இருவரும் 17, இருவரும் கர்ப்பமாக உள்ளனர். சில சமயங்களில் அவர்களின் பார்வையை கீழ் இறக்குமாறு கூறும் பெற்றோரின் அறிவுறுத்தல்களை மறந்து, இருவரும் எளிதில் சிரிக்கின்றனர். அடுத்து என்ன என்று இருவரும் பயப்படுகின்றனர்.
சலீமா பர்வீன் மற்றும் அஸ்மா கதுன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இருவரும், 2020 ஆம் ஆண்டு கல்வியாண்டில் அரசாங்கத்தால் நடத்தப்படும் கிராமப் பள்ளி மூடப்பட்டு இருந்தாலும், கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பில் இருந்தனர். ஊரடங்கு ஆரம்பித்தப்போது, பாட்னா, டெல்லி மற்றும் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்த தங்கள் குடும்பங்களில் ஆண்கள் பீகார் அரேரியா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான பங்காலி டோலாவில் உள்ள வீட்டிற்கு வந்தனர். திருமண சம்பந்தங்களின் ஒரு சிறிய சீற்றம் தொடர்ந்தது.
"கொரோனாவின்போது திருமணம் நடந்தது" என்று அஸ்மா கூறுகிறார், இருவரில் சற்றே பேசக்கூடியவர். "கொரோனாவின் போது நான் திருமணம் செய்து கொண்டேன்."
சலீமாவின் நிக்கா (திருமண விழா) இரண்டு வருடங்களுக்கு முன்பே முறைப்படி நடத்தப்பட்டது. மேலும் அவர் 18 வயதை நெருங்கியபோது கணவருடன் சேர்ந்து வாழ தொடங்கவிருந்தார். பின்னர் ஊரடங்கு போடப்பட்டது. தையல்காரராக பணிபுரியும் அவரது 20 வயது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் - அவர்கள் ஒரே குக்கிராமத்தில் வாழ்கின்றனர் - அவர் அவருடன் வாழ வேண்டும் என்று என்று வலியுறுத்தினர். அது 2020ம் ஆண்டு ஜூலை மாதம். அவர் வேலை இல்லாமல், நாள் முழுவதும் வீட்டில் இருந்தார், மற்ற ஆண்களும் வீட்டிலேயே இருந்தனர் - கூடுதலாக ஒருவர் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அஸ்மா தன் நிலை குறித்து சிந்திக்க இன்னும் குறைவான நேரம் இருந்தது. அவரது 23 வயதான சகோதரி 2019 ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது சகோதரியின் கணவர், ஒரு பிளம்பர், ஊரடங்கு காலத்தில் அஸ்மாவை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். அவர்களின் திருமணம் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.
குழந்தைகள் எப்படி பிறக்கின்றன என்பது இவ்விருவருக்கும் தெரியாது. அஸ்மாவின் தாயார் ருக்ஷனா கூறுகையில், “இந்த விஷயங்கள் எல்லாம் தாய்மார்கள் விளக்கமாட்டார்கள்”. "லாஜ் கி பாத் ஹை [இது ஒரு சங்கடமான விஷயம்]." மணமகளின் அண்ணி, அவரது சகோதரரின் மனைவி, இதற்கும் பிற தகவல்களுக்கும் சரியான நபர் என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் சலீமாவும் அஸ்மாவும் மைத்துனிகள்; அவர்கள் குழந்தை தாங்கும் ஆலோசனையை வழங்க எந்த நிலையிலும் இல்லை.
பங்காலி டோலாவின் ஆஷா தொழிலாளி (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) அஸ்மாவின் அத்தை - ராணிகஞ்ச் தொகுதியின் பெல்வா பஞ்சாயத்தில் உள்ள குக்கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் உள்ளன - எல்லாவற்றையும் “விரைவில்” சிறுமிகளுக்கு விளக்குவதாக உறுதியளித்தார்.
அல்லது இளம்பெண்கள் 25 நாள்களே ஆன நிசாமின் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) புதிய தாயும், அவர்களை விட, இரண்டு ஆண்டுகள் மூத்தவரான சகியா பர்வீனிடம் கேட்கலாம். நிசாம் மையிட்ட கண்களுடனும், மற்றவர்கள் கண் படாமல் இருக்க கன்னத்தில் வைக்கப்பட்டுள்ள மையுடனும் இருக்கிறான். சகியாவுக்கு இப்போது 19 வயதாகிறது. அவர் மிகவும் இளமையாகத் தெரிந்தாலும், அவரது பருத்தி சேலையின் மடிப்புகள் அவரை இன்னும் பலவீனமாகவும் வெளிறிய தோற்றமாக காட்டுக்கின்றன. அவர் ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை, அவருக்கு 16 வயதில் இருந்தபோது அவருடைய உறவினருடன் அவருக்கு திருமணம் நடந்தது.
