடம் உடைந்ததும் சுகாதார ஊழியரிடம் கணவர் தகவலை தெரிவித்தார். அவர் அடுத்த 15, 20 நிமிடங்களில் வந்து சேர்ந்தார். உடனே அவசர ஊர்திக்கு அவர் அழைத்ததாக ஞாபகம். அன்று மழை பெய்து கொண்டிருந்தது. அவசர ஊர்தி ஓட்டுபவர் 10 நிமிடத்தில் கிளம்புவதாகக் கூறினார்கள். ஆனால் வழக்கமாக வரும் நேரத்தை விட 1 மணி நேரம் அதிகமாக அன்று அவர்களுக்கு நேரம் ஆகியிருக்கும்,” என மழை நேரத்தில் சாலைகள் கொண்டிருக்கும் ஆபத்தை விளக்குகிறார் 20 வயதுகளில் இருக்கும் அனுராதா.
இமாச்சலப் பிரதேசத்தின் கோட்டி கிராமத்தின் மலைப்பகுதியில் ஒரு குடிசையில் மூன்று குழந்தைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளி கணவருடன் அவர் வசித்து வருகிறார். பிகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்பூர் கிராமம்தான் அக்குடும்பத்தின் பூர்விகம்.
2020ம் ஆண்டு ஷிம்லா மாவட்டத்தின் மஷோப்ரா ஒன்றியத்தின் கோட்டியிலிருந்து கணவருடன் இணைந்த அனுராதா சொல்கையில், “பொருளாதாரப் பிரச்சினைகளால் நாங்கள் எங்களின் ஊரிலிருந்து இங்கு இடம்பெயர வேண்டியிருந்தது. இரண்டு இடங்களில் வாடகை கொடுப்பது கஷ்டமான விஷயம்.” அவரின் கணவரான 38 வயது ராம் மஹ்தோ (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு கட்டுமான தளத்தில் மேஸ்திரியாக பணிபுரிகிறார். வேலை மாறும் இடங்களுக்கெல்லாம் அவர் சென்று வேலை பார்க்க வேண்டும். தற்போது தகரக் கூரை வேயப்பட்டக் குடிசைக்கு எதிரில் இருக்கும் தளத்தில் அவர் பணிபுரிகிறார்.
சாதாரண நாட்களிலேயே ஓர் அவசர ஊர்தி அவர்களின் வீட்டடைவது கடினம். 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷிம்லாவின் கம்லா நேரு மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி கோட்டியை அடைய 1.5லிருந்து 2 மணி நேரங்கள் ஆகும். மழை அல்லத் பனிப்பொழிவு சமயத்தில் இரு மடங்கு நேரமாகும்.
பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 மக்களுக்கு பயன்படும் சமூக சுகாதார மையம் அனுராதாவின் வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்கிறார் சமூக சுகாதார செயற்பாட்டாளரான ரீனா தேவி. ஆனால் பெரிய அளவில் அங்கு யாரும் செல்வதில்லை. 24 மணி நேர அவசர ஊர்தி போன்ற அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. “108க்கு அழைத்தால், ஒரே அழைப்பில் அவசர ஊர்தி வருவதில்லை. இங்கு அவசர ஊர்தியை வரவழைப்பது கடினமான வேலை. பதிலாக, நாங்களே இங்கு ஏதேனும் வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்ளும்படி அவர்கள் கூறுவார்கள்,” என்கிறார் அவர்.
நியாயமாக ஒரு மகளிர் நோய் மருத்துவர் குழுவும் 10 செவிலியர்களும் இருக்க வேண்டும். சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் பிற மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். எல்லா அவசர உதவிகளும் எல்லா நேரமும் கிடைக்கும் சூழல் இருக்க வேண்டும். ஆனால் கோட்டியில் சமூக சுகாதார மையம் மாலை ஆறு மணிக்கு மூடிவிடும். அது திறந்திருக்கும்போது கூட மகளிர் நோய் மருத்துவர் இருக்க மாட்டார்.
