ஓர் ஆண் பார்த்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு இணையாக இந்த இருட்டோ அவ்வப்போது கூவி கடந்து செல்லும் ரயிலோ இருக்க முடியாது.
“இரவு நேரத்தில் எங்களுக்கு இருக்கும் ஒரே கழிப்பறை ரயில் தண்டவாளங்கள்தான்,” என்கிறார் 17 வயது நீது குமாரி.
யார்பூர் பகுதியின் 9ம் வார்டு குப்பத்தில் நீது வாழ்கிறார். குப்பத்தின் நடுவே வீடுகளுக்கு இடையில் குடிநீர்க் குழாய்கள் இருக்கும் ஒரு சிமெண்ட் தளத்தில் இரு ஆண்கள் உள்ளாடைகளுடன் அமர்ந்து தீவிரமாக சோப்பு போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு டஜன் சிறுவர்கள் நீருடன் விளையாடிக் கொண்டிருந்தனர். வழுக்கும் தரையில் விழுந்து கொண்டும் அடுத்தவரை இழுத்து விட்டுக் கொண்டும் வெடித்து சிரித்துக் கொண்டுமிருந்தனர்.
50 மீட்டர்கள் தொலைவில் ஒரு கழிப்பறை கட்டடம் இருக்கிறது. இந்த குப்பத்தில் இருக்கும் ஒரே கழிப்பறை அது. ஆனால் பயன்பாடின்றி கிடந்தது. அதன் பத்து அறைகளும் பூட்டப்பட்டிருந்தன. பொதுப் பயன்பாட்டுக்காக அவை திறக்கப்படும் நிகழ்வு தொற்றினால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்டுக் குடும்பம் ஒன்று அதன் படிக்கட்டுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னால், ரயில் தண்டவாளங்களில் குப்பை குவியல். பயன்படுத்தப்படக் கூடிய பொதுக் கழிப்பறை 10 நிமிடத் தொலைவில் இருக்கிறது. சிலர் ரயில் தண்டவாளத்தைத் தாண்டி யார்பூரின் மறுமுனையில் இருக்கும் கழிப்பறைக்கும் செல்வதுண்டு. அதுவும் 10 நிமிடத் தொலைவுதான்.
”சிறுவர்கள் எங்கும் எப்போதும் இயற்கைத் தேவையைத் தணித்துக் கொள்வார்கள். சிறுமிகள் தண்டவாளங்களை இரவு மட்டும்தான் பயன்படுத்த முடியும்,” என்கிறார் முதல் வருட இளங்கலை மாணவியான நீது. (இக்கட்டுரையில் எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது.) அவரது பகுதியிலிருக்கும் பிறச் சிறுமிகளைக் காட்டிலும் அவருக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக நினைக்கிறார். பகல் நேரத்தில் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் உறவினர் வீட்டின் கழிப்பறையை அவர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
“மேலும் எங்கள் வீட்டில் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறையில் என் தம்பி உறங்குவான். இன்னொன்றில் என் தாயும் நானும் உறங்குவோம். எனவே என்னுடைய மாதவிடாய் நாப்கின்களை மாற்றிக் கொள்ளவேனும் தனியறை எனக்கு இருக்கிறது,” என்கிறார் நீது. “பிறச் சிறுமிகளும் பெண்களும் முழு நாளும் காத்திருந்து இரவு நேரம் ஆனப் பிறகு தண்டவாளத்தின் இருள் பகுதியில் நாப்கின்களை மாற்றுகின்றனர்.”
அவர் வசிக்கும் 9ம் வார்டு குப்பத்திலும் அருகே இருக்கும் யார்பூர் அம்பேத்கர் நகரிலும் மொத்தமாக 2000 குடும்பங்கள் இருக்கலாம் எனக் கருதுகின்றனர் இங்கு வசிப்போர். அவர்களில் பெரும்பான்மை தொழிலாளர்கள். பலர் நீதுவைப் போல் பாட்னாவின் இரண்டாம் தலைமுறையினர். இங்குள்ள குடும்பங்களின் பெரும்பான்மை பிகாரின் பல பகுதிகளிலிருந்து பல பத்தாண்டுகளுக்கு முன் வேலை தேடி இந்த நகரத்துக்கு வந்தவை.
