மார்ச் 6-ம் தேதியன்று நாசிக்கில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது அதன் முன்னணியில் நின்றவர் 60 வயதான ருக்மாபாய் பெண்ட்குலே. டிண்டோரி தாலுகா, டொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த அவர் கையில் சிகப்புக் கொடியை அசைத்து ஆடினார். பல்லாயிரக்கணக்கான பெண்கள் மும்பையை நோக்கி நடந்தார்கள். ஏறத்தாழ 180 கிலோமீட்டர்கள்... கொளுத்திய வெயிலில் காலணிகள் இல்லாமல், குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் வீட்டில் விட்டுச் செல்ல முடியாமல் அவர்களை அழைத்துக்கொண்டும், சுமந்துகொண்டும் பெண்கள் நடந்தார்கள்.
நாசிக், பல்கர், தஹானு, அஹ்மெத்நகர் மற்றும் இதர மாவட்டங்களிலிருந்து ஆதிவாசி பெண் விவசாயிகளும், மராத்வாடா, விதர்பாவைச் சேர்ந்த பெண் விவசாயிகளும் மோர்ச்சாவில் அதிக அளவில் கலந்துகொண்டார்கள். மிகச் சிறிய நிலங்களைக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் ஆதிவாசி பெண் விவசாயிகள், மற்றவர்களின் நிலங்களில் கூலியாட்களாக வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஒரு வாரம் முழுதும் நடந்த இந்த பேரணியில் கலந்துகொண்டதன் மூலமாக மாத வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை இழந்திருந்தார்கள்.
”பெரும்பாலான விவசாய வேலைகள் (விதைப்பது, நாற்று நடுவது, அறுவடை, நெல் பிரித்தல், நெல்லை வயலிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லுதல், உணவு தயாரித்தல், கால்நடை வளர்ப்பு) என அனைத்தையும் செய்வது பெண்கள்தான்” என்கிறார் பி.சாய்நாத், கிராமப்புற இந்திய மக்கள் குறித்த தகவல் காப்பகத்தின் நிறுவனர் (PARI). ”ஆனால் - சட்ட நடைமுறைக்கு எதிராக - பெண்களுக்கு நில உரிமை தரமறுத்து அவர்களை விவசாயிகளாக ஏற்க மறுக்கிறோம்.” என்கிறார் அவர்.
அகில பாரதீய கிசான் சபா ஒருங்கிணைத்த பேரணி, விவசாயிகள், ஆண்கள், பெண்கள் அனைவரையும் சாலைக்கு அழைத்துவந்து, தாங்கள் உழும் நிலத்தின் மீதானஉரிமையைப் பெற்றுத்தரும் வன உரிமைச் சட்டம் 2006 உட்பட அனைத்தையும் கோர வைத்தது.
சில பெண் விவசாயிகளை இங்கு ஆவணப்படுத்துகிறோம்:
67 வயதான சுஷீலா நாக்லேவுக்கு அந்த வாரத்தில் ஒரு கூடுதல் பொறுப்பு. மோர்ச்சாவில் அவரது 10 வயது பேரன் சமர்த்தும் இருந்தார். ”அவனுடைய அம்மாவும் (விவசாயக் கூலிகள், குடும்பத்தின் இரண்டு ஏக்கரில் நெல் விளைவிப்பவர்கள்) அப்பாவும் வெளியூரில் இருக்கிறார்கள்” என்றார் சுஷீலா. ”இன்னொரு பேரனை உறவினர் ஒருவரிடம் விட்டிருக்கிறேன். இவன் மிகவும் குறும்பு செய்வான். அதனால் இவனை மட்டும் என்னுடன் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன். இந்த பேரணியைத் தவறவிடும் பேச்சுக்கே இடமில்லை” என்றார் அவர். சுஷீலா, நாசிக் மாவட்டத்தில் த்ரிம்பகேஷ்வர் தாலுகாவின் சவர்பதா கிராமத்திலிருந்து வருகிறார். கஷ்டமான இந்த பயணம் முழுவதும், ”ஒரே ஒருமுறைதான் அவன் அழுதான்” என்கிறார், புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் பேரன் சமர்த்தைப் பார்த்துக்கொண்டே. ”இவ்வளவு தூரம் நடந்ததற்கு, அவனை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.
சமர்த்தைப் பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாதபோது கூட சுஷீலா ஏன் இந்த பேரணியை தவறவிட நினைக்கவில்லை? ஒரே கிராமத்தைச் சேர்ந்த குசும் பச்சா மற்றும் கீதா கெய்க்வாட், ஆசாத் மைதானத்தில் நின்று கொண்டு அதற்கு பதிலளித்தார்கள். ”ஒரு வாரம், இந்த கொளுத்தும் வெயிலில் நடப்பதற்கு எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன” என்று கேட்கிறார் கீதா. சுஷீலா மற்றும் குசுமைப் போலவே, கோலி மஹாதேவ் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்தான் கீதா. ”பல பத்தாண்டுகளாக இந்த நிலத்தை உழுது வருகிறோம். எங்களுக்கு நிலத்தின் மீது உரிமை வேண்டும். எங்கள் உரிமையைப் பெறும்வரை நாங்கள் ஒயப்போவதில்லை” என்றார் கீதா.
40 வயதான சவிதா லிலாகே, அவருடைய கணவரோடு பேரணிக்கு வந்திருந்தார். ”இப்போது எங்கள் நிலத்தைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை அங்கு” என்றார். கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்த சவிதா, நாசிக் மாவட்டத்தின் டிண்டோரி தாலுகாவைச் சேர்ந்த அம்பேகான் கிராமத்தைச் சேர்ந்தவர். ”வீடு பூட்டி இருக்கிறது. கோதுமையையும், நிலக்கடலையையும் விளைவிப்பதற்கு மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் அது எங்களை விட்டுப்போய்விடுமோ என்ற தொடர்ச்சியான பயம் எங்களுக்கு இருக்கிறது. பக்கத்து கிராமங்கள் விளை நிலங்களில் மரங்களை நட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். எங்களுக்கு நிலம் இல்லாததால், நாங்கள் வன அதிகாரிகளின் கருணையில் வாழவேண்டியிருக்கிறது” என்றார்.
மார்ச் 6-ம் தேதியன்று, நாசிக்கில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, அதன் முன்னணியில் நின்றவர் 60 வயதான ருக்மாபாய் பெண்ட்குலே. டிண்டோரி தாலுகா, டொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த அவர் கையில் சிகப்புக் கொடியை அசைத்து ஆடினார். ருக்மாபாய் கோலி மஹாதேவ் சமூகத்தைச் சார்ந்தவர். வாரத்தில் மூன்று நாட்களுக்கு வேலை செய்யும் அவருக்கு ஒரு நாளைக்கான கூலி 200 ரூபாய். ஒருவாரம் பேரணியில் நடப்பதால் அவர் 600 ரூபாயை இழக்கவிருந்தார். ”எனக்கு விளைவிக்க நிலம் இல்லையென்றாலும், என் கிராமத்திலிருக்கும் விவசாயிகள் நிலத்தை இழந்துவிட்டால் எனக்கும் வேலையிருக்காது” என்றவரிடம், ‘அரசு இதற்கு படிந்துபோகும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டேன். “அவர்களுக்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா” என்றார் அவர்.
தானே மாவட்டம், ஷஹாப்பூர் தாலுகாவின் அகை கிராமத்தின் மதுரா ஜாதவ், வொர்லி பழங்குடியைச் சேர்ந்தவர். பேரணியின் மூன்றாம் நாளில் இணைந்துகொண்ட அவர், மும்பை வரை நான்கு நாட்கள் பயணித்தார். ”பேரணியில் நடந்து சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது. மருந்துகள் உண்ண வேண்டும்” என்றார்.
நிலம் விளைவிக்கும் பல விவசாயிகளுக்கு தண்ணீர்தான் அதிக தேவை. தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் பருவமழையை நம்பியிருப்பார்கள். நாசிக் மாவட்டத்தின் அம்பேகான் கிராமத்தின், வொர்லி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் 50 வயது ஷாந்தாபாய் வாக்மரே. மழையில்லாததால் விவசாயம் கடினமான விஷயமாகப் போய்விட்டது என்றவரிடம், புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என்று கேட்டதும், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தெற்கு மும்பையில் ஆசாத் மைதானத்தில் இருந்த விவசாயிகளைப் போலவே, அவரும் கேமராக்களாலும் வெயிலாலும் களைத்துப் போயிருந்தார். மைதானத்தில், மற்ற விவசாயிகளுடன் அமர்ந்திருந்தார் ஷாந்தாபாய்.
சுர்குணா தாலுக்காவைச் சேர்ந்த கர்வாத் குடிசைப்புறத்திலிருந்து வந்திருந்தார் 50 வயதான சிந்துபாய் பல்வே. கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர். ”ஆற்றுத் திட்டம் சுர்குணாவின் நிலப் பகுதியை அழித்துவிடும். ஆதிவாசிகளை இடம்பெயர வைத்துவிடும்” என்றார் அவர்.
கிசான் சபா தலைவரான அஷோக் தாவ்லே அரசு பல்வேறு ஆறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க திட்டம் வைத்திருப்பதாகக் எங்களிடம் சொன்னார். (குஜராத்தின் நர்-பர் ஆறுகள் உட்பட, நாசிக் வழியாக பாயும் தமகங்கா, நாசிக், பல்கர்ணா வழியோடும் வைதர்னா) அணைகள் கட்டி அந்த தண்ணீரை அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். அல்லது அங்கிருக்கும் கிராமங்கள் நீரில் மூழ்கும்.
65 வயதான கமலாபாய் கெய்க்வாட், கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்த ஆதிவாசி, இரவு 11 மணிக்கு வலி நிவாரணிகள் கொடுப்பதற்காக வேனை நோக்கி சென்று கொண்டிருந்தார். ”நடந்துதான் ஆகவேண்டும்” என்று புன்னகைத்தார். நாசிக்கின் டிண்டூரி கிராமத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். அடுத்த நாள் அவரைப் பார்த்தபோது செருப்புகள் அணிந்திருந்தார். அந்த செருப்பு அவரது காலை விட பெரியதாக இருந்தது. ”காலையில் இதை அணிந்துகொள்ளும்படி சொல்லி ஒருவர் இதைக் கொடுத்தார்” என்று புன்னகைத்தார் அவர்.