சுகாதார ஊழியர்களும் ஆராய்ச்சியாளர்களும் பீகாரின் பல ‘கோவிட் குழந்தை மணப்பெண்கள்’ இப்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்கள் குறைந்த அளவு ஊட்டச்சத்து மற்றும் தகவல்களுக்கு எதிராக போராடுக்கொண்டு இருக்கின்றனர். இருப்பினும், பீகார் கிராமங்களில் ஊரடங்கிற்கு முன்பே இளம் பருவ கர்ப்பங்கள் பொதுவானவையே. "இது இங்கே அசாதாரணமானது அல்ல, இளம் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கர்ப்பமாகி முதல் ஆண்டில் ஒரு குழந்தையைப் பெறுகின்றனர்", என்கிறார் தொகுதி சுகாதார மேலாளர் பிரேர்னா வர்மா.
15-19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 11 சதவீதம் பேர் ஏற்கனவே தாய்மார்களாகவோ அல்லது கணக்கெடுப்பின் போது கர்ப்பமாக இருந்ததாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்.எஃப்.எச்.எஸ் -5, 2019-20) குறிப்பிடுகிறது. இந்தியாவின் குழந்தை திருமணங்களில் சிறுமிகளில் 11 சதவீதம் (18 வயதிற்கு முன்னர்), மற்றும் சிறுவர்களிடையே குழந்தை திருமணங்களில் 8 சதவீதம் (21 வயதிற்கு முன்) பீகாரில் நடப்பதாக குறிப்பிடப்படுகிறது.
பீகாரில் மற்றொரு 2016 கணக்கெடுப்பு இதையும் காட்டுகிறது. உடல்நலம் மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகள் குறித்து செயல்படும் தன்னார்வ தொண்டான மக்கள்தொகை கவுன்சில் நடத்திய ஆய்வில், 15-19 வயதுடைய சிறுமிகளில், 7 சதவீதம் பேர் 15 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடுகிறது. கிராமப்புறங்களில், 44 சதவீத பெண்கள் 18-19 வயதிற்குட்பட்டவர்கள் 18 வயதாகும் முன்பே திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில், பீகாரின் பல இளம் மணப்பெண்கள், கடந்த ஆண்டு ஊரடங்கின்போது திருமணம் செய்து கொண்டனர். கணவர்கள் வேலைக்காக நகரங்களுக்குத் திரும்பிய பின்னர், வாழ்க்கைத் துணை இல்லாமல் அறிமுகமில்லாத சூழலில் வசித்து வருகின்றனர்.
மும்பையில் ஒரு ஜரிகை எம்பிராய்டரி பிரிவில் பணிபுரியும் சகியாவின் கணவர், இந்த ஜனவரி மாதம் நிஜாம் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு வேலைக்காக வீட்டை விட்டு சென்றார். சகியா பிரசவத்திற்கு பிந்தைய ஊட்டச்சத்து மருந்துகளை உட்கொள்ளவில்லை. பிரசவத்திற்குப் பிறகான மாதங்களுக்கு அரசு அறிவுறுத்திய கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால், அவர் அங்கன்வாடியிடமிருந்து பேறுகாலத்திற்கு முற்பட்ட மருந்துகளை சரியாகப் பெற்றார்.
"ஆலு கா தர்காரி அவுர் சவால் [சமைத்த உருளைக்கிழங்கு மற்றும் அரிசி]," என்று அவர் தனது அன்றாட உணவு உட்கொள்ளலை பட்டியலிடுகிறார். பயறு வகைகள் இல்லை, பழங்கள் இல்லை. தனது குழந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று கவலைப்பட்ட சகியாவின் குடும்பம், அசைவ உணவோ முட்டைகளையோ சகியா இன்னும் கொஞ்சம் காலத்திற்கு சாப்பிடுவதை தடை செய்துள்ளது. அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு பால் மாட்டை கட்டிவைத்துள்ளனர், ஆனால் சகியாவுக்கு இரண்டு மாதங்களுக்கு பால் தரமாட்டார்கள். இந்த உணவு பொருட்கள் அனைத்தும் மஞ்சள் காமாலைக்கு ஆதாரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த குடும்பம் குறிப்பாக நிஜாமை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கின்றனர், சகியா 16 வயதில் திருமணம் செய்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவன். ”நாங்கள் அவளை கேசராரா கிராமத்தில் உள்ள ஒரு பாபாவிடம் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது எங்களுக்கு அங்கே உறவினர்கள் உள்ளனர். அவர் சாப்பிட ஒரு மூலிகையை அவர் எங்களுக்குக் கொடுத்தார், அதன்பிறகு அவள் உடனே கருத்தரித்தாள். அது ஒரு காட்டு மருத்துவ குணம் கொண்ட செடி”, என்று சகியாவின் தாய், ஒரு இல்லத்தரசி (அவரது தந்தை ஒரு தொழிலாளி) கூறுகிறார். சரியான நேரத்தில் இரண்டாவது குழந்தையை கருத்தரிக்காவிட்டால், அவர்கள் அவளை 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேசராராவுக்கு அழைத்துச் செல்வார்களா? "இல்லை, அல்லாஹ் நமக்கு ஒரு குழந்தையை கொடுக்கும் போது, இரண்டாவது குழந்தை வரும்."
சகியாவுக்கு மூன்று தங்கைகள் உள்ளனர், அதில் இளையவள் இன்னும் ஐந்து வயதுக்கூட நிரம்பாதவள். ஒரு மூத்த சகோதரர், சுமார் 20 வயது, இவரும் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறார். சகோதரிகள் அனைவரும் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு மதர்சாவுக்கு சென்றனர். குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட நிதி காரணமாக சகியா சேர்க்கப்படவில்லை.
பிரசவத்திற்கு பிந்தைய பெரினியல் கிழிவு தையல் தேவையா? சகியா தலையசைக்கிறார். அது காயப்படுத்துகிறதா? அப்பெண்ணின் கண்களில் கண்ணீர் நிரம்புகின்றன, ஆனால் அவள் பேசவில்லை, அதற்கு பதிலாக அவளது பார்வையை சிறிய நிஜாமின் பக்கம் திருப்பி விடுகிறாள்.
மற்ற இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தின்போது அழுதாரா என்று கேட்கிறார்கள், பெண்கள் கூடிவந்தனர். ”நிறைய அழுதேன்" சகியா தெளிவாகக் கூறுகிறார். இப்போது வரை அவர் பேசியதில் மிகவும் சத்தமாக கூறுகிறார். நாங்கள் எல்லோரும் சற்றே சிறந்த அண்டை வீட்டின் பாதி கட்டப்பட்ட வீட்டில், தரையில் குவியல்களில் கிடந்த தளர்வான சிமென்ட்டில் வைக்கப்பட்ட கடன் வாங்கிய பிளாஸ்டிக் நாற்காலிகள் மீது அமர்ந்திருக்கிறோம்.
உலக அளவில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவ வயது தாய்மார்கள் எக்லாம்ப்சியா (வலிப்புத்தாக்கங்கள் மற்றும் பிரசவத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ உயர் இரத்த அழுத்தம்) அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது (அதன் உலகளாவிய சுகாதார மதிப்பீடுகள் 2016: இறப்புக்கான காரணம், வயது, பாலினம், நாடு மற்றும் பிராந்தியம், 2000-2016). மேலும், 20-24 வயதுடைய பெண்களைக் காட்டிலும் பியூர்பெரல் (பிரசவத்திற்குப் பிறகு ஆறு வார காலம்) எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் நோய்த்தொற்றுகள் காரணமாக அவர் இறக்கின்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் பிறக்கும் போது குறைவான எடை முதல் மிகவும் கடுமையான குழந்தை பிறந்த நிலைகள் வரை ஆபத்துகள் உள்ளன,.
அரேரியாவின் தொகுதி சுகாதார மேலாளர் பிரேர்னா வர்மாவுக்கு சகியா மீது இன்னும் ஒரு அக்கறை உள்ளது. "உங்கள் கணவரிடம் செல்ல வேண்டாம்," என்று அவர் பதின்பருவ தாய்க்கு அறிவுறுத்துகிறார் - மிக இளம் தாய்மார்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பம் ஆவது என்பது பீகார் கிராமங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அறிந்த ஒரு உண்மை.
இதற்கிடையில், ஒரு மாத கர்ப்பிணியாக இருக்கும் சலீமா (பிப்ரவரியில், நான் சந்தித்தப்போது), உள்ளூர் அங்கன்வாடியில் பிறப்புக்கு முந்தைய பராமரிப்புக்காக இன்னும் பதிவு செய்யப்படவிருக்கிறார். அஸ்மா ஆறு மாத கர்ப்பிணி, அவரது வயிறு இன்னும் ஒரு சிறிய மேடு மட்டுமே. 180 நாட்களுக்கு அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அரசு வழங்கும் ‘தகாதி கா தாவா’ (வலிமைக்கான மருந்துகள்), கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகளைப் பெறத் தொடங்கியுள்ளார்.
ஆனால், பீகாரில் 9.3 சதவீத தாய்மார்கள் மட்டுமே கர்ப்ப காலத்தில் 180 நாட்கள் அல்லது அதற்கு மேல் இரும்பு ஃபோலிக் அமில மருந்தை உட்கொண்டதாக என்.எஃப்.எச்.எஸ் -5 குறிப்பிடுகிறது. 25.2 சதவீத தாய்மார்களுக்கு மட்டுமே ஒரு சுகாதார வசதி நிலையத்திற்கு குறைந்தபட்சம் நான்கு முந்தைய பராமரிப்பு வருகை தருகின்றனர்.
வருங்கால மாப்பிள்ளை ஏன் தன்னை திருமணம் செய்து கொள்ள ஒரு வருடம் காத்திருக்க மாட்டார் என்று அம்மா விளக்கும்போது அஸ்மா பதற்றத்துடன் புன்னகைக்கிறாள். "கிராமத்தில் வேறு சில இளைஞன் அவளுடன் ஓடிப்போவதாக இளைஞனின் குடும்பத்தினர் உணர்ந்தனர். அவள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள், எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் கிராமத்தில் இந்த விஷயங்கள் நடக்கின்றன, "ருக்ஷனா கூறுகிறார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019-20) குறிப்பிடுகையில், 15-19 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளில் 11 சதவீதம் பேர் ஏற்கனவே தாய்மார்கள் அல்லது கணக்கெடுப்பின் போது கர்ப்பமாக இருந்தனர்.
*****
2016 மக்கள்தொகை கவுன்சில் கணக்கெடுப்பு (உதயா என்று பெயரிடப்பட்டுள்ளது - இளம் பருவத்தினர் மற்றும் இளம் பெரியவர்களைப் புரிந்துகொள்வது) தங்கள் கணவர்களால் இளம்பெண்களுக்கு எதிரான உணர்ச்சி, உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்தும் ஆராய்கின்றது: 15 முதல் 19 வயதுடைய திருமணமான இளம்பெண்களில் 27 சதவீதம் பேர் ஒரு முறையாவது அறைப்பட்டுள்ளனர், 37.4 சதவிகிதம் பேர் ஒரு முறையாவது உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வயதிற்குட்பட்ட திருமணமான சிறுமிகளில் 24.7 சதவீதம் பேர் திருமணமான உடனே ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க குடும்ப உறுப்பினர்களால் அழுத்தம் தரப்பட்டுள்ளதாகவும், 24.3 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை என்றால் ‘மலட்டு’ முத்திரை குத்தப்படுவார்கள் என்ற அச்சத்தையும் உணர்ந்தனர்.
