நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை அன்று அந்தி சாயும் மாலை வேளை 4 மணிக்கு சற்று பின்னதாக ,மத்திய டெல்லியில் இருக்கும் ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெளியே ஒரு கூட்டம் கூடியிருந்தது அந்த கூட்டத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள்,மாணவர்கள் ,விற்பனையாளர்கள், மத்திய வர்கத்தை சேர்ந்த தொழிற்பண்பட்டவர் என பலதரப்பட்டவர்கள் கலந்திருந்தனர். சாலையின் ஒரு புறமாக நின்று கொண்டு அவர்கள் விவசாயம் குறித்த பிரச்னைகளை அலசிக்கொண்டிருந்தனர். மற்றும் போன்ற அமைப்புகளின் தன்னார்வலர்கள், நவம்பர் 29 மற்றும் 30 நடக்கவிருக்கும் விவசாயிகள் பேரணியை ஆதரித்து பதாகைகளை பிடித்துக் கொண்டும் விவசாயப் பிரச்னைகளுக்கு வேண்டி பாராளுமன்றத்தில் 21 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தக் கோரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டும் இருந்தனர் பக்கத்தில் இருந்த சென்ட்ரல் பார்க்கில் இருந்த சிலர், தன்னார்வலர்களை பார்த்து பிரச்னையை குறித்தும் பேரணியை குறித்தும் கேள்விகள் கேட்டு கொண்டிருந்தனர். உரையாடல் தொடங்குகிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள்.

சோனு கௌஷிக் ,28.கண்ணோட் பேலஸ் இல் உள்ள பாட்டா ஸ்டோரில் கணினி இயக்குபவராக வேலை செய்கிறார்.இவர் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் மண்டலத்தில் உள்ள ஆஹிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் "கடந்த வருடம் என் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒரு குவிண்டால் கம்பு பயிரை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர்" என்கிறார் இவர்."ஒரு விவசாயியால் எப்படி தாக்குபிடிக்க முடியும்?இந்த பேரணிக்கு என் நண்பர்கள் பலரையும் கூட்டி வர போகிறேன்" ஏன் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று அருகில் இருக்கும் மற்றவர்களை பார்த்து கேட்கிறார்."ஒரு விவசாயி விடுப்பு எதுவும் எடுத்து கொள்வதில்லை,இரவும் பகலும் உழைக்கிறார் ,இருந்தும் அவருடைய பொருளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.இது ஏன் நடக்கிறது?".விவசாயிகள் ஏன் மீண்டும் டெல்லிக்கு பேரணியாக வருகிறார்கள் என்று சிந்திக்குமாறு அவர் மற்றவர்களிடம் சொல்கிறார்.இந்த நிகழ்வை அரசியல் பிரச்சனை ஆக்காமல் நெருக்கடியாக மட்டும் பார்க்குமாறு அவர்களிடம் கூறுகிறார்.

கமலேஷ் ஜோலி,டெல்லி பிதம்புராவைச் சேர்ந்த 80 வயது பெண் சொல்கிறார்,"முந்தைய காலத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து எனக்கு நன்றாக தெரியும் .ஆனால் இப்போது எனது உடல்நலம் காரணமாக அதனிடம் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளேன்".அவர் என்னிடம் பேரணி நடக்கும் நாள் மற்றும் இடம் குறித்து கேட்டார் ."கட்டாயம் அதில் நான் பங்கு கொள்வேன் "என்று அந்த நிமிடமே முடிவு செய்தார்.

திவ்யான்ஷு கவுதம் ,22,உத்தர பிரதேச மாநிலம் உண்ணா மாவட்டத்தில் உள்ள சபிபுர் நகரத்தை சேர்ந்த இவர் ,டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் முதுகலை பட்டம் பயின்று கொண்டிருக்கிறார்."தங்கள் விளைவித்த பொருளுக்கு தகுந்த விலை இது வரை கிட்டியதில்லை என்று விவசாய குடும்பத்தை சேர்ந்த என் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் விளைவித்த பொருட்களை கெடாது பாதுகாக்க தேவையான குளிர்பதன கிடங்குகள் பலதும் (அதிகக் கட்டணம் வசூலிக்கும்)தனியார்வசம் தான் உள்ளது என்று அவர்கள் கூறுவார்கள் .இது தடுக்கப்பட வேண்டும்.மானியத்தோடு கூடிய குளிர்பதன கிடங்குகள் விவசாயிகளின் கைகளுக்கு எட்டப்பட வேண்டும்"

மத்திய டெல்லியை சேர்ந்த ஆகாஷ் சர்மா ,24,டிஸ் ஹஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தராக பணிபுரிகிறார்."காய்கறிகளின் விலை உயர்ந்தால் மக்கள் எப்போதும் விவசாயிகளை வசை பாடுவார்கள்.சில வருடங்களுக்கு முன்பு வெங்காய விலை உச்சத்தை தொட்ட போது ,விவசாயிகள் தான் வெங்காயங்களை பதுக்கி வைத்து அதன் விலையை ஏற்றி விட்டதாக எல்லாரும் அவர்களை குற்றம் சாட்டினார்கள் .மக்கள் விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும்..அவர்களை வசை பாடக்கூடாது "

தனது 50களின் முடிவில் இருக்கும் ஆட்டோ ரிக்ஸா ஓட்டுநர் ஜெயப்ரகாஷ் யாதவ்,உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் பர்சாதி மண்டலத்தில் உள்ள மஹரி கிராமத்தை சார்ந்தவர்."விவசாயிகள் ஏன் மீண்டும் பேரணி செல்கிறார்கள்?அவர்கள் மும்பைக்கு(நாசிக்கில் இருந்து ,மார்ச் 2018) பேரணி சென்ற போது விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையா ?"மீண்டும் ஆலோசித்துவிட்டு தொடர்கிறார் "விவசாயிகள் கடுமையாக உழைக்கிறார்கள் ஆனால் அவர்களின் பொருட்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் சில மணி நேரம் ஆட்டோ ஒட்டாமல் நானும் பேரணிக்கு வரப்போகிறேன்"

விக்கி ராய்,30,டெல்லியை சேர்ந்த பகுதி நேர புகைப்படக்கலைஞர் சொல்கிறார் "விவசாயிகளின் மானியங்கள் மூலமாக தான் நாம் இங்கு வாழ்கிறோம் என்று நகரவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.விவசாயிகள் தங்களது பொருளுக்கு தகுந்த விலையை பெறுவதில்லை.இதனை புரிந்துகொண்டு அவர்களை ஆதரிப்பது நமக்கு முக்கியமானதாகும்"
தமிழில்: இரா.வசந்த்