சானியா முல்லானியைப் பொறுத்தவரை மழைப்பருவத்தின் முதல் மழை, அவர் பிறந்தநாள் பற்றிய ஆரூடத்த்தின் நினைவு ஆகும்.
ஜூலை 2005-ல் அவர் பிறந்தார். ஒரு வாரத்துக்கு முன்தான் கடும் வெள்ளம் நேர்ந்து 1,000 உயிர்களை பலி கொண்டிருந்தது. மகாராஷ்டிராவில் 2 கோடி மக்களை பாதித்திருந்தது. “வெள்ள காலத்தில் பிறந்தவள் அவள்; வெள்ளத்தில்தான் அவளின் பெரும்பான்மையான காலம் கழியும்,” என அவரது பெற்றோரிடம் மக்கள் சொல்லியிருக்கின்றனர்.
ஜுலை 2022-ன் முதல் வாரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதும் 17 வயது சானியா அதை மீண்டும் நினைவுகூர்ந்தார். “நீர் மட்டம் உயருகிறது என எப்போது சொல்லப்பட்டாலும் வெள்ளம் வந்து விடுமோ என்கிற பயம் எனக்குள் ஏற்பட்டுவிடும்,” என்கிறார் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் ஹத்கனங்க்ளே தாலுகாவிலுள்ள பெந்தாவடேவில் வசிக்கும் அவர். கிராமத்தின் 4,986 பேரும் இரண்டு கடும் வெள்ளங்களை 2019ம் ஆண்டிலிருந்து பார்த்திருக்கின்றனர்.
“ஆகஸ்ட் 2019 வெள்ளங்களின்போது, எங்கள் வீட்டில் வெறும் 24 மணி நேரங்களில் ஏழடிக்கு நீர் உயர்ந்தது,” என நினைவுகூருகிறார் சானியா. வீட்டுக்குள் நீர் புகத் தொடங்கிய சமயத்தில் முல்லானி குடும்பம் தப்பித்துவிட்டது. எனினும் அச்சம்பவம் சானியாவுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளங்கள் மீண்டும் கிராமத்தை ஜூலை 2021-ல் தாக்கியது. இம்முறை, கிராமத்தின் வெளியே இருந்த ஒரு நிவாரண முகாமுக்கு குடும்பம் நகர்ந்தது. மூன்று வாரங்கள் கழித்து பிரச்சினை ஒன்றுமில்லை என கிராம அலுவலர்கள் சொன்ன பிறகுதான் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
டேக்வொண்டோ தற்காப்புக் கலையின் சாம்பியனான சானியா, அடுத்தக் கட்டமான ‘ப்ளாக் பெல்ட்’ பெறுவதற்கான பயிற்சி 2019ம் ஆண்டின் வெள்ளம் தொடங்கி தடைபட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சோர்வு, ஆதங்கம், எரிச்சல், பதற்றம் முதலிய உணர்வு நிலைகளால் அவர் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார். “என் பயிற்சியில் நான் கவனம் செலுத்த முடியவில்லை,” என்கிறார் அவர். “என் பயிற்சி, மழையைச் சார்ந்ததாக இருக்கிறது.”
அறிகுறிகள் தென்படத் தொடங்கியதும், நாளடைவில் சரியாகி விடலாமென அவர் நம்பினார். அது நடக்கவில்லை என்றதும், அவர் ஒரு தனியார் மருத்துவரை சென்று பார்த்தார். ஆகஸ்ட் 2019லிருந்து அவர் மருத்துவரை குறைந்தபட்சம் 20 முறை சந்தித்திருப்பார். ஆனால் கிறுகிறுப்பு, உடல்வலி, மீளும் காய்ச்சல், கவனக் குறைபாடு, தொடர் அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை சரியாகவில்லை.
“இப்போது மருத்துவரிடம் செல்வது கூட கொடுங்கனவுகளைத் தருகிறது,” என்கிறார் அவர். “ஒரு தனியார் மருத்துவரை ஒருமுறை பார்க்க 100 ரூபாய் கட்டணம். மருந்துகளுக்கும், பல பரிசோதனைகளுக்கும் மீண்டும் மருத்துவரை சந்திப்பதற்கும் என இன்னும் அதிக செலவுகள் உண்டு,” என்கிறார் அவர். “ட்ரிப்ஸ் ஏற்றப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு குடுவைக்கும் 500 ரூபாய் செலவழிக்க வேண்டும்.”
மருத்துவ சந்திப்புகள் பலனின்றி போனபிறகு, அவரின் நண்பர்களில் ஒருவர் ஒரு தீர்வு கொடுத்தார். “உன் பயிற்சிக்கு அமைதியாக செல்.” அதுவும் உதவவில்லை. அவரின் ஆரோக்கியம் மோசமடைவது குறித்து மருத்துவரிடம் பேசியபோது, அவர் வெறுமனே, “அழுத்தம் கொள்ளாதீர்கள்,” என பதிலுரைத்திருக்கிறார். அடுத்த மழை எந்தளவுக்கு பெய்யும் என்பதும் குடும்பத்தை அது எப்படி தாக்கும் என்பதும் தெரியாத நிலையில் அந்த அறிவுரை அவருக்கு பின்பற்ற முடியாததாகவே இருக்கும்.
சானியாவின் தந்தை ஜாவித்துக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நேர்ந்த வெள்ளங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோ கரும்பை அவர் இழந்தார். கனமழையும் வார்னா ஆற்று வெள்ளமும் அவரின் விளைச்சலை 2022ம் ஆண்டிலும் அழித்தது.
”2019ம் ஆண்டு வெள்ளங்களிலிருந்து, விதைத்த எல்லாமும் விளையும் என்கிற உத்தரவாதம் இருப்பதில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் இருமுறை விதைக்க வேண்டும்,” என்கிறார் ஜாவித். இதனால் உற்பத்திச் செலவும் இரட்டிப்பாகிறது. வருமானம் சில நேரங்களில் ஒன்றுமில்லாமலும் போகிறது. விவசாயம் நீடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஒரே வழி பெருவட்டி விகிதத்தில் தனியாரிடமிருந்து கடன் பெறுவது மட்டும்தான். அது அழுத்தத்துக்கும் சேர்த்து வட்டி போடும். “மாதத் தவணைக்கான தேதி வருகையில், பலர் மன அழுத்தத்துக்காக மருத்துவமனைக்கு செல்வதை நீங்கள் பார்க்க முடியும்,” என்கிறார் சானியா.
அதிகரிக்கும் கடனும் அடுத்த வெள்ளம் குறித்த பயமும் சானியாவை பெரும்பாலும் பதற்றத்தில் வைத்திருக்கிறது.
“வழக்கமாக ஒரு பேரிடருக்கு பின், மக்கள் தாங்கள் விரும்புமளவுக்கான முயற்சியை இலக்குகள் நோக்கி போட முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்களின் விருப்பமின்மை அல்ல; இயலாமை,” என்கிறார் கொல்ஹாப்பூரைச் சேர்ந்த உளவியலாளரான ஷல்மாலி ரன்மாலே ககாதே. “இதனால் இறுதியில் கையறுநிலையும் விரக்தியும் பல வகை சோக மனநிலைகளும் ஏற்பட்டு, அவர்களின் உளவியலை பாதித்து கவலையை உருவாக்குகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பாக அரசாங்கங்களுக்கு இடையிலான ஐநா குழு, காலநிலை மாற்றம் மக்களின் உளவியலை தீவிரமாக பாதிக்குமென முதன்முறையாக அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது. “கவலை, அழுத்தம் போன்ற உள ஆரோக்கியத்துக்கான சவால்கள், புவிவெப்பம் அதிகரிக்குமென அனுமானிக்கப்பட்டிருக்கும் இடங்களில் புவிவெப்பம் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகள், பதின்வயதினர், முதியவர்கள் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் கொண்டவர்கள் அதிக பாதிப்பு கொள்வர்.”
*****
18 வயது ஐஷ்வர்யா பிராஜ்தரின் கனவுகள் 2021ம் ஆண்டின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளம் வடிந்த பிறகு, பெந்தாவடேவைச் சேர்ந்த தடகள வீரரும் டேக்வோண்டோ சாம்பியனுமான அவர் 15 நாட்களில் வீட்டை சுத்தப்படுத்த மட்டும் 100 மணி நேரங்கள் செலவழித்தார். “துர்நாற்றம் போக மறுக்கிறது. சுவர்கள் எந்த நேரமும் நொறுங்குவது போல் காட்சியளிக்கின்றன,” என்கிறார் அவர்.
வாழ்க்கையில் ஓரளவேனும் இயல்பு திரும்ப 45 நாட்கள் பிடித்தன. “ஒருநாள் பயிற்சியை தவறவிட்டால் கூட, நீங்கள் நல்லவிதமாக உணர மாட்டீர்கள்,” என்கிறார் அவர். 45 நாட்களுக்கும் சேர்த்து பயிற்சி எடுக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டும். “(ஆனால்) அரைவயிறு சாப்பிட்டு இரட்டிப்பு அளவு பயிற்சி எடுக்க வேண்டுமென்பதால் என் உடலின் சகிப்புத் திறன் கடுமையாக சரிந்துவிட்டது. நிலைத்து நீடிக்கும் தன்மை இல்லாததால் அதிக கோபமும் ஏற்படுகிறது,” என்கிறார் அவர்.
வெள்ளம் வடிந்த பிறகு கிராமம் சரியாவதற்கு தாமதமானதால் சானியாவும் ஐஷ்வர்யாவின் பெற்றோரும் மூன்று மாதங்கள் வேலை கிடைக்காமல் இருந்தனர். விவசாயத்தில் ஏற்படும் இழப்பை சரிகட்ட மேஸ்திரி வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜாவித்துக்கும் வேலை இல்லை. அவரிருந்த பகுதியின் பெரும்பாலான கட்டுமான வேலைகள் நின்று போயிருந்தன. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருந்ததால், குத்தகை விவசாயிகளும் விவசாயக் கூலிகளுமான ஐஷ்வர்யாவின் பெற்றோருக்கும் இதே அனுபவம்தான் நேர்ந்திருந்தது.
திரும்பிக் கட்டப்பட வேண்டிய கடன்களும் அதற்கான வட்டிகளும் இருக்கும் சூழலில், குறைவாக சாப்பிடுவது போன்ற வழிகளை குடும்பங்கள் நாட வேண்டியிருக்கிறது. ஐஷ்வர்யாவும் சானியாவும் நான்கு மாதங்களுக்கு ஒருவேளை உணவை மட்டுமே உட்கொண்டனர். சில நேரங்களில் குடும்பங்கள் முழு நாளும் பட்டினி இருந்திருக்கின்றன.
வெறும் வயிற்றில் தூங்கிய நாட்களின் எண்ணிக்கை நினைவிலில்லாத அளவுக்கு இளம் விளையாட்டு வீராங்கனைகளின் பெற்றோரது வறுமை இருக்கிறது. அந்த வறுமை இயல்பாகவே அவர்களின் பயிற்சியையும் திறனையும் பாதித்தது. “கடுமையான உடற்பயிற்சிகளை என் உடல் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை,” என்கிறார் சானியா.
சானியாவும் ஐஷ்வர்யாவும் முதன்முறையாக பதற்றமடைந்தபோது, அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. பிற தடகள வீரர்களிடம் பதற்றம் எந்தளவுக்கு பரவலாக இருந்தது என்பதை உணர்ந்தபிறகே அதற்கான முக்கியத்துவம் அவர்களுக்கு புரிந்தது. “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தடகள வீராங்கனை நண்பர்கள் அனைவரும் ஒரே வித அறிகுறிகளைதான் சொல்வார்கள்,” என்கிறார் ஐஷ்வர்யா. “இது எனக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுத்தது. பெரும்பாலான நேரம் நான் மனச்சோர்வில்தான் இருக்கிறேன்,” என்கிறார் சானியா.
