மக்கள் என் மாமனாரிடம், ‘உங்கள் வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியில் சென்று பணம் சம்பாதிக்கப் போகிறாளா?’ என்று கேட்பார்கள், நான் நகரத்தின் மகள் இல்லை. எனவே எனக்கு விதிகள் கடுமையானவை,” என்கிறார் பாத்திமா பீபி.

கறுப்பு நிற நிகாபை கழற்றி, முன் கதவின் அருகே ஒரு ஆணியில் தொங்கவிட்டு, பேசிக்கொண்டே தன் வீட்டிற்குள் நுழைகிறார் ஃபாத்திமா. "நான் ஒரு இளம்பெண்ணாக இருந்தபோது, ​​​​எனது இயங்குவெளி சமையல் மற்றும் வீட்டை நிர்வகித்தல் என்று நினைத்தேன்," என்று அவர் நினைவுகூர்ந்து சிரிக்கிறார். "நான் ஏதாவது முயற்சி செய்ய முடிவு செய்தபோது, ​​​​வெளியே சென்று என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய என் குடும்பத்தினர் எனக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தனர். நான் ஒரு இளம் முஸ்லீம் பெண்ணாக இருக்கலாம். ஆனால் நான் முயற்சித்துப் பார்க்கவென எந்த விஷயமும் இருக்கவில்லை,” என்கிறார் 28 வயது நிரம்பியவர். மதிய வெளிச்சத்தில் அவரது வெள்ளை துப்பட்டாவில் வெள்ளித் துணுக்குகள் மின்னுகின்றன.

பாத்திமா உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) மாவட்டத்தில் உள்ள மஹேவா நகரில் வசிக்கிறார். அங்கு வாழ்க்கையின் வேகம் பெரும்பாலும் அருகிலுள்ள யமுனையின் அவசரமற்ற ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. கால்களுக்குக் கீழே ஒரு புல் வளர விடமாட்டார். இன்று அவர் ஒரு திறமையான கைவினைஞர் மற்றும் கைவினைத் தொழில்முனைவோராக இருக்கிறார். நாணல் புல்லின் நீண்ட வெளிப்புற இலைகளிலிருந்துத் தயாரிக்கப்பட்ட பல்வேறு வீட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.

ஒரு இளம் பெண்ணாக, பாத்திமாவுக்கு என்ன செய்வது என்று எப்போதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முகமது ஷகீலுடனான திருமணம் அவரை மஹேவாவிற்கும் அனுபவமிக்க நாணற்புல் ​​கைவினைஞரான அவரது மாமியார் ஆயிஷா பேகத்தின் வீட்டிற்கும் கொண்டு வந்தது.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: ஆயிஷா பேகம் ஒரு நாணற்புல் கூடையின் மூடியை நெய்கிறார். காய்ந்தப் புல்லைக் கொண்டு கூடைகள், தொட்டிகள், நகைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற பலவகையான பொருட்களை அவர் உருவாக்குகிறார். வலது: ஆயிஷாவின் மருமகள் பாத்திமா பீபி, கதைகள் மற்றும் கைவினைக் கண்காட்சிகளில் விற்கப்படும் கூடைகளின்

ஆயிஷாவின் திறமையான கைகளில், நாணல் எவ்வாறு அடக்கப்பட்டு, பலவகையான தயாரிப்புகளாக வடிவமைக்கப்பட்டது என்பதை ஆர்வத்துடன் பார்த்தார் இளம் மணமகள்: மூடிகள் மற்றும் மூடிகள் இல்லாதக் கூடைகள், மற்றும் அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகள்; தட்டுகள்; பேனா வைக்குமிடம்; பைகள்; குப்பைத் தொட்டிகள்; மற்றும் சிறிய ஊஞ்சல்கள், டிராக்டர்கள் மற்றும் பல அலங்காரப் பொருட்கள். இந்தத் தயாரிப்புகளின் விற்பனை ஒரு நிலையான வருமானத்தை கொண்டு வந்தது. வீட்டில் இருந்து இயங்கும் பெண்களுக்கு வசதிபட்டத் தொழிலாகவும் இது இருக்கிறது.

