“அவசரம் என்றால் இங்குதான் வருவேன்,” என்று கூறும் தியா டோப்போ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முள் நிறைந்த தேயிலை புதர்களின் அடர்ந்த பகுதியில் தென்படும் சிறு இடைவெளியை குறிப்பிடுகிறார். “இன்று காலை தான் என்னை தேனீ கடித்தது. உங்களுக்கு இங்கு பாம்புக் கடி கூட கிடைக்கும்,” என்கிறார் அவர் மனவேதனையுடன்.
தினக்கூலி வேலை செய்பவர்களின் பணிச்சூழல் என்பது மிகவும் கடினமானது. தேயிலை தோட்ட தொழிலாளியாக இருக்கும் பெண்கள் சிறுநீர் கழிப்பதில் கூட எதிர்பாராத பல ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.
53 வயது தொழிலாளி ஒருவர் நினைவுகூருகையில், “இளவயதில் அவசரத்திற்கு சைக்கிளில் கழிப்பறைக்கு போகலாம் என சிலசமயம் நினைப்பேன்.” ஆனால் அப்படி சென்று வந்தால் இலை பறிக்கும் நேரம் குறைந்துவிடும். “தினமும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை [இலைகள்] அடைய வேண்டும். இதை [வருவாய் இழப்பை] ஏற்கும் நிலை எனக்கு கிடையாது.”
அவரது சகபணியாளர் சுனிதா கிஸ்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார், “இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று, நாள் முழுவதும் [சிறுநீர் கழிக்கும் தேவையை] கட்டுப்படுத்துவது அல்லது இங்கு [திறந்தவெளியில்] கழிப்பது. இங்கு பூச்சிகள், அட்டைகள் அதிகம் உள்ளதால் மிகவும் ஆபத்து.”
சில தேயிலை நிறுவனங்கள் குடை, செருப்பு, தார்ப்பாய், பை போன்றவற்றை அளிக்கின்றன. “செடிகளில் உள்ள தண்ணீர் எங்கள் ஆடைகளை நனைக்காமல் தடுக்க தார்ப்பாய் உதவுகிறது. பிற பொருட்களை [பூட்ஸ் போன்ற உபகரணங்கள்] நாமே வாங்கிக் கொள்ள வேண்டும்,” என்கிறார் தியா.
“இடைவேளை இன்றி 10 மணி நேரம் தொடர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும்,” என்கிறார் 26 வயது சுனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றால் தோட்டத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து செல்ல வேண்டும். இதில் சில மணி வேலை நேரங்கள் குறைவதால் அவரது கூலியும் குறையும். இரண்டு குழந்தைகளின் தாய் என்ற முறையில் அவருக்கு இது இழப்பை ஏற்படுத்தும்.
மேற்குவங்கத்தின் டூராஸ் பிராந்தியத்தில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தியா, சுனிதா போன்று வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாரியிடம் பேசிய பெரும்பாலான பெண்கள் வேலையின் போது கழிப்பறை செல்வது சாத்தியமற்றது என்றனர்.
அதிக நேரம் சிறுநீரை கட்டுப்படுத்துவதால் எரிச்சல் ஏற்பட்டு சம்பா தே(பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் மூத்த மருத்துவச்சியிடம் அவர்கள் செல்கின்றனர். சிறுநீர் பாதையில் தொற்று(UTI) ஏற்படுவதால் சிறுநீரில் இரத்தம் கசியும் என்கிறார் தேய். “குறைவாக தண்ணீர் குடிப்பதால் இப்படி நிகழுகிறது,” என்கிறார் 34 ஆண்டுகளாக தேயிலை தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையாற்றி வரும் அந்த சுகாதார பணியாளர்.
தேயிலை நிறுவனங்கள் தோட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் குடிநீர் தொட்டி வைக்கின்றனர்,“பெரும்பாலானோர் [பெண் தொழிலாளர்கள்] சிறுநீர் [திறந்தவெளியில்] கழிக்கும் தேவை ஏற்படும் என்பதால் தண்ணீர் குடிப்பதில்லை,” என்கிறார் சம்பா.
கழிப்பறைகள் தொலைவில் உள்ளதால் அங்கு செல்லும் போது தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு கூலியிழப்பு ஏற்படுகிறது. ஒரு தேயிலை தொழிலாளி தினக்கூலியாக ரூ.232 பெறுவதற்கு 20 கிலோ தேயிலை பறிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 2 கிலோ தேயிலை என 10 மணி நேரம் இடைவேளையின்றி அவர்கள் வேலை செய்ய வேண்டும்.
“வெயில் கடுமையாக இருப்பதால், என்னால் இரண்டு மணி நேரத்தில் 2 கிலோ தேயிலை மட்டுமே பறிக்க முடிந்தது,” என்கிறார் புஷ்பா லக்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 26 வயதாகும் அவர் காலை 7.30 மணிக்கு வேலைக்கு வந்து மாலை 5 மணிக்கு சூரியன் கிழக்கு மூலையை தொடுவதற்கு முன் செல்கிறார். எட்டு ஆண்டுகளாக அவருடைய அன்றாடம் இப்படி தான் செல்கிறது. தனது தலையில் கட்டப்பட்ட வலைப்பையில் இளம்பச்சை இலைகளை அவர் பறித்து போடுகிறார்.
“கோடை, மழைக்காலங்களில் இலக்கை அடைவது மிகவும் கடினம், இதனால் தினக்கூலியில் ரூ.30 இழப்பு ஏற்படுகிறது,” என்கிறார் 5 ஆண்டுகளாக தேயிலை தொழிலாளியாக உள்ள திபா ஓரான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மாதவிடாய் நேரங்களில் கழிப்பறை செல்வது பெண்களுக்கு கொடுங்கனவு தான். “சானிட்டரி பேட்களை மாற்றுவதற்கு எவ்வித வசதியும் கிடையாது,” என்கிறார் 28 வயது தொழிலாளி மேரி கிஸ்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10 ஆண்டுகளாக அவர் இந்த வேலை செய்கிறார். “ஒருமுறை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் போது மாதவிடாய் வந்துவிட்டது. இலக்கை அடைய வேண்டும் என்பதால் நான் வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. அன்றைய நாள் நான் இரத்தம் ஊறிய ஆடையுடன் வீடு திரும்பினேன்,” என்று மேரி நினைவுகூர்கிறார்.
ராணி ஹோரோ எனும் உள்ளூர் ஆஷா பணியாளர் மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். “சுகாதாரமற்ற கழிப்பறைகள், முறையான தண்ணீர் விநியோகம் இல்லாதது, மாதவிடாயின் போது மாசடைந்த துணிகளை பயன்படுத்துவது போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கர்ப்ப காலத்தில் ஆபத்தை விளைவிக்கிறது,” என்கிறார் 10 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு சேவையாற்றி வரும் ராணி.
தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுவது கூடுதல் சிக்கலை தருகிறது, என்கிறார் சம்பா. அவர் மேலும், “பிரசவத்தின் போது பெண்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தசோகை போன்றவை அதிகம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது,” என்றார்.
புஷ்பா, திபா, சுனிதா போன்ற தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புகின்றனர். “தேயிலை தோட்டத்திற்கு நேரத்திற்கு செல்வதற்காக பெரும்பாலான பெண்கள் காலை உணவை தவிர்க்கின்றனர்,” என்கிறார் சமூக சுகாதார பணியாளரான ரஞ்சனா தத்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதிய உணவு இடைவேளை முறையாக கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் ஒழுங்காக உணவும் உண்பதில்லை. “இதனால் தான் பெண் தொழிலாளர்களுக்கு இரத்த சோகை ஏற்படுகிறது,” என்கிறார் ரஞ்சனா.
“நாங்கள் சுகாதார மையங்களில் [சில தோட்டங்களில் வழங்கப்படும் வசதி] நோய் விடுப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கூலியிழப்பு ஏற்படும். அதை எங்களால் சமாளிக்க முடியாது,” என்கிறார் மேரி. அவருடைய கருத்தை பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். சில மணிநேரங்களை இழந்தால் கூட தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை.
தோட்டத்தில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் தங்கள் பிள்ளைகளின் முதன்மை காப்பாளர்களாக உள்ளனர். “என் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளதால் இன்று தோட்ட வேலைக்கு செல்ல முடியாது. இன்றைய கூலியில் கால் பங்கு போய்விடும்,” என்கிறார் நிரந்தர தொழிலாளரான பம்பா ஓரான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மினா முண்டா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன்ற பல பெண்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வருகின்றனர். இது அவர்களின் வேலையை பாதிக்கிறது. “என்னால் வேலையில் கூடுதலாக கவனம் செலுத்த முடியாது,” என்கிறார் இரண்டு சிறு பிள்ளைகள் வைத்துள்ள மினா.
குறைவான கூலியில் பிள்ளைகளின் கல்வி செலவை பல பெண்களால் ஏற்க முடிவதில்லை. “இது என் முதல் குழந்தை. என்னால் அவனை படிக்க வைக்க முடியுமா எனத் தெரியவில்லை,” என்கிறார் தனது ஏழு மாத மகனை பற்றி பேசிய 20 வயது தொழிலாளியான மோம்பி ஹன்ஸ்டா.
இக்கட்டுரையில் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பெரும்பாலான பெண்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.
தமிழில்: சவிதா