”ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தபோது கிடைக்கும் வேலை எல்லாவற்றையும் செய்தோம். மகளுக்கு நல்ல கல்வி வழங்க தேவையான பணத்தை ஈட்ட விரும்பினோம்,” என்கிறார் குட்லா மங்கம்மா. அவரும் அவரது கணவரான குட்லா கோட்டையாவும் 2000மாம் ஆண்டில் தெலெங்கனாவின் மஹ்பூப் நகர் மாவட்டத்திலிருந்த அவர்களின் கிராமத்திலிருந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தனர். முதல் குழந்தையான கல்பனா பிறந்தவுடன் இது நடந்தது.
ஆனால் நகரம் அவர்களுக்கு நல்லபடியாக இருக்கவில்லை. வேலை ஏதும் கிடைக்காததால் கோட்டையா வருமானம் ஈட்ட தூய்மைப் பணி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்தும் வேலை செய்யத் தொடங்கினார்.
கோட்டையாவின் பாரம்பரியத் தொழிலான துணித் துவைக்கும் பணியை ஹைதராபாத்தில் யாரும் கொடுக்கவில்லை. அவர் சக்கலி சமூகத்தை (தெலெங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகம் அது) சேர்ந்தவர். “எங்களின் முன்னோர்கள் துணி துவைத்து இஸ்திரி போடும் வேலை செய்தார்கள். ஆனால் இப்போது எல்லாரும் சலவை இயந்திரங்களும் இஸ்திரி பெட்டிகளும் வாங்கி விடுவதால் எங்களுக்கு குறைவாகவே வேலை கிடைக்கிறது,” என வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தை சுட்டிக் காட்டுகிறார் மங்கம்மா
கட்டுமானத் தளங்களின் தினக்கூலி வேலைகளுக்கும் முயன்று பார்த்தார் கோட்டையா. “கட்டுமானத் தளங்கள் எப்போதுமே வீட்டிலிருந்து தூரத்தில்தான் இருக்கும். அங்கு பயணிக்கவே அவர் செலவு செய்ய வேண்டும். தூய்மைப் பணி வீட்டுக்கருகேயே கிடைப்பதால், அந்த வேலையைச் செய்யத் தொடங்கினார் அவர்,” என்கிறார் மங்கம்மா. இந்த வேலையை வாரத்துக்கு மூன்று முறை அவர் செய்ததாக சொல்கிறார். அந்த வேலையில் நாளொன்றுக்கு 250 ரூபாய் வருமானம் ஈட்டினார்.
2016ம் ஆண்டின் மே மாதத்தில்கோட்டையா வீட்டை விட்டு 11 மணிக்குக் கிளம்பிச் சென்ற ஒரு காலையை நினைவுகூருகிறார் மங்கம்மா. மலக்குழி ஒன்றை சுத்தப்படுத்தச் செல்வதாக சொன்ன அவர், திரும்பும்போது சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்குள் வரும் வகையில் வீட்டுக்கு வெளியே ஒரு பக்கெட் நீர் வைக்குமாறு சொன்னார். “என் கணவர் நகராட்சியின் தூய்மைப் பணியாளர் அல்ல. பணம் தேவைப்பட்டதால்தான் அவர் அந்த வேலையைச் செய்தார்,” என்கிறார் மங்கம்மா.
அந்த நாளன்று சுல்தான் பஜாரில் கோட்டையாவுக்கு வேலை கொடுக்கப்பட்டது. பழைய நகரத்தின் கூட்டம் மிகுந்த அப்பகுதியில் சாக்கடைக் கால்வாய்கள் அடிக்கடி அடைத்துக் கொள்ளும். அச்சமயங்களில் ஹைதராபாத் பெருநகர நீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தனியார் ஒப்பந்ததாரர்கள் கால்வாய்களை சுத்தப்படுத்தவும் கழிவை அப்புறப்படுத்தவும் ஆட்களை பணிக்கமர்த்துவர்.
கோட்டையாவின் சக ஊழியரும் நண்பருமான போங்கு வீராசாமி அவர்களில் ஒருவர். எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி மலக்குழியில் இறங்கிய அவர் சில நிமிடங்களிலேயே மூர்ச்சையானார். அவருடன் பணிக்கு சென்றிருந்த கோட்டையா உடனே அவரைக் காப்பாற்ற உள்ளே குதித்தார். சில நிமிடங்களில் கோட்டையாவும் சுயநினைவு இழந்தார்.
இருவருக்குமே முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை. மலக்குழிகளில் இறந்தவர்களின் பட்டியலில் அந்த நண்பர்களின் மரணமும் சேர்ந்தது. சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புக்கான ஒன்றிய அமைச்சகத்தின்படி, 1993ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடு முழுக்க 971 பேர் , “சாக்கடைக் குழி மற்றும் கழிவுக் கிடங்கு ஆகியவற்றை சுத்தப்படுத்தும் போது நேர்ந்த விபத்துகளில்” உயிரிழந்திருக்கிறார்கள்.
கோட்டையாவும் வீராசாமியும் இறந்து போன சில மணி நேரங்கள் கழித்து அவர்களை பார்த்தபோது, “துர்நாற்றம் அப்போதும் இருந்தது,” என நினைவுகூருகிறார்.
மே 1, 2016 அன்று குட்லா கோட்டையா இறந்தார். சர்வதேச தொழிலாளர்களின் உரிமைக்கான தொழிலாளர் தினம் அது. மலக்குழியில் இறங்கி சுத்தப்படுத்த ஆட்களை பணிக்கமர்த்துவது 1993ம் ஆண்டிலிருந்து சட்டப்படி குற்றம் என்பது அவருக்கோ அவரது மனைவிக்கோ தெரியாது. இப்பணியளிப்பது கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 -படி தண்டனைக்குரியக் குற்றமாகும். மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
“கையால் மலம் அள்ளுவது சட்டவிரோதம் என்பது எனக்குத் தெரியாது. அவரின் மரணத்துக்குப் பிறகு, என் குடும்பத்துக்கு நிவாரணமளிக்கும் சட்டங்கள் இருப்பதும் தெரியாது,” என்கிறார் மங்கம்மா.
கோட்டையா இறந்தவிதம் தெரிந்ததும் உறவினர்கள் அவர்களை புறக்கணித்து விடுவார்களென அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. “எனக்கு ஆறுதல் சொல்லக் கூட அவர்கள் வரவில்லை என்பதுதான் மிகவும் காயப்படுத்துகிறது. சாக்கடையை சுத்தப்படுத்தும்போது என் கணவர் இறந்துபோனார் என்பது தெரிந்ததும் அவர்கள் என்னோடும் என் குழந்தைகளோடும் பேசுவதைக் கூட நிறுத்தி விட்டனர்,” என்கிறார் அவர்.
தெலுங்கில் கையால் கழிவு அகற்றுபவர்கள் ‘ பாகி’ ( துப்புரவாளர் ) என்ற வசவு வார்த்தையால் குறிக்கப்படுகிறார்கள். சமூக ஒதுக்கலுக்கு பயந்து ஒருவேளை வீராசாமி, தன் வேலையைக் குறித்து மனைவியிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். “கையால் கழிவகற்றும் வேலையை அவர் செய்கிறார் என எனக்கு தெரியாது. என்னிடம் ஒருநாளும் அதைக் குறித்து அவர் பேசியதில்லை,” என்கிறார் அவரது மனைவியான போங்கு பாக்யலஷ்மி. அவர் வீராசாமியை மணந்து ஏழு வருடமாகிறது. காதலுடன் நினைவுகூருகிறார். “எப்போதும் அவரை நான் சார்ந்திருக்க முடியும்.”