"பிபிராசாவில் உள்ள எங்கள் வீட்டில் என் அம்மாவும் இதைச் செய்வதை [நாணற்புல் தயாரிப்புகளை) உருவாக்குவதை நான் பார்த்தேன்," என்று அவர் கூறுகிறார். சிறிது காலத்திலேயே, பாத்திமாவும் கைவினைத் தொழிலைக் கையில் எடுத்தார். "நான் ஒரு இல்லத்தரசி, வீட்டில் வேலை செய்கிறேன். ஆனால் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை இருந்தது. இப்போது [இந்த வேலையின் மூலம்] என்னால் மாதம் சுமார் 7,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்,” என்கிறார் ஒன்பது வயது ஆஃபியா மற்றும் ஐந்து வயது ஆலியானின் தாய்.

நாணல் கலைப்பொருட்களை உருவாக்காதபோது, நாணல் தயாரிப்புகளைச் சேகரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிதல், பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் மற்றும் கைவினைப்பொருளைச் சுற்றிக் கொள்கையை வடிவமைக்க முயற்சித்தல் எனப் ​​பாத்திமா பல்வேறு வழிகளில் கைவினைப்பொருளை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். சொந்தமாக ஒரு மகளிர் சுய உதவிக் குழுவையும் (SHG) வெற்றிகரமாக நிர்வகிக்கிறார். அதற்கு அவர் 'ஏஞ்சல்' என்று பெயரிட்டார். மற்றப் பெண்களை அழைத்துச் செல்லும் வலிமையான, இரக்கமுள்ள பெண்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அப்பெயரைச் சூட்டியிருக்கிறார். "பெண்கள் மற்ற பெண்களுடன், போட்டியின்றி, மகிழ்ச்சியாக இருக்கும் கதைகள் மற்றும் திரைப்படங்களை நான் ரசிக்கிறேன்," என்று அவர் விளக்குகிறார்.

மாநில முதலமைச்சரைச் சந்திப்பது உட்பட அவருக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் மரியாதையும் ஒரு பெரிய அனுபவம்தான். "முன்பு என் கணவர் [மோட்டார் மெக்கானிக்] என் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவார். ஆனால் இப்போது எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்த்து அவர் பெருமைப்படுகிறார். கடந்த இரண்டு வருடங்களில், வாரத்தில் இரண்டு நாட்களே வீட்டில் இருந்தேன்,” என்று தன் சுதந்திர உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார். அவரது சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைச் சந்திப்பது, மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பது மற்றும் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது ஆகியவை அவருடைய முழு நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது.

மஹேவாவின் ஆர்வமுள்ள பெண்கள் நாணற்புல்லை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை முழு மனதுடன் வரவேற்றனர். வருமானத்துக்கான வாய்ப்பையும் பெற்றனர்

வீடியோவைப் பாருங்கள்: பிரயாக்ராஜில் புல் பசுமையாக உள்ளது

ஆனால் அது இன்னும் பிற வாய்கள் பேசும் பேச்சை நிறுத்தவில்லை. “ஆண்கள் இருக்கும் பயிற்சிக் கூட்டங்களில் நான் கலந்துகொண்டு, குழுவின் புகைப்படம் எடுக்கப்படும்போது, ​​மக்கள் வந்து என் மாமியாரிடம், 'அவளைப் பாருங்கள், ஆண்களுடன் புகைப்படம் எடுக்கிறாள்!' என்பார்கள். ஆனால் அவர்களின் பேச்சு என்னை நிறுத்த நான் அனுமதித்ததில்லை,” என்று அவர் கூறுகிறார். சிறிய நகரமான உத்தரபிரதேசத்தில் உள்ள குறுகிய சமூக விதிமுறைகளின் கவண்கள் மற்றும் அம்புகள் தன்னை வீழ்த்திட அவர் அனுமதித்ததில்லை.

