கணேஷும் அருண் முகானேவும் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தானே மாவட்டத்தின் மும்பை நகருக்கு அருகே இருக்கும் கொலோஷி என்கிற கிராமத்திலுள்ள வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் பொருட்களை கொண்டு கார் போன்ற பொருட்களை உருவாக்குகின்றனர். அல்லது வெறுமனே அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் பெற்றோரோ செங்கல் சூளையில் வேலை பார்க்கின்றனர்.

“அவர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை. இளையவன் (அருண்) மரம் மற்றும் இதரப் பொருட்களைக் கொண்டு பொம்மைகள் செய்வதில் மும்முரமாக இருக்கிறான். விளையாட்டில்தான் அவனுக்கு முழு நாளும் கழிகிறது,” என தாய் நிரா முகானே கூறுகிறார். அவர் பேசுவதை இடைமறித்து அருண், “பள்ளியில் அலுப்பாக இருக்கிறதென எத்தனை முறை சொல்வது?” எனக் கேட்கிறார். இருவருக்குமான வாக்குவாதம் நல்ல விதமாக முடியவில்லை. வீட்டைச் சுற்றிக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு சமீபத்தில் உருவாக்கியிருக்கும் காரைக் கொண்டு விளையாட அருண் வெளியே சென்று விட்டார்.

26 வயது நிரா 7ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அவரது கணவரான 35 வயது விஷ்ணு இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். மகன்கள் முறையான கல்வி பெற வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். அப்போதுதான் தங்களைப் போல் செங்கல் சூளை வேலைகளை அவர்கள் பார்க்க வேண்டியிருக்காது என இருவரும் நினைக்கின்றனர். பல பழங்குடி குடும்பங்கள் ஷாஹாப்பூர் கல்யாண் பகுதிக்கு செங்கல் சூளை வேலைக்காக இடம்பெயர்கின்றனர்.

“என்னால் அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால் என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமென விரும்புகிறேன்,” என்கிறார் கட்கரி சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு. மகாராஷ்டிராவில் கட்கரி சமூகம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடிக் குழுவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் கட்கரி சமூகம் 41 சதவிகித படிப்பறிவு கொண்டிருப்பதாக பழங்குடித்துறை அமைச்சகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன் போதுமான மாணவர்கள் இல்லாமல் உள்ளூர் அரசாங்கப் பள்ளி மூடப்படவிருந்தபோது விஷ்ணுவும் அவரது மனைவியும் மகன்களை மட் கிராமத்திலுள்ள (மட ஆசிரம சாலை என உள்ளூரில் அழைக்கப்படுகிறது) அரசு ஆசிரமப் பள்ளியில் சேர்த்தனர். அரசாங்கத்தால் நடத்தப்படு 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகள் கொண்ட இந்த விடுதிப் பள்ளி தானே மாவட்டத்தின் முர்பாதிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 379 மாணவர்களில் 125 மாணவர்கள் அவர்களின் மகன்களைப் போல விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். “பள்ளியிலேயே தங்கி, உண்டு அவர்கள் படிக்க முடிவதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனினும் அவர்கள் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் விஷ்ணு.

PHOTO • Mamta Pared
PHOTO • Mamta Pared

இடது: தானே செய்த ஒரு மர சைக்கிளுடன் அருண் விளையாடுகிறார். வலது: முகேனின் குடும்பம்: விஷ்ணு கணேஷ், நிரா மற்றும் அருண் அவர்களின் வீட்டுக்கு வெளியே

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டபோது, மட் ஆசிரமப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கொலோஷியின் பெரும்பாலான குழந்தைகள் மீண்டும் வீடு திரும்பினர்.

விஷ்ணுவின் மகன்களும் வீடு திரும்பினர். “தொடக்கத்தில் அவர்கள் திரும்ப வந்தபோது வீடு வந்துவிட்டார்கள் என சந்தோஷப்பட்டோம்,” என்கிறார் அவர். அவர்கள் வந்தபிறகு அதிக வேலை பார்க்க வேண்டுமென்றபோதும் அவருக்கு சந்தோஷம் இருந்தது. அருகே இருக்கும் தடுப்பணையில் இரண்டு அல்லது மூன்று கிலோ மீன்களை விஷ்ணு பிடித்து அருகே இருக்கும் முர்பாதில் விற்று குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார். மகன்கள் வீட்டுக்கு வந்த பிறகு மீன் விற்ற வருமானம் போதவில்லை. எனவே அருகே இருக்கும் செங்கல் சூளையில் பணிபுரியத் தொடங்கினார். ஆயிரம் செங்கற்கள் செய்தால் 600 ரூபாய் கிடைக்கும். ஆனால் அத்தொகையை அவர் எட்ட முடியவில்லை. பல மணி நேரங்கள் வேலை பார்த்தாலும் ஒருநாளில் அதிகபட்சமாக 700-750 செங்கற்கள்தான் அவரால் செய்ய முடிந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து, பள்ளி மீண்டும் திறந்தது. மட் ஆசிரமப் பள்ளியில் வகுப்புகள் தொடங்கின. பெற்றோரின் வேண்டுகோள்களையும் மீறி கணேஷும் அருண் முகேனும் வகுப்புகளுக்கு திரும்ப மறுத்தனர். இரண்டு வருட இடைவெளியில் முன்பு படித்த எதுவும் நினைவில் இல்லை என்கிறார் அருண். அவரின் தந்தை விடுவதாக இல்லை. கணேஷ் மீண்டும் பள்ளியில் சேரத் தேவையான பாடப்புத்தகங்களை கூட முயற்சி செய்து வாங்கி விட்டார்.

4ம் வகுப்பு படித்த ஒன்பது வயது க்ருஷ்ணா பக்வான் ஜாதவுக்கும் அவரது நண்பரான 3ம் வகுப்பு படித்த கலுராம் சந்திரகாந்த் பவாருக்கும் ஆசிரமப் பள்ள்யில் திரும்ப சேர விருப்பம் இருக்கிறது. “எழுதவும் படிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார்கள் க்ருஷ்ணாவும் கலுராமும் ஒன்றாக. ஆனால் இரண்டு வருட இடைவெளிக்கு முன் முறையான கல்வி சில வருடங்கள் மட்டுமே பயின்ற அவர்கள் திறன்களை இழந்துவிட்டனர். மீண்டும் ஆரம்பத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இந்த சிறுவர்கள் ஓடை மற்றும் ஆறுகள் ஆகியவற்றின் கரைகளிலிருந்து மணல் எடுப்பதற்ஆக குடும்பங்களுடன் பயணிக்கின்றனர். குழந்தைகள் வீடுகளில் இருக்கும்போது குடும்பங்களுக்காக வருமானம் ஈட்டும் சுமை அதிகமாகிறது.

PHOTO • Mamta Pared
PHOTO • Mamta Pared

இடது: மட் கிராமத்தில் இருக்கும் அரசாங்க ஆசிரமப் பள்ளி. வலது: க்ருஷ்ண ஜாதவும் (இடது) கருராம் பவாரும் ஓடையில் விளையாடுகின்றனர்

*****

ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் பட்டியல் பழங்குடி சமூகக் குழந்தைகளின் விகிதம் நாடு முழுவதும் 35 சதவிகிதமாகும். 8ம் வகுப்புக்குப் பிறகு படிப்பு நிறுத்துபவர்கள் சதவிகிதம் 55 ஆகும். கொலோஷியின் மக்கள்தொகையில் பெரும்பான்மை பழங்குடிகள்தாம். இந்த குக்கிராமத்தில் கிட்டத்தட்ட 16 கட்கரி பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றனர். முர்பாத் ஒன்றியத்தில் பெருமளவு மா தாக்கூர் பழங்குடிகளும் இருக்கின்றனர். இரு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் ஆசிரமச் சாலையில் படிக்கின்றனர்.

இணையவழிக் கல்வியின் வழியாக வகுப்புகள் நடத்தும் வாய்ப்பை முயற்சித்த பிற பள்ளிகள் போலல்லாமல் மார்ச் 2020-ல் மட் ஆசிரமப் பள்ளி முற்றிலுமாக மூடப்பட்டது.

”எல்லா மாணவர்கள் மற்றும் குடும்பங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்கும் வாய்ப்பில்லாததால் இணைய வழிக் கல்வியை செயல்படுத்தும் வாய்ப்பில்லை. செல்பேசி கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோரும் நாங்கள் அழைக்கும்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஆசிரியை ஒருவர். பல இடங்களில் செல்பேசி தொடர்பு இல்லை என்றும் மாணவர்களை அழைக்க முடியவில்லை என்றும் பிறர் கூறினர்.

அவர்கள் முயற்சிக்காமலும் இல்லை. 2021ம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2022ம் ஆண்டின் தொடக்கத்திலும்  சில பள்ளிகள் மீண்டும் வகுப்புகளை தொடங்கின. விஷ்ணுவின் மகன்களைப் போலவும் க்ருஷ்ணா, கலுராம் போன்ற பல குழந்தைகளும் வகுப்பறை படிப்பில் தொடர்பற்றுவிட்டது. கற்பதில் அவர்களுக்கு ஆர்வமுமில்லை.