”செயல்படாததால் பிரசவ அறை ஊழியர்களுக்கான சமையலறையாக மாற்றப்பட்டு விட்டது,” என்கிறார் ஊரிலிருக்கும் கடைக்காரரான ஹரிஷ் ஜோஷி. “என் சகோதரியும் இதே போல்தான் துயருற்றாள். ஒரு மருத்துவச்சியின் உதவியில் வீட்டில்தான் அவள் பிரசவித்தாள். அது நடந்து மூன்று வருடம் ஆகிவிட்டதென்றாலும் இன்றும் நிலைமை அப்படிதான் இருக்கிறது. சமூக சுகாதார மையம் மூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் சரி, எவருக்கும் பயனில்லை,” என்கிறார் அவர்.
ஊரில் இருக்கும் மருத்துவச்சியால் அனுராதாவுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார் ரீனா. “பிற சாதியினர் வீடுகளுக்கு மருத்துவச்சி செல்வதில்லை,” என்கிறார் அவர். “அதனால்தான் தொடக்கத்திலிருந்தே நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தோம்,” என்கிறார் அனுராதாவுடன் அந்த நாளன்று சென்ற ரீனா.
“20 நிமிடங்கள் காத்திருந்து என் வலி தீவிரமடைந்ததும், சுகாதார ஊழியர் என் கணவருடன் ஆலோசித்து ஒரு வாடகை வண்டியில் ஷிம்லாவுக்கு என்னைக் கொண்டு செல்வதென முடிவெடுத்தனர். ஒரு வழிப் பயணத்துக்கு 4,000 ரூபாய். ஆனால் நாங்கள் இங்கிருந்து கிளம்பிய 10 நிமிடங்களில், பொலேரோவின் பின் சீட்டில் நான் குழந்தை பெற்றேன்,” என்கிறார் அனுராதா. ஷிம்லாவுக்கு செல்ல வேண்டியிராதபோதும் பயணத்துக்கான முழுச் செலவையும் அனுராதாவின் குடும்பம் கொடுக்க வேண்டியிருந்தது.
”குழந்தை பிறக்கும்போது மூன்று கிலோமீட்டர் தூரம் கூட தாண்டியிருக்க மாட்டோம்,” என்கிறார் ரீனா. சுத்தமான துணியும் நீர் குடுவைகளும் பயன்படுத்தப்படாத கத்தியும் மறக்காமல் எடுத்துக் கொண்டேன். நல்லவேளை! முன்னெப்போதும் நான் தொப்புள் கொடி அறுத்ததில்லை. எப்படி செய்யவேண்டும் என நான் பார்த்திருக்கிறேன். எனவே நான் அவருக்காகச் செய்தேன்,” என்கிறார் சுகாதார ஊழியர்.
அனுராதா அந்த இரவில் பிழைத்தது அதிர்ஷ்டவசமான விஷயம்.
பிரசவகால மரணங்கள் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் 800க்கும் மேற்பட்ட பெண்கள் உலகம் முழுவதும் கர்ப்பம் மற்றும் பிரசவ காரணங்களால் நாள்தோறும் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. பெரும்பாலான மரணங்கள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் நேர்கிறது. 2017ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 12 சதவிகித மரணங்கள் நேர்ந்தன.
இந்தியாவில் பிரசவத்தின்போது நேரும் மரணங்களின் விகிதம் 1,00,000 பிறப்புகளுக்கு 103 ஆக 2017-19-ல் இருந்தது. அந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சிக்கான இலக்காக ஐநா நிர்ணயித்த 70-ஐ எட்டவில்லை. சுகாதார, சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளப்புள்ளிதான் இந்த விகிதம். எண் அதிகமாக இருந்தால் வசதிகளில் பாகுபாடு இருப்பதாக அர்த்தம்.
இமாச்சலப் பிரதேசத்தின் பிரசவ கால மரணங்கள் குறித்த எண்ணிக்கை கிடைப்பது கடினமாக இருக்கிறது. நிதி அயோக்கின் 2020-21ம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குப் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் மாநிலம் இடம்பெற்றிருந்தாலும் கிராமப்புற பெண்களின் பிரசவகால ஆரோக்கியத்திலும் மலைப்புற மக்களின் வறுமையிலும் அது பிரதிபலிக்கவில்லை. அனுராதா போன்ற பெண்கள் ஆரோக்கியம், தாயின் உடல் நலம், பிரசவத்துக்கு பின்னான பராமரிப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் பின் தங்கி இருக்கின்றனர்.
அனுராதாவின் கணவர் ராம், ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளராக பணிபுரிகிறார். வேலை இருக்கும் மாதங்களில் ”அவர் மாதத்துக்கு 12,000 ரூபாய் வருமானம் ஈட்டுவார். அதில் 2,000 ரூபாய் வீட்டு வாடகைக்குக் கழிக்கப்பட்டுவிடும்,” என்கிறார் என்னை வீட்டுக்குள் அழைத்தபடி அனுராதா. “உள்ளே இருக்கும் எல்லாமும் எங்களுடையது,” என்கிறார் அவர்.
தனி மரப்படுக்கை ஒன்றும் துணிகளும் பாத்திரங்களும் வைக்கப்பட்டு இன்னொரு படுக்கையாக ஆக்கப்பட்டிருக்கும் அலுமினிய ட்ரங்க் பெட்டியும் 8 X 10 அடி அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. “சேமிப்பு எதுவும் இல்லை. சுகாதாரப் பிரச்சினையோ ஏதேனும் நெருக்கடியோ இருந்தாலும் உணவு, மருந்துகள், குழந்தைகளுக்கான பால் போன்ற அத்தியாவசியச் செலவுகளை நிறுத்த வேண்டும். கடன் வாங்க வேண்டும்,” என்கிறார் அனுராதா
நாட்டில் பரவிக் கொண்டிருந்த கோவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியுடன் அவரின் கர்ப்பமும் சேர்ந்து கொண்டது. ராமுக்கு வேலை இல்லை. ஊதியம் என்கிற பெயரில் 4,000 ரூபாய் பெற்றார். வீட்டுக்கு வாடகையைக் கொடுத்து மிச்ச 2,000 ரூபாயில் குடும்பம் வாழ வேண்டும். சுகாதார ஊழியர் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை அனுராதாவுக்குக் கொடுத்தார். தூரம் மற்றும் செலவு ஆகியவற்றால் தொடர் பராமரிப்பு இயலாத காரியமாக இருந்தது.
“சமூக சுகாதார மையம் இயங்கியிருந்தால், அழுத்தம் இல்லாமல் அனுராதா குழந்தை பெற்றிருக்க முடியும். டாக்சிக்கென 4,000 ரூபாயும் அவர் செலவழித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது,” என்கிறார் ரீனா. “சமூக சுகாதார மையத்தில் பிரசவ அறை இருக்கிறது. ஆனால் இயங்கவில்லை,” என்கிறார் அவர்.
கோட்டி சுகாதார மையத்தில் பிரசவத்துக்கான வசதிகள் இல்லாததால் பெண்கள் சந்திக்கும் சவால்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நிலைமையும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை,” என்கிறார் ஷிம்லா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான சுரேக்கா சோப்தா. “பிரசவத்துக்குத் தேவையான மகளிர் நோய் மருத்துவரோ, செவிலியரோ போதுமானளவு உதவியாளர்களோ இல்லை. கோட்டி போன்ற கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட விரும்புவதில்லை என்பதுதான் நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்களின் மாவட்டங்களில் நிலவும் கசப்பான உண்மை,” என்கிறார் அவர்.