உ.பி.யில் உள்ள மஹேவா பட்டி பஷ்சிம் உபர்ஹர், 6,408 பேர் கொண்ட மக்கள் தொகை கொண்ட நகரமாக (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர்வாசிகள் அதை 'மஹேவா கிராமம்' என்றே குறிப்பிடுகின்றனர். கர்ச்சனா தாலுகாவில் அது அமைந்துள்ளது. இது, யமுனை மற்றும் கங்கை நதிகளின் சங்கமிக்கும் இந்து புனித யாத்திரையின் முக்கியப் பகுதியான சங்கத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மஹேவா மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் ஊடாக இயங்கும் ஒரு முக்கிய இணைப்பு யமுனா ஆகும். இங்குள்ள கைவினைஞர்கள், பூக்கள் மற்றும் பிற பிரசாதங்களை கொண்ட, பனை ஓலைகளால் நெய்யப்பட்ட சிறிய கூடைகளை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். ஆண்கள் பிரயாக்ராஜ் நகரில் மெக்கானிக் மற்றும் ஓட்டுநர்களாக வேலை செய்ய வெளியே செல்கிறார்கள் அல்லது சிறியக் கடைகளை நடத்துகிறார்கள் அல்லது உணவகங்களில் வேலை செய்கிறார்கள்.

சுவாரஸ்யமாக, முஸ்லிம் சமூகம் 13 சதவீதமாக இருக்கும் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) பிரயாக்ராஜ் மாவட்டத்தில், மஹேவாவின் முஸ்லீம் மக்கள் தொகை ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆயினும்கூட, பாத்திமா மற்றும் ஆயிஷா போன்ற முஸ்லீம் பெண்களே முதன்மையாக, கைவினைப்பொருளின் மறுமலர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்கள். "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். ஆனால் இறுதியில், கைவினைப் பயிற்சி செய்யும் அனைத்து பெண்களும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். மற்றவர்கள் வேலையை முடிக்க மீண்டும் வருவதில்லை. ஒருவேளை அவர்கள் மற்ற விஷயங்களில் மும்முரமாக இருக்கலாம்,” என்கிறார் பாத்திமா.

*****

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடதுபுறம்: பாத்திமாவும் ஆயிஷாவும் தங்கள் மொட்டை மாடியில் காய்ந்த புல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே. வலது: புதிதாக வெட்டப்பட்ட புற்கள் கிரீம் நிறமாக மாறும் வரை ஒரு வாரம் வெயிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் அது புற்களைப் பிணைக்கப் பயன்படும் மெல்லிய உலர்ந்த காசா வகைப் புல்லைக் கொண்டு மூட்டைகளாகக் கட்டப்படுகிறது

மஹேவாவில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில், ஃபாத்திமா விலைமதிப்பற்ற உலர்ந்த நாணற்புல் மாலைகள் குவிக்கப்பட்ட ஒரு அறையின் கதவைத் திறக்கிறார். "நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலங்களில் மட்டுமே நாங்கள் இப்புற்களைப் பெறுகிறோம். மேலும் பச்சைப் புல்லை கீற்றுகளாகக் கிழித்து, உலர்த்தி இங்கே சேமித்து வைக்கிறோம். இது வீட்டில் மிகவும் வறண்ட இடம். காற்று இருக்காது. மழையும் காற்றும் புல்லின் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி விடும்,” என்று அவர் கூறுகிறார்.

மஞ்சள் புல் விரும்பத்தகாதது. ஏனெனில் அதில் உடையக்கூடிய தன்மை அதிகம். மேலும் அதற்கு சாயமிட முடியாது. ஒரு வெளிர்நிற நாணற்புல், விரும்பும் நிறத்தில் சாயமிட கைவினைஞரை அனுமதிக்கிறது. இதைச் செய்ய, புதிதாக வெட்டப்பட்ட புற்களை மூட்டைகளாகக் கட்டி ஒரு வாரம் கவனமாக திறந்தவெளியில் வெயில், காற்று இல்லாத நாட்களில் உலர்த்த வேண்டும்.

பாத்திமாவின் மாமியார் ஆயிஷா பேகமும் புற்களை சரிபார்க்க ஏறினார். தனது 50 வயதுகளில் இருக்கும் கைவினைஞர் ஆயிஷா, யமுனை நதிக்கரையில் சிறிது தூரம் நடந்து சென்று, தேவையான புற்கள் சேகரிக்க முடிந்த காலத்தை நினைவு கூர்கிறார். கடந்த சில பத்தாண்டுகளில், பரவலான வளர்ச்சி மற்றும் நகர்ப்புற பரவல் திறந்த ஆற்றங்கரை நிலத்தை சுருங்கிவிட்டது. முன்பு அங்கெல்லாம் காட்டுப் புல் தடையின்றி செழித்து வளர்ந்தது.

“இப்போது, ​​யமுனையில் பயணிக்கும் படகுக்காரர்கள் புற்களைக் கொண்டு வந்து ஒரு கட்டா 300-400 ரூபாய்க்கு விற்கிறார்கள் [ஒரு கட்டா தோராயமாக 2-3 கிலோ எடை],” என்கிறார் ஆயிஷா மீண்டும் அவர் வேலை பார்க்கும் இடத்துக்குக் இறங்கியபடி. ஒரு கட்டா புற்களைக் கொண்டு, ஒரு கைவினைஞர் தோராயமாக இரண்டு 12 x 12 அங்குல கூடைகளை உருவாக்க முடியும். அவற்றை மொத்தமாக ரூ.1,500-க்கு விற்க முடியும்; இந்தக் கூடைகள் பொதுவாக தாவரங்களை வளர்க்க அல்லது துணிகளை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன.

7 முதல் 12 அடி உயரத்தை எட்டும் நாணற்புல், கைவினைப்பொருளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. துணைப்பகுதியாகப் பொருளில் இருந்தாலும் முக்கியமான பகுதியாக காசா எனப்படும் மெல்லிய நாணற்புல் பயன்படுத்தப்படுகிறது. கடினமான நாணற்புல்லைப் பிணைக்க இது பயன்படுகிறது; இறுதித்தயாரிப்பில் காசாப்புல் வெளிப்படையாகத் தெரியாது. இறுக்கமாக கட்டப்பட்ட கையளவுக் கட்டுகளாக விற்கப்படும் இந்தப் புல், ஆற்றங்கரைகளில் ஏராளமாக கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.5-10.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடப்புறம்: ஆயிஷா பேகம் ஒரு கூர்மையான ஊசியுடன் ஒரு குமிழியை நெசவு செய்கிறார். வலது: வடிவத்தை உருவாக்க காசா புல்லைச் சுற்றி தடித்த நாணற்புல் கீற்றுகளை அவர் சுருட்டினார்

அவர்களது வீட்டின் முற்றத்தில் அமர்ந்து, ஆயிஷா மீண்டும் வேலையைத் தொடங்குகிறார். கூடைகளின் மூடிகளில் சில கைப்பிடிகளை உருவாக்குகிறார். ஒரு ஜோடி கத்தரிக்கோல் மற்றும் கூர்மையான ஊசியால், புல்லின் நுண்ணிய இழைகளை துண்டித்து, இழுத்து, தள்ளுகிறார். இறுக்குகிறார். எப்போதாவது இறுக்கமானவற்றை ஒரு வாளி தண்ணீரில் நனைத்து அறுக்கத்தக்கவையாக மாற்றுகிறார்.

“நான் என் மாமியாரைப் பார்த்து [இந்த வேலையை] தொடங்கினேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இளம் மணமகளாக வந்தபோது நான் செய்த முதல் பொருள், ரொட்டிக்கான பெட்டி,” என்கிறார் ஆயிஷா. ஒருமுறை அவர் ஜென்மாஷ்டமியில் இளம் கிருஷ்ணரின் சிலையைத் தொங்கவிட ஒரு சிறிய ஊஞ்சலையும் செய்தார்.

ஆழமான காயங்களோடு கூடிய தன் கைகளைக் காட்டி, “கத்தி அளவு  மெல்லிய வலிமையான புல்லைக் கொண்டு வேலை செய்வதால் எங்கள் விரல்கள் வெட்டப்படுகின்றன,” என்கிறார். ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்து, அவர் மேலும் கூறுகிறார், “[அப்போது] முழுக் குடும்பமும் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நாணற்புல் தயாரிப்புகளை தயாரிப்போம். சந்தையில் அவற்றை ஆண்கள் விற்பர். வீட்டில் உள்ள இரண்டு அல்லது மூன்று பெண்கள் ஒன்றாக வேலை செய்தால், ஒரு நாளைக்கு சுமார் 30 ரூபாய் சம்பாதிக்கலாம். அத்தொகை எங்கள் குடும்பத்தை நடத்த போதுமானது.”

பத்தாண்டுகளுக்கு முன்பு, புல்லுக்கானத் தேவை வறண்டு விட்டது; கைவினைப் பயிற்சி செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைந்தது. சில தயாரிப்புகள்தான் விற்பனைக்கு வந்தன. எதிர்பாராத இடத்திலிருந்து உதவி வந்தது. 2013 -ல், உத்தரப்பிரதேச அரசாங்கம் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரயாக்ராஜ் மாவட்டத்தின் தனித்துவமான தயாரிப்பாக நாணற்புல் தேர்ந்தெடுக்கப்பட்டது, அதன் வரலாறு குறைந்தது எழுபது ஆண்டுகளுக்கு முந்தையது.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: தனது 50 வயதுகளில் இருக்கும் ஆயிஷா பேகம் நாணற்புல் கைவினைப் பணியில் அனுபவம் வாய்ந்த கைவினைஞர். 'நான் என் மாமியாரைப் பார்த்துத் தொடங்கினேன். 30 வருடங்களுக்கு முன்பு நான் செய்த முதல் பொருள் ரொட்டிக்கான பெட்டி.' வலது: சமீபத்தில் ஆயிஷா தயாரித்த சில தொட்டிகள் மற்றும் கூடைகள்

"ODOP திட்டம் [மூன்ஜ் தயாரிப்புகளின்] தேவை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளது. மேலும் பல கைவினைஞர்கள் திரும்பி வருகிறார்கள். புதியவர்களும் [கைவினையில்] இணைகிறார்கள்," என்கிறார் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் தொழில்துறைக்கான துணை ஆணையர் அஜய் சௌராசியா. அவர் ஜில்லா உத்யோக் கேந்திராவிற்கும் தலைமை தாங்குகிறார். இது மாநில அமைப்பாகும். இதன் மூலம் ODOP திட்ட பலன்கள் கைவினைஞர்களுக்கு அனுப்பப்படுகின்றன. "இதைச் செய்ய முன்வரும் பெண்களுக்கு நாங்கள் பயிற்சி மற்றும் கருவிகளை வழங்குகிறோம். மேலும் ஆண்டுதோறும் 400 பெண்களுக்கு பயிற்சி அளிப்பதே எங்கள் இலக்கு" என்று அவர் மேலும் கூறினார். மாநிலம் மற்றும் தேசிய அளவில் வழக்கமான விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இவ்வமைப்பு கைவினைப்பொருட்களை ஆதரிக்கிறது.

மஹேவாவின் ஆர்வமுள்ள பெண்கள் நாணற்புல்லை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை முழு மனதுடன் வரவேற்றனர். அவர்களின் வருமானத்தை நிரப்புவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். அவர்கள் இப்போது வாட்ஸ்அப்பில் ஆர்டர்களைப் பெறுகிறார்கள். வேலை மற்றும் வருமானம் பெண்களுக்கு சமமாக விநியோகிக்கப்படுகிறது என்று பாத்திமா கூறுகிறார்.

ODOP திட்டமும் அவர்களின் வீட்டுக்கு நிதியைக் கொண்டு வந்துள்ளது. “இந்தத் திட்டம் எங்களுக்குக் கடன் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. எனது சுய உதவிக் குழுவில், பலர் 10,000 முதல் 40,000 ரூபாய் வரை பெற்றுப் பணியைத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் பாத்திமா. இந்தத் திட்டம், மொத்தக் கடன் தொகையில் 25 சதவீத மானியத்தை வழங்குகிறது - அதாவது, கடன் தொகையில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மீதியை, மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினால், வட்டி இல்லை. அதன் பிறகு ஆண்டுக்கு ஐந்து சதவீத வட்டி.