பாட்னாவைச் சேர்ந்த அனாமிகா பிரியதர்ஷினி, ‘சாக்ஷமா: பீகாரில் என்ன சாத்தியம் என்ற முயற்சி, ஆராய்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். ஊரடங்கு மாநிலத்தில் குழந்தை திருமணத்தை சமாளிக்கும் சவாலை அதிகப்படுத்தியது என்பது தெளிவாகிறது என்று இது கூறுகிறது. "2016-17 ஆம் ஆண்டில் யு.என்.எஃப்.பி.ஏ-மாநில அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ’பந்தன் டோட்’ ஆப் பயன்பாட்டில், குழந்தைத் திருமணங்கள் குறித்து பல அறிக்கைகள் அல்லது புகார்கள் வந்தன," என்று அவர் கூறுகிறார். அதன் பயன்பாடானது வரதட்சணை மற்றும் பாலியல் குற்றங்கள் போன்ற சிக்கல்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது, மேலும் ஒரு SOS பொத்தானைக் கொண்டுள்ளது, இது ஒரு பயனரை அருகிலுள்ள காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
2021 ஜனவரியில், குழந்தைத் திருமணங்கள் குறித்த விரிவான கணக்கெடுப்பைத் திட்டமிட்டுள்ள சாக்ஷமா, நடப்பிலுள்ள திட்டங்களை மதிப்பிடும் ஒரு அறிக்கையைத் தயாரிக்கிறது. அது ‘பீகார் குறித்த சிறப்பு குறிப்புடன் இந்தியாவில் இளம் வயதில் நடக்கும் திருமணம்’ என்ற தலைப்பில் தயாரித்தது. பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் திருமணத்தை ஒத்திவைக்கும் திட்டங்கள், வேறு பல மாநில தலையீடுகள், நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் கலவையான முடிவுகளைக் அளித்துள்ளன என்று அனாமிகா கூறுகிறார். "இந்த திட்டங்களில் சில நிச்சயமாக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, சிறுமிகளை பள்ளியில் வைத்திருக்க ஒரு ரொக்கப்பரிசு, அல்லது பீகாரில் உள்ள சிறுமிகளுக்கான சைக்கிள் திட்டம் ஆகியவை சிறுமிகள் இடைநிலைப் பள்ளியில் சேருவதை உயர்த்தியதுடன், அவர்களுக்கு அதிக நடமாட்டத்தையும் அளித்தது. இந்த திட்டங்களின் பயனாளிகள் 18 வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டாலும், அத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தக்கது, ”என்று அவர் கூறுகிறார்.
குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 2006, ஏன் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்து, அந்த அறிக்கை கூறுகிறது, “பீகாரில் குழந்தை திருமணச் சட்டங்களை சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதன் செயல்திறன் குறித்து பகிரங்கமாக கிடைக்கக்கூடிய ஆய்வுகள் எதுவும் இல்லை. இருப்பினும், ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அரசியல் ஆதரவின் காரணமாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட சொந்த குழுக்கள் மற்றும் அமைப்புகளின் செல்வாக்கின் காரணமாகவும் பிசிஎம்ஏவை செயல்படுத்த சட்ட அமலாக்க நிறுவனங்கள் போராடுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது. ”
வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட அல்லது சிறப்புரிமை பெற்றவர்கள் உட்பட, அதன் பரந்த சமூக ஏற்றுக்கொள்ளுதலுடன், குழந்தை திருமணத்தைத் தடுப்பது எளிதல்ல. மேலும், இந்த நடைமுறை கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, இது மாநில தலையீட்டை ஒரு நுட்பமான விஷயமாக மாற்றுகிறது.
அரேரியாவிலிருந்து கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், பூர்னியா மாவட்டத்தின் பூர்னியா கிழக்குத் தொகுதியில், அகடோலா கிராமத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி தனது ஒரு வயது மகனை தனது தாய்வீட்டு வராந்தாவின் இனிமையான நிழலில் பராமரித்து வருகிறார். அவருக்கு 19 வயது என்று கூறுகிறார். கருத்தடை பற்றி அவரிடம் அதிக தகவல்கள் இல்லை, மற்றொரு கர்ப்பத்தை ஒத்திவைக்க பெரும்பாலும் விதியை நம்பியிருக்கிறார். அவரது தங்கை மணிகா, 17, திருமணம் செய்ய கொள்ள அவரின் குடும்பம் அழுத்தம் தர தொடங்கியுள்ளது. அவர்களின் தாய் ஒரு இல்லத்தரசி, தந்தை பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்கிறார்.
"திருமணத்திற்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் என்று என் ஐயா கூறியுள்ளார்," என்கிறார் மாணிக்கா. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு அவரை அவரின் வீட்டிற்கு கொண்டு வரும் வரை, அவர் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த பூர்னியா நகர குடியிருப்பு பள்ளியில் ஒரு ஆசிரியரைக் குறிப்பிடுகிறார். அவரை திருப்பி அனுப்புவது குடும்பத்திற்குத் தெரியவில்லை - இந்த ஆண்டு இன்னும் பல விஷயங்கள் கட்டுப்படுத்த முடியாதவை. வீட்டிற்கு வருவதால், மணிகா தனது திருமணம் முடிவடையும் வாய்ப்பை எதிர்கொள்கிறார். "எல்லோரும் திருமணம் செய்து கொள்ள என்று சொல்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
சுமார் 20-25 குடும்பங்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான அண்டை ஊரான ராம்காட்டில், பிபி தான்சிலா எட்டு வயது சிறுவனுக்கும், இரண்டு வயது சிறுமிக்கும், பாட்டி. அவருக்கு 38 அல்லது 39 வயது இருக்கும் "ஒரு பெண் 19 வயதில் திருமணமாகாதவளாக இருந்தால், அவள் ஒரு வயதான பெண்மணி என்று கருதப்படுகிறாள், யாரும் அவளை திருமணம் செய்ய மாட்டார்கள்" என்று தான்சிலா கூறுகிறார். "நாங்கள் ஷெர்ஷாபாதி முஸ்லிம்கள், நாங்கள் எங்கள் மத நூல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுகிறோம்," என்று அவர் மேலும் கூறுகிறார். கருத்தடை தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், பருவமடைந்து சில வருடங்கள் கழித்து பெண்களை திருமணம் செய்து வைத்துவிடுவோம் என்று அவர் கூறுகிறார். அவர் சுமார் 14 வயதில் மணமகள், ஒரு வருடம் கழித்து ஒரு தாய். நான்காவது குழந்தைக்குப் பிறகு, அவருக்கு சுகாதார சிக்கல்கள் உருவாக்கி, கருத்தடை செயல்முறைக்கு உட்படுத்தினார். "எங்கள் பிரிவில், யாரும் தேர்வு செய்து, ஒரு அறுவை சிகிச்சையைப் பெறுவதில்லை," என்று அவர் கூறுகிறார், கருப்பை நீக்கம் மற்றும் குழாய் பிணைப்பு பற்றி இப்படி அவர் கூறுகிறார். இது பீகாரின் பிறப்பு கட்டுப்பாட்டின் மிகவும் பிரபலமான முறையாகும் (NFHS-5). "எங்களுக்கு 4-5 குழந்தைகள் இருப்பதாகவும், மேலும் யாரையும் கவனிக்க முடியாது என்று யாரும் கூறமாட்டார்கள்."
ராம்காட்டின் ஷெர்ஷாபாதி முஸ்லிம்களுக்கு எந்த விவசாய நிலமும் இல்லை, ஆண்கள் அருகிலுள்ள பூர்னியா நகரத்தில் தொழிலாளர்களாக தினசரி ஊதியத்தை நம்பியிருக்கின்றனர். சிலர் பாட்னா அல்லது டெல்லிக்கு தொலைவில் குடியேறுகின்றனர். சிலர் தச்சர்களாக அல்லது பிளம்பர்களாக வேலை செய்கின்றனர். அவர்களின் பெயர், மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள ஷெர்ஷாபாத் நகரத்திலிருந்து வந்தது, ஷெர் ஷா சூரி என்ற பெயருக்கு பின் பெயரிடப்பட்டது. அவர்கள் தங்களுக்குள் பெங்காலி பேசுகிறார்கள், மேலும் இறுக்கமாக பிணைக்கப்பட்ட சமூகக் கொத்தாக வாழ்கிறார்கள், பெரும்பாலும் அவர்கள் பங்களாதேஷி என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
கிராமத்தின் ஆஷா ஊழியர் சுனிதா தேவி கூறுகையில், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசாங்கத்தின் தலையீடு ராம்காட் போன்ற குக்கிராமங்களில் ஓரளவு முடிவுகளை மட்டுமே பெற்றுள்ளது, அங்கு கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன, குழந்தை திருமணம் பொதுவானது மற்றும் கருத்தடை வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது 2020 மே மாதம் தனது இரண்டாவது பையனை பிரசவித்த, இரண்டு குழந்தைகளுக்கு தாயான 19 வயதான சதியாவை (பெயர் மாற்றப்பட்டது) அறிமுகப்படுத்துகிறார். அவரது இரண்டு குழந்தைகளும் சுமார் 13 மாத இடைவெளியில் பிறந்தனர். சதியாவின் கணவரின் சகோதரி தனது கணவரின் அனுமதியுடன் ஒரு ஊசி போடக்கூடிய கருத்தடை எடுக்கத் தொடங்கியுள்ளார் - அவர் உள்ளூர் முடிதிருத்தும் பணி செய்கிறார் - ஆஷாவின் பரிந்துரைகளை விட அவர்களின் சொந்த நிதி நெருக்கடியால் அதிகம் தூண்டப்பட்டார்.
காலம் மெதுவாக மாறத் தொடங்கியதாக தான்சிலா கூறுகிறார். “நிச்சயமாக பிரசவம் வேதனையாக இருந்தது, ஆனால் அந்த காலம் போன்று இன்று இல்லை. இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவில் இது மோசமான ஊட்டச்சத்து அளவாக இருக்கலாம், ”என்று அவர் கூறுகிறார். ராம்காட்டில் உள்ள சில பெண்கள் கருத்தடை மாத்திரைகள், அல்லது ஊசி மருந்துகள் அல்லது கருப்பைக் கருவியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை அவர் அறிவார். "கருத்தரிப்பதை நிறுத்துவது தவறு, ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு வேறு வழியில்லை, அது தெரிகிறது."
55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரேரியாவின் பங்காலி டோலாவில், அஸ்மா பள்ளியை விட்டு வெளியேறவில்லை என்று அறிவிக்கிறார். அவர் திருமணம் செய்துகொண்டு 75 கி.மீ தூரத்தில் உள்ள கிஷன்கஞ்ச் தொகுதிக்குச் சென்றபோது ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டது. 2021 பிப்ரவரியிலிருந்து, உடல்நலம் காரணமாக தனது தாயுடன் வசிக்க தொடங்கிய அவர், குழந்தையை பிரசவித்தபின், தன் பள்ளியான கன்யா மத்திய வித்யாலயாவுக்கு நடக்க முடியும் என்று கூறுகிறார். அவரது கணவர் அதை கண்டுக்கொள்ள மாட்டார், என்று அவர் கூறுகிறார்.
உடல்நலம் நிகழ்ச்சி குறித்து விசாரித்தபோது, ருக்ஷனா தான் இவ்வாறு பதிலளிக்கிறார்: “ஒரு நாள் மாலை அவளுடைய மாமியார் வீட்டிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவளுக்கு கொஞ்சம் இரத்தப்போக்கு ஏற்பட்டது என்று. நான் ஒரு பஸ் பிடித்து கிஷன்கஞ்சிற்கு விரைந்தேன், நாங்கள் அனைவரும் பயந்து அழுதோம். அவர் கழிப்பறையைப் பயன்படுத்த வெளியே சென்றிருந்தார், காற்றில் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும், ஒரு குடில். ” தாயைப் பாதுகாக்க ஒரு சடங்குக்காக ஒரு பாபா வரவழைக்கப்பட்டார். வீட்டிற்கு திரும்பிய அஸ்மா, ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று தான் உணர்ந்ததாக குடும்பத்தினரிடம் கூறினார். அடுத்த நாள், அவர்கள் அஸ்மாவை கிஷன்கஞ்ச் நகரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர், அங்கு ஒரு அல்ட்ராசவுண்ட் கருவுக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
அஸ்மா தனது சொந்த நினைவில் நினைத்து பார்த்து புன்னகைக்கிறார், கொஞ்சம் மங்கலாக நினைவிருந்தாலும். "நானும் குழந்தையையும் ந ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். கருத்தடை பற்றி அவருக்குத் தெரியாது, ஆனால் உரையாடல் அவரது ஆர்வத்தைத் தூண்டியது. அவள் மேலும் கண்டுபிடிக்க விரும்புகிறார்.
பாரி மற்றும் கெளண்டர்மீடியா அறக்கட்டளையின் கிராமப்புற இந்தியாவில் பதின்வயது பெண்கள் மற்றும் இளம் பெண்கள் குறித்த நாடு தழுவிய செய்தி சேகரிப்பு திட்டம், ‘பாபுலேஷன் ஃபோண்டேஷன் ஆஃப் இந்தியா’வின் ஒரு பகுதியாகும். இது சாதாரண மக்களின் குரல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் முக்கியமான இன்னும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிலைமையை ஆராய்வதற்கான முயற்சி ஆகும்.
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய வேண்டுமா? namita@ruralindiaonline.org என்ற முகவரிக்கும் CCயுடன் zahra@ruralindiaonline.org என்ற முகவரிக்கும் எழுதுங்கள்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்