19ம் நூற்றாண்டில் ரயில்வே துறை இந்தியாவில் வந்தபோது, பலவகையான மண்டல ரயில்வே நெட்வொர்குகள் தோன்றின, சிந்தியாக்கள், பின்னர் குவாலியர் மாகாணம், குவாலியர் குறுகிய ரயில்வேயை உருவாக்கியது. அதன் பாதை 210 கிலோமீட்டரை அடக்கியது, அதுதான் உலகிலேயே உள்ள நீண்ட தூர குறுகிய ரயில்பாதை.
ஷீயோப்பூர் கலன் புறநகர் ரயில் நிலையத்தை குவாலியர் நகரத்துடன் இணைக்கும் ஒரே ரயில் எண் 52171. இது சராசரியாக மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இந்த பயணத்தை முடிக்க உங்களுக்கு பத்தரை மணி நேரமாகும்.
இப்போது இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருக்கும் ரயில், குவாலியரில் இருந்து காலை 6.25 மணிக்குப் புறப்படும். நான் அரை மணி நேரம் முன்னதாக ரயில் நிலையத்தை அடைந்து, ரூ. 29 கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டு ரயிலில் ஏறினேன். ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஷியோபூர் – குவாலியர் குறுகிய பாதை ரயிலில் 7 பெட்டிகள் மட்டுமே உள்ளது. 200 பேர் பயணிக்க முடியும். ஆனால், தினமும் இரண்டு மடங்கு அதிக பயணிகளை அது சுமந்து செல்கிறது. ரயில் பெட்டிகளில் மக்கள் நெருக்கியடித்து அமர்ந்திருக்கிறார்கள். சிலர் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டு வருகிறார்கள். மேற்கூரையில் சிலர் அமர்ந்துகொண்டும் வருகிறார்கள்.
இந்த கூட்ட நெரிசலிலும் என்னுடன் பயணித்தவர், ரயிலில் ஏறுவதற்கும், இடம் பிடிப்பதற்கும் உதவினார். கோஷிபுரா ரயில் நிலையத்தில், நான் இன்ஜின் ஓட்டுபவரின் இடத்திற்கு அருகில் சென்றேன். ஓட்டுனர் அன்வர்கான், அவருக்கு அருகில் அமர சிறிது இடம் கொடுத்தார். எனக்கு மேற்கூரையில் அமர்ந்து செல்வதற்கு ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், அதில் ஆபத்து உள்ளது. வழியில் உள்ள டிரஸ் பாலத்தில் தாழ்வாக இருக்கும், குறுக்கே செல்லும் கம்பிகள் உள்ளது. (டிரஸ் பாலங்கள் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாலங்களில் குறைந்தளவு பயணங்களே அனுமதிக்கப்படும்) அந்த பாலத்தை கடக்கும்போது சில பயணிகள் பக்கவாட்டில் நின்றுகொள்வதும், குறுக்காக செல்லும் கம்பிகள் அடிபடாமல் இருக்க மேற்கூரையில் படுத்துக்கொள்வதும் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
ரயில் அழகிய கடுகு வயல்கள், ஓடைகள், தரிசு நிலங்கள் வழியாக செல்கிறது. இந்த பயணத்தில் எனக்கு அதிகம் நினைவில் இருப்பது என்னை சக பயணிகள் நன்றாக நடத்தியதுதான்.
இவர் தனது முழு குடும்பதினருடன் பயணம் செய்கிறார். மேலே படுக்கும் இடம் முழுவதை தானே ஆக்கிரமித்துக்கொண்டார்
இந்த ரயில் வழக்கமாக அதன் கொள்ளளவை கடந்து இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை சுமந்து செல்லும். அதில் 200 பயணிகள் பயணிக்க முடியும்
அன்வர் கான் குவாலியரிலிருந்து 6 மணி நேரம் ரயிலை இயக்குகிறார். பின்னர் அடுத்த ஓட்டுனர் அதை ஓட்டுவார்
ரயில் மேற்கூரையில் பயணிப்போர், குனோ நதியை கடக்கும்போது, அதன் பாலத்தில் தாழ்வாக தொங்கும், குறுக்காக செல்லும் கம்பிகளில் அடிபடாமல் இருப்பதற்காக படுத்துக்கொள்கிறார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்
இந்த ரயில் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிற்காது. ஆனால், இங்கு யாரோ ஒருவர் அவசர சங்கிலியை தவறாக உபயோகித்து ரயிலை அவர் இறங்குவதற்கு வசதியான இடத்தில் நிறுத்திவைத்துள்ளார்
இந்த இரண்டு பேரும் ரயிலின் பக்கவாட்டில் அமர்ந்து பயணிக்கிறார்கள். அது பாசன வாய்க்காலை கடந்து செல்கிறது
ரயில்பெட்டியின் உள்ளே பயணிகள் ஒவ்வொரு சிறு இடத்தை கூட ஆக்கிரமித்துள்ளார்கள்
இந்த ரயில் அழகிய கடுகு வயல்கள் வழியாக, சிறு சிறு ஓடைகளையும், சம்பல் நிலத்தின் குறுங்காடுகளையும் கடந்து செல்கிறது
பயணிகள் மேற்கூரையில் இருந்து இறங்குகிறார்கள். பொதுவாக ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 5 நிமிடங்கள் நின்று செல்கிறது
ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்திவைக்கப்படும்போது, மேற்கூரையில் நெருக்கடியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கால்களின் வலியை போக்குவதற்கு எழுந்து நிற்கிறார்கள். அவற்றின் நிழல் இது
குவாலியரில் இருந்து ஷியோப்பூர் கலன் பயணிகள் ரயில் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை ரயில் திரும்பிய பின்னரும், இது குவாலியர் ரயில் பணிமனைக்கு பாராமரிப்பிற்காக அனுப்பி வைக்கப்படும்
இந்த புகைப்பட கதை 2016ம் ஆண்டு பிப்ரவரியில் வந்த ரோட்ஸ் மற்றும் கிங்டம் இதழில் வெளியாகியுள்ளது.
தமிழில்: பிரியதர்சினி. R.