வேலை கிடைக்க கூடிய நாட்களில் ஜெயலட்சுமம்மா 12 மணி நேர வேலையை முடிக்கும் போது, ஒரு சிறை தண்டனை பெற்ற குற்றவாளிக்கு வழங்கப்படும் ஒரு நாளுக்கான அரிசியில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுகிறார். உண்மையில் நாள் முழுவதும் சராசரியாக அவர் பெரும் அரிசி சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிக்கு ஒரு நேர உணவில் கிடைப்பதை விட மிகக் குறைவானதே.
ஜெயலட்சுமம்மா சிறையில் உள்ள குற்றவாளி அல்ல. அவர் ஒரு குறு விவசாயி, அவரது கணவர் 45 வயதாகும் H M கிருஷ்ணா 4 ஆண்டுகளுக்கு முன்பு மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹுளுஹனஹள்ளி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில் 2003 ஆம் ஆண்டு விவசாய தற்கொலைகளால் இந்த மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த மாநிலத்தில், அவருக்கு வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர் அட்டை மூலம் மாதமொன்றுக்கு 4 கிலோ அரிசி (மற்றும் ஒரு கிலோ கோதுமை) மட்டுமே பெற உரிமை உண்டு. அந்த நான்கு கிலோவிற்கும் அரசு மானியம் அளிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் உள்ள சந்தையில் அதிகமான விலையில் அவரால் அவற்றை வாங்க முடியாது. கடந்த 14 ஆண்டுகளில் விவசாய நெருக்கடியால் ஏற்படும் தற்கொலையால் கணவனை இழந்த இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களில் இவரும் ஒருவர்.
ஒரு மாதத்திற்கு 4 கிலோகிராம் என்றால் நாளொன்றுக்கு சுமார் 135 கிராம் என்று அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த டி யஸ்வந்தா கூறுகிறார். இவர் இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராகவும் இருக்கிறார். "ஒரு விசாரணைக் கைதி அல்லது குற்றவாளி கூட இதை விட அதிகமாக பெறுகிறார்". மேலும் என்னவென்றால் அவர்கள் சமைத்த உணவை பெறுகின்றனர். இவருக்கு நான்கு கிலோ தானியம் தான் கிடைக்கிறது. சிறைச்சாலையில் மாநிலங்களுக்கு ஏற்றவாறு கைதிகளுக்கு அரிசி, கேழ்வரகு அல்லது சப்பாத்தி உணவாக வழங்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சிறை அதிகாரிகள் தி இந்துவிடம் கடுமையான சிறை தண்டனை பெற்ற அரிசி உணவு உண்ணும் கைதிகள் ஒருநேர உணவிற்கு 710 கிராம் சமைத்த அரிசியை பெறுகின்றனர் என்று கூறினார்கள். அரிசி உணவு முறையில் இல்லாதவர்களுக்கு 290 கிராம் அரிசி வழங்கப்படுகிறது. விசாரணை கைதிகள் மற்றும் எளிய சிறை தண்டனை பெற்றவர்கள் (அரிசி உணவு உண்பவர்கள்) ஒரு நேரத்திற்கு 505 கிராம் அளவு அரிசி பெறுகின்றனர்".
கடுமையான சிறைவாசம் பெற்ற குற்றவாளிகள் எட்டு மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும். ஜெயலட்சுமம்மா 12 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்கிறார். ஆனால் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு உண்டால் அவருக்கு ஒரு வேளை உணவிற்கு 45 கிராம் அரிசி தான் கிடைக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறுகிறார் யஸ்வந்தா. அவருக்கு இந்த ஒப்பீடுகளை எல்லாம் செய்து பார்ப்பதற்கு நேரம் இல்லை. இப்போது அவரது மகள் பெங்களூருவில் உள்ள ஆடை நிறுவனத்தில் சொர்ப்ப சம்பளத்தில் வேலை செய்கிறார். "அதிகபட்சமாக ஒரு வருடத்தில் அவளால் எங்களுக்கு 500 ரூபாய் அனுப்ப முடியும்", என்று அவர் அவரது கிராமத்தில் எங்களிடம் கூறினார். இதனால் அவரும் அவரது மகனும் வீட்டில் இருக்கின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர் என்ற அட்டையின் மூலம் கூட்டு உரிமையில் நாளொன்றுக்கு 270 கிராம் அரிசி பெறுவர். அதாவது கேழ்வரகு உணவு சாப்பிடும் ஒரு கைதி கூட 290 கிராம் அல்லது அதற்கும் அதிகமான அளவு பெறுவார் ஆனால் இவர்கள் அதை விட குறைந்த அளவே பெறுகின்றனர்.

