“பள்ளியில் நான் கற்பவை யாவும் வீட்டில் இருக்கும் யதாரத்தத்துக்கு எதிராக இருக்கிறது.”
ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமியான பிரியா மலை மாநிலம் உத்தரகாண்டைச் சேர்ந்தவர். மாதவிடாய்காலத்தில் அவர் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகளைப் பற்றி பேசுகிறார். ”கிட்டத்தட்ட இரண்டு உலகங்களில் வாழ்வதைப் போல இருக்கும். வீட்டில் நான் தனியாக வைக்கப்பட்டு எல்லா சடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பள்ளியில் ஆண்களுக்கு பெண்கள் நிகர் என சொல்லிக் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.
11ம் வகுப்பு படிக்கும் பிரியாவின் பள்ளி அவரது கிராமத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள நனக்மட்டா டவுனில் இருக்கிறது. தினமும் அங்கு சைக்கிளில் சென்று வருகிறார். நல்ல மாணவியான அவர், தொடக்கத்தில் தனக்குத்தானே கற்பிக்க முயற்சித்தார். “நான் புத்தகங்களை வாசித்தேன். அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டுமென யோசித்தேன். உலகை மாற்றப் போவதாக எண்ணினேன். ஆனால் இந்த சடங்குகளில் பயனில்லை என என் குடும்பத்திடம் சொல்லி என்னால் புரிய வைக்க முடியவில்லை. அவர்களுடன் இரவு பகலாக வாழ்கிறேன். எனினும் இவற்றால் பயனில்லை என அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை,” என்கிறார் அவர்.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் சார்ந்து அவருக்கு தொடக்கத்தில் இருந்த சங்கடம் மறையவில்லை. எனினும் பெற்றோரின் சிந்தனைக்கு ஏற்ப அவர் இப்போது நடக்கிறார்.
பிரியாவும் அவரது குடும்பமும் தாழ்வானப் பகுதியில் வசிக்கின்றனர். மாநிலத்தின் அதிக விளைச்சல் கிடைக்கும் பகுதி அது. மூன்று அறுவடைக்காலங்கள் அப்பகுதியில் உண்டு. குறுவை, சம்பா மற்றும் பங்குனிப் பயிர்கள். பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். பசுக்கள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளை கொண்டிருக்கின்றனர்.
அருகே இருக்கும் இன்னொரு ரஜபுத்திர வீட்டை சேர்ந்த விதா, மாதவிடாய் காலத்தில் இருக்கும் வாழ்க்கை ஏற்பாட்டை விளக்குகிறார்: “அடுத்த ஆறு நாட்களுக்கு என் அறைக்குள்ளேயே கிடப்பேன். சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என என் தாயும் பாட்டியும் சொல்லியிருக்கின்றனர். எனக்கு தேவையானவற்றை அம்மா கொண்டு வந்து தருவார்.”
அறையில் இரு படுக்கைகளும் ஒரு மேஜையும் அலமாரியும் இருக்கின்றன. மரப்படுக்கையில் 15 வயது விதா படுக்க மாட்டார். வெறும் போர்வை மட்டும் போட்டிருக்கும் கட்டிலில்தான் படுப்பார். அதனால் முதுகுவலி வருவதாக சொல்லும் அவர், “குடும்பத்தின் மனம் சாந்தமாக இருக்க” வேண்டுமென அதைச் செய்வதாகக் கூறுகிறார்.
கட்டுப்பாடான இந்தத் தனிமை காலத்தில் விதா பள்ளிக்கு செல்ல அனுமதி உண்டு. ஆனால் நகலா கிராமத்திலிருக்கும் அவரது வீட்டின் அறைக்கு நேராக திரும்ப வந்துவிட வேண்டும். அவரது தாயின் செல்பேசியும் சில புத்தகங்களும் அவரது பொழுதை போக்க உதவுகிறது.
ஒரு பெண் குடும்பத்திலுள்ள பிறரிடமிருந்து விலகி தன்னுடைய பொருட்களை ஒரு பக்கமாக எடுத்து வைத்தால், அவர் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. யார் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார், யார் இல்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சூழலை விதா வெறுக்கிறார். “அனைவருக்கும் தெரிந்து அதை பற்றிப் பேசிக் கொள்வார்கள். மாதவிடாயில் இருக்கும் பெண் எந்த விலங்கையும் பழம் கொடுக்கும் மரத்தையும் தொட அனுமதி இல்லை. அவர் சமைக்கக் கூடாது. உணவு பரிமாறக் கூடாது. கோவிலுக்கு சென்று வேண்டக் கூடக் கூடாது,” என்கிறார் அவர்.