மற்ற இடங்களிலிருந்தும் பெண்களை ஈர்க்க இந்தத் திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிஷாவின் திருமணமான மகள் நஸ்ரின் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புல்பூர் தாலுகாவில் உள்ள அண்டவா கிராமத்தில் வசிக்கிறார். "இங்கே [அண்டாவாவில்] மழை நீர் உள்ளே செல்வதைத் தடுக்க ஓடுகளை வைப்பதற்கு முன்பு கூரைகளுக்கு ஓலை போடுவதற்கு அதே புல் பயன்படுத்தப்படுகிறது" என்று கல்வி மற்றும் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற 26 வயதான அவர் கூறுகிறார். நாணற்புல் வேலையின் பொருளாதார ஆற்றலை தன் வீட்டில் பார்த்த அவர், இங்கே கைவினைப்பொருளைத் தொடங்க முயற்சிக்கிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

ஆயிஷா பேகம் மற்றும் பாத்திமா பீபியின் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பெயரும் ஆயிஷா பேகம்தான். அவர் செய்யும் ஒவ்வொரு நாணற்புல் தயாரிப்புக்கும் ரூ.150-200 சம்பாதிக்கிறார். 'சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, நான் பணம் சம்பாதித்து என் நேரத்தை கடத்துகிறேன்'

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரொட்டி வைக்க பயன்படும் கூடையின் விலை ரூ. 20. இன்று அதே கூடை ரூ.150 அல்லது அதற்கு மேல். பணவீக்கம் இருந்தபோதிலும், இது ஒரு மரியாதைக்குரிய வருமானமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், 60 வயதிலும் கூட, பாத்திமாவின் அண்டை வீட்டாரின் பெயர் ஆயிஷா பேகம்,  கைவினைப்பொருளில் ஆர்வம் கொண்டிருக்கிறார். “நான் செய்யும் ஒரு பொருளுக்கு சுமார் 150-200 ரூபாய் சம்பாதிக்க முடியும். சும்மா உட்காராமல், பணம் சம்பாதித்து நேரத்தை கடத்துகிறேன்,” என்கிறார். அவர் வீட்டின் முன் முற்றத்தில் ஒரு தரை விரிப்பில் அமர்ந்திருக்கிறார். சுவருக்கு எதிராக முதுகு சாய்த்து அமர்ந்து, ஒரு கூடைக்கு மூடியை வடிவமைக்கிறார்.

"இதற்குப் பிறகு அவள் முதுகில் வலி இருப்பதாக புகார் கூறுவாள்" என்று அவள் பேச்சைக் கேட்கும் கணவர் சுட்டிக்காட்டுகிறார். ஓய்வுபெற்ற டீக்கடை உரிமையாளரான முகமது மதின், ஆண்கள் இந்த வேலையைச் செய்கிறார்களா என்று கேட்கும்போது புன்னகைக்கிறார். "சில ஆண்கள் அதை செய்ய முடியும், ஆனால் என்னால் முடியாது," என்று அவர் கூறுகிறார்.

மதிய வேளைநெருங்குகிறது. பாத்திமாவின் தாயார் ஆஸ்மா பேகம், முடிக்கப்பட்ட துண்டுகளுடன் தனது மகளின் வீட்டிற்கு வந்துவிட்டார். மறுநாள் பிரயாக்ராஜில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் நடைபெறும் சிறிய கண்காட்சியில் காட்சிப்படுத்தவும் விற்கவும் பாத்திமா அவர்களை அழைத்துச் செல்வார். ஆஸ்மா தான் செய்த வேலையைக் காட்ட, விரிவான மூடியுடன் கூடிய கூடையை எடுக்கிறார். "சூடான உணவுகளுக்கான சிறந்த தட்டுகளைத் தயாரிக்க மூன்று நாட்கள் வரை ஆகலாம். நீங்கள் அதை மெதுவாக செய்ய வேண்டும் அல்லது புல் கிழிந்துவிடும்" என்று அவர் விளக்குகிறார். கைவினைஞர்கள் மிகவும் மிருதுவான, மெலிதானப் பொருளை உற்பத்தி செய்ய குறுகிய புல்லைப் பயன்படுத்துகின்றனர். அதைத் தயாரிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் அதிக விலை அதற்குத் தேவைப்படும்.

50 வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் ஆஸ்மா நன்கு அறியப்பட்ட கைவினைஞர் ஆவார். சமீபத்தில் மஹேவாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிபிராசாவில் உள்ள தனது வீட்டில் 90 பெண்களுக்கு நாணற்புல் கைவினைப் பயிற்சி அளித்தார். அவரது மாணவர்களின் வயது 14 முதல் 50 வயது வரை. “நல்ல வேலைதான். இதை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், சம்பாதிக்கலாம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறலாம்," என்று அவர் கூறுகிறார், "என்னால் முடிந்தவரை நான் இந்த வேலையை செய்வேன். என் மகள் பாத்திமா செய்யும் பணியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: பாத்திமாவின் தாயார், ஆஸ்மா பேகம் (இடது, பச்சை துப்பட்டாவில்). நாணற்புல் கைவினைப் பயிற்சியில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நிபுணர். 'இதை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். பணம் சம்பாதிக்கலாம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறலாம்.' வலது: ஆஸ்மா தனது படைப்புகளில் ஒன்றான மூடியுடன் கூடிய வண்ணமயமான கூடையுடன்

ஆஸ்மா 4 ஆம் வகுப்பு வரை படித்தார். சுமார் இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட விவசாயியான பாத்திமாவின் தந்தைக்கு 18 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். பயிற்சியாளராக, ஆஸ்மா ஜில்லா உத்யோக் கேந்திராவில் இருந்து மாதந்தோறும் ரூ.5,000 பெறுகிறார். ஆறு மாத பயிற்சியில் கலந்து கொள்ளும் சிறுமிகள் மாதத்துக்கு ரூ.3,000 பெறுகின்றனர். “இந்தப் பெண்கள் [இல்லையெனில்] வெட்டியாக இருக்கிறார்கள். இப்போது அவர்கள் வீட்டில் எதையாவது கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் அந்த பணத்தை மேற்கொண்டு படிக்க பயன்படுத்துவார்கள், ”என்று அவர் கூறுகிறார்.

நாணற்புல் கைவினைஞர்களுக்கு, அடுத்ததாக ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு பட்டறைக்கான திட்டங்கள் உள்ளன. "நாங்கள் ஒரு அருங்காட்சியகத்திற்காக காத்திருக்கிறோம். இதனால் பார்வையாளர்கள் நாங்கள் செய்யும் வேலையைப் பார்க்கவும் பாராட்டவும் முடியும். இது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளைக் கொண்டிருக்கும். மேலும் நீங்கள் செயல்முறையைப் பார்க்க முடியும்," என்கிறார் பாத்திமா. அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டறை, மேலும் பெண்கள் முன்னேற ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு, சௌராசியாவின்படி, ஒன்றிய அரசு இந்த அருங்காட்சியகத்தை அமைக்கும் கைவினைக் கிராமத்திற்கு ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. "இது தொடங்கிவிட்டது. ஆனால் முடிக்க சிறிது நேரம் எடுக்கும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

“பட்டறையில், சிலர் நெசவு மட்டுமே செய்வார்கள். சிலர் வண்ணம் தீட்டும் வேலை மட்டுமே செய்வார்கள். பணிகள் பிரிக்கப்படும். நாணற்புல் கைவினைஞர்களின் சமூகமாக நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து வேலை செய்வது நன்றாக இருக்கும், ”என்னும் பாத்திமாவின் எதிர்காலம் உறுதியான புல்லால் இறுக்கமாக நெய்யப்பட்ட்டிருக்கிறது.

சாம் ஹிக்கின்பாதம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (SHUATS) பேராசிரியர்களான ஜஹானாரா மற்றும் ஆரிஃப் பிராட்வே ஆகியோரின் உதவிக்குக் கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Reporter : Priti David

Priti David is the Executive Editor of PARI. A journalist and teacher, she also heads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum, and with young people to document the issues of our times.

Other stories by Priti David
Editor : Sangeeta Menon

Sangeeta Menon is a Mumbai-based writer, editor and communications consultant.

Other stories by Sangeeta Menon
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan