“வருடத்துக்கு ஒரு முறையேனும் இப்படியொரு நாளை எப்படியேனும் நான் உருவாக்கிக் கொள்வேன்.”
ஸ்வப்னலி தத்தத்ரேயா ஜாதவ் டிசம்பர் 31, 2022 அன்று நடந்த நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசுகிறார். வெட் என்கிற மராத்தி படம் சமீபத்தில்தான் வெளியாகி இருக்கிறது. சில தெரிந்த முகங்களை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் அந்த காதல் படத்துக்கு தேசிய கவனம் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்வப்னலி போன்ற வீட்டுப் பணியாளருக்கு, வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் கிடைக்கும் விடுப்பு நாளில், அத்தகைய படம் பார்ப்பதுதான் விருப்பமாக இருக்கிறது..
“இது புத்தாண்டு. அதனால்தான். உணவு கூட வெளியே கோரேகாவோனில் ஓரிடத்தில் சாப்பிட்டோம்,” என்கிறார் அவர் செலவழித்த நேரத்தை சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்து. அவருக்கு 23 வயது.
வருடத்தின் மிச்ச நாட்கள் ஸ்வப்னலிக்கு கடுமையான வாழ்க்கை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல், பிற வீட்டு வேலைகள் செய்வதென மும்பையின் ஆறு வீடுகளில் நீண்ட நேரங்கள் பணிபுரிகிறார். ஆனால் வீடுகளுக்கு இடையே பயணிக்கும் 10-15 நிமிட ஆசுவாச நேரத்தில், அவர் செல்பேசியில் மராத்தி பாடல்களை கேட்கிறார். “இவற்றை கேட்டு கொஞ்சம் என்னால் பொழுது போக்கிக் கொள்ள முடிகிறது,” என்கிறார் அவர் அந்த தருணங்கள் கொடுக்கும் புன்னகை கொண்டு.
கையில் செல்பேசி இருப்பது சற்று நேரம் இளைப்பாற வழி கொடுக்கிறது என நீலம் தேவி சுட்டிக் காட்டுகிறார். 25 வயதாகும் அவர் சொல்கையில், “நேரம் கிடைக்கும்போது நான் போஜ்புரி, இந்தி படங்களை செல்பேசியில் பார்க்கிறேன்,” என்கிறார். ஒரு புலம்பெயர் விவசாயத் தொழிலாளரான அவர், பிகாரின் முகமதுபூர் பல்லியா கிராமத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மொகமெ தால் பகுதிக்கு அறுவடை வேலைக்காக வந்திருக்கிறார்.
15 பெண் தொழிலாளர்களுடன் அவர் இங்கு வந்து சேர்ந்தார். நிலங்களிலிருந்து தானியங்களை அறுத்து கட்டு கட்டி கிடங்குக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்கின்றனர். அவர்கள் வெட்டி சுமக்கும் 12 கட்டு தானியங்களுக்கு ஒரு கட்டு தானியத்தை ஊதியமாக பெறுகின்றனர். அவர்களின் உணவிலேயே விலை உயர்ந்த உணவு, தானிய உணவுதான் என சுகாங்கினி சோரென் சுட்டிக் காட்டுகிறார். ”வருடம் முழுக்க இவற்றை உண்ணலாம். நெருங்கிய உறவினர்களுக்கும் நாங்கள் கொடுக்க முடியும்.” மாத வருமானமாக ஒரு குவிண்டால் தானியம் வரை கிடைக்கிறது என்கிறார் அவர்.
அவர்களது கணவர்கள் இன்னும் தூரமாக வேலை தேடி இடம்பெயர்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் சொந்த ஊரில் பிறரின் பராமரிப்பில் இருக்கின்றனர். மிகவும் இளைய குழந்தையென்றால் அவர்கள் தங்களுடன் கொண்டு வந்து விடுவார்கள்
காய்ந்த நெற்பயிர்களை கயிறாக்கிக் கொண்டே பேசும் அவர், வீட்டிலிருந்து வந்து இங்கு செல்பேசியில் படம் பார்க்க முடியவில்லை என்கிறார். “மின்னூட்ட இங்கு மின்சாரம் கிடையாது.” நீலமிடம் சொந்தமாக செல்பேசி இருக்கிறது. கிராமப்புற இந்தியாவில் இது அரிதான விஷயம். 61 சதவிகித ஆண்களிடம் செல்பேசி இருக்கும் கிராமப்புறத்தில் 31 சதவிகித பெண்களிடம்தான் செல்பேசிகள் இருக்கின்றன என குறிப்பிடுகிறது ஆக்ஸ்ஃபாம் இந்தியா பதிப்பித்த பாலின அசமத்துவ டிஜிட்டல் பிளவு அறிக்கை 2022 .
ஆனால் நீலம் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். பெரும்பாலான ட்ராக்டர்கள் வெளியே தொழிலாளர்களின் குடிசைகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருப்பதால், “முக்கியமான அழைப்புகளை செய்ய எங்களின் செல்பேசியை ட்ராக்டரில் சார்ஜ் செய்து கொள்வோம். பிறகு செல்பேசியை வைத்து விடுவோம். முறையான மின்சாரம் இருந்தால் நிச்சயமாக நாங்கள் படங்கள் பார்த்திருப்போம்,” என்கிறார் அவர்.
மொகமெ டாலிலிருக்கும் பெண்கள் அதிகாலை 6 மணியிலிருந்து பணி தொடங்குகிறார்கள். வெயில் உச்சத்தை எட்டும் மதியவேளையில் தங்களின் கருவிகளை கீழே வைக்கின்றனர். பிறகு வீடுகளுக்கு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீரெடுக்கும் நேரம். அதற்கும் பிறகு, “அவரவருக்கென கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்வோம்,” என்கிறார் அனிதா.
ஜார்கண்டின் கிரிதி மாவட்ட நராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சாந்தல் பழங்குடியான அவர் சொல்கையில், “மதியவேளையில் வெயில் கடுமையாக இருக்கும் என்பதாலும் வேலை பார்க்க முடியாது என்பதாலும் நான் தூங்குவேன்.” தினக்கூலி விவசாயத் தொழிலாளரான அவர் ஜார்கண்டிலிருந்து பிகாருக்கு தானியங்களையும் பயறுகளையும் மார்ச் மாதத்தில் இங்கு மொகமே டாலில் அறுவடை செய்வதற்காக இடம்பெயர்ந்திருக்கிறார்.
பாதி அறுவடை செய்திருக்கும் நிலத்தில் ஒரு டஜன் பெண்கள் அமர்ந்து சோர்வான கால்களை நீட்டி, மாலை நேரம் நெருங்கும் நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சோர்வுற்றிருந்தாலும் பெண் விவசாயத் தொழிலாளர்களின் கைகள் ஓய்வாக இல்லை. அவை பயறுகளை சுத்தப்படுத்தி பிரித்துக் கொண்டிருக்கின்றன அல்லது காய்ந்த நெற்பயிறைக் கொண்டு அடுத்த நாள் கட்டுகளுக்கு தேவைப்படும் கயிறுகளை திரித்துக் கொண்டிருக்கின்றன. அருகேதான் அவர்களின் வீடுகள் இருக்கின்றன. பாலிதீன் கூரைகளையும் மூன்றடி உயர வைக்கோல் சுவர்களையும் கொண்ட வீடுகள். அவர்களின் வீட்டு மண் அடுப்புகள் விரைவில் இரவுணவுக்காக பற்ற வைக்கப்படும். அவர்களின் பேச்சு அடுத்த நாள் வரை நீளும்.
2019ம் ஆண்டின் NSO தரவின்படி , இந்தியப் பெண்கள் சராசரியாக 280 நிமிடங்களை தினமும் வருமானமற்ற வீட்டுவேலைகள் மற்றும் பராமரிப்பு சேவைகளில் செலவிடுகின்றனர். ஆனால் ஆண்களோ வெறும் 36 நிமிடங்கள்தான் செலவு செய்கின்றனர்.
*****
வரைமுறையின்றி செலவழிக்குமளவுக்கு நேரம் கிடைக்கத்தான் சந்தால் பழங்குடி சிறுமிகளான ஆரதி சோரேன் மற்றும் மங்கலி முர்மூ ஆகியோர் விரும்புகின்றனர். ஒன்று விட்ட சகோதரிகளான இருவருக்கும் 15 வயது. மேற்கு வங்கத்தின் பருல்தாங்கா கிராம விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள். “இங்கு வந்து பறவைகளை பார்ப்பது எனக்கு பிடிக்கும். சில நேரங்களில் நாங்கள் பழங்கள் பிடுங்கி, இருவரும் சேர்ந்து உண்ணுவோம்,” என்கிறார் ஆரதி. இருவரும் மரத்தடியில் அமர்ந்து மேயும் கால்நடைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
“இச்சமயத்தில் (அறுவடைக்காலம்) விலங்குகளுக்கு அறுவடை மிச்சம் தீவனமாக கிடைத்து விடுவதால் அவற்றை மேய்த்துக் கொண்டு அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை. மர நிழலில் அமர எங்களுக்கு நேரம் கிடைக்கிறது,” என்கிறார் அவர்.
பாரி அவர்களை அவர்களின் தாய்கள் அருகாமை கிராமத்திலுள்ள ஓர் உறவினரை சந்திக்க சென்றிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சந்தித்தது. “என் அம்மாதான் எப்போதும் கால்நடைகளை மேய்ப்பார். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் நான் மேய்ப்பேன். இங்கு வந்து மங்கலியுடன் நேரம் கழிப்பது எனக்கு பிடிக்கும்,” என்னும் ஆரதி ஒன்று விட்ட சகோதரியை பார்த்து புன்னகையுடன், “அவள் என் தோழியும் கூட,” என்கிறார்.
மங்கலிக்கு மேய்ச்சல் என்பது அன்றாட வேலை. அவர் 5ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கல்வியை தொடரும் வசதி பெற்றோருக்கு இல்லாததால், நிறுத்த வேண்டியிருந்தது. “பிறகு ஊரடங்கு வந்தது. அதற்குப் பிறகு பள்ளிக்கு என்னை அனுப்ப அவர்கள் சிரமப்பட்டார்கள்,” என்னும் மங்கலி வீட்டில் சமையல் வேலை செய்கிறார். விலங்குகளை மேய்ப்பதில் அவருடைய பங்கு மிகவும் முக்கியம். ஏனெனில் கால்நடை வளர்ப்புதான் இந்த வறண்ட பள்ளத்தாக்கு பகுதியில் நிலையான வருமானத்தை தரக் கூடியது.
61 சதவிகித ஆண்களிடம் செல்பேசி இருக்கும் கிராமப்புறத்தில் 31 சதவிகித பெண்களிடம்தான் செல்பேசிகள் இருக்கின்றன என குறிப்பிடுகிறது ஆக்ஸ்ஃபாம் இந்தியா பதிப்பித்த பாலின அசமத்துவ டிஜிட்டல் பிளவு அறிக்கை 2022
”எங்களின் பெற்றோரிடம் சாதாரண செல்பேசிகள் இருக்கின்றன. சில நேரங்களில் இவற்றை (சொந்தமாக செல்பேசி பெறுவது) குறித்த விஷயங்களை பேசுவதுண்டு,” என்கிறார் ஆரதி. இந்தியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகித செல்பேசி பயன்பாட்டாளர்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லை எனக் குறிப்பிடுகிறது பாலின அசமத்துவ டிஜிட்டல் பிளவு அறிக்கை 2022 . அவர்களின் அனுபவமும் வழக்கமற்றதும் கிடையாது.
பொழுதுபோக்கு பற்றிய உரையாடல்களில் செல்பேசிகள் இடம்பெறுகின்றன. சில நேரங்களில் வேலைக்கான உரையாடல்களிலும் இடம்பெறுகின்றன. விவசாயத் தொழிலாளரான சுனிதா படேல் கோபத்துடன் சுட்டிக் காட்டுகிறார்: “டவுன்களுக்கு சென்று காய்கறிகளை கூவி கூவி விற்கும்போது, அவர்கள் (நகரப் பெண்கள்) செல்பேசிகளை பார்த்துக் கொண்டு எங்களிடம் பேசக் கூடச் செய்வதில்லை. மிகுந்த வலியை இந்த நடத்தை கொடுக்கிறது. அதிக கோபத்தையும் அளிக்கிறது.”
மதிய உணவுக்கு பிறகு, சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் மாவட்டத்தின் ராகா கிராமத்து நெல் வயலில் பெண் தொழிலாளர் குழுவுடன் சுனிதா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். சிலர் அமர்ந்திருக்கின்றனர். சிலர் குட்டி தூக்கம் போட்டிருக்கின்றனர்.
“வருடம் முழுக்க நிலத்தில் வேலை செய்கிறோம். ஓய்வு கிடைப்பதில்லை,” என்கிறார் துக்தி பாய் நேதம் யதாரத்தமாக. முதிய பழங்குடி பெண்ணான அவருக்கு கைம்பெண் உதவித் தொகை கிடைக்கிறது. ஆனாலும் தினக்கூலி வேலை செய்யும் நிலை அவருக்கு இருக்கிறது. “நெல்வயலிலுள்ள களைகளை அகற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வருடம் முழுக்க நாங்கள் பணிபுரிகிறோம்.”
சுனிதாவும் ஒப்புக் கொள்கிறார். “எங்களுக்கு ஓய்வு நேரம் கிடைப்பதில்லை. ஓய்வு என்பது நகரத்து பெண்களுக்கானது.” ஒரு நல்ல உணவு என்பதே சொகுசு என்கிறார் அவர்: “அற்புதமான உணவுகளை உண்ண வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. ஆனால் பணம் இல்லாததால் அது நடக்காது.”
*****
யல்லுபாய் நந்திவாலே ஓய்வு நேரத்தில் ஜைனாப்பூர் கிராமத்தினருகே கொல்ஹாப்பூர் - சங்க்லி நெடுஞ்சாலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். சீப்பு, முடி ஆபரணங்கள், செயற்கை ஆபரணங்கள், அலுமினிய பாத்திரங்கள் மற்றும் பிறவற்றை விற்கிறார். அவற்றை 6-7 கிலோ எடை கொண்ட மூங்கில் கூடை மற்றும் தார்பாலின் பை ஆகியவற்றில் சுமக்கிறார்.
அடுத்த வருடம் அவருக்கு 70 வயது. நிற்கும்போதும் நடக்கும்போதும் மூட்டு வலிப்பதாக சொல்கிறார். ஆனாலும் அன்றாட வருமானத்துக்காக அவர் அந்த இரண்டையும் செய்ய வேண்டியிருக்கிறது. “நூறு ரூபாய் கிடைப்பது கூட கடினமாக இருக்கிறது. சில நாட்களின் எனக்கு ஒன்றும் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர் வலிக்கும் கால்களை கையில் பிடித்துக் கொண்டே.
கணவர் யல்லப்பாவுடன் அவர் ஷிரோல் தாலுகாவின் தானோலி கிராமத்தில் வசிக்கிறார். நிலமற்ற அவர்கள் நந்திவாலே மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
“பொழுதுபோக்கு, வேடிக்கை ஆகியவற்றில் ஆர்வம் (ஒருவருக்கு) திருமணத்துக்கு முன் இருக்கும்,” என்கிறார் அவர் புன்னகையுடன் இளமைக்காலத்தை நினைவுகூர்ந்து. “நான் வீட்டில் இருந்ததே இல்லை… வயல்களில் சுற்றுவேன்.. ஆற்றில் இருப்பேன். அது எதுவும் திருமணத்துக்கு பின் நீடிக்கவில்லை. சமையற்கட்டும் குழந்தைகளும்தான்.”
நாடு முழுக்க உள்ள கிராமப்புற பெண்கள் கிட்டத்தட்ட 20 சதவிகித நாளை வருமானமற்ற வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு செலவழிப்பதாக ஒரு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இத்தகைய களத்தில் முதன்முறையாக எடுக்கப்பட்டிருக்கும் அக்கணக்கெடுப்பின் பெயர் இந்தியாவில் நேர பயன்பாடு - 2019 . புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்ட அறிக்கை அது.
கிராமப்புற இந்தியப் பெண்களின் பெரும்பாலானோருக்கு தொழிலாளர், தாய், மனைவி, மகள், மருமகள் ஆகிய பங்களிப்புகளிலிருந்து விலகும் நேரங்கள், ஊறுகாய் தயாரிப்பது, அப்பளம் செய்வது, தைப்பது போன்ற வீட்டு வேலைகளில் கழிகின்றன. “கையில் தைக்கும் எந்த வேலையும் எங்களுக்கு இளைப்பாறுதலாக இருக்கும். சில பழைய புடவைகளை நாங்கள் தேர்ந்தெடுத்து, வெட்டி தைத்து, ஒரு கம்பளத்தை வீட்டுக்கு தயாரிப்போம்,” என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் பைதக்வா குக்கிராமத்தில் வசிக்கும் ஊர்மிளா தேவி.
கோடை காலத்தில் குளியலுக்காக எருமைகளை தினந்தோறும் பிற பெண்களுடன் சேர்ந்து அழைத்து செல்வது இந்த 50 வயது அங்கன்வாடி ஊழியருக்கு இருக்கும் சந்தோஷங்களில் ஒன்றாகும். “எங்களின் குழந்தைகள் பெலான் ஆற்றில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து ஊர்க்கதை பேசுவோம்,” என்னும் அவர் உடனடியாக கோடை காலத்தில் அது வெறும் ஓடையளவுக்குதான் இருக்கும் என்பதால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பர் என்கிறார்.
கொராவோன் மாவட்டத்தின் தியோகாட் கிராமத்தின் அங்கன்வாடி பணியாளராக ஊர்மிளாவின் மொத்த வாரமும், இளம் தாய்களையும் அவர்களது குழந்தைகளையும் பராமரிப்பதிலும் பிரசவத்துக்கு முன்னும் பின்னுமான நோய் தடுப்பு பரிசோதனைகள் குறித்த நீண்டப் பட்டியலை குறிப்பதிலுமே கழிந்து விடும்.
வளர்ந்த நான்கு குழந்தைகளின் தாயும் மூன்று வயது குஞ்ச் குமாரின் பாட்டியுமான அவர் தியோகாட்டின் ஊர்த் தலைவராக 2000-2005 வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித்துகள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் கல்வியறிவு பெற்றிருக்கும் சில பெண்களில் அவரும் ஒருவர். “பள்ளிப்படிப்பை நிறுத்தி திருமணம் செய்து கொள்ளும் இளம் பெண்களை நான் திட்டுவேன். ஆனால் அவர்களோ அவர்களின் குடும்பத்தினரோ பொருட்படுத்துவதில்லை,” என்கிறார் அவர்.
திருமணங்களும் நிச்சயதார்த்தங்களும் பெண்களுக்கென கொஞ்ச நேரத்தை கொடுக்கிறது. “ஒன்றாக பாடுவோம், சிரிப்போம்,” என்கிறார் ஊர்மிளா. திருமண மற்றும் குடும்ப உறவுகளை பற்றி பாடப்படும் பாடல்கள் சமயங்களில் கொச்சையாகவும் மாறும் என சொல்லி சிரிக்கிறார்.
திருமணங்கள் மட்டுமின்றி, விழாக்கள் கூட கொஞ்ச நேரத்தை பெண்களுக்கு வழங்குகிறது, குறிப்பாக இளம்பெண்களுக்கு.
ஆரதி மற்றும் மங்கலி பாரியிடம் சொல்கையில், பிர்பும் மாவட்ட சந்தால் பழங்குடிகளால் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் பந்தனா விழாவின்போது அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்கின்றனர். “உடை அணிந்து கொள்வோம். ஆடுவோம். பாடுவோம். அம்மாக்கள் வீட்டில் இருப்பார்கள் என்பதால், அதிக வேலை இருக்காது. தோழிகளுடன் செலவு செய்ய நேரம் கிடைக்கும். யாரும் எங்களை திட்ட மாட்டார்கள். நாங்கள் செய்ய விரும்புவதை செய்வோம்,’ என்கிறார் ஆரதி. இச்சமயத்தில் கால்நடைகளை அப்பாக்கள் பராமரிப்பார்கள். ஏனெனில் அவை விழாக்களின்போது வணங்கப்படும். “எனக்கு வேலை கிடையாது,” என்கிறார் மங்கலி புன்னகையுடன்.
ஆன்மிகப் பயணங்களும் ஓய்வை வழங்கத்தக்கவை என்கிறார் தம்தாரியில் வசிக்கும் 49 வயது சித்ரேகா. நேரம் கிடைத்தால் அத்தகைய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். “(மத்தியப் பிரதேசம்) சேகூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலுக்கு என் குடும்பத்துடன் ஓரிரண்டு நாட்களுக்கு செல்ல விரும்புகிறேன். ஒருநாள் விடுமுறை எடுத்து செல்வேன்.”
சட்டீஸ்கரின் தலைநகரில் வீட்டுப் பணியாளராக வேலை பார்க்கும் அவர் அதிகாலை 6 மணிக்கு தூக்கம் கலைகிறார். வீட்டு வேலை செய்கிறார். பிறகு நான்கு வீடுகளுக்கு சென்று வேலை பார்க்கிறார். மீண்டும் வீட்டுக்கு மாலை 6 மணிக்கு வருகிறார். மாதவருமானமாக 7,500 ரூபாய் கிடைக்கிறது. இரண்டு குழந்தைகளையும் மாமியாரையும் உள்ளிட்ட ஐவர் கொண்ட குடும்பத்துக்கு அவரின் ஊதியம் முக்கியத் தேவை.
*****
ஸ்வப்னலிக்கு வீட்டுப் பணியாளராக வேலை இல்லாத நாளென்பது அரிது. “மாதத்துக்கு இரண்டு நாட்கள்தான் எனக்கு விடுமுறை கிடைக்கும். வேலை கொடுத்திருப்பவர்கள் அனைவருக்கும் வார இறுதி நாட்கள் விடுப்பு என்பதால் நான் எல்லா சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்க்க வேண்டும். அந்த நாட்களில் விடுப்பு எடுக்கும் வாய்ப்பே இல்லை,” என அவர் விவரிக்கிறார். அவருக்கென சொந்தமாக விடுப்பு எடுத்துக் கொள்வது குறித்து அவரே கூட யோசிப்பதில்லை.
“என் கணவர் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ய வேண்டியதில்லை. சில நேரங்களில் அவர் இரவு நேர காட்சிக்கு சென்று சினிமா பார்க்க சொல்வார். எனக்கு தைரியம் கிடையாது. அடுத்த நாள் காலை வேறு நான் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.
வீட்டில் குடும்பங்களுக்காக பல வேலைகளை செய்யும் பெண்கள், ரசித்து செய்யும் வேலைகள் ஓய்வு கொடுக்கும் வேலையாக மாறிக் கொள்கின்றன. “வீட்டுக்கு சென்று, சமையல், சுத்தப்படுத்துதல், குழந்தைகளுக்கு உணவளித்தல் போன்ற வேலைகளை செய்து முடிப்பேன். பிறகு உட்கார்ந்து கைச்சட்டைகளுக்கும் சால்வைகளுக்கும் பூத்தையல் போடுவேன்,” என்கிறார் ருமா லோகர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்ட ஆதித்யபூர் கிராமத்தை சேர்ந்த 28 வயதான அவர், கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க அருகே உள்ள புல்வெளியில் நான்கு பெண்களுடன் அமர்ந்திருக்கிறார். 28லிருந்து 65 வயது வரையிலான பெண்கள் நிலமற்றவற்களாக பிறரது நிலங்களின் பணிபுரிகின்றனர். மேற்கு வங்கத்தில் பட்டியல் சாதியாக இருக்கும் லோகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள்.
“காலையிலேயே வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு, ஆடுமாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்தோம்,” என்கிறார் அவர்.
“எங்களுக்கான நேரத்தை எப்படி உருவாக்கிக் கொள்வதென எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் அதைக் காட்டிக் கொள்வதில்லை,” என்கிறார் அவர்.
“நேரம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” எனக் கேட்கிறோம்.
“பெரும்பாலும் ஒன்றுமில்லை. சின்னதாக ஒரு தூக்கம் போட்டு, பிடித்த பெண்களுடன் பேசிக் கொண்டிருப்போம்,” என்கிறார் ரூமா அர்த்தபுஷ்டியுடன் குழுவிலிருக்கும் பிற பெண்களை பார்த்தபடி. அவர்கள் வெடித்து சிரிக்கின்றனர்.
“நாங்கள் வேலை பார்ப்பதாக யாரும் கருதுவதில்லை. நேரத்தை வீணடிக்க மட்டுமே செய்கிறோமென அனைவரும் சொல்கின்றனர்.”
இக்கட்டுரைக்கான பங்களிப்பை மகாராஷ்டிராவிலிருந்து தேவேஷ் மற்றும் ஜோதி ஷினோலி ஆகியோரும் சட்டீஸ்கரிலிருந்து புருசோத்தம் தாகூரும் பிகாரிலிருந்து உமேஷ் குமார் ரேயும் மேற்கு வங்கத்திலிருந்து ஸ்மிதா காடோரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து ப்ரிதி டேவிடும் ஆசிரியர் குழுவின் ரியா பெல், சன்விதி ஐயர், ஜோஷுவா போதிநெத்ரா மற்றும் விஷாகா ஜார்ஜ் ஆகியோரும் புகைப்படங்களை தொகுத்த பினாய்ஃபர் பருச்சாவும் அளித்திருக்கின்றனர்
முகப்பு படம்: ஸ்மிதா காடோர்
தமிழில் : ராஜசங்கீதன்