“2020ம் ஆண்டில் முதல் கனமழை நேர்ந்த பிறகு ஜூன் மாதத்திலிருந்து நாங்கள் கவனித்து வருகிறோம். வெள்ளம் குறித்த பயத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்,” என்கிறார் ஹத்கனங்களே தாலுகாவின் சுகாதார அலுவலரான டாக்டர் பிரசாத் டட்டார். “இத்தகைய வெள்ளங்களுக்கு தீர்வு இல்லாததால், அந்த பயம் கூடுகிறது. இறுதியில் தீவிர நோய்களை உருவாக்கி மக்களின் உளவியலை பாதிக்கிறது.”
2021ம் ஆண்டு வரை ஷிரோல் தாலுகாவின் 54 கிராமங்களை பத்தாண்டுகளாக பார்த்துக் கொண்ட டாக்டர் பிரசாத், அப்பகுதியில் வெள்ளத்துக்குப் பிறகான மருத்துவப் பணிகளுக்கு தலைமை தாங்கினார். “வெள்ளத்துக்கு பிறகு பலருக்கு அழுத்தம் கூடி இறுதியில் ரத்த அழுத்த நோய்க்கும் உள நோய்களுக்கும் ஆளாகியிருந்தனர்.”
2015ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரையிலான தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு, ரத்த அழுத்த நோய் பெண்களிடம் (15-49 வயது) 72 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சுட்டிக் காட்டுகிறது. கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தின் 2018ம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 171 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, 66.7 சதவிகித பேர் மனச்சோர்வு, மனக்கோளாறுகள், போதை மருந்துப் பழக்கம், தூங்குவதில் சிக்கல், பதற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது.
தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கடலூரில் நேர்ந்த 2015ம் ஆண்டின் டிசம்பர் மாத வெள்ளம் பாதித்த மக்களில் 223 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, 101 பேர் மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களில் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது.
பெந்தவடேவில் 30 டேக்வோண்டோ மாணவர்களை பயிற்றுவிக்கும் விஷால் சவான், இதே வகையான உளவியல் சிக்கல்களை இளம் விளையாட்டு வீரர்களிடம் காணுவதை உறுதிபடுத்துகிறார். “2019ம் ஆண்டிலிருந்து பல மாணவர்கள் இத்தகைய நிலையினால் விளையாட்டிலிருந்து விலகியிருக்கின்றனர்.” அவரிடம் பயிற்சி பெறும் ஐஷ்வர்யாவும் தடகளம் மற்றும் தற்காப்புக் கலை ஆகியவற்றை பணிகளாக தொடரும் முடிவை மறுபரிசீலனை செய்கிறார்.
2019ம் ஆண்டு வெள்ளங்களுக்கு முன், குடும்பம் நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு நட ஐஷ்வர்யா உதவினார். “24 மணி நேரங்களில் வெள்ளம் புகுந்து மொத்தப் பயிரையும் அழித்தது,” என்கிறார் அவர்.
குத்தகை விவசாயிகளான அவரின் பெற்றோர் 75 சதவிகித விளைச்சலை நிலவுரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். “2019 மற்றும் 2021ம் ஆண்டு வெள்ளங்களுக்கு அரசாங்கம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. ஒருவேளை நிவாரணம் இருந்தாலும் அது நிலவுரிமையாளருக்குதான் செல்லும்,” என்கிறார் அவரின் தந்தையான 47 வயது ராவ் சாகெப்.
7.2 லட்ச ரூபாய் மதிப்பிலான 2,40,000 கிலோ கரும்புகளை 2019ம் ஆண்டில் அழியக் கொடுத்த பிறகு ராவ் சாகெப்பும் அவரின் 40 வயது மனைவி ஷாரதாவும் விவசாயக் கூலியாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவ்வப்போது ஐஷ்வர்யாவும் உதவச் சென்று, குடும்பத்தின் மாடுகளிடமிருந்து நாளுக்கு இருமுறை பால் கறப்பார். “ஒரு வெள்ளம் வந்த பிறகு, குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது,” என்கிறார் ஷாரதா. “இதற்குக் காரணம் வெள்ளம் விரைவாக வடியாததும் மண் வளத்தை திரும்பப் பெற ஆகும் காலமும்தான்.”
