ஜாம்நகர் மாவட்டத்தின் லால்பூர் தாலுகாவைச் சேர்ந்த சிங்காச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு ராபரி கிராமத்திலிருந்து நான் வருகிறேன். எழுத்து எனக்கு மிகவும் புதிது. கொரோனா காலத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மேய்ச்சல் சமூகங்களுக்காக இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக ஒருங்கிணைப்பாளராக நான் பணிபுரிகிறேன். குஜராத்தி மொழியைப் பிரதானப் பாடமாகக் கொண்டு தொலைதூரக் கல்வியில் கலைப் பட்டப்படிப்பு படிக்கிறேன். கடந்த 9 மாதங்களாக என் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறேன். என் சமூகத்திலுள்ள பெண்களுக்கு கல்வியறிவு மிகவும் குறைவாக இருக்கிறது. கல்வியறிவு பெற்ற மிகச் சில பெண்களைத்தான் இங்கு பார்க்க முடியும்.

தொடக்கத்தில் சரண், பர்வாத், அகிர்கள் போன்ற பிற சமூகங்களுடன் சேர்ந்து செம்மறி வளர்ப்பு செய்யும் மேய்ச்சல் சமூகமாக நாங்கள் இருந்தோம். எங்களில் பலர் பாரம்பரியத் தொழிலைக் கைவிட்டு இப்போது நிறுவனங்களிலும் நிலங்களிலும் தினக்கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஆலைகளில் பல பெண்கள் தொழிலாளர்களாகவும் நிலங்களில் பல பெண்கள் கூலிகளாகவும் வேலை பார்க்கின்றனர். இந்தப் பெண்களையும அவர்களின் பணியையும் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் என்னைப் போல் தனியாக பணிபுரிபவர்களுக்கு சமூக ஏற்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது.

கவிஞர் கவிதை எழுதும் பின்னணியில் கற்பனையாக ஒரு தம்பதி பேசும் வசனம் ஒலிக்கிறது:

பாரத் : உன்னுடைய வேலையும் தொழிலும் முக்கியமாக இருக்கலாம். ஆனால் என் பெற்றோரை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு அவர்கள் பட்ட கஷ்டத்தைப் பற்றி உனக்குத் தெரியாது.

ஜஸ்மிதா : ஓ, எனக்கு எப்படி தெரியும்? என் பெற்றோர் என்னை, முழுவதுமாக வளர்ந்து முடித்த பிறகு, எங்கிருந்தோ கடத்தி வந்தவர்கள்தானே!

பாரத் : என்னை ஏன் கேவலமாகப் பேசுகிறாய்? நான் சம்பாதித்து விடுவேன் என்றுதான் சொல்கிறேன். நீ வீட்டை கவனித்துக் கொண்டு நன்றாக வசதியாக வாழ விரும்புகிறேன். உனக்கு வேறென்ன வேண்டும்?

ஜஸ்மிதா : நிச்சயமாக. வேறென்ன எனக்கு வேண்டும்? நான் வெறும் ஜடம்தானே! ஒரு ஜடத்துக்கு ஆசைகள் எப்படி இருக்க முடியும்? வீட்டில் நான் வேலை பார்த்து சந்தோஷமாக இருந்து பிறகு மாதக் கடைசியில் பணத்துக்காக உங்களிடம் கை நீட்ட வேண்டும். அப்போது நீங்கள் கோபப்பட்டால் அதையும் நான் தாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். நான் வெறுமனே வீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன்.

பாரத் : முட்டாள்தனமாக பேசாதே! நீதான் இந்தக் குடும்பத்தின் கவுரவம். வெளியே சென்று கஷ்டப்பட உன்னை விட முடியாது.

ஜஸ்மிதா : ஆம். நீங்கள் சொல்வது சரிதான். உங்களைப் பொறுத்தவரை வெளியே சென்று பெண்கள் வேலை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் நடத்தைக்கெட்டத்தனம் என்பதை நான் மறந்துவிட்டேன்.

இதுதான் யதார்த்தம். எங்களின் கடமைகளை நினைவுறுத்த பலர் இருக்கின்றனர். அவள் என்ன செய்ய வேண்டுமென சொல்ல பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவள் விருப்பத்தை கேட்கத்தான் எவரும் இல்லை

குஜராத்தி மொழியில் ஜிக்னா ராபரி வாசிக்கும் கவிதையைக் கேளுங்கள்

கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரதிஷ்தா பாண்டியா வாசிப்பதைக் கேளுங்கள்

உரிமைகள்

என் உரிமைகளை பட்டியலிட்டிருந்த
என் பிரதியைத் தொலைத்துவிட்டேன்.

என் கடமைகள் கண்முன்னே
எந்தப் பிரச்சினையுமின்றி சுற்றுகின்றன.
என் உரிமைகள் தொலைந்துவிட்டன, அவற்றைத் தேடுங்கள்

என் கடமைகளை நான் சரியாகச் செய்கிறேன்
என் உரிமைகளை பெறவும் அனுமதியுங்கள்

நீ இதைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்.
சில நேரங்களில் நான் என்ன
உண்ண வேண்டுமென்று கூட கேளுங்கள்..

நீ இதைச் செய்ய முடியாது.
நீ அதைச் செய்யக் கூடாது.
சில நேரங்களில் நான்
விரும்புபவற்றையும் செய்ய முடியுமெனக் கூறுங்கள்.

என்னுடைய புரிதலுக்கு எல்லையில்லை
என்னுடைய மீட்சியும் நித்தியமானது
ஆனால் சில சமயங்களில் என்
கனவுகளை உன் உள்ளங்கையில் வைத்துப் போற்றுங்கள்

எனக்கு இந்த நான்கு சுவர்களையும்
உங்களைவிட அதிகம் தெரியும்
சில நேரங்களில் என்னை
ஆழமான நீலவானுக்கு பறக்க விடு.

பெண்கள் பல காலமாக மூச்சுத்திணற வைக்கப்பட்டிருக்கின்றனர்
இறுதியாக என்னை விடுதலையுடன் சுவாசிக்க விடு

இல்லை, உடுத்தவும்
சுற்றித் திரியவும் சுதந்திரம் இல்லை.
வாழ்க்கையிலிருந்து என்ன வேண்டுமெனவும்
நீங்கள் என்னைக் கேட்க வேண்டும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Jigna Rabari

Jigna Rabari is a community worker associated with Sahajeevan, and working in Dwarka and Jamnagar districts of Gujarat. She is among the few educated women in her community who are active in the field and writing about their experiences

Other stories by Jigna Rabari
Painting : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan