16ஆம் நூற்றாண்டின் துறவி கவிஞரான துளசிதாஸை மேற்கோள்காட்டி மேக்தர் ராம் டாண்டன், "வறுமையைப் போன்ற துக்கம் இந்த உலகில் இல்லை", என்று கூறுகிறார். சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சுரேலா கிராமத்தைச் சேர்ந்தவர் மேக்தர் ராம் ஒரு ராம்நாமி, முதலில் இவர் சமர் சாதியைச் சேர்ந்தவராக இருந்தார், பின்னர் அந்த சாதிய அமைப்பை நிராகரித்துவிட்டு ராமரை மையமாகக் கொண்ட பக்தி வழியை ஏற்றுக்கொண்டார்.
"நாங்கள் எங்களது குடும்பப் பெயராக ராமை பயன்படுத்துகிறோம், ஆனால் நாங்கள் பிறகு குடும்பப் பெயர்களையும் எடுத்துக் கொள்கிறோம். சர்மாக்கள், பானர்ஜீக்கள், சிங்குகள், பட்டேல்கள் மற்றும் பிற பெயர்களையும் நீங்கள் எங்களிடையே காணலாம்", என்கிறார் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சபோரா கிராமத்தைச் சேர்ந்த சந்து ராம். "சமர்களை தவிர நாங்கள் ஷ்ரேஷ்டிகள், பைசியர்கள் மற்றும் பனியர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் இவற்றில் ஒன்றாக இருக்கிறோம்".
இப்பிரிவை பின்பற்றுபவர்கள் முக்கியமாக மகாநதி ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களான ராய்கர், ஜஞ்கீர்- சம்பா, பிலாஸ்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்; சிலர் ஒடிசா மற்றும் மகராஷ்டிராவின் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர். (ஏப்ரல் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை சத்தீஸ்கரில் நான் மேற்கொண்ட பயணங்களின் போது இங்கு இடம் பெற்றுள்ள புகைப்படங்களை எடுத்தேன்.)
அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ராமநாமிகள் இந்துக்களாக பட்டியலிடப்பட்டிருக்கின்றனர், எனவே அவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினமாக இருக்கிறது, ஆனால் பெரியவர்கள் இப்போது ஆண்கள் பெண்கள் என 20,000 ராமநாமிகளுக்கு மேல் இல்லை என்று நம்புகின்றனர், - வழக்கமாக அவ்வளவு பேர் தான் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறும் பஜனையில் பங்கேற்கின்றனர் என்று கூறுகின்றனர்.
ராமநாமிகள் முதலில் இந்துக்களிடையே சாதிய மற்றும் தொழில் முறையில் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவரது புத்தகமான பெயரில் மெய்மறந்த : ராம்நாமிகள், ராம்நாம் மற்றும் மத்திய இந்தியாவின் தீண்டதகாத மதம் (2012 தொடர் ஆசிரியர் : வெண்டி டோனிகர்), ல் மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகத்தில் மதம் தொடர்பான இணைப் பேராசிரியராக இருக்கும் ராம்தாஸ் லாம்ப், 1870களில் ராமநாமிகளாக மாறினர் சமர்களில் ( பின்னர் அது பட்டியலினமாக்கப்பட்டது) ஒரு குழுவினர், அவர்களது சாதிய தொழிலான இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்துதல் மற்றும் தோலுடன் வேலை செய்வதை தவிர்த்து விட்டு விவசாயம், மண்பாண்டம் மற்றும் உலோக வேலைகளை மேற்கொண்டனர்.
இந்தப் பிரிவு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான வயதுடையது தான் என்றாலும், ராமநாமிகள் 15ஆம் நூற்றாண்டின் கவிஞரான துறவி கபீரின் பக்தி பாரம்பரியத்தின் தொடர்சியினர் ஆவர் என்று லாம்ப் எழுதியிருக்கிறார், இது ஒரு நாமத்தை மையப்படுத்தும் சிந்தனையாகும், இது சமூக நிலை மற்றும் சாதி பாகுபாடற்று அனைவருக்கும் பொதுவானதொரு அமைப்பாகும்.
பரசுராம் ஒரு சமர், இவர் தான் முதலில் தனது நெற்றியில் ராம் என்று பச்சை குத்திய முதல் நபர் என்று நம்பப்படுகிறது. இவர் 1870களில் சார்போரா கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது இதுபற்றிய எழுத்துப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும் ராமநாமிகளின் கதைகள் அவ்வாறே உள்ளது. ராய்ப்பூர் மாவட்டத்தின் அர்ஜூனி கிராமத்தைச் சேர்ந்த சாது ராம் "எங்களுக்கான செய்தியை கடவுளிடமிருந்து அல்ல சாதாரண மனிதரிடமிருந்து எடுத்துக்கொண்டோம்", என்று அவர்களின் புகழ்பெற்ற தலைவரைப் பற்றி கூறுகிறார்.
வேறுபடுத்துவது அவர்களின் தோற்றம் மட்டுமே. பலர் தங்கள் உடல் முழுவதும் 'ராம்' என்ற வார்த்தையை பச்சை குத்திக் கொள்கின்றனர் (இது கோண்டு மொழியில் அங்கித் கர்ணா என்று அழைக்கப்படுகிறது), ராம் என்று அச்சிடப்பட்ட சால்வையை தங்களது உடம்பில் போர்த்திக் கொள்கின்றனர் மேலும் மயிலிறகு கொண்ட தலைப்பாகையை வைத்துக்கொள்கின்றனர். "ராம் எங்கள் உடல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது", என்று ராய்கர் மாவட்டத்திலுள்ள பந்திரிபானி கிராமத்தைச் சேர்ந்த பீதாம்பர் ராம் கூறுகிறார். "நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நாங்கள் தான் ராமாயணம்". மேலும் அவர்களது உடம்பிலுள்ள பச்சை குத்தல்கள் இறைவன் விட்டுச்சென்ற அடையாளங்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நான் பேசிய ராமநாமி தாங்கள் சாதி, வகுப்பு மற்றும் பாலின பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க முயற்சித்ததாகக் கூறுகிறார்.பரசுராம் வாரிசுதாரரை நியமிக்கவில்லை மேலும் இந்தப் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய மையக்குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
தங்கள் உடல் முழுவதும் பச்சைகுத்திக் கொண்டவர்களை புராணாக்ஷிக் என்றழைக்கின்றனர் - அவர்கள் பெரும்பாலும் 70வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர். 1970 களின் நடுப்பகுதியில் கல்வி கற்கத் துவங்கிய அவர்களது பிள்ளைகள், நகரங்களுக்கு வேலைக்குச் சென்றனர். ஏளனத்துக்கு உள்ளாதல், 'பிற்படுத்தபட்டவர்' என்று முத்திரை குத்தப்படுதல் மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுதல் ஆகியவற்றின் பயத்தால் அவர்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்ள விரும்பவில்லை.