போலவே 2021ம் ஆண்டு வெள்ளங்களின்போது 600 கிலோவுக்கும் மேலான, 42,000 ரூபாய் மதிப்பிலான சோயாபீனை ராவ் சாகெப் இழந்தார். அத்தகைய அழிவை கண்டபிறகு விளையாட்டுத்துறையை தொடர்வது குறித்து ஐஷ்வர்யா யோசிக்கத் தொடங்கினார். “தற்போது, காவலர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். “விளையாட்டை மட்டும் சார்ந்திருப்பது ஆபத்து, குறிப்பாக இத்தகைய மாறும் காலநிலை இருக்கும் சூழலில்.”
“என்னுடைய பயிற்சி நேரடியாக விவசாயத்துடன் தொடர்பு கொண்டது,” என்கிறார் அவர். காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதில் அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. விளையாட்டுத் துறையில் பணி பெறுவது குறித்த ஐஷ்வர்யாவின் தயக்கம் புரிந்துகொள்ளத் தக்கதே.
“எந்த (காலநிலை) பேரிடராக இருந்தாலும் பெண் வீராங்கனைகளுக்குதான் அதிக பாதிப்பு,” என்கிறார் கொல்ஹாப்பூரின் பெதெவாடி கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளரான பாண்டுரங் தெரசெ. “பல குடும்பங்கள் ஆதரவு கொடுப்பதில்லை. மகள்கள் சில நாட்களுக்கு பயிற்சியை நிறுத்தினாலும் விளையாட்டை விட்டுவிட்டு சம்பாதிக்க போகும்படி குடும்பங்கள் அவர்களை கேட்கத் தொடங்கி விடுகின்றன. அது அவர்களின் உள ஆரோக்கியத்தை சீரழிக்கிறது.”
இத்தகைய இளையோரின் நிலையை சரிசெய்யும் வழி இருக்கிறதா எனக் கேட்டபோது, “முதல் கட்டமாக முறைப்படுத்தப்பட்ட உளவியல் சிகிச்சைகள் கொடுக்கலாம். துயரங்களை கேட்க வேண்டும். வெறுமனே கவனித்து அவர்களின் எண்ணங்களை கொட்டித் தீர்க்க அனுமதிக்க வேண்டும். கடினமான உணர்வுகளை பகிரும் தளங்கள் கிடைக்கும்போது, மக்கள் நிம்மதி பெறுகின்றனர். அவர்களுக்கான ஓர் ஆதரவுக் குழு இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கையே குணமாவதை நோக்கி அவர்களை இட்டுச் செல்லும்,” என்கிறார் உளவியல் மருத்துவரான ககாடே. உண்மை என்னவெனில் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு உளவியல் மருத்துவம் பெறுவது கடினமாக இருக்கிறது.அதற்கான உள்கட்டமைப்பில் குறைபாடுகள் இருக்கின்றன. சிகிச்சைக்கான செலவும் அதிகம்.
*****
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான சோனாலி காம்ப்ளேவின் விளையாட்டு லட்சியங்கள், 2019ம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு வேகத்தடையை சந்தித்தன. நிலமற்ற விவசாயக் கூலிகளான பெற்றோர், வெள்ளத்துக்கு பிறகு வரவிருந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவரது உதவியை சார்ந்திருந்தனர்.
“நாங்கள் மூவர் வேலை பார்த்தும் போதவில்லை,” என்கிறார் அவரின் தந்தை ராஜேந்திரா. இடைவிடாத மழை வயல்வெளிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து பல நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. விளைவாக வேலைநாட்கள் குறைந்து விவசாயத்திலிருந்து வரும் வருமானமும் குடும்பங்களுக்குக் குறைகிறது.
காம்ப்ளேவின் குடும்பம் வசிக்கும் ஷிரோல் தாலுகாவின் கல்வாட் கிராமத்தில் ஏழு மணி நேர வேலைக்கு பெண்கள் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். ஆண்கள் 250 ரூபாய் சம்பாதிக்கின்றனர். “இதை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதே சிரமம். விளையாட்டுக்கான உபகரணங்களை எப்படி வாங்குவது, பயிற்சிக்கு எப்படி பணம் கட்டுவது,” என்கிறார் 21 வயது சோனாலி.
2021ம் ஆண்டின் வெள்ளங்கள் காம்ப்ளே குடும்பத்தின் துயரங்களை அதிகப்படுத்தி சோனாலியை தீவிர மன அழுத்தத்துக்குள்ளாக்கியது. ”2021ம் ஆண்டில் எங்களின் வீடு 24 மணி நேரங்களுக்குள் நீரில் மூழ்கியது,” என அவர் நினைவுகூருகிறார். “அந்த வருடம் நாங்கள் எப்படியோ தப்பிவிட்டோம். ஆனால் இப்போது நீர்மட்டம் உயரும்போதெல்லாம் வெள்ளம் மீண்டும் வந்துவிடும் அச்சத்தில் என் உடல் வலிக்கத் தொடங்கி விடுகிறது.”
2022ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மழை பொழிந்தபோது கிருஷ்ணா ஆறு கரை புரண்டிடுமோ என கிராமவாசிகள் அஞ்சியதாக சோனாலியின் தாய் ஷுபாங்கி கூறுகிறார். தினசரி 150 நிமிடங்களுக்கு எடுக்கும் பயிற்சியை நிறுத்தி, வெள்ளத்தை சமாளிக்க தயாராகும் வேலைகளைச் செய்தார் சோனாலி. விரைவிலேயே அவர் தீவிரமான மன அழுத்தம் கொண்டு மருத்துவரை சென்று பார்க்கும் நிலை நேர்ந்தது.
“நீர் மட்டம் உயரத் தொடங்கியதும் வீட்டிலிருந்து வெளியேறுவதா வேண்டாமா என்கிற ஊசலாட்டத்தில் பலர் மாட்டிக் கொண்டனர்,” என்கிறார் டாக்டர் பிரசாத். “சூழலை கணித்து முடிவுக்கு வர முடியாத அவர்களின் நிலை அழுத்தத்தைக் கொடுக்கிறது.”
நீர் மட்டம் குறைந்ததும் நல்லபடியாக சோனாலி உணரத் தொடங்கினாலும், “தொடர்ச்சியற்ற பயிற்சியைக் கொண்டு நான் போட்டிக்கு செல்ல முடியாது என்பது எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது,” என்கிறார்.
இளம் உள்ளூர் வீரர்கள் பலருக்கு வெள்ளம் பதற்றத்தை உருவாக்கியிருப்பதாக கொல்ஹாப்பூர் கிராமங்களின் பல சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் உறுதி செய்கின்றனர். “அவர்கள் கையறுநிலையில் விரக்தியாக இருக்கின்றனர். மாறும் மழைகளால் அந்த நிலை இன்னும் மோசமடைகிறது,” என்கிறார் கல்வாடைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளரான கல்பனா கம்லகர்.
ஐஷ்வர்யா, சானியா மற்றும் சோனாலி ஆகியோர் மழை தீர்மானிக்கும் வாழ்க்கைகளை கொண்ட விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 2022ம் ஆண்டின் கோடைகாலத்தில் அக்குடும்பங்கள் கரும்பு நடவு செய்தன.
இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழைக்கு தாமதமானது. “பருவமழை தாமதமானபோதும் எங்களின் பயிர் பிழைத்தது,” என்கிறார் ஐஷ்வர்யா. ஆனால் ஜூலை மாதம் தொடங்கிய ஒழுங்கற்ற மழை, பயிர்களை அழித்து குடும்பங்களை கடன்களுக்குள் மேலும் ஆழமாக தள்ளியது. (உடன் படிக்க: மழை பெய்தால், துயரத்தைப் பொழிகிறது )
1953ம் ஆண்டிலிருந்து 2020 வரையிலான வெள்ளங்கள், 220 கோடி இந்தியர்களை - கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள்தொகையை விட 6.5 மடங்கு அதிகம்) பாதித்து 4,37, 150 கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்களை விளைவித்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் (2000-2019), இந்தியா ஒவ்வொரு வருடமும் சராசரியாக 17 வெள்ள நிகழ்வுகளை எதிர்கொண்டு, உலகிலேயே வெள்ளங்களால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில், குறிப்பாக கொல்ஹாப்பூர் மாவட்டத்தில், மழைப்பொழிவு ஒழுங்கற்றதாக மாறி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில் மட்டும் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் 7.5 லட்ச ஹெக்டேர் நிலங்கள் பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளில் விவசாயப் பயிர்கள், பழங்கள், காய்கறிகள் விளைவிக்கப்பட்டன. மாநிலத்தின் விவசாயத்துறை கூற்றின்படி, 2022ம் ஆண்டில் அக்டோபர் 28 வரை மகாராஷ்டிராவில் 1,288 மிமீ மழை பொழிந்துள்ளது. இது சராசரி மழைப்பொழிவை விட 120.5 சதவிகிதம் அதிகம். அதில் 1,068 மிமீ ஜூன் தொடங்கி அக்டோபர் மாதம் வரை பெய்துள்ளது.
“பருவகாலத்தில், நீண்ட வறட்சி காலங்களும் குறைந்த காலத்தில் பெய்யும் தீவிர கனமழைகளையும் நாம் எதிர்கொள்கிறோம்,” என்கிறார் ராக்சி கோல். இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் அவர், ஐநா சபையின் காலநிலை மாற்றம் குறித்த அறிக்கையில் பங்களிப்பவராகவும் இருக்கிறார். “எனவே மழை பொழிகையில், அதிகமான ஈரப்பதம் குறைவான காலவெளியில் குவிக்கப்படுகிறது.” விளைவாக மேகவிரிசலும் வெள்ளங்களும் ஏற்படுவதாக அவர் விளக்குகிறார். “வெப்பமண்டலத்தில் நாம் இருப்பதால், காலநிலை நிகழ்வுகள் இன்னும் தீவிரமடையும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருந்து உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்டோரை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.”
ஆனால் தேவைகளுக்கும் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. பகுதியில் கூடிவரும் ஆரோக்கிய குறைபாடுகளுக்குக் காரணமாக காலநிலை மாற்றத்தை அவதானிக்கும் சுகாதாரப் புள்ளிவிவரங்கள் இல்லை. விளைவாக, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் எண்ணற்ற மக்கள் மீதான கவனம் அரசுக் கொள்கைகளில் நிராகரிக்கப்படுகிறது.
“தடகள வீரராவதே என் கனவு,” என சொல்லும் சோனாலி, “ஆனால் நாங்கள் ஏழைகள். குறைவான சாத்தியங்களே இருக்கின்றன. உங்களின் விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை எங்களுக்கு இல்லை,” என்கிறார் அவர். உலகம் இன்னும் ஆழமாக காலநிலை மாற்ற பாதிப்புக்குள் நுழையும்போதும் மழைப்பொழிவு தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்போதும் சானியா, ஐஷ்வர்யா மற்றும் சோனாலி போன்றவர்களுக்கு இருக்கும் சாத்தியங்கள் மேலும் கடினமாகும்.
“வெள்ளம் வந்தபோது நான் பிறந்தேன். என் வாழ்க்கை முழுக்க வெள்ளத்தில் கழிக்க வேண்டியிருக்குமென நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை,” என்கிறார் சானியா.
இக்கட்டுரை, சுயாதீன இதழியலுக்கென இண்டெர்நியூஸ் எர்த் ஜர்னலிசம் நெட்வோர்க் கட்டுரையாளருக்கு வழங்கும் மானியத்தில் எழுதப்பட்டதாகும்.
தமிழில் : ராஜசங்கீதன்