இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
விஷயங்களின் பிடிமானம்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெற்ற மிதிவண்டி பயிற்சி முகாமில் சைக்கிள் ஓட்டி பழகுவதற்காக சிறந்த புடவையை அணிந்து அவர் வந்திருந்தார். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வத்துடன் இருந்தார். ஒருகாலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அவரது மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 4,000 ஏழைப் பெண்கள் குவாரிகளில் வேலை செய்ய வந்திருந்தனர். அரசியல் உணர்வுள்ள கல்வியறிவு இயக்கத்துடன் இணைந்த இவர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் புதுக்கோட்டையை சிறந்த இடமாக மாற்றியுள்ளது.
இவ்வளங்களின் கட்டுப்பாடும், உரிமையும் மையப்படுத்தப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துடன், அவர்களின் உரிமையும் மேம்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ஜபுவாவைச் சேர்ந்த அனைத்து மகளிர் கிராமக்குழு. உள்ளூர் நிர்வாகத் திறனால் இவர்களின் அந்தஸ்தும், சுயமரியாதையும் மேம்பட்டுள்ளது. ஆனால் சொந்த கிராமத்தில் அவர்களின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது. அவர்களுக்கான உரிமைகள் குறைவு, கட்டுப்பாடுகள் அதிகம். உதாரணத்திற்கு அவர்கள் நிலத்தின் மீது உரிமை கோர முடியாது. சட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலான தளங்களில் அவர்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஊராட்சி மன்ற தலைவராக தலித் பெண் தேர்வு செய்யப்படும்போது அவரது நில உரிமையாளர் துணைத் தலைவர் ஆகிறார் என்றால்? பதவியில் மூத்தவர் என்பதால் அவரது பேச்சை துணைத் தலைவர் கேட்பாரா? அல்லது தனது தொழிலாளியைப் போன்று நில உரிமையாளர் கொடுமைப்படுத்துவாரா? அல்லது ஒரு ஆணாக அப்பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவாரா? பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆடைகள் களையப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பெண் ஊராட்சித் தலைவர்கள் வியக்க வைக்கும் விஷயங்களை செய்கின்றனர். நிலபிரபுத்துவம் ஒழிக்கப்பட்டால் அவர்கள் எந்தளவு சாதிப்பார்கள்?
பெரும் மாற்றங்களுக்கு இடையே புதுக்கோட்டையில் கல்வி கற்பிக்கும் வகுப்புகள் நடைபெற்றன. ஒருகாலத்தில் கொத்தடிமைகளாக இருந்த அவர்களை தீவிர நிகழ்வுகளே குவாரிகளை கட்டுப்படுத்தும் பொறுப்பை அளித்தன. அவர்களின் கட்டுப்பாடுகள் ஒடுக்கப்படும்போது உரிமைகளுக்காக அவர்கள் குரல் கொடுக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர்.
லட்சக்கணக்கான கிராமப்புற ஏழைகளுக்கும், பெண்களுக்கும் நில சீர்திருத்தம் தேவைப்படுகிறது. அதற்குள் அவர்களின் அங்கீகாரம், நிலம், நீர், வன உரிமைகளின் மீதான அதிகாரம் அடங்கியுள்ளன. மறுவிநியோகம் செய்யப்பட்ட எந்த நிலத்திலும் அவர்களுக்கு கூட்டு பட்டாவில் (பெயர் மாற்றத்திற்கான) உரிமை தேவைப்படுகிறது. அனைத்து நிலங்களிலும் சமசொத்து உரிமையை அளிக்கிறது. கிராமத்தின் எளிய மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்படும்போது, எளிய மக்கள் சுரண்டப்படுதும் நிறுத்தப்படும்.
சட்டங்களில் இதுபோன்ற உரிமைகள் இல்லாவிட்டால் புதிதாக அவற்றை இயற்ற வேண்டும். சட்டங்கள் இருந்தால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியம். வளங்களை தீவிரமாக மறுவிநியோகம் செய்வதோடு சில விஷயங்களை நாம் மறுவரையறை செய்தல் வேண்டும். அவை ‘திறன் சார்ந்த‘ மற்றும் ‘திறன்சாராத‘ அல்லது ‘கடுமையான‘ மற்றும் ‘லேசான‘ பணி என பிரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை முடிவு செய்யும் குழுக்களில் பெண் வேளாண் தொழிலாளர்களும் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த மாற்றத்திற்கு பெரும் இயக்கச் செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட பொது செயல்திட்டம். அரசியல் செயல்முறைகளில் தலையீடு. சிறப்பான வாழ்விற்காக போராடி வரும் இந்திய ஏழைகளில் கிராமப்புற பெண்களின் பிரச்னைகளும் சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மக்களின் உரிமைகளை பலப்படுத்துவதற்கு நல்வளர்ச்சி என்பது ஈடாகாது. பிற ஏழைகளைப் போன்று கிராமப்புற பெண்களுக்கும் கருணை தேவையில்லை. அவர்களின் உரிமைகளை செயல்படுத்தினால் போதுமானது. அதற்காகத் தான் பல லட்சம் பேர் போராடி வருகின்றனர்.
தமிழில்: சவிதா