நான்காவது முறையாக கர்ப்பம் ஆனதும் இந்த குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தார் கமலா. இதற்காக அவர் தன்னுடைய கிராமத்திலிருந்து 30கிமீ தொலைவிலுள்ள பெனூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்லவில்லை. இதுவரை தனது வீட்டிற்கு அருகில் வாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் சந்தைக்கு அவர் மட்டுமே சென்றுள்ளார். “எனக்கு இந்த இடம் பற்றி எதுவும் தெரியாது. என் கணவர்தான் கண்டுபிடித்தார்” என்கிறார் கமலா.
30 வயதாகும் கமலாவும் அவரது கணவர் ரவியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது), 35, கோண்டு ஆதிவாசி சமூகத்தினர். முதலில் இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள உள்ளூர் ‘மருத்துவரை’ அணுகியுள்ளனர். “இவரைப் பற்றி நண்பரொருவர் கூறினார்” என்கிறார் கமலா. தனது வீட்டுக்கு அருகிலுள்ள இடத்தில் காய்கறிகளை விளைவித்து அதை சந்தையில் விற்கிறார் கமலா. அவரது கணவர் உள்ளூர் சந்தையில் தொழிலாளராக இருப்பதோடு தன்னுடைய இரண்டு சகோதரர்களோடு சேர்ந்து மூன்று ஏக்கர் நிலத்தில் கோதுமையும் சோளமும் பயிரிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் க்ளினிக் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே எளிதாக தெரிகிறது. இது ‘மருத்துவமணை’ என அழைக்கப்பட்டாலும், அதன் நுழைவாயிலில் ‘மருத்துவர்’ என்ற எந்த பெயர் பலகையும் இல்லை. ஆனால் அங்கு கட்டி தொங்க விடப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் அவரது பெயருக்கு முன்னால் ‘மருத்துவர்’ என்ற தலைப்பு உள்ளது.
தனது கையில் ஐந்து மாத்திரைகளை கொடுத்த ‘மருத்துவர்’, அதை மூன்று நாளைக்கு சாப்பிடுமாறு கூறி ரூ.500 வாங்கிக்கொண்டு அடுத்த நோயாளியை பார்க்க தயாராகிவிட்டதாக கூறுகிறார் கமலா. மாத்திரைகள் குறித்தோ, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தோ, மிக முக்கியமாக எப்படி, எப்போது கருக்கலைப்பை எதிர்பார்க்கலாம் போன்ற எந்த தகவல்களையும் மருத்துவர் கூறவில்லை.
மருந்தை எடுத்துக்கொண்ட சில மணி நேரம் கழித்து, கமலாவுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. “சில நாட்கள் காத்திருந்தும் கசிவு நிற்கவில்லை. அதனால் மாத்திரை கொடுத்த மருத்துவரிடம் திரும்பவும் சென்றேன். அவரோ, ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். கருப்பை வழியாக குழாய் மூலம் அகற்றுவது என்பதையே ‘சுத்தப்படுத்தல்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதமான குளிர்கால வெயிலில், பெனூர் ஆரம்ப சுகாதார மையத்தின் வெளியே அமர்ந்துள்ள கமலா, மருத்துவ கருக்கலைப்பு நடைமுறைக்காக காத்திருக்கிறார். இதை செய்வதற்கு முப்பது நிமிடமே ஆனாலும், சிகிச்சைக்கு முன்பும் பின்பும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கட்டாயம் எடுக்கப்பட வேண்டிய ரத்த மற்றும் சிறுநீர் சோதனைகளை முந்தைய நாளே முடித்துவிட்டனர்.
சட்டிஸ்கரின் நாராயனபூரில் உள்ள பெரிய ஆரம்ப சுகாதார மையமான இது, 2019-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. ஒளிரும் தாய்மார்கள் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் ஓவியம் வரையப்பட்டுள்ள சிறப்பு மகப்பேறு அறைகள், 10 படுக்கை கொண்ட அறை, 3 படுக்கை கொண்ட பேறுகால அறை, அழுத்த அனற்கலம் எந்திரம், நிறைமாத கர்ப்பிணி இங்கேயே தங்கிகொள்வதற்கான வசதிகள், சமையல் தோட்டம் போன்ற வசதிகள் இங்குள்ளன. பஸ்தரில் பெரும்பாண்மையாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில், பொது சுகாதார சேவைக்கு சிறந்த உதாரணமாக இது திகழ்கிறது.
