“வாங்க, எங்களை வந்து பாருங்க” என்கிறார் அவர். “நாங்களும் எல்லா விதிகளையும் கடைபிடிக்கிறோம். அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அமர்ந்திருக்கிறோம். இந்த ரேஷன் பொருட்கள் கிடைத்தது நல்லது தான், ஆனால் என் குடும்பத்திற்கு சில நாட்களுக்கு மட்டுமே இதை கொண்டு உணவளிக்க முடியும். பிறகு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை.”
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜன்கர் நகரத்தில் இருந்து 55 வயதான துர்கா தேவி என்பவர் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். ஷிபோரி கைவினை கலைஞராக தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் திஷா ஷேகவாதியில் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போது நம்மிடம் பேசினார். ஷிபோரி என்பது துணியை முறுக்கி சாயம் ஏற்றி டிசைன் செய்யும் நுட்பம். முற்றிலும் கைவினையைச் சேர்ந்தது. “எங்களுக்கு கரோனா எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் அதற்கு முன் நாங்கள் பசியால் இறந்துவிடுவோம்“ என்று தனது விதியை நொந்தபடி சிரித்து கொண்டே சொல்கிறார் துர்கா தேவி.
சில ஆண்டுகளுக்கு முன் துர்காதேவியின் கணவர் மது குடித்து உயிரிழந்த பிறகு, அவர் தான் குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர். அவரே தனது ஒன்பது குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து வருகிறார். அவருக்கு தினக்கூலியாக ரூ. 200 கிடைக்கும். மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வேலை இருக்கும் என்கிறார் அவர்.
அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு தினக்கூலி கைவினைக் கலைஞரான 35 வயதாகும் பரமேஸ்வரியிடம் போனை கொடுத்தார்.. (தனது முதல் பெயரை சொல்லவே விரும்புகிறார்) பரமேஸ்வரி தனது கணவர் கட்டடத் தொழிலாளி எனவும், ஊரடங்கால் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறினார். எங்களுக்கு வேலையும் இல்லை, கையில் காசும் இல்லை என்கிறார். ரேஷனில் இலவசமாக கொடுக்கப்படும் ஐந்து கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பருப்பு, தலா 200 கிராம் மஞ்சள், மிளகாய், தனியா பொட்டலங்களைக் கொண்டு நான்கு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை சில நாட்களுக்கு ஓட்டி விட முடியும் என துர்கா தேவியைப் போன்றே பரமேஸ்வரியும் நம்புகிறார்.
ரேஷனில் வழங்கப்படும் இலவச பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் 65 வயதான சாந்தி தேவி ஷிபோரி வேலை எதுவும் செய்வதில்லை. “நான் சாப்பிட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. அதுவும் சோறுதான் சாப்பிட்டேன். வெறும் சோறு. எங்க பகுதியில் நேற்று உணவு கொடுக்கும் வேன் வந்தது. அந்த இடத்திற்கு நடந்து போவதற்குள் எல்லாம் தீர்ந்துவிட்டது. நான் இப்போது மிகவும் பசியில் இருக்கிறேன்” என்றார்.

‘நான் சாப்பிட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது மிகவும் பசிக்கிறது’ என்கிறார் சாந்தி தேவி (கீழ் வரிசையில் இடது). சாந்தி தேவி, பரமேஸ்வரி (மேல் வலது), துர்கா தேவி (கீழ் வரிசையில் நடுவில் இருப்பவர்) உள்ளிட்ட 400 கைவினைக் கலைஞர்களும் ராஜஸ்தானின் சுஜங்காரில் உள்ள தொண்டு நிறுவனமான திஷா ஷேகாவதியில் வேலை செய்கின்றனர். கீழ் வலது: இங்கு தொன்னூறு சதவீத கைவினைக் கலைஞர்கள் தினக் கூலிகள் தான். அவர்களுக்கு என சொந்த சேமிப்பு எதுவும் கிடையாது என்கிறார் அதன் நிறுவனர் அம்ரிதா சவுத்ரி
துர்கா, பரமேஸ்வரியைப் போன்று 400 ஷிபோரி கைவினை கலைஞர்களில் ஒருவர் இஷா ஷெகாவதி. நிறுவனர் அம்ரிதா சவுத்ரி பேசுகையில், “அரசு எதுவும் செய்யவில்லை. தொன்னூறு சதவீத கைவினைக் கலைஞர்கள் தினக் கூலிகள்தான். அவர்களுக்கு என சேமிப்பு எதுவும் கிடையாது. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்” என்றார்.