2005ம் ஆண்டு சமூக சுகாதார நிறுவனங்களின் எண்ணிக்கை மாநிலத்தில் 66 ஆக இருந்தது. 2020-ல் அது 85 ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவர்கள் எண்ணிக்கையும் 2005ம் ஆண்டில் 3,550லிருந்து 2020-ல் 4,957 வரை உயர்ந்திருக்கிறது. எனினும் இமாச்சலப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் மகளிர் நோய் மருத்துவர்களின் பற்றாக்குறை 94 சதவிகிதமாக இருப்பதாக 2019-20ன் கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் 85 பேர் இருந்து சமாளிக்க வேண்டிய சூழலில் வெறும் 5 மகளிர் நோய் மருத்துவர்கள்தான் இருக்கின்றனர். இது கர்ப்பிணிகளுக்கு மனவியலாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை அளிக்கும் விஷயமாக மாறுகிறது.
அனுராதாவின் வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 35 வயது ஷிலா சவுகான், குழந்தைப் பெறுவதற்காக ஜனவரி 2020-ல், ஷிம்லா தனியார் மருத்துவமனை வரை பயணித்தார். “குழந்தைப் பெற்று பல மாதங்கள் கழிந்தும் இன்னும் கடன் தீரவில்லை,” என்கிறார் அவர்.
அவரும் தச்சராக பணிபுரியும் 40 வயது கணவர் கோபால் சவுகானும் அண்டை வீட்டாரிடமிருந்து 20,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இரண்டு வருடங்கள் கழித்தும் இன்னும் 5,000 கடன் மிச்சம் இருக்கிறது.
ஷிலாவால் ஒரு இரவு தாண்டி ஷிம்லா மருத்துவமனையில் கழிக்க முடியவில்லை. ஏனெனில் ஒருநாள் அறை வாடகை 5,000 ரூபாய். அடுத்த நாள் அவரும் கோபாலும் குழந்தையும் 2,000 கட்டி ஒரு வாடகை டாக்சியில் கோட்டிக்குக் கிளம்பினார்கள். இலக்குக்கு முன்னமே அவர்கள் டாக்சியிலிருந்து இறக்கப்பட்டார்கள். காரணம், பனி நிரம்பிய சந்துகள். “அந்த இரவை நினைத்தால் எனக்கு இப்போதும் புல்லரிக்கும். பனி பொழிந்து கொண்டிருந்தது. குழந்தைப் பெற்ற அடுத்த நாளே முழங்கால் அளவு பனியில் நான் நடந்து கொண்டிருந்தேன்,” என்கிறார் ஷிலா.
“சமூக சுகாதார மையம் ஒழுங்காக இயங்கியிருந்தால், ஷிம்லாவுக்கு ஓடி பணத்தை செலவழித்திருக்க வேண்டியதில்லை. என் மனைவியில் குழந்தை பெற்ற அடுத்த நாளே பனியில் இறங்கி நடந்திருக்க தேவையில்லை,” என்கிறார் கோபால்.
சுகாதார மையம் சரியாக இயங்கியிருந்தால் ஷிலாவுக்கும் அனுராதாவுக்கும் இலவசமான மருத்துவச் சேவைகள் ஜனனி ஷிஷு சுரக்ஷா கர்யகாரம் திட்டத்தின்படி கிடைத்திருக்கும். திட்டத்தின்படி அவர்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரசவகால மருத்துவச் சேவைகள் அரசு மையத்தில் கிடைத்திருக்கும். மருத்துவம், தேவைகள், சிகிச்சைகள், உணவு, ரத்தம், போக்குவரத்து ஆகியவற்றுக்குக் கூட அவர்கள் செலவழித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. எல்லாமும் வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது.
“அந்த இரவில் பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்த எங்களின் மகளின் நிலை குறித்த அச்சத்தில் இருந்தோம்,” என்கிறார் கோபால். “குளிரால் அவள் இறந்து கூட போயிருக்கலாம்.”
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்