கோட்டையா போல் வீராசாமியும் ஹைதராபாத்திலிருந்து இடம்பெயர்ந்தவர். 2007ம் ஆண்டில் அவரும் பாக்யலஷ்மியும் தெலெங்கானாவின் நகர்குர்னூல் டவுனுக்கு மகன்களான 15 வயது மாதவ் மற்றும் 11 வயது ஜக்தீஷ் மற்றும் வீராசாமியின் தாய் ராஜேஷ்வரி ஆகியோருடன் இடம்பெயர்ந்தனர். அக்குடும்பம் பட்டியல் சமூகமான மடிகா சமூகத்தைச் சேர்ந்தது. “எங்கள் சமூகம் செய்யும் இந்த வேலை எனக்கு பிடிக்காது. நாங்கள் திருமணம் செய்ததும் அந்த வேலையை அவர் நிறுத்திவிட்டார் என நினைத்தேன்,” என்கிறார் அவர்.
மலக்குழியின் விஷவாயு தாக்கி கோட்டையாவும் வீராசாமியும் இறந்த சில வாரங்கள் கழித்து, மங்கம்மாவுக்கும் பாக்யலஷ்மிக்கும் தலா 2 லட்ச ரூபாயை ஒப்பந்ததாரர் கொடுத்தார்.
கையால் கழிவகற்றும் பணியை ஒழிப்பதற்காக இயங்கும் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (SKA) என்ற அமைப்பின் உறுப்பினர்கள், சில வருடங்கள் கழித்து மங்கம்மாவை தொடர்பு கொண்டனர். அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் வரை நிவாரணம் கிடைக்க முடியும் என்றனர். 2014ம் ஆண்டு வெளியான ஓர் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 1993ம் ஆண்டிலிருந்து மலக்குழி மரணங்களில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு கொடுக்கும் இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் கையால் கழிவகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவு அளிக்கிறது. மானியங்களும் (15 லட்சம் ரூபாய் வரை) திறன் மேம்பாட்டு பயிற்சியும் கையால் கழிவற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பை திட்டம் கொண்டிருக்கிறது.
தெலெங்கானா உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வழக்கு தொடுத்ததில், கொல்லப்பட்ட கையால் கழிவகற்றும் பணியாளர்கள் ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு முழு இழப்பீடும் வழங்கப்பட்டது. கோட்டையா மற்றும் வீராசாமி குடும்பங்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை. அமைப்பின் தெலெங்கானா தலைவர் கே.சரஸ்வதி சொல்கையில், நீதிமன்றத்தில் வழக்காட வழக்கறிஞர்களுடன் இணைந்து இயங்குவதாக சொல்கிறார்.
ஆனால் மங்கம்மாவிடம் சந்தோஷம் இல்லை. “ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்,” என்கிறார் அவர். “பணம் கிடைக்குமென நம்பிக்கை எனக்கு கொடுத்தார்கள். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எங்குமில்லை.”
மேலும் பாக்யலஷ்மி, “பல செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் ஊடகவியலாளர்களும் எங்களிடம் வந்தனர். கொஞ்ச காலம் எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது அந்தப் பணம் எனக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை போய்விட்டது,” என்கிறார்.
*****
இந்த வருட அக்டோபர் மாதத்தின் ஒருநாள் காலை, ஹைதராபாத்தின் கோடி பகுதியிலுள்ள ஒரு பழைய குடியிருப்புக் கட்டடத்தின் வாகன நிறுத்தத்தின் சரிவான வாசல்பகுதியில் மங்கம்மா ஒரு தற்காலிக அடுப்பு செய்து கொண்டிருந்தார். அரை டஜன் செங்கற்களை ஜோடியாக ஒன்றன் மீது ஒன்றாக முக்கோண வடிவத்தில் அடுக்கினார். “எரிவாயு நேற்றுடன் தீர்ந்துவிட்டது. புதிய சிலிண்டர் நவம்பர் மாத முதல் வாரத்தில்தான் வரும் அதுவரை இந்த அடுப்புதான்,” என்கிறார் அவர். “என் கணவர் இறந்ததிலிருந்தே எங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.”
கோட்டையா இறந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. 30 வயதுகளின் பிற்பகுதியில் இருக்கும் மங்கம்மா சொல்கையில், “என் கணவர் இறந்ததும் பல நாட்கள் ஏதும் செய்ய முடியாமல் இருந்தேன். மனம் நொறுங்கிப் போனேன்.”
அவரும் அவரது இரு குழந்தைகளான வம்சி மற்றும் அகிலா ஆகியோரும் பல மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் படிக்கட்டுக்கு அருகே இருக்கும் மங்கலான வெளிச்சம் கொண்ட ஓரறையில் வசிக்கின்றனர். இதே பகுதியில் முன்பு அவர்கள் வசித்த 5,000-7,000 ரூபாய் வாடகை கொண்ட வீட்டிலிருந்து 2020ம் ஆண்டில் வாடகை கட்ட முடியாமல் இங்கு குடிபெயர்ந்தனர். ஐந்து மாடி கட்டடத்தை மங்கம்மா காவல் காக்கிறார். வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியும் செய்கிறார். ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு வசிக்க இடமும் மாத வருமானமாக 5,000 ரூபாயும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
“இந்த இடம் மூன்று பேருக்கே போதாது,” என்கிறார் அவர். வெளிச்சமான காலையில் கூட அவர்களின் அறை இருட்டாக இருக்கும். பழைய சுவர்களில் கோட்டையாவின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. உயரம் குறைந்த கூரை மட்டத்திலிருந்து ஒரு காற்றாடி தொங்குகிறது. “கல்பனாவை (மூத்த மகள்) இங்கு நான் அழைப்பதில்லை. எங்கே அவள் இருக்க முடியும்? உட்காரக் கூட முடியாது,” என்கிறார் அவர்.
கல்பனாவுக்கு 20 வயதான 2020ம் ஆண்டில் அவருக்கு மணம் முடித்து வைக்க மங்கம்மா முடிவு செய்தார். ஒப்பந்ததாரரிடமிருந்து கிடைத்த 2 லட்சம் ரூபாயை திருமணத்துக்கு அவர் செலவழித்தார். கோஷமகாலிலுள்ள வட்டிக்கடைக்காரரிடமிருந்து பணம் கடன் வாங்கினார். 3 சதவிகித மாதவட்டி. தொகுதி அலுவலகத்தை சுத்தப்படுத்தி அவர் ஈட்டும் பணத்தில் பாதி வட்டிக்கு சென்று விடுகிறது.
திருமணம் குடும்பத்தை திவாலாக்கியது. “6 லட்சம் ரூபாய் கடன் எங்களுக்கு இருக்கிறது. அன்றாடச் செலவுகளை சமாளிக்க என் வருமானம் போதுமானதாக இல்லை,” என்கிறார் அவர். கட்டட வளாகத்தை சுத்தப்படுத்தி கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, கோஷமகால் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை சுத்தப்படுத்தி ஒரு 13,000 ரூபாய் மாதந்தோறும் ஈட்டுகிறார்.
17 வயது வம்சியும் 16 வயது அகிலாவும் அருகாமை கல்லூரிகளில் படிக்கின்றனர். அவர்களது கல்விக்கு மொத்த வருடாந்திர செலவு ரூ.60,000. கணக்காளராக ஒரு பகுதி நேர வேலையை வம்சி தேடிக் கொண்டார். பிற்பகல் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரை அவர் வாரத்தின் ஆறு நாட்களுக்கு பணிபுரிகிறார். நாளொன்றுக்கு 150 ரூபாய் வருமானம். அவரது கல்விக் கட்டணத்துக்கு அந்த வருமானம் பயன்படுகிறது.
அகிலா மருத்துவம் படிக்க கனவு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தாய்க்கு அது நடக்குமா என உறுதியாக தெரியவில்லை. “அவளது கல்வியை தொடருவதற்கான வசதி என்னிடம் இல்லை. அவளுக்கு புதுத் துணிகள் வாங்கக் கூட என்னால் முடியவில்லை,” என்கிறார் அவநம்பிக்கையுடன் மங்கம்மா.
பாக்யலஷ்மியின் குழந்தைகள் இளவயதில் இருக்கின்றனர். அவர்கள் படிக்கும் தனியார் பள்ளிக் கட்டணம் வருடத்துக்கு 25,000 ரூபாய் ஆகிறது. “அவர்கள் நல்ல மாணவர்கள். எனக்கு அவர்களால் பெருமை,” என்கிறார் அந்தத் தாய்.
சுத்தப்படுத்தும் வேலையையும் பாக்யலஷ்மி செய்கிறார். வீராசாமி இறந்தபிறகு அந்த வேலையை செய்யத் தொடங்கினார். மகன்கள் மற்றும் மாமியார் ஆகியோருடன் கோடி பகுதியிலுள்ள இன்னொரு குடியிருப்பு வளாகத்தின் கீழ்தளத்திலுள்ள அறையில் வசிக்கிறார். வீராசாமியின் புகைப்படம் ஒரு சிறு மேஜை மீது இருக்கிறது. அறை முழுவதும் பிறரால் தானமளிக்கப்பட்ட அல்லது தூக்கி எறியப்பட்ட பொருட்கள் நிறைந்திருக்கின்றன.
வீட்டுக்குள் உள்ள இட நெருக்கடியால், குடும்ப உடைமைகள் சில அறைக்கு வெளியே வாகன நிறுத்தத்தின் ஒரு மூலையில் கிடக்கின்றன. வெளியே வைக்கப்பட்டிருக்கும் தையல் இயந்திரத்தின் மேல் போர்வைகளும் துணிகளும் குவிந்திருக்கின்றன. பாக்யலஷ்மி அதற்கான காரணத்தை சொல்கிறார். “ஒரு தையல் வகுப்பில் 2014ம் ஆண்டு சேர்ந்தேன். சில மேல்சட்டைகளும் பிற துணிகளும் கொஞ்ச காலத்துக்கு தைத்தேன்.” அனைவரும் தூங்குவதற்கான இடம் உள்ளே இல்லாததால், ஆண்குழந்தைகளான மாதவும் ஜக்தீஷும் அறைக்குள் தூங்குவார்கள். பாக்யலஷ்மியும் ராஜேஷ்வரியும் வெளியே பாய் மற்றும் பிளாஸ்டிக் படுக்கைகளில் தூங்குவார்கள். சமையலறை கட்டடத்தின் இன்னொரு பகுதி. பிளாஸ்டிக் திரைச்சீலைகளால் அடையாளப்படுத்தப்படும் சமையலறை மங்கலான வெளிச்சம் கொண்ட சிறிய அறை ஆகும்.
குடியிருப்பு வளாகத்தை சுத்தம் செய்து 5,000 ரூபாய் வருமானம் பெறுகிறார் பாக்யலஷ்மி. “குடியிருப்பில் வேலை செய்வது மூலம் என் மகன்களின் பள்ளிப் படிப்புக்கு நான் உதவ முடியும்.” கடந்த வருடங்களில் வாங்கிய கடனில் கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் வரை அடைக்க வேண்டியிருப்பதாக சொல்கிறார் அவர். “கடன் அடைக்க மாதந்தோறும் 8,000 ரூபாய் கட்டுகிறேன்.”
கட்டடத்தின் வணிக வளாகத்திலுள்ள பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவறையைத்தான் குடும்பமும் பயன்படுத்துகிறது. “பகல் நேரத்தில் நாங்கள் மிக அரிதாகவே பயன்படுத்த முடியும். ஆண்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்,” என்கிறார் அவர். கழிவறையை சுத்தம் செய்ய அவர் செல்லும் நாட்களின்போது, “என் கணவரைக் கொன்ற மலக்குழியின் துர்நாற்றமே மனதுக்கு வரும்,” என்கிறார் அவர். “என்னிடம் அவர் சொல்லியிருக்கலாம். நான் அவரை விட்டிருக்க மாட்டேன். அவர் உயிருடன் இருந்திருப்பார். நானும் இந்த கீழ்தளத்தில் மாட்டியிருக்க மாட்டேன்.”