10 நாட்களுக்கு முன்பு தான் கைவினை தயாரிப்புகளை வாங்கும் வியாபாரிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இப்போது கொடுத்துள்ள ஆர்டரை தங்களால் பெற முடியாது எனவும், மேற்கொண்டு உற்பத்தியை நிறுத்திவிடுமாறும் பெரிய வியாபாரிகள் தெரிவித்துவிட்டனர். ”நான் இப்போது ரூ.25 லட்சம் மதிப்பிலான புடவைகள், துப்பட்டாக்களை வைத்து கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். அனைத்தும் பேக்கிங், லேபிலிங், பார்கோடிங் செய்யப்பட்டவை. இது எப்போது விற்கும்? நான் எப்போது என் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பேன்? யாருக்கும் தெரியாது” என்கிறார் அவர்.
நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து
அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டவை
கைத்தறி நெசவு மற்றும் கைவினைத் தொழில். பல நூறு வகையான துணி உற்பத்தியில் சுமார்
35 லட்சம்
தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயதொழிலாக இவற்றை செய்து வருபவர்கள். கைவினை வளர்ச்சிக் கழக குழுமத்தின் தகவல்படி, ஆயிரக்கணக்கான பாரம்பரிய கைவினை உற்பத்தியில் குறைந்தது 70 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு இத்துறை மட்டுமே ரூ.
8,318 கோடி
மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிகிறது.
சென்னையில் உள்ள இந்திய கைவினைக் குழுமத்தின் தலைவர் கீதா ராம், இப்புள்ளி விவரங்களை மறுக்கிறார். “இந்த எண்ணிக்கையை நம்ப முடியாது. கைவினைக் கலைஞர்களின் எண்ணிக்கை குறித்து முறையான தரவுகள் எதுவும் கிடையாது, ஜிடிபியில் அவர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதும் தெரியாது. பெரும்பாலான உற்பத்தி சுயதொழில் செய்யும் கைவினை கலைஞர்களால் செய்யப்படுவதால் இது அமைப்பு சாரா துறையாக உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரத்தில் வசிக்கும் 50 வயதான நெசவுத் தொழில் செய்யும் தம்பதி ஜி.சுலோச்சனா, ஜி.ஸ்ரீனிவாஸ் ராவ் இந்த ஊரடங்கை எதிர்க்கின்றனர்.
“எங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம். இந்த ஊரடங்கால் நாங்கள் பெருமளவு பொருளாதார சிரமத்தில் உள்ளோம். சீக்கிரமே உணவிற்காக கடன் வாங்கும் நிலைமை வந்துவிடும்” என்கிறார் ஸ்ரீனிவாஸ் ராவ். “எங்களுக்கு கிடைக்கும் கூலியே குறைவுதான். அதில் என்ன சேமிப்பது” என்று தொலைபேசி வழியாகச் சொல்கிறார் சுலோச்சனா.

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரத்தில் வசிக்கும் 50 வயதான நெசவுத் தொழில் செய்யும் தம்பதி ஜி.சுலோச்சனா, ஜி. ஸ்ரீனிவாஸ் ராவ்: 'எங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம். சீக்கிரமே உணவிற்காக கடன் வாங்கும் நிலைமை வந்துவிடும்'
சிராலா நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான நெசவாளர்கள் வீட்டிலிருந்தபடி பருத்தி, பட்டு கலந்த பல்வேறு டிசைன்களை கொண்ட புடவைகளை நகரத்தின் பெயரிலேயே நெசவு செய்து வருகின்றனர். சுலோச்சனாவும், ஸ்ரீனிவாஸ் ராவ் மட்டுமே மாதத்திற்கு 10 முதல் 15 புடவைகளை தயார் செய்கின்றனர். நெசவு முதலாளி மூலப் பொருட்களையும் கொடுத்து, ஐந்து புடவைக்கு சுமார் ரூ.6,000 கொடுத்து வாங்கியும் வந்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு ரூ.15,000 சம்பாதித்துள்ளனர்.
சிராலாவில் வசிக்கும் மற்றொரு நெசவு தம்பதியான 35 வயது பி. சுனிதா, அவரது கணவர் 37 வயதான பந்தலா பிரதீப் குமார் ஊரடங்கு காலத்தில் தங்களது இரு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தாக்குபிடிக்க முடியவில்லை என்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு 15 புடவைகளை நெசவு செய்து ரூ.12,000 ஈட்டினர். ஆனால் மார்ச் 10ஆம் தேதியுடன் ஜரிகை நூல் விநியோகமும், பின்னர் பட்டு நூல் விநியோகமும் நிறுத்தப்பட்டு விட்டதால் மூலப் பொருட்களின்றி வேலையிழந்துள்ளதாக சொல்கிறார் சுனிதா.
ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர், ரேஷன் கடைக்கும் செல்ல முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் அரிசியும் கையிருப்பு இல்லை. சந்தையிலும் அரிசி விலை ஏறிவிட்டது. எங்கள் வாழ்வாதாரத்திற்கு என தெரிந்த தொழில் இது மட்டும் தான் என்கிறார் அவர்.
இந்த இரு சிராலா நெசவாளர் குடும்பங்களும் ஓபிசி (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்காவது அனைத்து இந்திய கைவினை நெசவாளர் கணக்கெடுப்பின்படி (2019-2020), நெசவாளர் குடும்பங்களில் 67 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டோர் பிரிவு (14), பழங்குடியினர் (19) அல்லது பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (33.6 சதவீதம்) சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுனிதா, ஸ்ரீனிவாசின் தனிப்பட்ட வருமானம் ரூ.11,254 என்பதால் இந்தியாவின் நிர்ணயிக்கப்பட்ட மாத தனிநபர் வருவாய் அளவை விட குறைவாக உள்ளது. நெசவாளர் குடும்பங்களில் இவர்கள் இருவரின் கூட்டு வருவாய் என்பது முதல் ஏழு சதவீதத்தில் வருகிறது. 66 சதவீதத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் மாதத்திற்கு ரூ.5,000க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுவதாக நான்காவது அனைத்து இந்திய கைத்தறித் தொழிலாளர் கணக்கெடுப்பு கூறுகிறது.
![Left: B. Sunitha and her husband Bandla Pradeep Kumar in Chirala: 'With no raw material, we cannot work'. Right" Macherla Mohan Rao, founder president of the Chirala-based National Federation of Handlooms and Handicrafts, says, 'This [lockdown] will finish them off the weavers'](/media/images/04a-Bandla-Sunitha-PD.max-1400x1120.jpg)
![Left: B. Sunitha and her husband Bandla Pradeep Kumar in Chirala: 'With no raw material, we cannot work'. Right" Macherla Mohan Rao, founder president of the Chirala-based National Federation of Handlooms and Handicrafts, says, 'This [lockdown] will finish them off the weavers'](/media/images/04b-Macherla-Mohan-Rao-PD.max-1400x1120.jpg)
இடது: சிராலாவில் பி. சுனிதாவும், அவரது கணவர் பந்தலா பிரதீப் குமாரும்: 'மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம்'. வலது: சிராலாவைச் சேர்ந்த தேசிய கைத்தறி மற்றும் கைவினை கூட்டமைப்பின் நிறுவனரும், தலைவருமான மச்சேர்லா மோகன் ராவ் பேசுகையில், 'இது ( ஊரடங்கு) எல்லா நெசவாளர்களையும் முடித்துவிடும்' என்றார்
கைத்தறியும், கைவினைத் தொழிலும் 1990களில் நெருக்கடிக்குள்ளானதைப் போலவே, 5 முதல் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதால், 2018ம் ஆண்டிலும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. பின்னர் கைத்தறித் துணிகளுக்குக்கான ஜி.எஸ்.டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஜவுளித் துறைக்கு அத்தியாவசியமான சாயம் மற்றும் இரசாயனத்திற்கு 12-18 சதவீத ஜி.எஸ்.டி தொடர்கிறது. கைவினைப் பொருட்களுக்கு இது 8 முதல் 18 சதவீதமாக இருக்கிறது.
கரோனா, ஊரடங்கிற்கு முன்பே நெசவாளர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்பட்டதில்லை. அவர்கள் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்தனர். இந்த ஊரடங்கு அவர்களை முற்றிலுமாக முடித்துவிடும் என்கிறார், சிராலாவைச் சேர்ந்த தேசிய கைத்தறி, கைவினை கூட்டமைப்பின் தலைவரும், நிறுவனருமான 59 வயதான மச்சேர்லா மோகன் ராவ். இத்தொழிற்சங்கத்தில் 20,000 உறுப்பினர்கள் உள்ளனர்.
”ஏன் இந்த ஏழை நெசவாளர்களை புறக்கணிக்கிறீர்கள்? என அரசை (ஜவுளித்துறை அமைச்சகம்) கேட்கிறேன். கார்மென்ட் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு இணையாக கைத்தறி, கைவினைத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, இபிஎஃப், பிரசவ கால பலன்கள் போன்றவை ஏன் அளிக்கப்படுவதில்லை? ஆதரவற்ற நெசவாளர்களுக்கு ஏன் வீட்டு வசதிகள் செய்து தரப்படுவதில்லை? ” என கேட்கிறார் மோகன் ராவ். நாடாளுமன்ற அவைகளில் இதுகுறித்து கேள்விகள் எழுப்புமாறு மக்களவை உறுப்பினர்களுக்கு 2014ஆம் ஆண்டு முதலே பல மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்தில் (மாவட்டம்) வசிக்கும் முன்னோடி நெசவுக் கலைஞரும், தேசிய விருது பெற்றவருமான 60 வயதான பி. கிருஷ்ணமூர்த்தி, 50 வயதான பி. ஜெயந்தி ஆகியோருக்கு சொந்தமாக 10 விசைத்தறிகள் உள்ளன. இத்தம்பதி புகழ்மிக்க காஞ்சிபுரம் பட்டு புடவைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் உள்ள பத்து விசைத்தறிகளில் ஒன்பது பணியாளர்களாலும், ஒன்றில் அவர்களும் நெசவு செய்கின்றனர்.
என்னிடம் வேலை செய்யும் நெசவாளர்கள் (ஊரடங்கு முதலே) உணவிற்காக ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கடன் கேட்டு வருகின்றனர் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர்களுக்கு ஏற்கனவே தான் முன்பணம் கொடுத்துவிட்டதாகவும், நல்ல திறன்மிக்க நெசவாளர்கள் மனமுடைந்து வேறு வேலைக்கு அல்லது வேறு நகரத்திற்கு ஏற்கனவே சென்றுவிட்டதாகவும் மனம் வருந்துகிறார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தியின் அச்சத்திலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது. 1995 முதல் 2010ஆம் ஆண்டிற்குள் நெசவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை
2.5 லட்சமாக
சரிந்துள்ளது.
![In Kancheepuram, Tamil Nadu, master weavers and national award winners B. Krishnamoorthy and B. Jayanthi: 'Weavers keep calling [since the lockdown began] asking for loans of Rs. 2,000-3,000 for food'](/media/images/05a-Krishnamoorthy-and-Jayanthi748f44cc-98.max-1400x1120.jpg)
![In Kancheepuram, Tamil Nadu, master weavers and national award winners B. Krishnamoorthy and B. Jayanthi: 'Weavers keep calling [since the lockdown began] asking for loans of Rs. 2,000-3,000 for food'](/media/images/05b-Krishnamoorthy-loom-PD.max-1400x1120.jpg)
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில், முன்னோடி நெசவாளரும், தேசிய விருது பெற்றவருமான பி. கிருஷ்ணமூர்த்தி, பி. ஜெயந்தி: 'உணவிற்காக (ஊரடங்கு முதல்) ரூ.2,000-3,000 வரை நெசவாளர்கள் கடன் கேட்டு வருகின்றனர்'
இந்தியாவின் மாநகரங்கள், பெரு நகரங்கள், சிறு நகரங்களில் கைத்தறி, கைவினைக் கண்காட்சிகள் நடப்பது வழக்கம். இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகளவில் பொருட்களை விற்பனை செய்துவிடுவோம் என கைவினை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் இத்துறை உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெருமளவு சரக்குகள் விற்காமல் தேக்கமடைந்துள்ளன.
“டெல்லி, கொல்கத்தாவில் மூன்று கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என்னிடம் சரக்கு தேங்கி கிடக்கிறது. வாங்குவதற்கு யாருமில்லை. பிறகு எப்படி சாப்பிடுவது?” என கேட்கிறார் குஜராத்தின் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புஜோதி எனும் சிறிய நகரத்தில் வசிக்கும் 45 வயதான வங்கார் ஷாம் ஜி விஷ்ராம். சிறிது காலத்திற்கு எந்த பொருளையும் வாங்கப் போவதில்லை எனவும், நெசவு செய்வதை நிறுத்தி வைக்குமாறும் தனக்கு வரும் வெளிநாட்டு அழைப்புகள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.
”நீங்கள் என்னை அழைத்தபோது (பிற்பகல் 3 மணி) வழக்கமாக என்னுடைய தந்தையுடனும் சகோதரர்களுடனும் வேலை செய்துகொண்டிருப்பேன்” என்கிறார் உத்தரப்பிரதேஷின் வாரனாசியைச் சேர்ந்த, மர பொம்மைகள் செய்பவரான 35 வயதாகும் அஜித்குமார் விஸ்வகர்மா. ”இப்போது உணவுக்கும், கள்ளச் சந்தையில் விற்கும் பருப்பு, உருளைக் கிழங்கு, கோதுமை மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் அவர்.


இடது: ”இப்போது உணவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் உத்தரப்பிரதேஷின் வாரனாசியைச் சேர்ந்த, மர பொம்மைகள் செய்பவரான அஜித்குமார் விஸ்வகர்மா. வலது: “நான் வெறுங்கையுடன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்” என்கிறார் மத்தியப் பிரதேஷின் போபாலைச் சேர்ந்த, பழங்குடியின கோண்டு கலைஞரான சுரேஷ் குமார் துருவ்
அஜித்தும் அவரது குடும்பத்தினரும் மர பொம்மைகள், பறவை பொம்மைகள், சிறிய அளவிலான இந்து கடவுள் சிற்பங்கள் போன்றவற்றைச் செய்வார்கள். ”இந்தத் தொழிலை நம்பித்தான் எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது. எனக்கு பலரிடமிருந்தும் நிறைய பணம் வரவேண்டி இருக்கிறது, ஆனால் யாரும் தற்போது தருவதற்குத் தயாராக இல்லை. 5-6 லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்களை கண்காட்சிக்குத் தயாராக வைத்திருந்தோம். ஆனால், அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.” என்று சொல்லும் அவர், “குயவர்களுக்கு முன்பணம் கொடுத்து பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டச் சொல்லியிருந்தோம். இப்போது அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
அஜித்தின் குடும்பத்தினர் செய்யும் ஒரு அங்குல அளவிலான பறவை பொம்மைகளும், இந்து கடவுள் பொம்மைகளும் பிரபலமானவை. அஜித்தின் இணையர், தந்தை, தாயார், சகோதரி, இரண்டு சகோதரர்கள் என அனைவரும் சேர்ந்தே மர பொம்மைகளையும், அலங்காரப் பொருட்களையும் செய்கின்றனர். பெண்கள் வீட்டில் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, மர வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆண்கள் 12 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பட்டறைக்குச் சென்று பணியாற்றுகின்றனர். மா, அரசு, கடம்பு போன்ற மென்மையான மர வகைகளைப் பயன்படுத்தி பொம்மைகளைச் செதுக்கிவிட்டு, பின்னர் வண்ணம் தீட்டுவதற்காகக் குயவர்களிடம் கொடுக்கிறார்கள்.
மத்தியப் பிரதேஷின் போபாலைச் சேர்ந்த 35 வயதாகும் கோண்டு (பழங்குடியின ஓவியக் கலை) கலைஞரான சுரேஷ் குமார் துருவ், “நான் வெறுங்கையுடன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்” என்கிறார். ”குடிநீரும் ரேஷன் கடை பொருட்களுமே கிடைக்காதபோது, படம் வரைவதற்கான பெயிண்ட், பிரஷ், கேன்வாஸ், பேப்பர் போன்றவற்றுக்கு நான் எங்கே போவது? நான் எப்போது புதிய வேலையை எடுத்து செய்து, அதனை விற்று பணம் சம்பாதிப்பது? எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது? ஒன்றும் புரியவில்லை.” என்கிறார் அவர்.
”ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்களிடம் ரூ.50,000 அளவிற்கு கடன் வாங்கிவிட்டேன். எப்போது அதைத் திருப்பித் தருவேன் என்று எனக்கே தெரியவில்லை.” என்று சொல்லும் துருவ், “என் மனம் முழுக்க கோவிட் நிரம்பி இருக்கிறது. அதைத் தவிர வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை” என்கிறார்.
இக்கட்டுரைக்கான பெரும்பாலான பேட்டிகள் அலைபேசி வழியாக எடுக்கப்பட்டவை.
தமிழில்: சவிதா