ஓர் உடைந்த கிளையை தரையில் அடித்துக் காட்டி தங்கம்மா ஏ.கே. தென்னை மரங்களுக்கு அடியில் தன் வரவை அறிவிக்கிறார். “அதிகமாய் வளர்ந்திருக்கும் இந்த நிலங்களுக்குள் எச்சரிக்கையாக நுழைவேன். குச்சியை அடித்து சத்தம் எழுப்புவேன். பாம்புகள் இருந்தால் ஓடி விடும்,” என்கிறார் அவர் உயர்ந்து நிற்கும் தென்னைகளுக்கு கீழே இருக்கும் காட்டுப்புற்கள், உடைந்த கிளைகள், அடர் கொடிகள் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் உயிரினங்களை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்தபடி.
எர்ணாகுளத்தின் வீட்டு வசிப்பிட காலனியில்தான் மரம், செடி அடர்ந்த இந்த வெற்று நிலம் இருக்கிறது. “நடந்தபடி (நல்ல) இளநீர் காய்களை கண்டுபிடிப்பது அதிர்ஷ்டம்தான்!” என்கிறார் 62 வயதான அவர். பராமரிக்கப்படாத பகுதிகளில் விழுந்து கிடக்கும் இளநீர் காய்களை சேகரித்து வருமானம் ஈட்டி அவர் வாழ்க்கை ஓட்டுகிறார். மலையாளிகளின் உணவில் இளநீர் எப்போதும் இடம்பெறும். அதனாலேயே அதற்கான தேவை வருடம் முழுக்க நிலவும்.
“தொடக்கத்தில் நான் இளநீர் காய்களை வேலை முடிந்தபிறகு இந்தப் பகுதியிலிருந்து (புதிய ரோடு சந்திப்பு) சேகரிப்பேன். ஆனால் இப்போது என் ஆரோக்கியம் குறைந்துவிட்டதால் வேலைக்கு போக முடியவில்லை,” என்கிறார் தங்கம்மா உயரமான புற்களுக்கு இடையே மெல்ல நடந்தபடி. அவ்வப்போது நின்று மூச்சு வாங்கிக் கொள்கிறார். கைகளை கண்களுக்கு மேல் வைத்து மதியவெயிலை மறைத்து மேலே காய்களை பார்த்துக் கொள்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு, மூச்சிரைப்பு, உடல் பலவீனம் மற்றும் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றால் தங்கம்மாவுக்கு பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. முழு நேர வீட்டுப் பணியாளராக இருந்த அவர் வேலையை விட நேர்ந்தது. மாத வருமானம் 6,000 ரூபாயும் நின்று போனது. வருமானம் தேவைப்படும் நிலையிலிருந்து தங்கம்மாவால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடல்ரீதியாக உழைப்பு அதிகம் தேவைப்படாத வீட்டில் தூசு சுத்தப்படுத்துவது, கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்யத் தொடங்கினார். கோவிட் தொற்று வந்தபிறகு அந்த வேலையும் போனது.
அதற்குப்பிறகு காலிமனைகளில் கிடைக்கும் இளநீர் காய்களை விற்று வரும் பணத்தில் செலவுகளை சமாளிக்கிறார் தங்கம்மா. மாநில ஓய்வூதியமாக ரூ.1,600-ம் அவருக்குக் கிடைக்கிறது.
”இந்த மனைகளுக்குள் நான் செல்வதை எவரும் தடுத்ததில்லை. எல்லாருக்கும் என்னை தெரியும். என்னால் எந்த பிரச்சினையும் வராது என்றும் தெரியும்,” என்கிறார் தங்கம்மா, காவலற்ற மனைகளுக்கு தென்னை மரங்களையும் இளநீர் காய்களையும் தேடிச் செல்லும் பழக்கத்தை குறித்து.
தங்கம்மா தன் வேலையை விளக்கிக் கொண்டே, கிளைகளை தட்டி புதரின் பக்கமாக தள்ளி இளநீர் காய்கள் கிடக்கும் மரத்தடியை காண விழைகிறார். ஒரு இளநீர் கிடைக்கிறது. அருகே உள்ள சுவரில் வைத்துவிட்டு அடுத்ததற்கு தேடுகிறார்.
ஒரு மணி நேரம் இளநீர் காய்கள் தேடிய பிறகு வேலையை முடிக்கிறார். தங்கம்மா பின் பக்கத்து வளாகத்துக்குள் செல்ல, தம்ளர் நீருடன் அங்கு வரவேற்கப்படுகிறார். அந்த வீட்டில் இருப்பவர், தங்கம்மாவுக்கு முன்பு வேலை கொடுத்தவர்.
இளைப்பாறிவிட்டு தங்கம்மா தன் மீதும் துணிகள் மீதும் இருக்கும் இலைகள், களைகள் ஆகியவற்றை எடுத்து போட்டுவிட்டு, இளநீர் காய்களை எண்ணத் துவங்குகிறார். அவற்றை பக்கத்து ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் போன்றவற்றில் விற்கும் வண்ணம் வெவ்வேறு சாக்குகளில் போடுகிறார். வழக்கமான அளவில் இருக்கும் இளநீருக்கு ரூ.20 கிடைக்கும். பெரியவைகள் 30 ரூபாய் வரை விற்கும்.
வரிசைப்படுத்தியபிறகு, தங்கம்மா வேலைக்கு உடுத்தியிருந்த துணியை - பழைய நைட்டி - புடவைக்கு மாற்றி, ஹோட்டலுக்கு இளநீர் காய்களை அவர் விற்கும் புதிய ரோடு சந்திப்புக்கு செல்லும் பேருந்தை பிடிக்க விரைகிறார்.
“நான் போகும் எல்லா நேரங்களிலும் இளநீர் காய்கள் கிடைத்து விடுவதில்லை. அடிப்படையில் அதிர்ஷ்டம் வேண்டும். சில நேரங்களில் நிறைய கிடைக்கும், சில நேரங்களில் ஒன்றும் கிடைக்காது,” என்கிறார் அவர்.
தென்னை மரங்களை அண்ணாந்து பார்க்க கடினமாக இருக்கிறது என புலம்பும் தங்கம்மாவின் பேச்சை வேகமான மூச்சுகள் இடைமறிக்கின்றன. “தலை சுற்றுகிறது.” ஆரோக்கியம் வேகமாக குறைவதற்கான காரணமாக வீட்டருகே இருக்கும் ஆலைகள் உருவாக்கும் கழிவை குறிப்பிடுகிறார் அவர்.
முரண்நகை என்னவென்றால், தன் உணவில் தேங்காயை தங்கம்மா சேர்த்துக் கொள்வதில்லை. “தேங்காய் போடப்படும் உணவுகள் எனக்கு பிடிக்காது. எப்போதாவது புட்டு செய்யும்போதும் அயலா மீன் செய்யும்போது மட்டும் சேர்த்துக் கொள்வேன்,” என்கிறார் அவர். தேங்காய் நாரை அவர் அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார். கொப்பரைத் தேங்காயை ஆலைகளுக்கு கொடுத்து தேங்காய் எண்ணெயை பெற்றுக் கொள்கிறார். முளைவிட்ட விதைகளை மகன் கண்ணனுக்கு போன்சாய் மர வளர்ப்புக்கு கொடுக்கிறார்.
நல்ல ஆரோக்கியத்தில் இருந்தபோது இளநீர் அறுவடை காலத்தை - 40 நாட்களுக்கு ஒருமுறை - கணக்கு செய்து தங்கம்மா செல்வார். அப்போதெல்லாம் இளங்காய்களை பெறும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக இருந்தது. இப்போது வீட்டுக்கும் எலூருக்கும் புதிய ரோடுக்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருப்பதால் அங்கு செல்வது குறைந்துவிட்டது. “புதிய ரோட்டில் நான் வாழ்ந்தபோது, இது சுலபமாக இருந்தது. இப்போது 20 நிமிட பேருந்து பயணமும் அதற்கு பின்னான 15 நிமிட நடையும் மிகவும் சோர்வை அளிப்பதாக இருக்கிறது,” என்கிறார் அவர் பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தில்.
புதிய ரோடு சந்திப்பை சுற்றியிருக்கும் பகுதியில் ஐந்து உடன்பிறந்தாருடன் சேர்ந்து தங்கம்மா வளர்ந்தார். பூர்விக வீடு இருந்த நிலம் சகோதர சகோதரிகளுக்கு இடையே பிற்பாடு பிரிக்கப்பட்டது. தங்கம்மாவின் பங்கு காலஞ்சென்ற கணவர் வேலாயுதனால் விற்கப்பட்டுவிட்டது. தங்கவென வீடில்லாததால் அடிக்கடி இடம்பெயர்ந்து கொண்டே இருந்தனர். சில நேரங்களில் புதிய ரோட்டில் இருக்கும் சகோதரியுடன் வசித்தனர். பிற நேரங்களில் பாலத்துக்கருகே வசித்தனர். தற்போதைய வீடு எலூரின் எஸ்.சி.காலனியில் மூன்று செண்ட் (1306.8 சதுர அடி) நிலத்தில் இருக்கிறது. வீடற்றவர்களுக்கு பஞ்சாயத்து வழங்கப்படும் பட்டா அடிப்படையில் அந்த நிலம் வழங்கப்பட்டது.
தங்கம்மாவுக்கும் வேலாயுதனுக்கும் இரண்டு குழந்தைகள். 34 வயது கண்ணன், 36 வயது கார்த்திகா. வேலாயுதன் புதிய ரோடு பகுதியில் தென்னை ஏறும் வேலை செய்தார். கண்ணன் திரிசூரில் இருந்து மனைவியின் குடும்பம் விவசாயம் பார்க்க உதவுகிறார். மகள் கார்த்திகா பக்கத்தில் மூன்று வயது வைஷ்ணவி என்ற மகளுடன் வசிக்கிறார். வைஷ்ணவியை தங்கம்மா செல்லமாக ’தக்காளி’ என அழைக்கிறார். ‘குழந்தைகளுடன் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சோர்வு ஏற்படுகிறது,” என்கிறார் அவர்.
*****
“தெளிவாக என்னால் பார்க்க முடியவில்லை. எனவே நான் இளநீர் காய்களை இனியும் தேட முடியாது,” என்கிறார் அவர் படுக்கையில் குவிந்திருக்கும் துணிகளையும் காகிதங்களையும் சரி செய்தபடி. தங்கம்மா தனியாக வசிக்கிறார். கிளி தத்து மட்டும்தான் துணை. வெளியாள் வந்தால் கத்துவது போல் அக்கிளி பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கிறது.
தொடக்க நாட்களை நினைவுகூருகையில் அவர் சொல்கிறார், “ஒருமுறை ஒரு பாம்பு அருகே செல்வதை உணர்ந்து அசையாமல் நின்றேன். என்னுடைய கிழிந்த செருப்பின் மீது சறுக்கி சென்றது. இப்போது என்னால் பாம்பா தேங்காயா என்று கூட அடையாளம் காண முடியவில்லை!” என்கிறார் அவர் மங்கும் கண்பார்வையைக் குறித்து. வருமானம் இல்லாததால், அவரது ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகள் வாங்கவோ போதுமான உணவுக்கோ வழியில்லாமல் இருக்கிறார்.
“நான் வேலை பார்த்த இடங்களில் இருப்போர் இப்போதும் கொஞ்சம் பணத்தை இரக்கம் கொண்டு கொடுத்து பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் அவர்களை சென்று பார்க்க கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் தங்கம்மா அத்தகைய ஒருவரின் வீட்டுக்கு செல்லும் வழியில். ஒரு வீட்டுக்கு செல்லும்போது அவர் சோர்வாக உணரத் தொடங்குகிறார். தொடர்ந்து நடப்பதற்கான சர்க்கரை கிடைக்குமென நம்பிக்கையில் ஒரு மிட்டாயை சாப்பிட்டு தொடர்ந்து நடக்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்