அவர்கள் சுமார் 0.4 ஏக்கர் நிலம் வைத்திருக்கின்றனர் மேலும் கிருஷ்ணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். "முந்தைய நிலத்தில் காய்கறிகள் விளைவிக்கின்றனர். குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் பட்டுப்பூச்சி வளர்த்து வருகின்றனர். காய்கறிகளின் விலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு முறை தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைத்தது. கடந்த ஆறு மாதத்தில் நீர் செலவு 9 ஆயிரம் ரூபாயை எட்டியது (அதாவது மணிக்கு 70 ரூபாய்) இப்போது அவர்களிடம் 0.4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. அவரது இறப்பிற்குப் பிறகு நாங்கள் எங்களது கால்நடைகள் அனைத்தையும் விற்று விட்டோம். அவர்கள் அவர் பெற்ற கடனை அடைத்திருக்கின்றனர். அவர்கள் பெற்ற இழப்பீடுகளின் பெரும்பகுதி இப்படித்தான் சென்றதாக தெரிகிறது. "எனது பையன் நந்திபா மற்றவர்களின் ஆடுகளை மேய்க்கிறான், ஆனால் அதிலிருந்து தினசரி வருமானம் எதுவும் இல்லை". அதற்கு பதிலாக ஆடுகளின் குட்டியை உரிமையாளர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கின்றனர். "பருவம் இல்லாத வேளையில் நாள் ஒன்றுக்கு 35 ரூபாய் தான் எனக்கு கிடைக்கும்".
"நான் நந்திபா படிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவன் விரக்தியில் இருந்தான். மூன்று வருடங்களுக்கு முன்பு அவனுக்கு 12 வயதாக இருந்தபோது பெங்களூருவுக்கு ஓடிப்போய் ஒரு ஹோட்டலில் வேலை செய்தான். அங்கு அவனை அவனது முதலாளி அடித்திருக்கிறார். அங்கிருந்து ஓடி தவறான ரயிலில் ஏறி மும்பைக்கு சென்றுவிட்டான். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டான்".
"அனைத்து விதவைகளுக்கும் பிரச்சனை இருக்கிறது ஆனால் விவசாய நெருக்கடியால் கணவனை இழந்தவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்", என்று கர்நாடக ராஜ்ய ருது சங்கத்தின் (புட்டனாயா குழு) பெண்கள் பிரிவின் தலைவர் சுனந்தா ஜெயராம் கூறுகிறார். "கணவனை இழந்த பிறகும் அவர் தனது தந்தை, தாய், தனது சொந்த குழந்தைகள் மற்றும் பண்ணை ஆகியவற்றை எந்தவித பொருளாதார பாதுகாப்பும் இன்றி பராமரிக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவரது கணவர் விட்டுச் சென்றுள்ள கடன்களும் இருக்கிறது. அவரது கணவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்கான விலையை வாழ்நாள் முழுவதும் இவர் கொடுக்க வேண்டியிருக்கும்".
பிதாராஹோசாஹள்ளி கிராமத்தில் உள்ள சிக்தாயம்மாவின் நிலை இதற்கு ஒரு உதாரணம். அவரது கணவர் 38 வயதான ஹனுமேகௌடா 2003ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். "எங்களிடம் மிஞ்சி இருப்பது இந்த கடன்கள் மட்டுமே", என்று அவர் சுய பச்சாதாபமின்றி கூறுகிறார். "நாங்கள் சம்பாதிக்கும் பணம் கடன்களுக்கான வட்டி செலுத்துவதற்கு கூட போதாது. அவர் தனது மூன்று குழந்தைகளையும் படிக்க வைப்பதற்கு சிரமப்பட்டார், அவர்கள் அனைவரும் மேலும் படிக்க விரும்பினாலும் கட்டாயம் வெளியேற வேண்டிய நிலையில் இருந்தனர். பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும். ஆனால் பின்னர் அவர்களது திருமணத்திற்கும் நாம் நிறைய பணம் சேர்க்க வேண்டியிருக்கும்".
ஒரு மகள் சுருதி பத்தாம் வகுப்பு வரை முடித்திருக்கிறார் மற்றொரு மகள் பாரதி பல்கலைக் கழகத்திற்கு முந்தைய பாடத்தின் இரண்டாம் ஆண்டில் படித்து வருகிறார். அவரது மகன் ஹனுமேஷ் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவரின் தாயும் மேலும் இரண்டு உறவினர்களும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். சிக்தாயம்மா குறைந்தது ஐந்து பேர் கொண்ட இந்த குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரம் ஈட்டும் நபர். "எங்களிடம் 1.5 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது (அதன் ஒரு பகுதியில் மாம்பழங்களை விளைவித்து வருகிறார்). வாய்ப்பு கிடைக்கும்போது நானும் கூலி வேலைக்குச் சென்று நாளொனறுக்கு 30 ரூபாய் சம்பாதித்து வருகிறேன். என்னிடம் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் அடையாள அட்டை இருந்தது ஆனால் 'புதிய அட்டை தருவதாக கூறி' அதிகாரிகள் அதை வாங்கிக் கொண்டனர். ஆனால் அவை திரும்பி வரவே இல்லை என்று கூறுகிறார் யஸ்வந்தா. அதற்கு பதிலாக அவருக்கு வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவரின் அடையாள அட்டை கொடுத்திருக்கின்றனர்".

பெருங்கடன்
ஹூளிகேரிபுராவில் நான்காண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட 60 வயதான கடேகௌடா, சென்னம்மாவின் குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருப்பது இரண்டு லட்ச ரூபாய் கடன் மட்டுமே. "கரும்பு பயிர் அப்படியே மூழ்கியது அது அவருக்கு பயங்கர இழப்பை ஏற்படுத்தியது என்று அவரது மகன் சித்திராஜ் கூறுகிறார். "எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் தான் இருக்கிறது", என்று சென்னம்மா கூறுகிறார். "அதிலிருந்து பணம் ஈட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது". ஆனாலும் அவரும் அவரது மகன்களும் முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு நெல்லுக்கு மாற அக்குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
தோரேசித்தாஹள்ளியில் யஸ்வந்தாவின் தந்தை தமண்ணா பல தசாப்தங்களாக விவசாய நெருக்கடியால் கடினமாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயியாக இருக்கிறார். பெரும்பாலான கரும்பு விவசாயிகள் உற்பத்தி செலவைக் கூட மீட்டெடுக்க முடிவதில்லை. உள்ளீட்டுச் செலவுகள் மேல் நோக்கி நகர்கின்றன ஆனால் வருமானம் கீழ்நோக்கிச் செல்கிறது. மேலும் சுமார் 40 ஆழ்துளை கிணறுகள் கடந்த ஒரு மாதமாக இக்கிராமத்தில் போடப்பட்டு அதில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக நீர் வந்தது. மக்கள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். இந்தப் பருவத்தில் தரிசாக போடப்பட்ட பல நிலங்களை நீங்கள் காணமுடியும்".
சுய உதவிக் குழுக்கள் என்ன செய்கின்றன? ஜெயலட்சுமம்மா ஆரம்ப தொகையை செலுத்திவிட்டார் "ஆனால் குழு இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் என்னால் வாரத்திற்கு 25 ரூபாய் கொடுக்க முடியாது. வருடத்திற்கு 24% வட்டியையும் என்னால் கட்ட முடியாது". இத்தகைய தவணைகளை தவறாமல் செலுத்துவதை சிக்தாயம்மாவால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சுய உதவிக் குழு கருத்தளவில் ஒரு நல்ல விஷயம் என்கிறார் KRRSன் தலைவர் K.S புட்டனையா. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவையும் கடன் கொடுக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. இதற்கிடையில் ஆரம்ப இழப்பீடுகளுக்குப் பிறகு விதவைகள் மற்றும் விவசாயத் தற்கொலைகளினால் அனாதைகளாகப்பட்டவர்களுக்கு மாநிலத்தில் எந்த திட்டமும் இல்லை. அதைப்பற்றி அவர்கள் எப்பொழுதுதான் சிந்தித்து இருக்கிறார்கள்?".
நினைவில் கொள்ளுங்கள் இவர்களும் மற்ற அனைத்து விவசாய பெண்களும் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை தேடும் நபர்களாக இருக்கின்றனர் என்று Ms ஜெயராம் கூறுகிறார். "இருப்பினும் அவர்களுக்கு நில உரிமைகளும் இல்லை நில பாதுகாப்பும் இல்லை. விவசாய வேலையில் கூட ஆண்களை விட இவர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. தற்கொலைகளால் விதவைகள் ஆக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பதற்றத்திலேயே இருக்கின்றனர். தாங்கள் வாங்காத கடன் சுமையும் அவர்களது தலையில் இருக்கிறது. மகள்களுக்கு திருமணம் முடிக்கப்படாமல் இருக்கிறது. இப்படிப் பல அழுத்தங்கள் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கின்றன". ஆனால் மாண்டியாவில் உள்ள மூன்று பெண்களும் அவர்களைப் போன்ற இன்னும் பலரும் நம்ப முடியாத தைரியத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர் மேலும் அவர்கள் விவசாயத்தையும் தங்களது குடும்பத்தினையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த முயற்சித்து வருகின்றனர்.
இந்தக்
கட்டுரையின் பதிப்பு முதலில் 29/ 05 /2007 அன்று தி இந்துவில் வெளியிடப்பட்டது.
(http://www.hindu.com/2007/05/29/stories/2007052902231100.htm)
தமிழில்: சோனியா போஸ்