ராய்கர் மாவட்டத்தின் சுரேலா கிராமத்தைச் சேர்ந்த மேக்தர் ராம் டாண்டன் ஒரு செப்பு தொழிலாளி , அவர் இப்போது தனது இளவயது பேரனுடன் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். உடக்ககன் கிராமத்தில், இங்கு, அவர் ஒரு பஜனை மடம் அல்லது பிரார்த்தனை கூடத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். உள்ளே தெய்வத்தின் இடத்தில் துளசிதாசர் இயற்றிய ராமசரிதமனஸின் நகல் வைக்கப்பட்டிருக்கிறது

சபோரா கிராமத்தைச் சேர்ந்த பிரியா ராம் ராமநாமி சமாஜின் மையக்குழுவில் இருக்கிறார் ; அவர்களது வேலை ஆதரவற்றவர்களை கவனித்துக்கொள்வது, அரசாங்க உதவிக்கு ஏற்பாடு செய்வது மற்றும் பள்ளிகள் அமைப்பது ஆகியவை என்கிறார். நிதி நன்கொடைகள் மற்றும் அரசாங்க மானியங்களில் இருந்து வருகிறது

கோடாவா கிராமத்தைச் சேர்ந்த 90 வயதாகும் பண்டித ராம தாஸ், தான் பள்ளிக்கு சென்றதில்லை என்றும் ஆனால் தன்னால் நான்கு மொழிகளில் எழுத முடியும் என்றும் கூறுகிறார். இவர் துளசிதாசரின் ராமசரிதமனஸின் சில பகுதிகளை மீண்டும் எழுதியிருக்கிறார், எங்கெல்லாம் அது வகுப்பு மற்றும் பாலின சமத்துவமின்மை குறித்ததோ அப்பகுதிகளை, இதுவே ராமநாமிகளின் புனித புத்தகம்