முன்னாள் மாநில மகப்பேறு சுகாதார ஆலோசகர் டாக்டர் ரோகித் பகேல் கூறுகையில், “மாவட்டத்திலேயே எல்லா வசதியுடன், நன்றாக சேவையாற்றக் கூடியதாக பெனூர் ஆரம்ப சுகாதார மையம் (நாராயனபூர் பிளாக்கில் உள்ள) திகழ்கிறது. ஒரு மருத்துவர் உள்பட 22 ஊழியர்கள், ஒரு ஆயுர்வேத மருத்துவ அதிகாரி, இரண்டு ஆய்வக வல்லுநர்கள் மற்றும் கணினியில் ஸ்மார்ட் கார்ட் இயக்குபவர் ஆகியோர் இந்த மையத்தில் உள்ளனர்”.
30கிமீ சுற்றளவில் உள்ள நோயாளிகள் இந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 77.36 சதவிகிதத்தினர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக, கோண்டு, அபுஜ் மரியா, ஹல்பா, துர்வா, முறியா மர்றும் மரியா சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
வட்டவட்டமான டிசைன் போட்ட மெல்லிய துப்பட்டாவால் தன் முகத்தை மறைத்தபடி பேசும் கமலா, “இதுபோன்ற விஷயங்களை இங்கு செய்வார்கள் என எங்களுக்கு தெரியாது” என கூறுகிறார். அவருடைய மூன்று குழந்தைகளும் – 12 மற்றும் 9 வயதில் இரண்டு சிறுமிகள், 10 வயது சிறுவன் – கோண்டு ஆதிவாசி மருத்துவச்சியின் உதவியோடு வீட்டில் வைத்துதான் பிறந்துள்ளது. பிரசவத்திற்கு முன் அல்லது பிந்தைய பராமரிப்பு எதையும் கமலா பெறவில்லை. இப்போதுதான் முதல்முறையாக மருத்துவமனைக்கு வந்து மகப்பேறு தொடர்பாக சேவைகள் பெறுகிறார். “முதல்முறையாக நான் மருத்துவமனைக்கு வந்துள்ளேன். அங்கன்வாடியில் மாத்திரைகள் கொடுப்பதாக கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் நான் அங்கு சென்றதில்லை” என்கிறார். பிரசவத்திற்கு முன்பான பரிசோதனைகளை நடத்தவும் போலிக் ஆசிட் மாத்திரைகளை கொடுக்கவும் கிராமங்களுக்கு வரும் கிராம சுகாதார ஒருங்கிணைப்பாளரையே கமலா குறிப்பிடுகிறார்.
பொது சுகாதார அமைப்பிலிருந்து கமலா துண்டிக்கப்பட்டிருப்பது இங்கு ஒன்றும் புதிதல்ல. சட்டிஸ்கர் கிராமப்புறங்களில் 33.2 சதவிகித பெண்கள் மருத்துவமனையில் குழந்தை பெறுவதில்லை என
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (2015-16)
கூறுகிறது. மேலும், கருத்தடை சாதனங்களை பயன்படுத்தாத கமலா போன்ற பெண்களில், வெறும் 28 சதவிகிதத்தினர் மட்டுமே குடும்ப கட்டுப்பாடு குறித்து சுகாதார பணியாளர்களிடம் பேசியுள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பு கூறுகிறது. இதுதவிர, ‘திட்டமிடாத கர்ப்பங்கள் ஒப்பீட்டளவில் பொதுவானதாகவும்’, ‘கருக்கலைப்பு செய்துகொண்டதாக கூறிய பெண்களில் நான்கில் ஒருவர் அதன்மூலம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுவதாகவும்’ இந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
நாராயனபூரில் வசிக்கும் 90 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில், அதுவும் மோசமான அல்லது முற்றிலும் சாலை வசதியற்ற பகுதியில் வசிக்கும் காரணத்தால், மகப்பேறு சுகாதார பராமரிப்பை பெறுவது குறைவாக உள்ளது. நாராயனபூர் மாவட்டத்தின் பொது சுகாதார வலைபின்னலில் எட்டு ஆரம்ப சுகாதார மையம், ஒரு சமூக சுகாதார மையம் மற்றும் 60 துணை சுகாதார மையங்கள் இருந்தாலும், அனைத்திலும் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். “சிறப்பு மருத்துவர்களுக்கான 60 சதவிகித பதவிகள் காலியாக உள்ளன. மாவட்ட மருத்துவமணைக்கு வெளியே ஒரு மகப்பேறு மருத்துவர் கூட கிடையாது” என சுட்டி காட்டுகிறார் டாக்டர் பாகேல். ஓர்ச்சா பிளாக்கில் உள்ள இரண்டு ஆரம்ப சுகாதார மையங்கள் – கர்பா மற்றும் ஹண்டவாடா – ஒரு அறையை மட்டுமே கொண்டு செயல்படுகின்றன. அவர்களிடம் கட்டிடங்களும் இல்லை, மருத்துவர்களும் இல்லை என்கிறார் பாகேல்.
இதன் காரணமாக கமலாவும், அவரைப் போன்ற மற்ற பெண்களும் தங்கள் மகப்பேறு சுகாதார தேவைகளுக்கு தகுதியற்ற மருத்துவ பயிற்சியாளர்களை நாடுகிறார்கள். “யார் உண்மையான அலோபதி மருத்துவர் என்பது எங்கள் ஆதிவாசி மக்களுக்கு தெரியவில்லை. எங்களிடம் ‘போலி மருத்துவர்களே’ உள்ளனர். இவர்களே ஊசி, மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர் (மருந்துகளை வழங்குவதற்கு இவர்கள் முற்றிலும் தகுதியற்றவர்கள்). இவர்களை கேள்வி கேட்க யாருமில்லை” என விவரிக்கிறார் பிரமோத் போதாய். கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், பஸ்தரில் உள்ள சாதி சமாஜ் சேவி சான்ஸ்தா என்ற அரசு சாரா நிறுவனத்தில் – சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான UNICEF ஆதரவுடன் செயல்படும் திட்டம் - உதவி திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இந்த பற்றாகுறையை போக்க, கிராம மருத்துவ உதவியாளர்கள் பதவியை கொண்டு வந்தது மாநில அரசு. 2001-ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநிலம் உருவான போது, ஆரம்ப சுகாதார மைய அளவில் மொத்தமுள்ள 1,455 பதவிகளில்
516 மருத்துவ அதிகாரிகள்
மட்டுமே இருந்தனர். கிராமப்புற பகுதிகளில் சுகாதார பயிற்றுனர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நோக்கத்தோடு 2001-ம் ஆண்டு சிகிஸ்தா மண்டல் சட்டத்தை சட்டிஸ்கர் அரசு இயற்றியது. ‘நவீன மருத்துவம் & அறுவைசிகிச்சை பயிற்றுனர்கள்’ என்ற தலைப்பிலான மூன்று வருட பாடத்திட்டம், சில மாதங்களுக்குள்ளாகவே ‘மாற்று மருத்துவ டிப்ளமோ’ என பெயர் மாற்றப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சிலோடு ஆலோசிக்காதது மட்டுமின்றி ‘நவீன மருத்துவம்’ மற்றும் ‘அறுவை சிகிச்சை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது சட்ட சிக்கலை எழுப்பியது. இந்த பாடதிட்டத்தில் பயோகெமிக்கல் மருத்துவம், ஹெர்போ-மினரல் மருத்துவம், அக்குபிரஷர், பிசியோதெரபி, மேக்னெடோ தெரபி, யோகா மற்றும் மலர் வைத்தியம் போன்றவை உள்ளன. கிராம மருத்துவ உதவியாளராக தேர்ச்சி பெறுபவர்கள், ‘உதவி மருத்துவ அதிகாரி’ என்ற அடையாளத்தோடு கிராமங்களிலும் ஆதிவாசி பகுதிகளிலும் நியமிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், மருத்துவ தொழிலின் தரத்தை குறைத்துவிடும் என்று காரணம் கூறி டிப்ளமோ பாடத்திட்டத்தை நிராகரித்தது இந்திய மருத்துவ கவுன்சில். இதுதொடர்பாக மூன்று ரிட் மனுக்கள் (2001-ல் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டிஸ்கர் கிளை, மற்ற இரண்டும் சுகாதார ஊழியர்கள் சங்கம் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு) சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கிராம மருத்துவ உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘உதவி மருத்துவ அதிகாரி’ என்ற அங்கீகாரத்தை நீக்கியது அரசாங்கத்தின் ‘கொள்கை முடிவு’ என பிப்ரவரி 4, 2020 அன்று உயர் நீதிமன்றம் கூறியது. மேலும், இனிமேல் கிராம மருத்துவ உதவியாளர்கள் ‘டாக்டர்’ என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்றும், எம்பிபிஎஸ் மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் மட்டும்தான் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும், நோய்/மோசமான சூழ்நிலை/அவசரகால சமயத்தில் அவர்கள் முதலுதவி மட்டுமே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், கிராம மருத்துவ உதவியாளர்கள் முக்கியமான இடைவெளியை நிரப்பியுள்ளார்கள் என்பது மறுப்பதற்கில்லை. “மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், முன்பு ‘போலி’ மருத்துவர்களிடம் சென்றவர்கள் தற்போது கிராம மருத்துவ உதவியாளரிடம் செல்கின்றனர். அவர்களுக்கு கொஞ்சம் மருத்துவ பயிற்சி இருப்பதால் கருத்தடை குறித்து எளிய ஆலோசனை வழங்குகிறார்கள். ஆனால் வேறு எதுவும் அவர்கள் செய்வதில்லை. ஆலோசனையும் கருக்கலைப்பு தொடர்பான மருந்துகளையும் தேர்ச்சிபெற்ற எம்பிபிஎஸ் மருத்துவரே வழங்குகிறார்” என கூறுகிறார் பாகேல்.
2019-20 ல் மட்டும் சட்டிஸ்கரில் 1,411 கிராம மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக சுட்டி காட்டும் பாகேல், “பேறுகால இறப்புவிகிதம் மற்றும் குழந்தை இறப்புவிகிதம் குறைந்ததற்கு இவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என்கிறார். 2005-06ம் ஆண்டு 71 சதவிகிதமாக இருந்த குழந்தை இறப்புவிகிதம், 2015-16ம் ஆண்டில் 54 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும், 2005-06ல் 6.9 சதவிகிதமாக இருந்த பொது மருத்துவமணை பிரசவம், 55.9 சதவிகிதமாக (NFHS-4) உயர்ந்துள்ளது.
தான் முதலில் ஆலோசித்த மருத்துவர் கிராம மருத்துவ உதவியாளரா அல்லது முழுதும் தகுதியற்ற பயிற்சியாளரா போன்ற எதுவும் கமலாவுக்கு தெரியவில்லை. அவருக்கு அறிவுறுத்தப்பட்ட கருக்கலைப்பை தூண்டுவதற்கு பயன்படுத்தும் மெசோப்ரிஸ்டால் மற்றும் மிஃபிப்ரிடோன் மருந்தை வழங்குவதற்கு அவர்கள் யாருக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. “எம்பிபிஎஸ் மருத்துவர்கள் கூட கருக்கலைப்பு தொடர்பாக 15 நாட்கள் அரசாங்க மருத்துவமணையில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும். சிகிச்சைக்கு வந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அதிகளவு ரத்தகசிவு ஏற்படாததோடு இன்னும் கருக்கலைப்பு முழுமையடையவில்லை என்பதை சோதிக்க முடியும். அப்படி இல்லையென்றால், பெரும் ஆபத்தில் போய் முடியும்” என்கிறார் டாக்டர் பரம்ஜித் கவுர். 26 வயதான இவர், பெமூர் ஆரம்ப சுகாதார மையத்தின் தலைமை மருத்துவர்.
நான் பஸ்தருக்கு வந்த இரண்டு வருடங்களில், கமலாவிற்கு செய்தது போன்று அரைகுறை சிகிச்சைகள் பலவற்றை பார்த்துள்ளதாக கூறுகிறார் கவுர். பலவித பிரச்சனைகளுக்காக ஒரு நாளைக்கு சராசரி 60 நோயாளிகள் வருவதாக அவரது வெளி நோயாளிகள் பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. “தகுதியற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று, ‘சரி செய்யுமாறு’ பல வெளி நோயாளிகள் இங்கு வருவதை நான் பார்த்துள்ளேன். தூண்டுவது மூலம் கருக்கலைப்பு செய்வது தவறாகும் பட்சத்தில் நோய்தொற்று, மலட்டுதன்மை, மோசமான நோயுற்ற தன்மை அல்லது இறப்பு கூட நேரிடலாம். ஆனால் இங்கு வரும் பல பெண்களுக்கு இதுகுறித்து எதுவும் தெரிவதில்லை. மருந்து பரிந்துரைப்பதற்கு முன் ரத்தசோகை மற்றும் ரத்த சர்க்கரை அளவை சோதிக்காமல், வெறுமனே மாத்திரையை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்” என்கிறார் கவுர்.
பெனூரிலிருந்து 57கிமீ தொலைவிலுள்ள மற்றொரு ஆரம்ப சுகாதார மையமான தோடாயில், ஹல்பி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 19 வயதான சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது இரண்டு வயது குழந்தையோடு வந்துள்ளார். அவர் கூறுகையில், “வீட்டில் வைத்துதான் என் குழந்தை பிறந்தது. கர்ப்பத்தின் போதும் அதன்பிறகும் நான் யாரிடமும் ஆலோசிக்கவில்லை”. பிரசவத்திற்கு முந்தைய, பிந்தைய பரிசோதனைகளை செய்யும் சுகாதார பணியாளர்கள் இருக்ககூடிய அங்கன்வாடி மையம் செல்ல, அவரது வீட்டிலிருந்து 15 நிமிடம் நடந்தால் போதும். ஆனால் சீதாவோ, “அவர்கள் கூறுவது எதுவும் எனக்கு புரியவில்லை” என்கிறார்.
மருத்துவ அறிவுரை கூற மொழி தடையாக உள்ளதாக நான் சந்தித்த பல சுகாதார அதிகாரிகள் கூறினர். பஸ்தார் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான ஆதிவாசிகள் கோண்டி அல்லது ஹல்பி மொழியை பேசுகிறார்கள். கொஞ்சம் சட்டிஸ்கரியை புரிந்து கொள்கிறார்கள். இங்குள்ள சுகாதார அதிகாரிகள் வெளியூர் நபர்களாக இருக்கிறார்கள் அல்லது மூன்றில் ஒரு மொழியை மட்டுமே தெரிந்தவர்களாக உள்ளனர். போக்குவரத்து மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தோடாய் ஆரம்ப சுகாதார மையத்தின் கீழுள்ள 47 கிராமங்களில், 25 கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி கிடையாது என்கிறார் தோடாயில் கிராம மருத்துவ உதவியாளராக பணியாற்றும் எல்.கே.ஹர்ஜ்பால். “உட்பகுதிகளுக்கு செல்வது மிகவும் சிரமம். மொழியும் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் எங்கள் பணிகளை (கர்ப்பங்களை கண்காணிப்பது) முழுதாக செய்ய முடியவில்லை. துணை செவிலியர்களால் அனைத்து வீடுகளுக்கும் செல்வது கடினமாக உள்ளது” என்கிறார் 38 வயதாகும் ஹர்ஜ்பால். பொது மருத்துவ சேவைகளை அதிகளவில் பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 2014-ம் ஆண்டு பைக் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியது மாநில அரசாங்கம். தற்போது இந்த மாவட்டத்தில் ஐந்து ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் உள்ளது.
ஆம்புலன்ஸை பயன்படுத்தியதில் 22 வயதான தஸ்மதி யாதவும் ஒருவர். பெனூர் ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து சில கிமீ தொலைவிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் தஸ்மதியும் அவரது கனவர் பிரகாஷும் விவசாயம் செய்து வருகிறார்கள். பிறந்து ஒரு மாதமேயான அவர்களின் குழந்தையோடு தம்பதிகள் இருவரையும் நான் சந்தித்தேன். “முதல்முறையாக நான் கர்ப்பம் ஆனபோது, அங்கன்வாடி அல்லது மருத்துவமணைக்கு செல்லாதே என கிராமத்தில் உள்ள சிர்ஹா (பாரம்பரியமாக சிகிச்சை அளிப்பவர்) என்னிடம் கூறினார். எல்லாவற்றையும் நான் கவனித்து கொள்கிறேன் என்றார். ஆனால் வீட்டில் வைத்து பிறந்த என்னுடைய குழந்தை உடனடியாக இறந்து போனது. அதனால் இந்த முறை ஆம்புலன்ஸை அழைத்த என் கனவர், பிரசவத்திற்காக பெனூர் அழைத்து வந்துள்ளார்”. அவர்களது கிராமத்திலிருந்து 17கிமீ தொலைவிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மகதாரி எக்ஸ்பிரஸ் (சட்டிஸ்கரி மொழியில் ‘மகதாரி’ என்றால் ‘அம்மா’ என்று அர்த்தம் ) என அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் உள்ளது. 102-ஐ அழைத்தால் இந்த ஆம்புலன்ஸ் வந்துவிடும். தஸ்வதியின் பெண் குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது. பேசும்போது அந்த இளம் தாயுடைய முகம் பூரிப்படைகிறது.
“மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெறுவதை பெண்களிடம் ஊக்குவிக்க, ஜனனி சிஷு சுரக்ஷா கார்யகிராம் திட்டத்தை 2011-ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. மருத்துவமனைக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவு, மருத்துவமனையில் இலவசமாக தங்குதல், இலவச உணவு மற்றும் தேவைப்படும் மருந்துகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பேறுகாலத்திற்கு முந்தைய பரிசோதனையை நான்கு முறை செய்து, மருத்துவமனையில் குழந்தை பெற்று, பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடும் தாய்மார்களுக்கு பிரதம மந்திரி மத்ரு வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5000 வழங்கப்படுகிறது” என கூறுகிறார் நாராயனபூர் மாவட்ட சுகாதார ஆலோசகர் டாக்டர் மீனால் இந்துர்கர்.
பெனூர் ஆரம்ப சுகாதார மையத்தில் தனது கருக்கலைப்பு நடைமுறைக்காக காத்திருக்கிறார் கமலா. தனது மனைவிக்காக தேநீர் வாங்கி வருகிறார் ரவி. முழுக்கை சட்டையும் ஜீன்ஸும் அணிந்துள்ள ரவி, தாங்கள் சுகாதார மையத்திற்கு வந்துள்ளதை தங்கள் குடும்பத்தாரிடம் இன்னும் தெரிவிக்கவில்லை என நம்மிடம் கூறுகிறார். அவர் கூறுகையில், “நாங்கள் அவர்களிம் பிறகு கூறிக்கொள்வோம். மூன்று குழந்தையை நாங்கள் வளர்க்க வேண்டும்; இன்னொரு குழந்தையை வளர்க்க எங்களால் முடியாது”.
சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கமலா, தனது தாய்மாமனால் வளர்க்கப்பட்டார். அவரே கமலாவுக்கு திருமணமும் செய்து வைத்தார். திருமணத்திற்கு முன்பு தனது கணவரை அவர் நேரில் கூட பார்த்ததில்லை. “நான் பருவமடைந்த உடனேயே என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். எங்கள் சமூகத்தில் இதுதான் நிலைமை. திருமணம் குறித்து எதுவும் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு எப்போது மாதவிடாய் வரும் என்பதை கூட என் அத்தைதான் கூறுவார். நான் பள்ளிக்கு சென்றதேயில்லை. எனக்கு வாசிக்கவும் தெரியாது. ஆனால் என் மூன்று குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள்” என பெருமிதமாக கூறுகிறார்.
சில மாதங்கள் கழித்து குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்காக மறுபடியும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வர வேண்டும் என கமலா நினைத்துள்ளார். தனது ஆண்மை பறிபோய்விடும் என நம்புவதால், நிச்சியம் கமலாவின் கனவர் விதைநாள அறுவைசிகிச்சையை செய்துகொள்ள மாட்டார். இங்கு வந்த பிறகுதான் கருத்தடை போன்ற விஷயங்களை கேள்விப்படுகிறார் கமலா. ஆனால் உடனடியாக எல்லாவற்றையும் புரிந்துகொண்டார். “இனிமேல் கர்ப்பம் ஆவதற்கு விருப்பம் இல்லையென்றால், இப்படியொரு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் என்னிடம் கூறியுள்ளார்”. 30 வயதில், மூன்று குழந்தைக்கு தாயான பிறகு குடும்ப கட்டுப்பாடு நுட்பங்கள் குறித்த அறிவு கமலாவுக்கு கிடைத்துள்ளது. அவர் செய்யப்போகும் ஒரேயொரு அறுவைசிகிச்சை, அவரது இனப்பெருக்க சுழற்சியை முற்றிலும் நிறுத்திவிடும்.
ஆதரவு வழங்கியதற்காகவும் இந்த கட்டுரைக்கு உதவி புரிந்ததற்காகவும் பூபேஷ் திவாரி, அவினாஷ் அவஸ்தி மற்றும் விதுஷி கௌசிக் ஆகியோருக்கு கட்டுரையாசிரியர் நன்றி கூறிக்கொள்கிறார்.
முகப்பு ஓவியம்:
ப்ரியங்கா போரர்,
தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.
இந்த கட்டுரையை மறுபதிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால்
zahra@ruralindiaonline.org
,
namita@ruralindiaonline.org
என்ற இணைய முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்
தமிழில்: வி. கோபி மாவடிராஜா