பெண்களை ‘அசுத்தமானவர்களாகவும்’, ‘அமங்களமானவர்களாகவும்’ பார்க்கும் இத்தகைய பார்வை உத்தம் சிங் நகரின் சுற்றுவட்டாரத்தில் வழக்கம். 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் என்ற மோசமான பாலின விகிதத்தை அப்பகுதி கொண்டிருக்கிறது. மாநிலத்தின் சராசரி விகிதமான 963-க்கும் குறைவு. போலவே, கல்வியறிவும் ஆண்களிடம்தான் அதிகமாக 82 சதவிகித அளவு இருக்கிறது. பெண்கள் மத்தியில் 65 சதவிகிதமாக இருக்கிறது (2011 கணக்கெடுப்பு).
பெண்களை ‘அசுத்தமானவர்களாகவும்’, ‘அமங்களமானவர்களாகவும்’ பார்க்கும் இத்தகைய பார்வை உத்தம் சிங் நகரின் சுற்றுவட்டாரத்தில் வழக்கம். 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் என்ற மோசமான பாலின விகிதத்தை அப்பகுதி கொண்டிருக்கிறது. மாநிலத்தின் சராசரி விகிதமான 963-க்கும் குறைவு
விதாவின் படுக்கைக்குக் கீழே ஒரு கிண்ணமும், தம்ளரும், கரண்டியும் இருக்கிறது. அவற்றைக் கொண்டுதான் அவர் உண்ண வேண்டும். நான்காவது நாள் அவர் அதிகாலையில் எழுந்து இந்தப் பாத்திரங்களை கழுவி காய வைத்துவிட வேண்டும். “பிறகு என் தாய் மாட்டுமூத்திரத்தை அவற்றில் தெளித்து, மீண்டும் கழுவி, சமையற்கட்டில் வைப்பார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வேறு பாத்திரங்கள் எனக்குக் கொடுக்கப்படும்,” என்கிறார் அவர் பின்பற்றும் முறைகளை விவரித்து.
வீட்டை சுற்றி நடப்பது அவருக்கு தடுக்கப்படும். உடையும் உடுத்த முடியாது. “தாய் கொடுக்கும் உடைகளை மட்டும்தான் அந்த நாட்களில் உடுத்த முடியும்,” என்கிறார். அவர் உடுத்தும் இரு ஜோடி துணிகளும் துவைக்கப்பட்டு வீட்டின் பின்பகுதியில் காய வைக்கப்பட வேண்டும். பிற துணிகளுடன் கலந்து விடக் கூடாது.
விதாவின் தந்தை ராணுவத்தில் இருக்கிறார். அவரின் தாய்தான் 13 பேர் கொண்ட குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார். இத்தகைய பெரிய குடும்பத்தில் தனியாக இருப்பது அவருக்கு அருவருப்பாக இருக்கிறது. குறிப்பாக, தம்பிகளிடம் விளக்கும்போது: “இது பெண்களுக்கு வரும் நோய் என்றும் அந்தச் சமயத்தில் அவர்கள் தனியாக இருக்க வேண்டும் எனவும் என் குடும்ப உறுப்பினர்கள் தம்பிகளிடம் சொல்வார்கள். தெரியாமல் யாரேனும் தொட்டுவிட்டால், அவர்கள் ‘அசுத்தமாக’ கருதப்படுவார்கள். மாட்டு மூத்திரம் தெளிக்கப்பட்ட பிறகுதான் அவர்கள் சுத்தமடைய முடியும். அந்த ஆறு நாட்களில் விதாவின் தொடர்பில் வரும் எல்லாவற்றுக்கும் மாட்டு மூத்திரம் தெளிக்கப்படும். குடும்பத்தில் நான்கு மாடுகள் இருப்பதால் மாட்டு மூத்திரத்துக்கு தட்டுப்பாடு இருப்பதில்லை.
சில முறைகள் மட்டும் ஆங்காங்கே தளர்த்தப்பட்டிருக்கிறது. 2022ம் ஆண்டில் விதாவுக்கு தனிப்படுக்கை ஒதுக்கப்பட்டபோது 70 வயதுகளில் அதே கிராமத்தில் இருந்த பீனா, தன்னுடைய மாதவிடாய் காலத்தில் மாட்டுக் கொட்டகையில் எப்படி தங்க வைக்கப்பட்டார் என நினைவுகூறுகிறார். “மூங்கில் இலைகளை தரையில் பரப்பி வைத்து உட்காருவோம்,” என நினைவுகூருகிறார் அவர்.
இன்னொரு முதியப் பெண், “எனக்கு இனிப்பில்லா தேநீர் காய்ந்த ரொட்டிகளுடன் கொடுக்கப்படும். அல்லது கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் ரொட்டி கொடுக்கப்படும். சில நேரங்களில் எங்களை அவர்கள் மறந்துவிடுவார்கள். நாங்கள் பசியில் இருப்போம்,” என்கிறார்.
பல பெண்களும் ஆண்களும் இந்த முறைகள் மதப் பிரசுரங்களில் இருப்பதாகவும் அதனால் அவற்றை கேள்வி கேட்கக் கூடாது என்றும் கருதுகின்றனர். சில பெண்கள் தாங்கள் அவமானகரமாக உணர்வதாக சொன்னாலும் தனியாக இருக்கவில்லை எனில் கடவுளர் அதிருப்தி கொள்வார்களென நம்புவதாகவும் கூறுகின்றனர்.
கிராமத்தில் இருக்கும் இளைஞனாக வினய், மாதவிடாய் பெண்களை அரிதாகவே பார்த்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார். ‘அம்மா தீண்டத்தகாதவர் ஆகிவிட்டார்,’ என்ற வாக்கியத்தைக் கேட்டு வளர்ந்திருக்கிறார்.
29 வயது நிரம்பிய அவர் மனைவியுடன் நனக்மட்டா டவுனில் வாடகை அறையில் வசிக்கிறார். உத்தரகாண்டின் சம்பவாத் மாவட்டத்திலிருந்து, இங்கிருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியப் பணிக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்தார். “இது இயற்கையான விஷயம் என எங்களுக்கு சொல்லப்பட்டதில்லை. குழந்தைப் பிராயத்திலிருந்து இந்தக் கட்டுப்பாடுகளை நிறுத்தினால், ஆண்கள் மாதவிடாய் பெறும் பெண் எவரையும் கீழ்த்தரமாக பார்க்க மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
சானிடரி நாப்கின்களை வாங்குவதும் பிறகு அகற்றுவதும் ஒரு சவால். கிராமத்தின் ஒரே கடை நாப்கின்களை வாங்கி வைக்க மாட்டார்கள். நாப்கின் கேட்கச் சென்றாலும் கடைக்காரரிடமிருந்து வித்தியாசமான பார்வைகள் வரும் என சவி போன்ற இளம்பெண்கள் கூறுகின்றனர். வீட்டுக்கு செல்லுபோது அவர்கள் வாங்கியவற்றை யாரும் பார்த்திடாத வண்ணம் மறைத்து கொண்டு செல்ல வேண்டும். இறுதியில் நாப்கின்களை அகற்ற 500 மீட்டர் தொலைவில் இருக்கும் கால்வாய்க்கு சென்று, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தூக்கி எறிய வேண்டும்.
குழந்தைப் பேறு மேலும் தனிமையைக் கொடுக்கும்
சமீபத்தில் பிரசவமானவர்களைக் கூட அசுத்தம் என்கிற கருத்து விட்டு வைக்கவில்லை. பதின்வயது குழந்தைகள் கொண்டிருக்கும் லதா நினைவுகூர்கையில்: “(மாதவிடாய்ப் பெண்களுக்கான) 4லிருந்து 6 நாட்களுக்கு பதிலாக, புதிய தாய்கள், வீட்டு வேலைகளிலிருந்து 11 நாட்களுக்கு தனித்து வைக்கப்படுகின்றனர். சில நேரங்களில், குழந்தைக்கு பெயர் சூட்டும் காலம் வரை, 15 நாட்களுக்குக் கூட இந்த தனிமை காலம் நீடிக்கும்.” லதாவுக்கு 15 வயது பெண் குழந்தையும் 12 வயது ஆண் குழந்தையும் இருக்கின்றனர். புதிய தாய் தூங்குவதற்கென வீட்டிலிருந்து பிரித்து மாட்டுச்சாணத்தால் ஒரு கோடு வரையப்படும் என்கிறார்.
கதிமா ஒன்றியத்தின் ஜங்கத் கிராமத்தில் கணவரின் கூட்டுக் குடும்பத்துடன் வசிக்கையில் லதா இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டார். அவரும் அவரது கணவரும் வெளியே சென்ற கொஞ்ச காலத்துக்கு அவர் நிறுத்தினார். “கடந்த சில வருடங்களாக இந்த சடங்குகளை நாங்கள் மீண்டும் நம்பத் தொடங்கிவிட்டோம்,” என்கிறார் அரசியலில் பட்டப்படிப்பு முடித்த லதா. “மாதவிடாய் காலப் பெண் நோயுற்றால், கடவுளர் கோபம் கொண்டு விட்டதாக சொல்வார்கள். (கிராமம் மற்றும் வீட்டின்) எல்லா பிரச்சினைகளும் அம்முறைகள் பின்பற்றாததால்தான் நேர்ந்ததென சொல்லி விடுவார்கள்,” என்கிறார் அவர்.
புதிதாக குழந்தை பிறந்திருக்கும் குடும்பத்திலிருந்து ஒரு குவளை தண்ணீர் கூட யாரும் வாங்கிக் குடிக்க மாட்டார்கள். மொத்தக் குடும்பம் ‘அசுத்தமான’தாகக் கருதப்படும். குழந்தையின் பாலினமும் எந்த மாற்றத்தையும் கொடுப்பதில்லை. பெண்ணையோ புதுக் குழந்தையையோ தொடும் எவரும் மாட்டு மூத்திரம் தெளித்தே சுத்தப்படுத்தப் படுவார்கள். வழக்கமாக 11வது நாளில் பெண்ணும் குழந்தையும் மாட்டு மூத்திரத்தில் குளிப்பாட்டப்பட்டு கழுவப்படுவார்கள். அதற்குப் பிறகு பெயர் சூட்டும் விழா நடக்கும்.
லதாவின் உறவினரான 31 வயது சவிதா 17 வயதில் மணம் முடிக்கப்பட்டு இந்த முறைகளை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டார். திருமணமான முதல் வருடத்தில் வெறும் புடவையை மட்டும் போர்த்திக் கொண்டு உண்ண வேண்டியிருந்ததை நினைவுகூருகிறார். உள்ளாடைகள் போடாமல் இருப்பது கட்டாயமாக இருந்தது. “முதல் குழந்தை பிறந்த பிறகு நான் அதை நிறுத்திவிட்டேன்,” என்னும் அவர், பிறகு மாதவிடாய் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தை தொடங்கியதையும் ஒப்புக் கொள்கிறார்.
இத்தகை பழக்கங்கள் பின்பற்றும் வீடுகளில் வளர்ந்த வாலிபர்கள் என்ன நினைப்பது என தெளிவின்றி இருக்கின்றனர். பர்கிதாந்தி கிராமத்தைச் சேர்ந்த நிகில் 10ம் வகுப்பு படிக்கும் வாலிபர். மாதவிடாய் குறித்து போன வருடம் படித்ததாகவும் ஆனால் அது அவருக்கு புரியவில்லை என்றும் கூறுகிறார். ஆனால், “பெண்களை தனிமைப்படுத்துவது நியாயமில்லை என்றே கருதுகிறேன்,” என்கிறார் அவர். ஆனால அதைப் பற்றி வீட்டில் பேசினால், குடும்பத்தின் மூத்தோர் அவரை திட்டுவார்கள் என்கிறார்.
திவ்யான்ஷும் இதே அச்சத்தைதான் வெளிப்படுத்துகிறார். சுன்காரி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவரான அவர், மாதத்தில் ஐந்து நாட்கள் தனியே அமரும் தாயைப் பார்த்திருக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. “இது எல்லா பெண்களுக்கும் நேர்வதுதான் என நினைப்பது என்னைப் போன்றோருக்கு இயல்பாக இருந்தது. ஆனால் அது சரி என எனக்கு படவில்லை. வளர்ந்த பிறகு நானும் சடங்கை ஏற்றுக் கொள்வேனா அல்லது நிறுத்துவேனா?” எனக் கேட்கிறார் அவர்.
இத்தகைய முரண் எதையும் கிராமத்தின் மூத்தவர் உணர்ந்ததாக தெரியவில்லை. “உத்தராஞ்சல் [உத்தரகாண்டில் பழைய பெயர்] கடவுளர் வசிக்கும் இடம். எனவே (இந்த) சடங்குகள் இங்கு முக்கியம்,” என்கிறார் நரேந்தர்.
சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மாதவிடாய் வருவதற்கு முன்னமே 9-10 வயதுகளில் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது என்கிறார் அவர். “மாதவிடாய் வரத் தொடங்கிவிட்டால் கன்னிகாதானம் எப்படி செய்வது?” என்கிறார் அவர், கணவனுக்கு பெண்ணை அன்பளிப்பாகக் கொடுக்கும் திருமணச் சடங்கைக் குறிப்பிட்டு. “திருமண வயது என 21-ஐ அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அரசுக்கும் எங்களுக்கும் வெவ்வேறு விதிகள் இருக்கின்றன.”
இக்கட்டுரை ஹிந்தியில் எழுதப்பட்டது. பெயர்கள் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கிறது.
பாரி கல்விக் குழு இக்கட்டுரை எழுத உதவிய ரோகன் சோப்ராவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்