தாயின் வருகைக்காக வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் காத்திருக்கிறார் 40 வயதாகும் மலன். அப்பெண் பூப்போட்ட சட்டையும், முழங்கால் வரையிலான பாவாடையும் அணிந்திருக்கிறார். என்னை கண்டதும் அவரது முகம் ஒளிர்கிறது. ஏற்கனவே என்னை பார்த்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. “அம்மா வீட்டில் இல்லை”, என்று அவர் சொன்னார். அப்போது செங்கல், கல், மண் கொண்டு கட்டப்பட்ட இரண்டு அறை கொண்ட அவளது வீட்டில் அமர்ந்தேன்.
மலன், வாடி கிராமத்தில் அவரது 63 வயது தாயான ரஹிபாய், 83 வயதாகும் தந்தை நானாவுடன் வசிக்கிறார். (அவர்களின் பெயர், கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளன.) புனே மாவட்டம் முல்ஷி தாலுக்காவில் உள்ளது இக்கிராமம். இங்கு இக்குடும்பம் நெல், கோதுமை, காய்கறிகளை வெறும் மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு வருகிறது.
மலனுக்கு சுமார் 18 வயதாகும்போது புனேவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் அவருக்கு ‘மனவளர்ச்சி குன்றியுள்ளது‘ கண்டறியப்பட்டது.
இதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் தொடக்கப் பள்ளியில் அவர் படித்தார். “அவள் வகுப்பில் எல்லோரும் 4ஆம் வகுப்பு முடித்துப் போய்விட்டனர். இவள் மட்டும் தரையில் கிறுக்கிக் கொண்டிருந்தாள்”, என்கிறார் ரஹிபாய். “கடைசியாக வகுப்பாசிரியர் அவளை பள்ளியிலிருந்து வெளியேறுமாறு கூறினார்.” அப்போது மலனுக்கு 15 வயது இருக்கும்.
அப்போதுமுதல், மலன் வீட்டில் தாய்க்கு சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பிரமை பிடித்தது போல் இருப்பார். அவ்வப்போது பேசுவார். அப்படிப் பேசுவதும் ரஹிபாய் போன்ற சிலருடன் மட்டும்தான். ஆனால் அவரால் புரிந்துகொண்டு, தொடர்பு கொள்ள முடியும். நான் அவரிடம் பேசிய போது, தலையசைத்து, சிரித்து, கொஞ்சமாகப் பேசினார்.
மலனுக்கு 12 வயதிருக்கும் போது பூப்பெய்தினார். “அங்கு இரத்தம் வருகிறது” என்று முதன்முறையாக மலன் ரஹிபாயிடம் சொன்னார். துணி நாப்கின்களை எப்படி பயன்படுத்துவது என்று அவரது தாய் கற்றுக் கொடுத்தார். “என் மகனின் திருமணத்தின் போது வீட்டில் திருமண சடங்குகள் நடைபெற்றன. என்னைப் போன்று அவளும் மாதவிடாயின் போது வெளியில் அமர தொடங்கிவிட்டாள்,” என்கிறார் ரஹிபாய். மாதவிடாயின் போது சமையலறைக்குள் நுழையக் கூடாது, அறையின் ஓரத்தில் அமர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைத்தான் அவர் குறிப்பிடுகிறார். மலனுக்கு மாதவிடாய் குறித்த அனைத்து தகவல்களையும் அவரது தாயே கொடுப்பார். எனவே அவர்தான் மலனுக்கு முன்னுதாரணம்.
சிறிது காலத்தில் மகளின் கருப்பையை நீக்குமாறு ரஹிபாய்க்கு அறிவுறுத்தப்பட்டது. “மலனுக்கு சில சமயம் ஐந்து, ஆறு மாதங்களுக்கு மாதவிடாய் வராது. நான் மிகவும் பதறிப்போவேன் [கருவுற்றிருக்கலாம் என்ற அச்சம்]. அவள் அதிகம் பேச மாட்டாள். அவளுக்கு ஏதாவது நடந்துவிட்டால் எனக்கு எப்படி தெரியும்?” என்கிறார் ரஹிபாய். “நான் அவளை புனேவில் உள்ள குடும்பக் கட்டுப்பாடு (இந்திய குடும்ப கட்டுப்பாடு கூட்டமைப்பு) மையத்திற்கு (வாடி கிராமத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) இருமுறை அழைத்துச் சென்று பரிசோதித்தேன். 2018ஆம் ஆண்டில் இரண்டாவது முறை அழைத்துச் சென்றேன்.” மருந்துக் கடைகளில் கருவுற்றதை கண்டறியும் கருவி எளிதாக கிடைக்கிறது. ஆனால் மலனுக்கு அவற்றை பயன்படுத்த கற்றுத் தருவது ரஹிபாய்க்கு மிகவும் கடினமானது.
மனவளர்ச்சி குன்றிய பெண்கள், சிறுமிகளுக்கு மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இருக்காது, கையாள தெரியாது போன்ற காரணங்களால் கருப்பை அல்லது கருவுறு உறுப்புகளை அகற்றும் சமூக போக்கு பரவலாக உள்ளது.
புனேவில் உள்ள சசோன் பொது மருத்துவமனையில் 18 முதல் 35 வயதிலான மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக 1994ஆம் ஆண்டு சர்ச்சையாகி தலைப்புச் செய்தியானது. புனே மாவட்டம் ஷிருர் தாலுக்காவில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து அவர்கள் கொண்டுவரப்பட்டனர். மாதவிடாயை சமாளிக்கவும், எவ்வித பாலியல் வன்கொடுமை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு இதுவே வழி என்று அதிகாரிகள் விவாதித்தனர்.
“மருத்துவர்கள் கருப்பையை அகற்றுமாறு அறிவுறுத்தினர்” என்றார் ரஹிபாய். “பதிலாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா” என்று கேட்டேன்.
புனேவைச் சேர்ந்த பொது சுகாதார செயற்பாட்டாளர் டாக்டர் ஆனந்த் பத்கே மற்றும் சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்காமல் இந்த சிகிச்சை செய்யப்படுவதாகவும், 10 வயது சிறுமிக்குக்கூட இப்படி செய்வதாகவும் விவாதித்தனர். மோசமான பாலியல் வன்கொடுமை, அலட்சியம், கட்டாயப்படுத்தி கருவுறச் செய்தல், கருக்கலைப்பு செய்தல் போன்ற மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பல இடங்களில் இவ்வாறு நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வழக்கைத் தொடர்ந்து மக்களின் எதிர்ப்பும் கிளம்பியதால் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது - அச்சமயத்தில் குறைந்தது 11 அறுவை சிகிச்சையாவது செய்யப்பட்டு இருக்கும் என்கிறது அறிக்கை. வழக்கு தொடரப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்தாண்டு 2019, அக்டோபர் 17ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் விவாதங்கள் முடிவுற்றதாகவும், தீர்ப்பு நிலுவையில் உள்ளதாகவும் உத்தரவிட்டது.
“புனே மருத்துவமனை மருத்துவர்கள் [மலனுக்கு], கருப்பையை அகற்றுமாறு அறிவுறுத்தினர்” என்று என்னிடம் சொன்னார் ரஹிபாய். “கருப்பையை அகற்றுவதற்கு பதிலாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா” என்று நான் அவரிடம் கேட்டேன்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான கருத்தடை மாத்திரைகள், நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து சர்வதேச அரங்குகளில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் வெகு தொலைவில் உள்ள வாடி கிராமத்தின் ரஹிபாய்க்கு அவரது மகளின் தேவையே முக்கியமானது. மலனின் இளைய சகோதரி (திருமணமாகி புனேவில் வசிக்கிறார்), உறவுக்கார பெண்கள் ஆதரவாக இருந்தனர். “அவளது இளம்பருவத்தில் எதுவும் நடக்கவில்லை. இப்போது ஏன் அவள் மீது வலியை திணிக்க வேண்டும்? நடப்பது நடக்கப்பட்டும்” என்கின்றனர் அவர்கள். எனவே மலனுக்கு கருத்தடையும் செய்யப்படவில்லை, கருப்பையும் நீக்கப்படவில்லை.
எனினும், இந்தியாவில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான உறைவிட நிறுவனங்கள் பெரும்பாலான பெற்றோர்களிடம் அவர்களின் மனவளர்ச்சி குன்றிய மகள்களுக்கு, கருப்பையை நீக்கும் நிபந்தனையுடன்தான் சேர அனுமதி அளிக்கின்றன. இதுபோன்ற பெண்களுக்கு திருமணம் நடக்கப் போவதில்லை, குழந்தைப் பெற போவதில்லை, அவளது கருப்பைக்கு அதிகளவில் பயன்பாடு கிடையாது. மாதவிடாயை அவர்கள் கையாள வேண்டிய சிக்கல்களும் இருக்காது. பாலியல் வன்கொடுமை, கருவுறுதல் போன்ற அச்சங்களுக்கும் இது பொதுவான தீர்வாகிவிடுகிறது.
இதுபோன்ற கருத்துகளும் சிலசமயம் தவறாகிவிடுகிறது. “மனவளர்ச்சி குன்றிய பெரும்பாலான பெண்கள் பருவமடைந்ததை புரிந்துகொள்வதுடன் மாதவிடாயைக் கையாளவும் பயிற்சி அளிக்கப்படுகின்றனர்” என்கிறார் புனேவைச் சேர்ந்த ததாபி டிரஸ்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான அச்சுத் பார்கவ்கார். அவர் மாற்றுத்திறனாளிகள், பாலின பாகுபாடு குறித்து பெற்றோர், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் அளித்து வருகிறார். “ஆனால் பொது சுகாதாரம் மற்றும் கல்வி முறையில் [மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் கல்வி, வாழ்க்கைத் திறன்] இது குறித்த எந்த திட்டமும் இல்லை.”
பொது சுகாதார மையம், பொதுநல அமைப்புகள், குடும்பங்கள், சமூகங்கள் ஆகியவற்றின் ஆதரவின்றி மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், பாலுணர்வு, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் கடினம்தான் என்கிறார் மேதா தெங்குசே.
வாடியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனம் குன்றிய முதியவர்களுக்கான சாதனா வில்லேஜ் எனும் உறைவிடம் 1994ஆம் ஆண்டு (பதிவு செய்யப்பட்ட சமூகம்) கொல்வான் பள்ளதாக்கில் அமைக்கப்பட்டது. (ரஹிபாய் சாதனா வில்லேஜில் 20 ஆண்டுகளாக சமூகப் பணியாளராக இருந்து சிறிதளவு ஈட்டி வருகிறார்.) “15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பெண்களை பாதுகாக்கவும், மாதவிடாயின் போது உதவிபுரியும் அர்ப்பணிப்பு மிக்க பெண்கள் எங்களுக்கு கிடைத்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. அடிப்படை கவனம் குறித்து நாங்கள் இப்பெண்களுக்கு கற்பிக்க முயற்சிக்கிறோம். சில சமயம் எங்களால் சமாளிக்க முடிவதில்லை. பிறகு தான் நாங்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கிறோம்.”
கொல்வான் கிராமத்தின் அருகே வாடியில் சுகாதார துணை மையத்தில் பொது சுகாதார பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இரண்டு ஆண் சுகாதார பணியாளர்கள், ஆண் மருத்துவ அலுவலர், இரண்டு பெண் சுகாதார பணியாளர்கள் தான் மனநலம் குன்றிய பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத் தேவைகளை கவனித்து வருகின்றனர். “பதின்ம பருவ பெண்கள், இளம்பெண்களுக்கு நாங்கள் சானிட்டரி நாப்கின் விநியோகிக்கிறோம்”, என்கிறார் ஆரம்ப சுகாதார மருத்துவச்சி. நீங்கள் என்ன செய்வீர்கள் என நான் கேட்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்து கொண்டனர்.
வாடி அருகில் குலே கிராமத்தில் (சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில்) உள்ள ஆரம்ப சுகாதார மையத்திலும் இதே நிலைதான். குலேவில் இரண்டு பெண்களும், கொல்வானில் நான்கு அல்லது ஐந்து பேரும் மனநலம் குன்றி இருப்பதாக ஆஷாவின் சுர்வானா சோனார் சொல்கிறார். “அவர்கள் பருவ வயதை அடையும் போது சுபாவத்தில் மாற்றம் வருகிறது. அவர்களுக்கு எப்படிச் சொல்வது, புரியவைப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை.”
மனநலம் குன்றியவர்களின் உரிமைகளுக்கான சாசனம் 25 (ஏ) 2008ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. அதன்படி மற்றவர்களைப் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு தரமான, இலவச அல்லது நியாயமான சுகாதாரத் திட்டங்களை அளிக்க வேண்டும். மக்கள்தொகை சார்ந்த பொது சுகாதாரத் திட்டங்களுடன் அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் உள்ளிட்டவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது.
இக்கூட்டத்தில் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் 2016ஆம் ஆண்டில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை அளிக்கும் சட்டம் இந்தியாவில் ஒருமித்த கருத்தடைக்கு தடை விதித்தது. குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு, இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம் குறித்து அவர்களுக்கு முறையான தகவல்களை அறிவதற்கு உறுதி செய்ய வேண்டும்.
எனினும் மனநலம் குன்றிய பெண்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமை குறித்து, எந்த குறிப்பிட்ட பிரிவு குறித்தும் இச்சட்டம் பேசவில்லை. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான அமைச்சகத்தின் தகவல்படி, இந்தியாவில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இக்குறைபாடுகளுடன் உள்ளனர். அவர்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
பல சம்பவங்களில் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளை அசாதாரண அல்லது அதீத பாலுணர்வு கொண்டவர்களாக கருதப்படுகிறது. பிறப்புறுப்புகளின் ஆரோக்கிய தேவைகள், காதலுக்கான தேவை, நட்பு, பாலுறவு, நெருக்கம் போன்றவை தாய்மைக்கான உரிமையுடன் சேர்த்து கவனிக்கப்படுவதில்லை என்கிறது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாலுணர்வு குறித்து 2017ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வுக்கட்டுரை.
மலனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எப்போதாவது நீங்கள் ஆசைப்பட்டது உண்டா என ரஹிபாயிடம் கேட்டேன். “சிலர் வரன்களை கொண்டு வந்தனர். நாங்கள் தான் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்,” என்றார். “அவளுக்கு புடவைகூட கட்டத் தெரியாது, எப்படி தனியாக குடும்பத்தை நடத்த முடியும்? அவளது [இரு] சகோதரர்கள் ‘அவள் பிறந்த வீட்டிலேயே இறக்கட்டும்‘ என்று சொல்லிவிட்டனர்.” மலனைப் போன்ற பல பெண்கள் புகுந்த வீட்டிற்கு சென்று புதிய வாழ்க்கைக்கு ஏற்ப வாழ முடியாமல் சிரமப்பட்டு பிறந்த வீட்டிற்கு திரும்பிய கதைகளையும் ரஹிபாய் அறிந்துள்ளார்.
எனினும் புனேவைச் சேர்ந்த கல்வியாளர், ஆலோசகர், சிறப்புக் குழந்தையின் தாயுமான டாக்டர் சுனிதா குல்கர்னி மனநலம் குன்றிய வயது முதிர்ந்த ஆண், பெண்களுக்கும் பாலியல் உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்கிறார். “பாலுணர்வு என்பது எப்போதும் உடலுறவு என்ற பொருளையே தருவதில்லை,” என்கிறார் அவர். “பாலுணர்வு தொடர்பாக பல்வேறு கோணங்கள் உள்ளன. நட்பு, நெருக்கம், ஒரு கோப்பை காபியை பரிமாறிக் கொள்ளுதல், சிறிது மகிழ்ச்சியாக இருப்பது. இதுபோன்ற வாய்ப்புகள் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டு விடுகின்றன.”
மாறாக மனநலம் குன்றிய பதின்ம பருவ சிறுவர், சிறுமியர் தங்களது பாலுணர்வை வெளிப்படுத்தினால் பெரும்பாலான குடும்பத்தினரும், பாதுகாவலர்களும் எதிர்க்கின்றனர். சிலர் மருந்துகளைக் கொண்டு பாலுணர்வு சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றனர். சிலர் எவ்வகையான பாலுணர்வு வெளிப்பாட்டையும் தீவிரமாக தண்டிக்கின்றனர். “அவர்களின் உணர்வுகளை மறுப்பதால் நமக்கு என்ன லாபம் ஏற்பட போகிறது?” என கேட்கிறார் டாக்டர் சச்சின் நகர்கர். அவர் 15 ஆண்டுகளாக முல்ஷி தாலுக்காவின் பவுட் கிராமத்தில் சிறப்பு தேவை உள்ள பெரியோருக்காக பணியாற்றி வருகிறார். “பாலுணர்வு என்பது இயல்பானது, ஆரோக்கியமான வெளிப்பாடு. உங்களால் நிறுத்த முடியாது, தடுக்கவோ, மறுக்கவோ முடியாது.”
இயல்பான பாலுணர்வு மறுக்கப்பட்டாலும், மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு அடிக்கடி ஆளாகின்றனர். மலனும் அவளது உறவுப் பெண் ரூபாலியும் போல.
அவர்களின் இயல்பான பாலுணர்வு மறுக்கப்பட்டாலும், மாற்றுத்திறனாளி பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். மலனும் அவரது உறவுக்கார பெண்ணான மனநலம் குன்றிய 38 வயதாகும் ரூபாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவர்களின் கிராமத்தில் பாலியல் வன்முறை, தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர். “சில ஆண்கள் அவர்களை வம்பிழுத்து தொடுகின்றனர் அல்லது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வருகின்றனர்,” என்று ரஹிபாய் என்னிடம் சொன்னார். இதுபோன்ற தொடர் வன்கொடுமைகளுக்கு நடுவே அச்சத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் ரஹிபாய் தனது கவலைகளை தனக்குள் வைத்துக் கொள்வதில்லை. வாடியின் மக்கள்தொகை தோராயாக 940 இருக்கும். அவர்களில் ஆறு பேர் மலன் உள்ளிட்ட இரு பெண்கள், நான்கு ஆண்கள் மனநலம் குன்றியவர்கள். ரஹிபாய் உறுப்பினராக உள்ள சுயஉதவிக் குழுவினர் ஒன்றிணைந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிராம அங்கன்வாடி அறையில் சிறப்பு குழந்தைகளுக்கான தேவ்ராய் மையத்தை தொடங்கினர். இங்கு வாரத்திற்கு இருமுறை வாடியிலிருந்து தன்னார்வலர்களான மயூரி கெய்க்வாட், சங்கீதா கலேகார், சாதனா கிராமத்திலிருந்து ஷலன் காம்ப்ளி இணைந்து மனமகிழ்வூட்டும் பயிற்சிகள், செயல்பாடுகளை இந்த ஆறு ‘சிறப்பு குழந்தைகளுக்காக‘ நடத்துகின்றனர். “மனநலமற்ற இக்குழந்தைகளுக்கு கற்பிப்பது பயனற்றது என கருதி கிராமத்தினர் சிலர் கேலி செய்கின்றனர். ஆனால் நாங்கள் நிறுத்தப் போவதில்லை,” என்கிறார் மயூரி.
“இதை நான் செய்தேன்,” என இச்செயல்பாடுகள் மூலம் கற்றுக்கொண்டு, தான் செய்த பச்சை, வெள்ளை மணிகள் கோர்த்த மாலையை பெருமையுடன் காட்டுகிறார் மலன்.
மற்ற நாட்களில் வீட்டில் காலை நேர வீட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, குடும்ப தேவைக்கு டிரம்மில் தண்ணீர் பிடித்து நிரப்புவது, குளிப்பது, எப்போதும் மண் அடுப்பில் சிறிது தேநீரை கொட்டிவிட்டு தாயிடம் திட்டு வாங்குவது போன்றவை மலனின் அன்றாடம் வழக்கம்.
வண்ணமயமான சட்டை, பிடித்தமான முழங்கால் வரையிலான பாவாடை அணிந்தபடி குடும்பத்தினரின் ஆதரவுடன் மலன் அந்த நாளுக்கான செயல்பாடுகளுக்கு தயாராகிறார்.
இக்கட்டுரையாளர் ததாபி டிரஸ்டின் அறங்காவலர். 18 ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறார்.
சாதனா கிராமத்தின் மேதா தெங்சே, விஜயா குல்கர்னி, புனே ததாபி டிரஸ்டின் அச்சுத் பார்கவ்கார் ஆகியோருக்கு நன்றி.
முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.
இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.
இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா? zahra@ruralindiaonline.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் நகலை (கார்பன் காப்பி) namita@ruralindiaonline.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா