ரமேஷை ஏதேனும் பாதுகாப்பு கவசம் அணிந்து கொள்ளச் சொன்னால் அவர் வாய்விட்டுச் சிரிக்கக் கூடும். அவருடைய உயிரையும், உடலையும் பணயம் வைத்து ஒவ்வொரு நாளும் ஐம்பது முறைக்கு மேல் மரமேறி, பனம் பழம், தேங்காய்களை மரத்திலிருந்து பறித்துப் போடுகிறார். தமிழகத்தின் மிகவும் வறண்ட, தண்ணீருக்கு தவிக்கும் மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கையில் அவர் வசிக்கிறார். இம்மாவட்டத்தில் பனை மரமும், தென்னை மரமும் செழித்து வளர்கின்றன. பனை நுங்கும், இளநீரும் கொளுத்தும் கோடையில் தாகம் தணிக்கும் கொடைகள். நான் ஜூன் 2014-ல் ரமேஷை சந்தித்த போது, அவர் எளிய லுங்கி, சட்டை ஆகியவற்றை மட்டும் அணிந்திருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பல மரங்களில் அவர் ஏறி இறங்கி, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மிக உயரமான, கூர்மையான பட்டையைப் பற்றிவிடுகிறார் ரமேஷ்.
மரத்தின் உச்சியில் பெரிய இலைகளுக்கு நடுவே மிக லாவகமாகக் கீழே விழாமல் வெறுங்காலோடு சமநிலையோடு நிற்கிறார் ரமேஷ். மரத்தின் பட்டையில் தீட்டப்பட்ட அரிவாளைக் கொண்டு மரத்தின் பனம்பழம், தேங்காய்களை வெட்டி கீழே வீசுகிறார். கீழே இருந்து ரமேஷின் தாத்தா பனை ஓலைகளை அறுத்து வீச சொல்கிறார். ஒரு மர உச்சியில் இருந்து இன்னொரு மர உச்சிக்கு தாவியபடி ஓரிரு வெட்டுகளில் அவற்றை வெட்டி வீழ்த்துகிறார் ரமேஷ்.
தரையில் இறங்கியதும், ரமேஷ் தனக்கு மரமேறுவதில் முறையான பயிற்சி எதுவுமில்லை என்றும், தனக்கு இயற்கையாகவே மரமேற வருவதாகச் சொன்னார். மரமேறுவதன் மூலம் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனோடு விவசாயத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார் ரமேஷ். அவருடைய கிராமத்தின் மற்ற இளைஞர்களைப் போல அவரும் சல்லிக்கட்டு (ஏறு தழுவும்) நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். பிறரை போல அல்லாமல், அவர் தேர்ந்த பாம்பு பிடிப்பவரும் கூட. இரவுகளில் தன்னுடைய நாட்டு நாயோடு நகர்வலம் சென்று, முயல்களைச் சுற்றி வளைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் வேட்டைக்காரர் ரமேஷ்.
எதோ மாடிப்படிகளில் ஏறுவதைப் போல எப்படி ரமேஷ் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும், பிரமிக்க வைக்கும் பனைமரத்தில் ஏறுகிறார் என்று காணுங்கள்