ஜஞ்கீர் - சம்பா மாவட்டத்திலுள்ள கப்ரதிக் கிராமத்தைச் சேர்ந்த தீர்த ராம், கல்லூரி வரை பயின்றவர் மேலும் இவர் தான் பல ஆண்டுகளாக சன்ஜாலக் அல்லது சமாஜின் கவுன்சில் இயக்குனராக இருந்தார்

டிசம்பர் ஜனவரி மாதங்களில் அறுவடை காலத்தின் முடிவில் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சிவா கிராமத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பஜனை மேளாவிற்கு ராமநாமிகள் கூடுகின்றனர். அவர்கள் ஒரு ஜெயஸ்தம்பத்தை ( ஒரு வெள்ளை நிற தூணில் ராம் என்று பொறிக்கப்பட்டிருக்கும்) நடுகின்றனர் , நாள் முழுவதும் ராமசரிதமனஸில் இருந்து பாராயணம் செய்வர் மேலும் நாள் முழுவதும் மக்கள் அப்புத்தகத்திற்கு மரியாதை செய்ய வருகின்றனர்

ஆவத் ராமின் ஒரே மகனும் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததும் ராய்கர் மாவட்டத்திலுள்ள சுரேலா கிராமத்தில் இருக்கும் தனது வீட்டை முறைசாரா பள்ளியாக மாற்றிவிட்டு தனது இரும்பு பட்டறையில் வாழ்ந்துவருகிறார்

பிலாய்கர் மாவட்டத்தின் நவ்ரானா கிராமத்தில் வசிக்கும் விதவையான முக்தி ராம் ஒரு இல்லத்தரசி , அவரது மகன் ஒரு விவசாயி

ராய்பூர் மாவட்டத்திலுள்ள அர்ஜூனி கிராமத்தைச் சேர்ந்த சாது ராம் தனக்கு ஆறு வயதாக இருந்த போது முற்றிலும் பார்வை இழந்தார். அவர் ஒரு புராணாக்ஷிக் அல்லது உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட ராமநாமி மேலும் தன்னை வாழ்நாள் முழுவதும் சமாஜைச் சேர்ந்தவர்கள் தான் கவனித்துக் கொண்டனர் என்று கூறுகிறார்

90 வயதாகும் புணியா பாய் ராம் பட்காவுன் சம்பா சாலையிலுள்ள கோர்பா கிராமத்திலுள்ள மிக வயதான புராணாக்ஷிக் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தனது கணவர் தனது உடலில் 1000 முறை 'ராம்' என்று பச்சை குத்திக் கொண்டிருந்தார் என்று கூறுகிறார்

ராமசரிதமனஸில் இருந்து நான்கு வசனங்களை பாடும்போது பெண்கள் ஆரம்பிக்க ஆண்கள் பின்பற்றுகின்றனர்

குங்குரு என்பது ராமசரிதமனஸில் இருந்து நான்கு வசனங்கள் வாசிக்கும் போது இசைக்கப்படும் மணிகள் ஆகும்

ராமநாமிகள் தங்களது அலங்காரத்தால் தனித்து தெரிகின்றனர் - அவர்கள் மயிலிறகு தலைப்பாகை மற்றும் 'ராம்' என்று அச்சிடப்பட்ட சால்வை அணிகின்றனர்

வயதான ராமநாமிகள் தங்கள் உடல் முழுவதும் 'ராம்' என்ற வார்த்தையை பச்சை குத்திக்கொண்டனர் என்றாலும் இளைஞர்கள் அதேபோல் செய்வதில்லை

ஜஞ்கீர் சம்பா மாவட்டத்திலுள்ள கப்ராதி கிராமத்தில் தீர்த ராமின் மைதுனி (பெயர் தெரியவில்லை) இந்த பிரிவைச் சேர்ந்த பல பெண்களைப் போலவே வெளிப்படையாகப் பேசுகிறார் ; பாராயணத்தை பெண்கள் துவங்க ஆண்கள் பின்தொடர்கின்றனர் மேலும் சமூகத்தில் அவர்களுக்கும் சம அந்தஸ்து இருக்கிறது
இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் புகைப்பட கலைஞரின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில்: சோனியா போஸ்