பல காலமாக சானிடரி நாப்கின்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது தொற்று, வருமானம் இழப்பு, பொருளாதார நெருக்கடி முதலிய காரணங்களால் வீட்டுத் துணிகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டதாகவும் யார்பூர் அம்பேத்கர் நகரின் பெண்கள் கூறுகின்றனர். என்னுடன் பேசுவதற்காக பெரும்பாலான பெண்கள் கோவிலின் முன் கூடியிருந்தனர். கழிப்பறை வசதி இருந்தாலும் அவற்றின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறுகின்றனர். பராமரிப்பின்றி, பழுதுகள் சரி பார்க்கப்பட்டாமல், இரவில் வெளிச்சமின்றி இருப்பதாக கூறுகின்றனர். கழிப்பறைகள் எல்லா நேரமும் திறந்திருந்தாலும் இருட்டில் நடந்து செல்வது பெரும் தடையாக இருக்கிறது.
“தண்டவாளத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் 9ம் வார்டில்தான் கழிப்பறைகளே இல்லை,” என்கிறார் 38 வயது பிரதிமா. மார்ச் 2020ல் பள்ளிகள் அடைக்கப்படும் வரை பள்ளிப் பேருந்து நடத்துநர் வேலை செய்து 3500 ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தார். ஊரடங்குக்கு பிறகு அவருக்கு வேலை இல்லை. ஓர் உணவகத்தில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரின் கணவரும் 2020ம் ஆண்டின் இறுதியில் வேலையிழந்தார்.
யார்பூருக்கு செல்லும் பிரதானச் சாலையில் ஒரு வண்டி வைத்து சமோசா மற்றும் பிற உணவுப் பொருட்களை விற்று இருவரும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். பிரதிமா அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். சமைக்கவும், பொருட்கள் வாங்கவும் அன்றைய நாளின் விற்பனையை தயாரிக்கவும் பிறகு குடும்பத்துக்கான உணவு சமைக்கவும் தொடங்குவார். “முன்பைப் போல நாங்கள் 10,000-12,000 ரூபாய் சம்பாதிக்கவில்லை. எனவே நாங்கள் பார்த்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது,” என்கிறார் அவர். யார்பூரில் நாப்கின்கள் வாங்குவதை நிறுத்திய பெண்களுள் பிரதிமாவும் ஒருவர்.
கல்லூரி மாணவியான நீதுவின் தந்தை மதுவுக்கு அடிமையாகி சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரின் தாய் ஐந்து கிலோமீட்டர் நடை தொலைவில் இருக்கும் போரிங் சாலையிலுள்ள் சில வீடுகளில் சமையல் வேலை செய்கிறார். பிற சுத்தப்படுத்தும் வேலைகளையும் சேர்த்து 5000லிருந்து 6000 ரூபாய் வரை மாதத்துக்கு சம்பாதித்து விடுகிறார்.
“எங்கள் பகுதியிலுள்ள 8லிருந்து 10 வீடுகளில் கழிவறைகள் இருக்கின்றன. மற்ற அனைவரும் தண்டவாளத்தை பயன்படுத்துகிறார்கள். அல்லது பிற பொதுக் கழிப்பறைகளுக்கு நடந்து செல்கிறார்கள்,” என்கிறார் நீது. இதில் அவரது உறவினரின் வீடும் அடக்கம். இந்தக் கழிப்பறைகள் சாக்கடைகளுடன் இணைக்கப்படவில்லை. “இரவு நேரங்கள் மட்டும்தான் எனக்குப் பிரச்சினை. ஆனால் எனக்கு பழக்கமாகி விட்டது,” என்கிறார் அவர்
ரயில் தண்டவாளங்களை அவர் பயன்படுத்த வேண்டிய இரவு நேரங்களில், ரயிலின் சத்தத்தையும் அது ஏற்படுத்தும் தண்டவாள அதிர்வுகளையும் கவனிக்க கவனமாக இருப்பார் நீது. பல வருடப் பழக்கத்தில் ரயில்கள் எப்போதெல்லாம் வரும் என தனக்கு தெரியும் என்கிறார் அவர்.
“பாதுகாப்பு இல்லைதான். எனக்கும் போக விருப்பமில்லைதான். ஆனால் மாற்று என்ன? பல பெண்களும் சிறுமிகளும் சானிடரி நாப்கின்களைக் கூட தண்டவாளங்களின் இருள் பகுதிகளில்தான் மாற்றுகின்றனர். சில நேரங்களில் ஆண்கள் எங்களை எப்போதுமே பார்த்துக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறது,” என்கிறார் அவர். கழுவுதல் எல்லா நேரங்களிலும் சாத்தியம் இல்லை என்னும் அவர், வீட்டில் தேவையான அளவு நீர் இருந்தால் ஒரு வாளியில் நீர் எடுத்துச் செல்வாரெனவும் சொல்கிறார்.
யாரோ பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற உணர்வு இருப்பதாக சொன்னாலும் நீதுவோ பிற இளம்பெண்களோ தண்டவாளம் செல்லும் வழியில் பாலியல் அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லவில்லை. அங்கு செல்கையில் பாதுகாப்பாக உணர்கிறார்களா? நீதுவைப் போலவே பலரும் அது பழக்கமாகி விட்டதாக சொல்கின்றனர். எச்சரிக்கையாக எப்போதும் யாருடனாவது அல்லது குழுவாகவோதான் செல்கின்றனர்.
தொற்றுக் காலத்தில் சில மாதங்களுக்கு சானிடரி நாப்கின்கள் வாங்குவதை நிறுத்தினார் நீதுவின் தாய். “அது மிகவும் அவசியமானது என நான் கூறினேன். இப்போது வாங்குகிறோம். சில நேரங்களில் நாப்கின்களை தொண்டு நிறுவனங்களும் கொடுப்பதுண்டு,” என்கிறார் நீது. ஆனால் நாப்கின்களை ரகசியமாக எங்கே கழிப்பது என்பது பிரச்சினையாக இருக்கிறது. “பல சிறுமிகள், கையில் பேப்பர் சுற்றிய சிறு பொட்டலத்துடன் குப்பைத் தொட்டி தேடுவது சங்கடமாக இருப்பதால், அவற்றை கழிப்பறைகளிலோ தண்டவாளங்களிலோ போட்டு விடுகிறார்கள்,” என்கிறார் அவர்.
சரியான நேரத்தில் குப்பை வாகனம் வந்தால் அதில் நாப்கின்களை போட்டு விடுகிறார் நீது. இல்லையெனில் அம்பேத்கர் நகர் குப்பத்தின் மறுமுனையில் இருக்கும் பெரிய குப்பைத் தொட்டிக்கு நடந்து சென்று போடுகிறார். இந்த 10 நிமிட நடைக்கு நேரமில்லாத சூழலில் அவற்றை தண்டவாளத்தில் போட்டு விடுகிறார்.
யார்பூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஹஜ் பவனுக்கு பின்னாடியுள்ள சகடி மஸ்ஜித் சாலையில் ஒரு திறந்தக் கால்வாயின் இரு புறங்களிலும் கட்டப்பட்டிருக்கும் காரவீடுகளின் நீண்ட வரிசை இருக்கிறது. இங்கு வசிப்பவர்களும் கூட புலம்பெயர்ந்தவர்கள்தான். இவர்களில் பலர் விடுமுறைகளில் பெகுசராய், பகல்பூர் அல்லது ககாரியா மாவட்டங்களில் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புபவர்கள்.
18 வயது புஷ்பா குமாரி இங்கு வசிக்கிறார். “இங்கு தண்ணீர் இந்த அளவுக்கு வரும்,” என இடுப்பு வரை கையை வைத்து, மழை வரும்போது அடையும் நீர் மட்டத்தை குறிப்பிடுகிறார் அவர். “கழிவு நீர் நிரம்பி எங்களின் வீடுகளுக்குள்ளும் கழிப்பறைகளுக்குள்ளும் வந்து விடும்.”
இங்கிருக்கும் 250 வீடுகளில் பெரும்பான்மைக்கு, கழிப்பறை வெளியே சாக்கடைக்கு விளிம்பில் கட்டப்பட்டிருக்கிறது. கழிப்பறையின் கழிவுகள் நேரடியாக இரண்டு மீட்டர் அகலச் சாக்கடையில் கலக்கும்.
சில வீடுகள் தள்ளி வசிக்கும் 21 வயது சோனி குமாரி, பருவகால மாதங்களில் சில நேரம் கழிப்பறையில் நீர் வடிய ஒரு முழுநாள் ஆகி விடும் என்கிறார். அதற்குப் பிறகுதான் கழிப்பறை பயன்படுத்த முடியும். அதுவரை காத்திருப்பதை தவிர அவருக்கு வேறு வழியிருக்காது.
ககாரியா மாவட்டத்தில் நிலமற்றக் குடும்பத்தைச் சார்ந்த அவரின் தந்தை தூய்மைப் பணியாளராக ஒப்பந்தத்துக்கு பாட்னா நகராட்சியில் பணிபுரிகிறார். குப்பை அகற்றும் வாகனத்தை சந்துகளுக்குள் ஓட்டிச் சென்று குப்பைகளை சேகரிப்பதே அவரின் பணி. “ஊரடங்கு காலம் முழுக்க அவர் பணிபுரிந்தார். அவர்களுக்கு (அவரின் குழுவுக்கு) முகக்கவசங்களையும் சானிடைசரையும் கொடுத்து வேலை பார்க்க அனுப்பினார்கள்,” என்கிறார் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் சோனி. அவரின் தாய் ஒரு வீட்டில் வீட்டுப் பணியாளராக பணிபுரிகிறார். குடும்பத்தின் மாதவருமானம் கிட்டத்தட்ட ரூ.12,000.
சாக்கடைக் கால்வாய்க்கு அருகே இருக்கும் வீடுகளின் ஒவ்வொரு கழிப்பறையும் வீட்டுக்கு முன் அமைந்திருக்கும். அந்தந்த வீடுகளில் வசிப்போர் மட்டுமே அந்தந்த கழிப்பறையை பயன்படுத்த முடியும். “எங்களின் கழிப்பறை மோசமான நிலையில் இருக்கிறது. பலகை ஒருநாள் சாக்கடைக்குள் விழுந்துவிட்டது,” என்கிறார் புஷ்பா. அவரின் தாய் வீட்டில்தான் இருக்கிறார். தந்தை கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிகிறார். பல மாதங்களுக்கு வேலைக்காக வெளியே இருப்பார்.
ஆஸ்பெஸ்டாஸ் அல்லது தகரக் கூரைகளை மூங்கில் கம்புகளால் ஒன்றாகக் கட்டி, அரசியல் பேனர், கொஞ்சம் மரக்கட்டைகள், சில செங்கற்கள் முதலியப் பொருட்களைச் சேர்த்து கட்டப்பட்ட சிறு அறைகளே கழிப்பறைகளாக இருக்கின்றன. உள்ளே கழிப்பறை பீங்கான், லேசாக உயர்த்தப்பட்ட மேடையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அம்மேடைகளும் பல கழிப்பறைகளில் உடைந்திருக்கிறது. பல இடங்களில் பீங்கானே உடைந்திருக்கிறது. அறைகளுக்கு கதவுகள் இல்லை. துணியாலான திரை மட்டும்தான் இருக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு.
சகடி மஸ்திஜ் சாலையின் மறுமுனையில் ஓர் அரசு ஆரம்பப் பள்ளி இருக்கிறது. அந்த கட்டடத்துக்கு வெளியே இரண்டு கழிப்பறைகள் இருக்கின்றன. அவையும் பள்ளியைப் போல் மார்ச் 2020லிருந்து பூட்டப்பட்டிருக்கின்றன.
இங்கு வசிப்போர் அருகாமைப் பகுதியில் இருக்கும் பொதுக் குழாய்களில் நீர் பிடிக்கின்றனர். அப்பகுதிதான் குளிப்பதற்கான பகுதிகளும். சில பெண்கள் வீடுகளுக்கு பின்னே இருக்கும் குறைந்தபட்ச தனிமையுடனான பகுதிகளை குளியலுக்கு பயன்படுத்துகின்றனர். நான் பேசிய பல பெண்களும் சிறுமிகளும் வீட்டுக்கு வெளியேவோ பொதுக் குழாயிலோ குழுக்களில் முழுமையாக உடை அணிந்து கொண்டு குளிக்க வேண்டியிருக்கிறது.
“எங்களில் சிலர் வீட்டுக்கு பின்னிருக்கும் மூலைகளுக்கு குளிக்க நீர் சுமந்து செல்வோம். அங்கு ஓரளவுக்கு தனியாக இருக்க முடியும்,” என்கிறார் சோனி.
திறந்தவெளியில் குளிப்பதைப் பற்றி சொல்கையில், “சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது,” என்கிறார் புஷ்பா. “ஆனால் குழாயிலிருந்து கழிப்பறைக்கு நீங்கள் செல்வதை பிறர் பார்ப்பதிலிருந்து தப்பிக்கவே முடியாது,” என்கிறார் அவர் சிரித்தபடி. “நீங்கள் என்ன வேலைக்கு செல்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கும்.”
குடிநீருக்கான ஒரே வழி குப்பத்தில் ஆங்காங்கே இருக்கும் அடிகுழாய்கள்தான். அந்த (குழாய் மற்றும் அடிகுழாய்) நீர்தான் சமைக்கவும் குடிக்கவும் வீட்டின் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தொண்டு நிறுவன ஊழியர்களும் பள்ளி ஆசிரியர்களும் அறிவுறுத்தியபோதும் யாரும் நீரைக் காய்ச்சிக் குடிப்பதில்லை என்கின்றனர் சிறுமிகள்.
சானிடரி நாப்கின்கள்தான் சரியானவை. சில சிறுமிகள், தொற்றுக்காலத்தில் கடைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லாததால், துணிகளை பயன்படுத்தியதாக கூறுகிறார்கள். தாய்கள்தான் தங்களுக்கு நாப்கின்களை வாங்கித் தருவதாக சொல்லும் சிறுமிகள் பல மூத்தப் பெண்கள் துணிகளை பயன்படுத்துவதாக சொல்கின்றனர்.
வழக்கமாக சானிடரி நாப்கின்கள் திறந்தவெளிச் சாக்கடையிலேயே போடப்படுகின்றன. சில நாட்களில் அவை சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பைகள் அல்லது பேப்பர் பைகளை விட்டு விலகி கரையொதுங்குகின்றன. “பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை குப்பை அகற்றும் வாகனத்தில்தான் போட வேண்டுமென எங்களுக்கு (தன்னார்வலர்களால்) சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பேப்பரால் சுற்றப்பட்ட நாப்கின்களை எடுத்துக் கொண்டு எல்லா ஆண்களும் பார்த்திருக்க நடந்து சென்று குப்பை வாகனத்தில் போடுவதற்கு சங்கடமாக இருக்கிறது,” என்கிறார் சோனி.
சமூகக் கூடத்தில் என்னை சந்திக்கக் கூடியிருந்த சிறுமிகளிடம் சிரிப்புகள் எழுந்தன. பல கதைகளும் சம்பவங்களும் வெளியாகின. “போன மழைக்காலத்தில் ஒரு நாள் முழுக்க நாம் சாப்பிடாததால் நீர் நிறைந்த கழிப்பறையை பயன்படுத்தும் தேவை எழாமல் இருந்ததே, ஞாபகம் இருக்கிறதா?” எனக் கேட்கிறார் புஷ்பா.
இளங்கலை படிப்பு முடித்த பிறகு வேலைக்கு செல்ல வேண்டுமென விரும்புகிறார் சோனி. “அப்போதுதான் என் பெற்றோர் இப்போது பார்க்கும் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது,” என்கிறார். கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளிலாவது ஓரளவுக்கேனும் பெற முடிந்த அவர்களால் பெற முடியாமலிருப்பது கழிப்பறை வசதி மட்டும்தான். “குப்பங்களில் வசிக்கும் பெண்களுக்கு கழிப்பறைகள் இல்லாதுதான் பெரும் பிரச்சினை.”
செய்தியாளரின் குறிப்பு: இச்செய்திக்கு பல வழிகளில் உதவிய திக்ஷா அறக்கட்டளைக்கு என்னுடைய நன்றிகள். பாட்னாவின் குப்பங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் கழிப்பறை வசதிக்காகவும் பிற தேவைகளுக்காகவும் அந்த அறக்கட்டளை (UNFPA மற்றும் பாட்னா நகராட்சியோடு இணைந்து) பணியாற்றுகிறது.
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய zahra@ruralindiaonline.org மற்றும் namita@ruralindiaonline.org ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்