2019 ன் சுற்றுச்சூழல் பிரிவில் ராம்நாத் கோயங்கா விருது
பெற்ற காலநிலை மாற்றம் பற்றிய கட்டுரை தொகுதியின்
ஒரு பகுதி, இந்த கட்டுரை.
இது ஒரு தரமான இந்திய சினிமாவின் பாலைவனத்தில் நடைபெறும் சண்டை காட்சி. மணல் குன்றுகளுக்கும், மணல் கிடங்குகளுக்கும் இடையே உள்ள சிறிய காடு போன்ற அமைப்பினை பின்புலமாகக் கொண்ட இடத்திலிருந்து வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதற்காக கதாநாயகன் இந்த தரிசு நிலத்தின் புழுதியிலிருந்து எழுந்து வருகிறார். ஏற்கனவே இயற்கையால் அருளப்பட்ட வெப்பத்தையும், தூசியையும் இவர்கள் மேலும் அதிகமாக்குகின்றனர். எனினும் படத்தை மகிழ்ச்சியான முடிவுக்கே கொண்டு வருகின்றனர் (வில்லன்கள் நீங்கலாக). எண்ணற்ற இந்தியத் திரைப்படங்கள் இந்தக் காட்சிகளை ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்திலோ அல்லது மத்திய பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கிலோ படமாக்கியிருக்கின்றனர்.
இந்த வறண்ட வனாந்தர காட்சி (காணொளியில் காண்க) ராஜஸ்தானிலோ அல்லது சம்பல் பள்ளத்தாக்கிலோ படமாக்கப்பட்டது அல்ல. இது இந்திய தீபகற்பத்தின் தென்கோடியிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் படமாக்கப்பட்டது. அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த 1000 ஏக்கர் நிலப்பகுதி சில காலங்களுக்கு முன்புவரை சிறுதானியங்கள் விளைவிக்கப் பட்ட நிலப்பகுதியாகும் - பல பத்தாண்டுகளின் தொடர்ச்சியில் இது மேலும் மேலும் பாலைவனம் ஆகிக்கொண்டிருக்கிறது. இது முரண் போக்கான காரணிகளால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்ட இடம், மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்கள் இடத் தரகர்களை இந்த இடத்தை நோக்கி அனுப்பும் வெளியாக உருவாக்கப்பட்டுவிட்டது.
தர்கா ஹொன்னூர் கிராமத்தில் வசிக்கும் இந்த இடத்துக்கான நில உரிமையாளர்கள் பலரும், தாங்கள் திரைப்பட இடைத்தரகர்கள் இல்லை என்பதை பிறருக்கு புரிய வைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்கின்றனர். இது எந்தப் படத்திற்கானது? எப்போது இப்படம் வெளிவர போகிறது? என்பது வெளிப்படையான கேள்விகளாகவோ அல்லது அவர்கள் மனதில் தோன்றுவதாகவோ இருக்கிறது. சிலர், நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்பது தெரிந்தவுடன் மிகுந்த ஆர்வத்துடன் எங்களை கண்டுகளித்தனர்.
ஜெய மண்டே ரா (வெற்றி நமதே) என்னும் தெலுங்கு படத்தைத் தயாரித்தவர்கள், 1998க்கும் 2000க்கும் இடையில் படமாக்கிய சண்டைக்காட்சிகளே இந்த இடத்தை பிரபலமாக்கியது. எல்லா வர்த்தக திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை போலவே இவர்களும் இந்த இடத்தை 'செட்' போட்டு பாலைவனம் போல மெருகேற்றிக் கொண்டனர். "எங்கள் பயிர்களை நாங்கள் அப்புறப்படுத்தினோம்" (அதற்கு அவர்கள் எங்களுக்கு சன்மானம் அளித்தார்கள்) என்கிறார் 45 வயதான பூஜாரி லிங்கண்ணா, அவருடைய குடும்பம் இந்த சண்டைக்காட்சி நடைபெற்ற 34 ஏக்கர் நிலத்தின் உரிமையாளராவார். "அது உண்மையான பாலைவனம் போல தோன்றுவதற்காக நாங்கள் சில செடிகளையும், மரங்களையும் கூட அப்புறப்படுத்தினோம்." செயல்திறன் மிக்க கேமராவினாலும், புத்திசாலித்தனமான ஃபில்டர்களின் பயன்பாட்டாலும் மற்றவற்றை செய்தனர்.
ஜெய மண்டே ராவின் தயாரிப்பாளர்கள் 20 வருடங்களுக்கு பிறகு இன்று அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார்களானால், அவர்களுக்கு அது மிகவும் சுலபமானதாக இருக்கும். காலமும், துன்புறுத்தப்பட்ட இயற்கையும், மனித தலையீடும், அவர்கள் கேட்கக்கூடிய பாலைவன மேம்பாட்டை நிகழ்த்தியுள்ளது.
இந்த வறண்ட வனாந்தர காட்சி ராஜஸ்தானிலோ அல்லது சம்பல் பள்ளத்தாக்கிலோ படமாக்கப்பட்டது அல்ல. இது இந்தியதீபகற்பத்தின் தென்கோடியிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் படமாக்கப்பட்டது.
உள்ள பல ஆள்துளை கிணறுகளில் 500 - 600 அடி ஆழத்திலும் கூட தண்ணீர் கிடைப்பது இல்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் 1000 அடி ஆழத்தையும் கூட தாண்டி சென்று விட்டனர். எனினும் இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கையில் நான்கு அங்குள்ள ஆழ்துளைக்கிணற்றில் இருந்து தண்ணீர் பெருகி வருகிறது. இவ்வளவு அதிகமான தண்ணீர், அதுவும் நிலப்பரப்பிற்கு அருகிலேயே, அதுவும் வெப்பமான, மணற்பாங்கான இந்த இடத்திலா?
"இந்த இடம் முழுவதும் பரந்துவிரிந்த ஆற்றுப்படுகையில் வருகிறது", என்று விளக்குகிறார் பல்துரு முக்கண்ணா, இவர் அருகாமையிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. எந்த ஆறு? இங்கு ஒன்றையும் காணவில்லையே. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஹொன்னூரில் இருந்து 25-30 கிலோமீட்டர் தொலைவில் இங்கு ஓடிக்கொண்டிருந்த வேதவதி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்டினார். வேதவதியின் இந்தப் பகுதி (துங்கபத்திரையின் உப நதியாகும் - இது அஹாரி என்றும் அழைக்கப்படுகிறது) வறண்டுவிட்டது.
"இதுதான் நடந்தது" என்கிறார் அனந்தபூர் கிராம வளர்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சூழலியல் மையத்தின் மல்லா ரெட்டி - இவரை போல இந்தப் பகுதியை அறிந்து வைத்திருப்பவர்கள் வெகு சிலரே. "இன்று வேண்டுமானால் ஆறு இறந்திருக்கலாம், ஆனால் பல நூற்றாண்டுகளாக இங்கு ஓடி அது ஏற்படுத்திய நிலத்தடி நீர் வளம் இன்று பெரிதும் உரிஞ்சி எடுக்கப்படுகிறது. இதே வேகத்தில் சென்றால் பேரழிவில் தான் போய் முடியும்.
அந்தப் பேரழிவு வரப்போகும் நாள் தொலைவில் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு என்பது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தது என்கிறார் 46 வயதான V.L. ஹிமாச்சல், இவர் இந்த பாலைவனமாக்கப்பட்ட பகுதியில் 12.5 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளரான விவசாயி. "இது எல்லாம் மானாவாரி விவசாயம். தற்பொழுது 1000 ஏக்கரில் 300 முதல் 400 ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. மேலும் எங்களுக்கான தண்ணீர் 30 முதல் 35 அடி ஆழத்திலேயே கிடைத்துவிடுகிறது, சில சமயங்களில் அதற்கு முன்பாகவே கிடைத்துவிடும்." மூன்று ஏக்கருக்கு அல்லது அதற்கும் குறைவான இடத்திற்கு ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது.
இது மிகுந்த அடர்த்தி கொண்டது ஏனெனில் அனந்தபூரில் மட்டுமே "சுமார் 270000 ஆழ்துளை கிணறுகள் உள்ளது, ஆனால் மாவட்டத்தின் கொள்ளளவு என்னவோ 70000 தான், என்கிறார் மல்லா ரெட்டி. இந்த ஆண்டு மட்டுமே பாதிக்கும் மேலான ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போய்விட்டது."
எதற்காக இந்த பாலான நிலங்களில் ஆழ்துளை கிணறுகள்? இங்கு என்ன விளைவிக்கப்படுகிறது? இந்த நிலப்பரப்பு ஏன் தனித்துவமாக இருக்கிறது என்றால் நாம் ஆய்வு செய்கையில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது, ஆனால் இங்கு கம்பு விளைவிக்கப்படுகிறது. இந்த சிறு தானியம் விதை பெருக்கத்திற்காக இங்கு விளைவிக்கப்படுகிறது. நுகர்வுக்கோ, சந்தைக்கோ அல்ல, இவர்கள் விதை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இவற்றை விளைவிக்கின்றனர். ஆண் மற்றும் பெண் தாவரங்கள் அடுத்தடுத்த வரிசையில் நடப்பட்டுள்ளதை இங்கு நாம் காணலாம். இந்த நிறுவனங்கள் இரண்டு வகையான கம்பு செடியிலிருந்து கலப்பின வகையை உருவாகுகின்றது. இதை செயல்படுத்துவதற்கு அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. விதையை பிரித்து எடுத்த பின்பு மிஞ்சுவதை சிறந்த கால்நடை தீவனமாக பயன்படுத்துகின்றனர்.
"இந்த விதை பெருக்கத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 3800 எங்களுக்கு கிடைக்கிறது" என்கிறார் பூஜாரி லிங்கண்ணா. உழைப்பையும் அதில் உள்ள கவனிப்பையும் கணக்கில் கொண்டால், இது மிகவும் குறைவான தொகையாகவே தெரிகிறது - மேலும் இந்த நிறுவனங்கள் இவர்களைப் போன்ற விவசாயிகளிடம் இதே விதையை அதிக விலைக்கு விற்கின்றனர். இதேபோன்ற மற்றொரு சாகுபடியாளரான Y.S. சாந்தம்மா அவரது குடும்பம் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 3700 பெறுவதாக கூறுகிறார்.
சாந்தம்மாவும் அவரது மகள் வந்தாக்சியும், இங்கு விளைவிக்க சிரமமாக இருப்பது தண்ணீரால் அல்ல என்கின்றனர். "எங்கள் வீட்டில் குழாய் இணைப்பு இல்லை என்றாலும் எங்கள் கிராமத்தில் தண்ணீர் கிடைக்கிறது". அவர்களுக்கு இருக்கும் ஒரே தலைவலி மணல் தான், ஏற்கனவே அதிகமாக மணல் இருக்கிறது, மேலும் அதிவேகமாக சேர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த மணலில் குறைந்த தூரம் செல்வதற்குள்ளாகவே நமது கால்கள் சோர்வடைய தொடங்கி விடுகின்றன.
"இது எங்கள் உழைப்பு முழுவதையும் வீணாகிவிடுகிறது", என்கின்றனர் தாயும், மகளும். ஹொண்ணு ரெட்டியும் இதை வழிமொழிந்து, நான்கு நாட்களுக்கு முன்பு சிரமப்பட்டு அவர் நட்ட செடிகளை மணற்குன்றின் கீழே இருப்பதை காண்பிக்கிறார். தற்பொழுது அவை மணல் மூடிய வரப்புகளாகவே காட்சி அளிக்கின்றது. இந்த இடம், மேலும் அதிகமாக வறண்டு வலிமையான காற்று கிராமத்தை தாக்கும்போது இங்கு மண் மாரி பொழிகிறது.
வருடத்தின் மூன்று மாதங்களுக்கு இங்கு மண் மாரி பொழிகிறது என்கிறார் மற்றொரு பாலைவன விவசாயியான M. பாஷா. "அது எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, எங்கள் உணவிலும் விழுந்துவிடுகிறது". மணற்குன்றுக்கு வெகு தொலைவில் உள்ள வீடுகளுக்குக் கூட மணல் சென்று விடுகிறது காற்று. வலை விரிப்பது, கதவுகளை அதிகப்படுத்துவதோ எங்களுக்கு உதவவில்லை. இசாக வர்ஷம் ( மண் மாரி) இப்பொழுது எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது, அதனுடன் வாழ நாங்கள் பழகி விட்டோம்".
இந்த மண் ஒன்றும் இந்த ஹொன்னூர் கிராமத்திற்கு அந்நியமானதல்ல. "ஆனால் அதன் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது", என்கிறார் ஹிமாச்சல். காற்றுக்கு அரணாய் அமைந்திருந்த புதர்களும், சிறு மரங்களும் அழிந்துவிட்டன. ஹிமாச்சல், உலகமயமாக்கலை பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கம் பற்றியும் கூர்ந்த அறிவுடன் பேசுகிறார். "இப்போது நாம் எல்லாவற்றையும் பணமாக கணக்கிடுகிறோம். மரங்களும், செடிகளும், புதர்களும் அழிந்துவிட்டன ஏனெனில் மக்கள் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் வியாபார சாகுபடிக்கு பயன்படுத்த நினைக்கின்றனர். மேலும் "விதை தளிர்விடும் போது மண் விழுந்தால் மொத்தமும் அழிந்து விடும்" என்கிறார் 55 வயதான விவசாயி M. திப்பையா. போதுமான அளவு தண்ணீர் இருந்த பொழுதும் சாகுபடி மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் எங்களுக்கு 3 குவிண்டால் நிலக்கடலை கிடைக்கும், மிகச் சிறப்பாக செயல்பட்டால் நான்கு 4 குவிண்டால் கிடைக்கும் என்கிறார் 32 வயதான விவசாயி K.C. ஹொன்னூர் சாமி. மாவட்டத்தின் சராசரி சாகுபடி 5 குவிண்டால் ஆக உள்ளது.
இயற்கையான காற்றின் அரண்கள் அவர்களுக்கு தெரிவதில்லை? "வர்த்தக மதிப்புள்ள மரங்களையே அவர்கள் நாடுவார்கள்", என்கிறார் ஹிமாச்சல். இந்த சூழ்நிலைக்கு பொருந்தாதவை எதுவும் இங்கு வளர்வதில்லை. "எனினும் அதிகாரிகள் மரங்களைக் கொண்டு உங்களுக்கு உதவுவோம் என்றனர், ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை".
"சில வருடங்களுக்கு முன்பு பல அரசாங்க அதிகாரிகள் மணல் குன்றுகளை ஆய்வு செய்ய வந்தனர்" என்கிறார் பல்துரு முக்கண்ணா. அவர்களது அந்தப் பாலைவன சவாரி மிகவும் மோசமாக முடிந்தது, அவர்கள் வந்த வண்டியையே மண் மூடியது பின்னர் கிராம மக்களின் உதவி கொண்டு டிராக்டர் மூலம் அதை இழுத்து வந்தனர். "அதன் பின்னர் அவர்கள் யாரும் இங்கு வரவில்லை" என்கிறார் முக்கண்ணா. "சில காலங்களில் பேருந்து கூட கிராமத்தின் அந்தப் பக்கத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது" என்கிறார் விவசாயி மொக்கா ராகேஷ்.
புதர்களும், வனப்பகுதியையும் அழிந்தது ராயலசீமா பகுதி முழுவதும் பிரச்சனையாக உள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் 11% காடு என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் இருக்கிறது. உண்மையில் காடு இருக்குமிடம் 2% குறைவாக குறைந்துவிட்டது. அது நிலம், நீர், காற்று, வெப்பநிலை ஆகியவற்றில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் பகுதியில் நீங்கள் பார்க்கும் ஒரே பெரிய காடு காற்றாலைகளின் காடாக இருக்கிறது ஆயிரக்கணக்கில் நிலப்பரப்பெங்கும் நிறுவி இருக்கிறார்கள் - அந்த சிறிய பாலைவனத்தை சுற்றிலும் கூட. இவை காற்றலை நிறுவனங்களால் வாங்கப்பட்ட அல்லது நீண்டகால குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களில் நிறுவப்பட்டுள்ளது.
இப்படித்தான் எப்போதும் ஹொன்னூர் கிராமம் இருந்தது என்கின்றது பாலைவன சாகுபடியாளர்கள் குழு. அதற்கு சான்றாக அவர்கள் அதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றனர். ஆம், மணல் எப்போதுமே இருந்தது. ஆனால் அதை மண் மாரி ஆக்கும் காரணிகள் இப்பொழுது வளர்ந்து வருகின்றன.முன்னால் மரங்களும், புதர்களும் அதிகமாக இருந்தது. இப்பொழுது அவை குறைந்துவிட்டது. ஆம், எப்பொழுதுமே இங்கு தண்ணீர் இருந்தது, ஆனால் அதை அந்த ஆறு இறந்த பின்பே நாங்கள் கண்டு உணர்ந்தோம். இருபது வருடங்களுக்கு முன்பு வரை இங்கு குறைந்த அளவிலேயே ஆழ்துளை கிணறுகள் இருந்தது இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்டதாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த தீவிரமான வானிலை நிகழ்வுகளை ஒவ்வொருத்தரும் நினைவுகூர்கின்றனர்.
மழை பெய்யும் முறை மாறி விட்டது. "எங்களுக்குத் தேவையான அளவு மழையினை கணக்கிட்டு சொன்னால், அதில் 60 சதவீதம் குறைவு என்றே நான் சொல்வேன்" என்கிறார் ஹிமாச்சல். கடந்த சில ஆண்டுகளாக யுகாதியின் (தெலுங்கு வருடப்பிறப்பு - ஏப்ரல் மாதத்தில் வரும்) போதும் குறைவான அளவே மழை பொழிகிறது. அனந்தபூர் - தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் மூலம் மழை பெறுகிறது, ஆனால் இரண்டின் மூலமும் முழு நன்மை கிடைப்பதில்லை.
மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 535 மிமீ ஆக இருக்கும் போது கூட, மழை பொழியும் காலம் பரப்பு, பரவல் ஆகியவை மிகவும் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. சில ஆண்டுகளில் பருவத்தில் பெய்யாமல் பருவம் தவறியும் பெய்தது. சிலநேரங்களில் முதல் 24-48 மணி நேரத்திற்குள்ளேயே கனமழை பெய்து, பிறகு வறண்ட நிலையே காணப்படுகிறது. கடந்த வருடம் சில மண்டலங்களில் பருவமழை காலத்தில்( ஜூன் முதல் அக்டோபர் வரை) 75 நாட்களுக்கு தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்பட்டது. அனந்தபூரில் 75% மக்கள் கிராமப் புறங்களிலேயே வசிக்கின்றனர் மேலும் 80% தொழிலாளர்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர் (விவசாயிகளாகவோ அல்லது விவசாய கூலிகளாகவோ), இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை காட்டுகிறது.
அனந்தபூரில் கடந்த 20 ஆண்டுகளில் 4 இயல்பான ஆண்டுகளே இருந்தது, என்கிறார் சூழலியல் மையத்தின் தலைவர் மல்லா ரெட்டி. "மற்ற 16 ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது நான்கில் மூன்று பங்கு மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த 20 ஆண்டுக்கு முந்தைய காலத்தில் பத்தாண்டுகளுக்கு 3 பஞ்சங்களே நிலவியது. 1980 இன் பிற்பகுதியில் ஆரம்பித்த இந்த மாற்றம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே வருகிறது".
பலவகையான சிறுதானியங்களின் மையமாக இருந்த இந்த மாவட்டம் விரைவாக வர்த்தக பயிரான நிலகடலைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பல ஆழ்துளை கிணறுகள் தூர்ந்துபோய் வருகின்றது. (தேசிய மானாவாரிப் பகுதி ஆணையத்தின் அறிக்கை, "இந்தப் பகுதியில் நிலத்தடிநீர் சுரண்டல் 100% விஞ்சிவிட்டது என்கிறது.")
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை முறையாக பெய்தது- பத்தாண்டுகளில் மூன்று வறட்சிகள் - அதனால் விவசாயிகளுக்கு என்ன நட வேண்டும் என்பது தெரியும். 9 முதல் 12 வகையான பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்தனர் என்கிறார் C.K பாப்லு கங்குலி. திம்பக்து கூட்டணி என்னும் அரசு சாரா நிறுவனத்தின் தலைவர், இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கிராமப் புறத்தில் இருக்கும் ஏழை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இவர் பணிபுரிந்து வருவதால் இவருக்கு இப்பகுதியின் விவசாயத்தைப் பற்றிய நல்ல அறிவு உள்ளது.
நிலக்கடலை ( அனந்தபூரில் 69% பரப்பளவில் விளைவிக்கப்படுகிறது) ஆப்பிரிக்காவில் உள்ள சகேல் பகுதிக்கு என்ன செய்ததோ அதை எங்களுக்கு செய்கிறது. நாங்கள் செய்த ஒற்றை பயிர் சாகுபடி எங்கள் தண்ணீர் பிரச்சனையை மட்டும் மாற்றவில்லை. நிலக்கடலைக்கு நிழல் ஆகாது அதனால் மக்கள் மரங்களை வெட்டினர். அனந்தபூரின் மண்வளம் அழிக்கப்பட்டது. சிறு தானியங்களையும் அழித்துவிட்டது. ஈரப்பதத்தையும் அழித்து, மானாவாரி விவசாயத்தை சிரமத்திற்குள்ளாகி விட்டது. பயிர் மாற்றம் விவசாயத்தில் பெண்களின் பங்கினை குறைத்துவிட்டது. பாரம்பரியமாக இங்கு பயிரிடப்பட்ட பல்வேறு மானாவாரிப் பயிர்களின் விதைகளை இவர்களே பாதுகாத்தனர். அனந்தபூர் விவசாயிகள் வர்த்தக பயிரான (நிலக்கடலையைப் போன்ற) கலப்பினவிதைகளை என்று சந்தையில் வாங்க ஆரம்பித்தார்களோ அன்றே பெண்கள் வெறும் விவசாயக் கூலிகளாக குறைக்கப்பட்டுவிட்டனர். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் இருந்த ஒரே வயலில் பல பயிர்களைை ஒரே நேரத்தில் வளர்க்கும் சிரமமான கலையும் அழிந்து விட்டது.
தீவனப்பயிர்கள் தற்போது 3% குறைவாகவே பயிரிடப்படுகிறது. "ஒரு காலத்தில் அனந்தபூர் நாட்டிலேயே அதிகமான சிறய அசைபோடும் கால்நடைகளை வைத்திருந்தது" என்கிறார் கங்குலி. சிறிய அசைபோடும் விலங்கினங்களே சிறந்த சொத்து- அசையும் சொத்து- குரும்பர்களை போன்ற பாரம்பரிய மேய்ப்பர்களுக்கு. பாரம்பரிய சுழற்சி முறையில் கால்நடை மேய்ப்பவர்கள் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீரை அறுவடைக்குப் பிந்திய உரமாக விவசாயிகளுக்கு வழங்கினர், இம்முறை பயிரிடும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தாலும் வேதியல் இடுபொருட்களாளும் தடைபட்டது. இந்தப் பகுதிக்கான திட்டமிடல் என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்துள்ளது".
ஹொன்னூரிலுள்ள ஹிமாச்சல் தன்னைச் சுற்றியுள்ள சுருங்கி வரும் விவசாய பல்லுயிர் பெருக்கத்தையும் அதன் விளைவுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். "ஒரு காலத்தில், இதே கிராமத்தில், நாங்கள் கம்பு, காராமணி, துவரை, கேழ்வரகு, தினை, பச்சைப்பயிறு, அவரை ஆகியவற்றை பயிரிட்டோம் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். "பயிரிடுவது சுலபம், ஆனால் மானாவாரி பயிர்கள் பணம் தராது." நிலக்கடலை அதை செய்தது.
நிலக்கடலையை பயிரிட்டு அறுவடை செய்ய 110 நாட்கள் அகும். இதில் 60 - 70 நாட்கள் வரை மண்ணை மண் அரிப்பில் இருந்து தடுக்கிறது. ஒன்பது வகையான சிறுதானியங்களும், பயறு வகைகளும் பயிர் செய்யப்பட்ட காலத்தில் மேல் மண்ணுக்கு நிழல் உரை ஜூனில் இருந்து பிப்ரவரி வரை ஒவ்வொரு வருடமும் இருக்கும், ஏதேனும் ஒரு பயிர் மண்ணை பாதுகாத்தது.
அந்தக் கால ஹொன்னூரை பற்றி ஹிமாச்சல் நினைவு கூறுகிறார். அவருக்குத் தெரியும் ஆழ்துளைக் கிணறுகள் பணப்பயிர்களும் விவசாயிகளுக்கு நன்மையே செய்தது என்று. மேலும் அவர் இதில் உள்ள வீழ்ச்சி அடையும் போக்கையும் பார்க்கிறார்,- வாழ்வாதாரம் அருகி வருவதால் மக்கள் புலம்பெயர்வதையும் அவர் அறிவார். "எப்பொழுதும் 200 குடும்பங்கள் வெளியே வேலை தேடிக் கொள்கிறார்கள்", என்கிறார் ஹிமாச்சல். அனந்தபூரின் பொம்மனஹள் மண்டலத்தின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள 1227 குடும்பங்களில் இது ஆறில் ஒரு பகுதி ஆகும். 70 - 80% குடும்பங்கள் கடனில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், அனந்தபூரில் பண்ணை இடர்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது - ஆந்திராவில் உள்ள மாவட்டங்களில், விவசாயத் தற்கொலைகள் அதிகம் நடப்பதும் இங்கேதான்.
"ஆழ்துளைக் கிணறுகளின் ஏற்ற காலம் முடிந்து விட்டது", என்கிறார் மல்லா ரெட்டி. "அதேபோல பணப்பயிரின் காலமும் ஒற்றை பயிரின் காலமும் முடிந்து விட்டது". இந்த மூன்றும், நுகர்வதற்கான உற்பத்தியில் இருந்து மாறி "தெரியாத சந்தைகளுக்காக விளைவிக்கப்பட்டதால்" உந்தப்பட்டது.
பருவநிலை மாற்றம் என்பது இயற்கை தனது மீட்டமைக்கும் பொத்தனை அழுத்துவது மட்டும் தான் என்றால், ஹொன்னூரிலும் அனந்தபூரிலும் நாம் காண்பது என்ன? மேலும் விஞ்ஞானிகள் நமக்கு கூறுவதுபோல காலநிலை மாற்றம் என்பது மிகவும் பரந்த பகுதிகள் மற்றும் மண்டலங்களில் ஏற்படுவது, ஆனால் ஹொன்னூரும் அனந்தபூரும் ஒரே நிர்வாக அலகுக்குள் இருக்கும் மிகச் சிறிய இடம். மண்டலங்களில் ஏற்படும் பெரும் மாற்றங்கள் அவற்றுக்குள் இருக்கும் சிறிய ஊர்களிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமோ?
இங்குள்ள எல்லா கூறுகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு மனித தலையீடே காரணம் அவை பின்வருவன : ஆழ்துளை கிணறுகளின் பிரச்சனைகள் , பணப்பயிருக்கும், ஒற்றை பயிருக்கும் மாறியது, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அனந்தபூருக்கு சிறந்த அரணாக இருந்திருக்க வேண்டிய பல்லுயிர்களை அழித்தது, பெருகிவரும் நீர்நிலை சுரண்டல்கள், பகுதி பாலைவனமான இந்தப்பகுதியில் இருந்த சிறிய காடுகளையும் அழித்தது, புல்வெளிகளை அழித்தது, வேதியல் முறையில் பயிர் செய்தது, பண்ணைகளுக்கும்-காடுகளுக்கும் மேய்ப்பவர்களுக்கும் - விவசாயம் செய்பவர்களுக்கும் இடையே இருந்த கூட்டுயிர் உறவை சிதைத்தது, வாழ்வாதாரத்தை அழித்தது, ஆற்றை கொன்றது. இவை எல்லாம் வெப்பநிலையிலும், வானிலையிலும், பருவநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தி, பருவநிலை மாற்றத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.
பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் உந்து சக்தியாக இருந்த மனித அமைப்பின் வெறித்தனத்தால் இன்று நாம் சந்திக்கும் மாற்றங்கள் அனைத்தும் உந்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.
" ஒருவேளை நாம் ஆழ்துளை கிணறுகளை மூடி விட்டு, மானாவாரி விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும்", என்கிறார் ஹிமாச்சல். "ஆனால் அது மிகவும் கடினமானது".
P. சாய்நாத் கிராமப்புர இந்திய மக்கள் காப்பகத்தின் (பாரியின்) நிறுவனர் மற்றும் எடிட்டராவார்.
கவர் படம்: ராகுல். M / பாரி
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தால் ஆதரிக்கப்பட்ட, பருவநிலை மாற்றம் பற்றிய நாடு தழுவிய பாரியின் இந்த தகவல் அறிக்கை, சாதாரன மக்களின் குரல்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் அதை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய விருப்பமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கு CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழில்: சோனியா போஸ்