“பள்ளிக்கு செல்ல நாங்கள் வற்புறுத்திய சில குழந்தைகளும் வாசிப்பை மறந்துவிட்டனர்,” என ஒரு ஆசிரியர் பாரியிடம் கூறுகிறார். இத்தகைய மாணவர்களைக் கொண்டு ஒரு குழு உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள் அவர்களுக்கான பாடங்களை வாசித்துக் காட்டத் துவங்கினர். மெதுவாக அவர்கள் மீண்டும் பரிச்சயத்துக்குள் வரும்போதுதான் பிப்ரவரி 2021-ல் கோவிட் இரண்டாம் அலையால் ஊரடங்கு மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டது. மிகக் குறைவாக படிப்புக்கு திரும்பியவர்களும் மீண்டும் வீடுகளை அடைந்தனர்.

*****

PHOTO • Mamta Pared

கலுராம் மற்றும் க்ருஷ்ணா ஆகியோருடன் லிலா ஜாதவ். வேகவைக்கப்பட்ட சோற்றை மதிய உணவாக சிறுவர்கள் உண்ணுகின்றனர்

“நாங்கள் (என் வருமானத்தைக் கொண்டு) சாப்பிடுவதா அல்லது குழந்தைகளுக்கு செல்பேசிகள் வாங்கிக் கொடுப்பதா? என் கணவர் உடம்புக்கு முடியாமல் ஒரு வருடத்துக்கும் மேலாக படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறார்,” என்கிறார் க்ருஷ்ணாவின் தாயான லிலா ஜாதவ். மேலும் அவர், “என் மூத்த மகன் கல்யாணிலுள்ள செங்கல் சூளைக்கு சென்றிருக்கிறான்,” என்கிறார். அவரது இளைய மகனின் கல்விக்காக மட்டும் பயன்படுத்தவென செல்பேசி வாங்க செலவழிப்பது பற்றிய கேள்வியே அவருக்கு இல்லை.

க்ருஷ்ணாவும் கலுராமும் காய்கறி எதுவும் இன்றி வெறும் சோற்றை மதிய உணவாக உண்ணுகின்றனர். அரிசி பாத்திரத்தின் மூடியை திறந்து எவ்வளவு சோறு அவருக்கும் குடும்பத்துக்கும் இருக்கிறதெனக் காட்டுகிறார்.

தியோகரின் மற்றவர்களைப் போலவே லிலாவும் ஓடைக்கரைகளின் மண்ணை எடுத்துப் பிழைக்கிறார். ஒரு ட்ரக் லோடின் விலை 3,000 ரூபாய். ஒரு ட்ரக்கை நிரப்ப மூன்று, நான்கு பேர் ஒரு வாரத்துக்கு வேலை பார்க்க வேண்டும். பிறகு பணம் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

சாப்பிட்டபடியே கலுராம், “எப்போது நாங்கள் மீண்டும் படிக்க முடியும்?” எனக் கேட்கிறார். படிப்புடன் உணவும் கிடைக்கக் கூடிய சாத்தியம் என்பதால் அக்கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள லிலாவும் விரும்புகிறார்.

*****

மட் ஆசிரமப் பள்ளி இறுதியில் பிப்ரவரி 2022-ல் திறக்கப்பட்டது. சில குழந்தைகள் பள்ளிக்கு திரும்பினர். நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளி படிப்பில் ஒரு 15 குழந்தைகள் திரும்ப வரவில்லை. “அவர்களை பள்ளிக்கு திரும்ப வைக்க முடிந்தவற்றை நாங்கள் செய்கிறோம். ஆனால் இக்குழந்தைகள் தானே, கல்யாண் மற்றும் ஷாகாப்பூர் ஆகிய இடங்களில் அவர்களது பெற்றோருடன் சேர்ந்து வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களை கண்டுபிடிப்பது இப்போது மிகவும் கடினம்,” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்.

தமிழில் : ராஜசங்கீதன்

Mamta Pared

Mamta Pared (1998-2022) was a journalist and a 2018 PARI intern. She had a Master’s degree in Journalism and Mass Communication from Abasaheb Garware College, Pune. She reported on Adivasi lives, particularly of her Warli community, their livelihoods and struggles.

Other stories by Mamta Pared
Editor : Smruti Koppikar

Smruti Koppikar is an independent journalist and columnist, and a media educator.

Other stories by Smruti Koppikar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan